• Time to read: 05 minutes
  • 1062
  • 0

ஜேன் ஆஸ்டெனின் காதல் சாபம்

By சுருதி

 

"நீ என் ஆன்மாவை துளைக்கிறாய். நான் பாதி வலியுடனும் பாதி நம்பிக்கையுடனும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். இவ்வுலகில் நான் வேறு யாரையும் காதலிக்கவில்லை உன்னைத் தவிர", ‘பெர்ஸுவேஷன்’ (Persuasion) நாவலில் ஜேன் ஆஸ்டினின் கதாப்பாத்திரம் ஃபெரெட்ரிக் பேசும் வசனம் இது.

ஒரு வேலை ஜேன் ஆஸ்டெனின் வாழ்க்கையைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது இருந்திருந்தால், அதையும் நாம் ஒரு சாதாரண வசனமாகக் கடந்து போயிருக்கலாம். ஆனால் டாம் லெஃபரெயுடைய ஜேனின் வரிகளில் அதிகம் காதலும், வலியும், விரக்தியும் புதைந்திருப்பது தெரியும். அந்தக் காதல்காரியின் கதைகளின் டாமின் நினைவுகளும், சிரிப்பும், அழுகையும், பார்வையும், பேச்சும் கலந்தே இருந்தது.

சிறுவயது ஜேனின் குடும்பம் அதிகம் புத்தகங்களையும் நாடகங்களையும் தன் குழந்தைகளை எழுதச்சொல்லி வார இறுதி நாட்களில் படித்துக்காட்ட சொல்லியது. ஜேன் தன் அக்கா கஸான்டராவோடு சேர்ந்து 5 வயதிலிருந்தே நாடகங்களும் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். தன்னுடைய பதினோராவது வயதில் வீட்டு நிகழ்வுகளைச் சிறுகதைகளாகவும் கவிதைகளையும் எழுதி  தொகுத்தார் ஜேன். பின்னாளில் அவற்றைத் தொகுத்து "ஜுவிநிலியா" (Juvenilia) என்ற புத்தகமாகவும் வெளியிட்டனர் அவரின் உறவினர்கள். நேர்த்தியில்லாத ஜோடனைகள் அதிகம் புகுத்தப்பட்ட புத்தகமென்று விமர்சனம் செய்யப்பட்டாலும் வெளியிட்ட மூன்றே வருடங்களில் ஐந்து பதிப்புகள் கண்டு வெற்றியடைந்த புத்தகமாய் ஜுவிநிலியா கோலோச்சியது.

ஆரம்ப காலத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் மொழிநடையின் தாக்கம் அதிகமுள்ள படைப்புகளைத் தந்த ஜேன், தனக்கென்ற அடையாள பாணியைத் தேர்ந்தெடுத்த போது அவருக்கு வயது 14. "லவ் அண்ட் ப்ரென்சிப்" (Love and Friendship)  தனது சமகாலத்து நாவல்களின் நடையையும், அதிகம் சேர்க்கப்படும் நாடகத் தன்மையான பாத்திரங்களையும் பகடி செய்தது. நல்லவர்கள் - கெட்டவர்கள் என்ற இரண்டே பதத்தில் வந்துக் கொண்டிருந்த பாத்திரப் படைப்புகளை மாற்றி எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கும் இருட்டுப் பக்கங்களை வெளிக்கொணரும் குறும்புதினமான "லேடி சூசன்" (Lady Susan) எழுதினார். தனது அண்ணனின் காதல் மனைவியான எலிசாவின் குணாதிசயங்கள் தான் லேடி சூசனின் கதைக்கருவாக ஜேன் உருவாக்கியிருந்தார்.

காதலன் டாம் லெஃபெரையுடனான முதல் சந்திப்பு நிகழும்போது ஜேனுக்கு வயது 20. டாம் தனது பாரிஸ்டர் பட்டப்படிப்புக்காக லண்டன் வருவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த 2 மாதங்கள் ஜேனின் பக்கத்துவீடான தனது மாமா வீட்டில் வசித்தார். இப்பணிக் காலங்களில் ஜேனுக்கும் டாமுக்கும் காதல் பூத்தது. வெறும் இரண்டே மாதங்கள் நீடித்த காதலை பற்றி நித்தமும் ஜேன் அவரது அக்கா கஸாட்ராவுக்கு எழுதிய கடிதங்கள் மட்டுமே இன்றளவில் மிச்சம். பொருளாதார பின்னடைவின் காரணமாக இரண்டு பேரும் பிரிந்ததாகச் சொல்லப்பட்டாலும், டாமுக்கு பிறகு ஜேன் மனதளவில் யாரையும் கணவனாக்கிக் கொள்ள எத்தனிக்காத அளவு பெருங்காதல் வளர்த்தனர் என்பதே நிஜம்.

டாமின் பிரிவுக்கு பிறகு ஜேன் முழுநேர எழுத்தில் மூழ்கினார். கிட்டத்தட்ட 4 நாவல்களை 1796-1798 காலங்களில் எழுதி முடித்திருந்தார். நாவல்களை எழுதி முடித்தப் பிறகு அவற்றைத் தன் வீட்டாருக்குப் படித்துக்காட்டுவது ஜேனின் வழக்கம். அவ்வாறு படித்துக் காட்டப்பட்ட "ப்ரைட் அன்ட் ப்ரெஜுடைஸ்" (Pride and Prejudice) நாவலை வெளியிட ஜேனின் தந்தை முனைந்ததும், லண்டன் புத்தக வெளியீட்டாளர்கள் அப்பிரதிகளை நிராகரித்ததும் "எ மெமையர் ஆஃப் ஜேன் ஆஸ்டினி"ல் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தனது கிராமம் விட்டு ஜேன் ‘பாத்’ (Bath) நகரத்திற்குச் சென்றார். பெரிதும் விருப்பமில்லையென்றாலும் ஜேனின் இலக்கியப் பொற்காலங்கள் எனப் பாத்தில் இருந்த நாட்களைக் குறிப்பிடலாம். மூன்றாம் நபரின் பார்வையிலேயே அதுநாள் முதல் எழுதப்பட்ட நாவல்களுக்குப் புது வடிவம் தந்தார். கதை நாயகியின் பார்வையிலேயே வாசகர்களும் பயணிக்கும் புதுப் பாணியை எழுத்தில் புகுத்தினார். இலக்கிய  உலகில் இன்றளவும் பாராட்டிற்குறிய பங்களிப்பு அது. ஜேனின் முதல் வெற்றி படைப்பான சென்ஸ் அன்ட் சென்சிபிலிடி நாவல் வெளியானதும் பாத்தில் தான், வருடம் 1811. இரண்டு பெண்களின் காதலை மையமாக எழுதப்பட்ட இந்நாவல் ஜேனின் காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. உண்மைக்கு மிக நெருக்கமாகப் பாத்திரப் படைப்புகள் இருந்ததால் இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் இத்தனை புகழையும் அனுபவிக்க ஜேனுக்கு 19ஆம் நூற்றாண்டு அனுமதி மறுத்தது. பரவலாகப் பேசப்பட்ட சென்ஸ் அன்ட் சென்சிபிலிடியின் எழுத்தாளர் யார் என்று மறைக்கப்பட்டது. 18-19 ஆம் நூற்றாண்டுகளில் பெண்கள் முழுநேர எழுத்தாளர்களாக இருப்பது தவறென்று பார்க்கப்பட்டது. குழந்தை வளர்ப்பும் வீட்டு வேலைகளுமே பெண்ணின் பிரதான பொறுப்பாகப் பார்க்கப்பட்ட காலத்தில் ஜேன் எழுதிய நாவல் "சென்ஸ் அன்ட் சென்சிபிலிடி" (Sense and Sensibility - by a Lady) - ஒரு பெண் எழுத்தாளருடையது என்று வெளியிடப்பட்டது பெரிய ஆச்சரியமில்லை. ஜேன் ஆஸ்டெனின் இரண்டாவது நாவாலான "ப்ரைட் அன்ட் ப்ரெஜுடைஸ்"இன் டார்சி என்ற நாயகனின் குணங்களை இன்று வரை உலக இலக்கியங்களும் சினிமாக்களும் ஆதர்ச கதாநாயகனின் குணங்களாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

நாயகி எலிசபெத்தின் பார்வையில் உலலும் கதையில் அவளுக்கு இரண்டு நபர்கள் அறிமுகமானவர்கள். அமைதியாகப் பேசும், அதிகம் நெருக்கமாகப் பழகும் விதியின் மீது நம்பிக்கை கொண்ட அழகான "பென்னட்" என்ற வரும் யாரையும் அதிகம் பொருட்படுத்தாத, அதிகம் கோபப்படும் அதே சமயம் தனது குடும்பத்தாரிடம் அதிகம் அன்பு காட்டும் உயரமான ஆடவன் "டார்சி". புரிகிறதல்லவா? ஏன் டார்சி , நேற்று ஜேன் ஆஸ்டெனை படிக்க ஆரம்பித்த இளம் பெண்ணுக்குகூடக் கனவு காதலனாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறாரென்று?

ஆதர்ச நாயகன்கள் மட்டுமல்ல, நான் அன்றாடம் பார்க்கும் திரைப்படங்களில் தோன்றும் ஆதர்ச நாயகிகளின் முன்னோடிகளும் ஆஸ்டெனின் பாத்திரங்கள் தான். சிறுபிள்ளைத்தனம் மாறாத எம்மா, பெண்ணுரிமை பேசும் மரியான், காதலை வெளிபடுத்த கூச்சப்படும் எலினார் என்று நாம் காணும் அத்தனை கதைகளிலும் ஜேன் ஆஸ்டெனின் படைப்புகளின் தாக்கம் நிறைந்திருக்கும்.

முதல் நாவலின் பெரும் வெற்றியை அடுத்துத் தொடர்ச்சியாகத் தன் வாழ்நாளில் மூன்று நாவல்களை வெளியிட்ட ஜேனுக்கு 1816 வாக்கில் நோய் தாக்குதல் ஏற்பட்டதால் பாத்தில் இருந்து வின்ச்செஸ்டர் பயணப்பட்டார். 16இன் இறுதி மாதங்களில் நடக்கமுடியாமல் படுக்கையில் கிடத்தப்பட்டார் ஜேன். அந்நாட்களில் டாமின் உறவினர்கள் தன்னைப் பார்க்க வந்தப் போது டாம் பற்றிய பேச்சை எடுக்க முடியாமல் தடுமாறிய வருத்தத்தைத் தனது அக்கா கஸான்டராவுக்கு எழுதிய இறுதி காலக் கடிதங்களில் ஜேன் குறிப்பிட்டுள்ளார் . தனது மரணப்படுக்கையிலும் மறக்காத ஒரே பெயராக ஜேனுக்கு டாம் இருந்துள்ளார் என்பதற்கு  பெரிய ஆதாரம் இது. 18-ஜூலை1817, தனது நாற்பத்து ஒன்றாவது வயதில் ஜேன் ஆஸ்டென் மறைந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அவரது படைப்புகளான நார்தாங்கர் அபேய் (Northanger Abbey), பெர்சுவேஷன் மற்றும் லேடி ஸூஸன் ஆகிவற்றை அவரது அண்ணன் வெளியிட்டார்.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் பல பதிப்பகங்கள் போட்டி போட்டு ஜேனின் படைப்புகளை வெளியிட்டு லாபம் ஈட்டினர். இலக்கியவாதிகள் அவரின் மொழி நடையையும் பாத்திர சித்தரிப்புகளையும் சிலாகித்துத் தீர்த்தனர். ஜேன் ஆஸ்டென் இன்றளவும் உலக இலக்கியப் பெண் படைப்பாளர்களில் முக்கியமான படைப்பாளியாகப் போற்றப்படுகிறார். அவன் கதைகளின் தாக்கத்தில் உலக அளவில் அனேக படங்களும் நாடகங்களும் எடுக்கப்பட்டு வெற்றிக் கண்டுள்ளன.உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation