• Time to read: 10 minutes
  • 1319
  • 0

மாலோலன்

By சித்துராஜ்பொன்ராஜ்

 

மீண்டும் மீண்டும் அதே கனவு. நாலா புறமும் கண்ணாடிச் சுவர்கள் உள்ள அறை. தரையோடு ஒட்டிக் கொண்டு ஓடும் ரோமமுள்ள சிறு பிராணியின் உடல் போல் முகத்திலிருந்தும் தோளிலிருந்தும் வழியும் கதகதப்பான காலை வெயில். அறையின் ஓரமாய் இருக்கும் கண்ணாடிக் கதவைத் திறந்து மாலோலன் உள்ளே போக அவனுக்கு முன்னால் அவிழ்த்து விட்ட மலர் மூட்டையாகக் கண் முன்னால் லட்சோபலட்சம் பட்டாம்பூச்சிகள். சிறகுகளின், வழவழப்பான உடல்களின், மெல்லிய கால்களின் தீண்டுதலில் உடம்பு கூசுகிறது.

“நல்லா யோசிச்சுத்தான் சரவணன் பையனுக்குப் பேர் வச்சிருக்கான், மாலோலன்'னு. அவுத்துவுட்ட நாயாட்டம் லோலோனு மகா போக்கிரியாய் ஊர் மேயுது.”

சித்தப்பா இப்படிச் சொல்லும் போதெல்லாம் உடம்பு மீண்டும் லட்சோபலட்சம் பட்டாம்பூச்சிகள் தொட்டுவிட்டுப் போவது போலக் கூசுகிறது. அப்படியென்றால் தான் பட்டாம்பூச்சிகளா அல்லது கண்ணாடி அறையா என்று மாலோலன் யோசித்தான். இரண்டுமல்ல அல்லது இரண்டும்தான் என்று உள்ளுக்குள் இருந்து பதில் வந்தது. முன்னாலிருந்த கனமானக் கண்ணாடிக் குவளையில் காந்தள் பூ நிறமாக இதழ் விரித்திருந்த மதுவை எடுத்து ஒரு மிடறு குடித்தான். மது உள் இறங்க உடம்புக்குள் மிகப் பொறுமையாய் மிக விஸ்தாரமாய் இளஞ்சூடாய் கடல் அலைந்தது.

ஆனால் பெயர் காரணம் அதுவல்ல. மாலோலன் என்பது நரசிங்கசாமியின் பெயர். மகாலட்சுமி விரும்பகிறவன் என்று அர்த்தம். அதனால்தான் இந்தத் தொழில் தகைந்திருக்கிறது. ஒரு மணி நேரத்துக்கு நூற்று ஐம்பது வெள்ளி. அறை வாடகை தனி. நூற்று ஐம்பது வெள்ளிக்குள் சகல சேவைகளும் அடக்கம்.

எதிரேயுள்ள மேசையில் அமர்ந்திருந்த வெள்ளைக்காரக் கிழவன் மாலோலனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்ட மாலோலன் பின்னர் கிழவனைப் பார்த்து மெல்லியதாய்ப் புன்னகைத்தான். வீட்டு வாடகையை வாரக் கடைசியில் கட்ட வேண்டும் என்று மாலோலன் யோசித்துக் கொண்டிருந்தான்.

“ஏங்க அவனை எப்பப் பார்த்தாலும் ஏசிக்கிட்டு இருக்கீங்க? உங்க அண்ணன் புள்ளதான?” சித்தி கேட்பாள்.

“அண்ணன் புள்ளங்கிறதாலதான் இதுவரைக்கும் வீட்டில தங்க எடம் கொடுத்திருக்கேன். இல்லனா எப்பயோ வெரட்டி விட்டிருப்பேன். போலிடெக்னிக்,  தேசிய சேவை எல்லாம் முடிஞ்சு முழுசா மூணு வருஷம் ஆகப்போகுது. இருபத்தஞ்சு வயசு பையன் எந்த வேலைக்கும் போகாம பகலெல்லாம் தூங்கித்தெனமும் ராத்திரி ரொம்ப நேரம் வரைக்கும் ஊர் சுத்துறான்னா ஒண்ணு அவன் தெருப் பொறுக்கியா இருக்கணும் இல்ல திருடனா இருக்கணும்.”

கன்னக் கதுப்புக்கள் வலிக்க சித்தப்பா பதில் சொல்வார். சித்தப்பா வீட்டில் பஞ்சகச் சமாகத்தான் வேட்டியைக் கட்டுவார். பெருத்த மார்பில் ஆவணி அவிட்டத்துக்கு ஆவணி அவிட்டம் கேலாங் சிவன் கோயிலில் வரிசையாக அமர்ந்து சிறு முணுமுணுப்போடு மாற்றிக் கொண்ட பூணூல் புரளும். வெளியில் கண்டதுகளோடு உட்கார்ந்து மதுவும் மாமிசமும் சாப்பிட நேர்ந்ததற்கான சிறு பிராயச் சித்தம். மனிதன் எப்படியாயினும் பிழைக்க வேண்டாமா சாமி?

சித்தப்பாவுக்கு என்ன தெரிந்திருக்கும் என்று மாலோலன் சிந்தித்தான். தான் புழங்கும் இடங்களுக்குச் சித்தப்பா வந்திருந்தால் அன்றி அவனைப் பற்றி அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று மாலோலனுக்குத் தோன்றியது. அப்படியே வந்திருந்தாலும் அவனுக்கு மிக நெருக்கமாக அமர்ந்திருந்தால் மட்டுமே அவன் காரியம் என்னவென்று புரியும். தான் வாடிக்கையாகப் போகும் இரவு நேர விடுதிகளில் எங்கேனும் சித்தப்பாவைக் கண்டது உண்டா என்று மாலோலன் நெற்றியைத் தேய்த்தபடி யோசித்தான். ஆற்றங்கரை குடிக்கும் விடுதிகளில் கழித்த பல இரவுகள் அவன் கண் முன்னால் அரையிருட்டில் பளபளக்கும் கண்ணாடி மதுக் கிண்ணங்களாகவும், பல வண்ண சிறு விளக்குகளாகவும், கலகலவென்று பேசிச் சிரிக்கும் பெயர் அறியாத மனிதர்களின் முகப்பகுதிகளைக் காட்டும் நகரும் வெளிச்சப்பிறைகளாகவும் பூரித்து உதிர்ந்தன. எல்லாவற்றின் மீதும் கனமான காந்தள் நிறம் பரவியிருந்தது.

“பாவங்க. அவன் அப்பா அம்மா மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா புள்ள நல்ல படியா வளர்ந்திருப்பானோ என்னவோ?”

சித்தியின் கண்களில் பழையதைக் கிளறும் பேரார்வம். கொதிக்கும் அடுப்பை அணைத்து விட்டுச் கண்கள் பளபளக்கச் சமையலறை வாசலில் கைகட்டி நின்றிருந்தாள். அவள் கண்கள் அடிக்கடி வரவேற்பறையின் ஓரத்தில் தலைகுனிந்தபடி நின்றிருக்கும் அன்றைய இருபது வயது மாலோலனை இரக்கத்தோடு பார்த்தார். பலிக்கு ஆசையாய் நேர்ந்து விட்ட ஆடு.

“நானா இவங்க அம்மாவ வேறொருத்தனோட ஓடிப் போகச் சொன்னன். நானும் சரவணனும் ஒரே நேரத்துலதான கல்யாணம் செஞ்சுகிட்டோம். அவனும் என்ன மாதிரிதான கம்யூட்டர் படிச்சான். எண்பதுகள்ல எவண்டி கம்யூட்டர் படிச்சான்? ஒரு புடி புடிச்சிருந்தா என்னை மாதிரி உச்சிக்கு வந்திருக்க முடியாது? நானாவது இந்த ஊரு பொண்ணா இருந்தா போதுமுனு சொல்லி உன்னைக் கட்டிக் கிட்டேன். நம்ம கல்ச்சர் உள்ள பொண்ணுதான் வேணும்னு சொல்லி அவனும் எங்கப்பாவும் ஆடுன ஆட்டம் இருக்கே. எல்லாம் ஊருலேர்ந்து புதுசா வந்த பயல்களோட சகவாசம். பொழுதன்னைக்கும் பஜனை, கோயில்லுனு. பூணூல் மாட்டிக்கிட்டுப் பூஜ பண்ணா போதுமா. பொம்மனாட்டிய சமாளிக்கிற திறமை வேணா? பினாங்குலேர்ந்து கொண்டாந்தாங்களே ராசாத்தி. எவனோ மலேசியா எஸ்டேட் பயலோட ஓடிப் போயிட்டா. சரவணனும் சாமியத் தேடுறேன் நிம்மதியத் தேடுறேன் ஊருல போயி உக்காந்திருக்கான்.”

சித்தப்பா கைகளை இடுப்புக்கு முன்னால் விரித்து ஆட்டிக் காட்டினார். அவர் குரலில் கர்வம் கருகும் வாசனையடித்தது. கழுத்து நரம்புகள் புடைக்க நிறைய பேசியதில் லேசாய் மூச்சிரைத்தது. தனது ஐந்தாவது வயதில் ஒரிரு நாட்களுக்குள்ளாகவே சொல்லாமல் கொள்ளாமல் முற்றாகக் காணாமல் போன அம்மாவையும் அப்பாவையும் மாலோலன் நினைவில் நிறுத்த முயன்றான். ஆனால் வாய்க்கவில்லை, எப்போதோ எடுக்கப்பட்டு இப்போது துணி அலமாரியின் கடைசி அடுக்கில் பழைய துணிகளுக்குக் கீழே திணித்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சலேறிய திருமணப் புகைப்படங்களாக மட்டுமே அவர்கள் இருவரும் மங்கலாக சிரித்தார்கள்.

“உண்மையான ஆம்பிளையா இருந்தா பொறந்த ஊருலயே இருந்து பிரச்சனையச் சந்திச்சிருக்கணும். அது என்ன இந்தியாவுக்கு ஓடிப்போறது? அங்க என்ன கொட்டியாவச்சிருக்கு? இந்த நாயையும் ஒழுங்கா ஓரிடத்துல இருக்கறதா இருந்தா இருக்கச்சொல்லு. இல்லனா இவன் அப்பனையும் அம்மாவையும் போல ஊர்மேயப் போகட்டும்.”

பல்கலைக்கழகப் படிப்பு முடித்ததிலிருந்து ஒரே அரசாங்க இலாகாவில் எட்டு வருடங்களுக்கு எவ்வித பதவி உயர்வோ இடமாற்றமோ இல்லாமல் ஒட்டியிருந்த அப்பாவிடம் உச்சி வெயிலில் கண்களை அகலத் திறந்தபடி கட்டட பிரகாரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையின் சாயல் இருந்தது. அதற்கு மாறாக, பணியிடத்திலிருந்து பணியிடம் மாறிய சித்தப்பா கண்கள் குறுக்கி மூக்கின் நுனி அதிர உடல் ரோமங்களின் வாளிப்புப் பளபளக்கப் பத்திரமாகக் கிளை பிடித்துக் கிளை ஏறும் காட்டுப்பூனை. சித்தியோ பயம் என்றாலும் காமம் என்றாலும் கீ,கீ என்று அதே குரலில் கத்தும் கிளி. அம்மா எதற்கும் அசைந்து கொடுக்காமல் மௌனத்தில் ஆழ்ந்திருக்கும் காட்டு மரம். அம்மாவின் அகலமான கனாத தும்பும் கண்களும் உயரமும், கட்டான உடல் அமைப்பும், பளீரென்ற சிரிப்பும் மாலோலனுக்கு வாய்த்திருந்தன.

உன் ரூபத்தில் இன்று வரைக்கும் அம்மாவைத்தான் விற்றுக் கொண்டிருக்கிறாயா மாலோலா. அப்படித்தான் இருக்கும். பினாங்கிலிருந்து கல்யாணமாகி வந்த புதிதில் வீட்டிலேயே இருந்த அம்மா இவன் பிறந்து ஒரு வருடம் கழிந்த பின்பு நடு முதுகுவரை வளர்ந்திருந்த கூந்தலை கத்தரித்து விட்டுச் செசில் தெருவிலிருந்த ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் எழுத்தராகச் சேர்ந்தாள். அவள் மனோநிலையில் ஏற்பட்டிருந்த ரசாயன மாற்றத்தின் இன்னும் திடமான அறிகுறியாக அவள் தாலி படுக்கையறைக் கதவின் பின்னாலிருந்த கொக்கியில் லேசாய் ஆடியபடி தொங்கியது.

“பட்டுச் சேலையும் பட்டு வேட்டியும் தெனைக்குமா உடுத்துறோம்? பண்டிகைக்கு உடுத்துனா பத்தாது?”

அம்மா அடிக்கடி இப்படிக் கேட்பாள் என்று ஒருமுறை சித்தி நகை வாங்க போன நேரத்தில் அவளுடன் வந்த தோழியிடம் சொல்வதை மாலோலன் கேட்டிருக்கிறான். சித்தி மாங்கல்யத்த கடைத் தாலியிருந்து கழற்றித் தங்கச் சங்கிலிக்கு மாற்றியிருந்தாள். சித்தி அம்மாவைப் பற்றி யாரிடம் சொன்னாள் என்று மாலோலன் மிகத் தீவிரமாய்ப் பல நாட்களாய் யோசித்திருக்கிறான். இந்த விவரம் மட்டும் தெரிந்தால் அம்மாவைப் பற்றிய இரகசியமும், அவள் தன் நிறுவனத்தில் மானேஜராக வேலைப் பார்த்த ராஜுவோடு ஏன் ஓடிப் போனாள் என்பதும் வெட்ட வெளிச்சமாக கொட்டி வைத்த வெறும் வெயிலாகத் தெரிந்து விடும் என்று அவன் நம்பினான். அதில் அவன் தேர்ந்தெடுத்த வாழ்க்கையின் அர்த்தமும் விளங்கக் கூடும். ஆனால் அந்த விவரம் அவனுக்குப் பிடிபடாமலேயே இருந்தது. நாள்கள் கடக்கச் சித்தி அப்படி உரையாடியதையே அவன் கற்பனை செய்து கொண்டதாக அவன் நம்ப ஆரம்பித்தான்.

சித்தி மட்டும் அவ்வப்போது பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் ஊர் புத்தி விடுமா என்று கேட்கிறாள். மனிதன் செய்யும் நன்மைகளுக்கும் தீமைகளுக்கும். அவன் பிறந்த ஊர்தான் காரணமாக அமைகிறது.

லோவர்டெல்டா சாலையில் உள்ள ஈரறை அரசாங்க அடுக்குமாடி வீடொன்றில் ஓரறை மாதம் எண்ணூற்றைம்பது வெள்ளிக்கு வாடகைக்குக் கிடைத்தது. வீட்டின் சொந்தக்காரச் சீனன் விமானத்தில் பணி செய்பவன்.

“என் நாயைப் பார்த்துக்கிறியா? வாடகையிலர்ந்து நூறு வெள்ளி குறச்சுக்குறன்.”

உலகம் பரிவர்த்தனை மயம். அதில் உடம்பு மட்டும் விதி விலக்கா? வெறும் மாமிசப் பிண்டம். சாப்பாட்டுக்கு மட்டும்,

“ரெண்டு பொரிச்ச கோழி சொல்லவா?”

உற்றுப் பார்த்த வெள்ளைக்காரக் கிழவன் இப்போது பக்கத்தில் தொடையோடு தொடை உரசியபடி அமர்ந்திருந்தான். கொஞ்சம் ஆங்கிலமும் நிறைய இத்தாலிய மொழியும் கலந்து கைகளை உயரத் தூக்கிக் காற்றில் பெரிய பெரிய வட்டங்களை வரைந்த படி உரக்கப் பேசினான். அவனது தலையின் உச்சியில் நரை முடிசப்புக் கொட்டியபடி அலையும் தீச்சுவாலைகளாய்க் கலைந்திருந்தது. மீனின் அடிப்பாகம் போன்ற வெள்ளை நிறம். கனமான தொப்பை. அரைக்கால் சிலுவாரு. ஓநாய்க் கண்கள். கனிந்து தொங்கிய உதடுகளில் சதா ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரம்.

உணவுக்குச் சொன்னார்கள். கிழவன் மாலோலனின் புறங்கையில் தன் விரல் கொண்டு தேய்த்தான்.

“என்ன அழகான கறுப்பு நிறம். சிசிலியின் கரும் திராட்சை ரசம் போல்.”

மாலோலன் வெறும் அவரோ கணங்களாகச் சிரித்தான். அவன் கண்கள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தன.

“என்ன ஹோட்டல்?”

கிழவன் பதில் சொன்னான். மாலோலன் மேசை மீது விரல்களால் தாளமிட்டபடி யோசித்தான். போகலாம். செக்யூரிட்டியால் அவ்வளவு பிரச்சனை இருக்காது. ஆனால் மெனக்கெட வேண்டும். வியாபாரச் சந்திப்பு என்று சொல்ல வேண்டும். மாலோலன் தன் முழங்கைச் சட்டையின் முன்புறத்தை தட்டி சட்டையின் முனைகளை இழுத்து விட்டுக் கொண்டான்.

 

“பணத்தை இப்பவே கொடுத்துட்டா நல்லது.”

இரண்டு விரல்களை முகத்திற்கு முன்னால் தேய்த்து மாலோலன் காட்டினான். உலகமெங்கும் ஒரே மொழி. கிழவனின் முகம் சுருங்கியது. பின்னர் அரைக்கால் சட்டையின் பின்னால் வைத்திருந்த மணிப் பர்ஸை உருவிக் கிழவன் பணத்தை எண்ணினான். மூன்று நீல நிறத் தாள்கள் கைமாறின.  கிழவன் மீண்டும் தன் முகத்தைச் சகஜமாக வைத்துக் கொண்டான்.

“நீ எவ்ளோ அழகா இருக்கே. மாடலிங் மாதிரி எதாவது செஞ்சா என்ன?”

“மாடலிங் போனாலும் கடைசியில இங்கதான கூட்டி வந்து விட்டுடுவீங்க. அதுக்கு நேரா இதுக்கே வந்துர்றது நல்லது இல்லயா? அப்புறம் எல்லாம் உடல் உழைப்புத்தான. இதுக்குனு தனியா வேலைக்குப் போகணும்னு எனக்குத் தோணல.”

கலகலவென்று சிரிப்பு. இப்போது கிழவன் தயக்கமில்லாமல் மாலோலனின் தொடையின் மேற் புறத்தில் கை வைத்திருந்தான்.

“உம் பேர் என்ன?”

“மாலோலன்.”

கிழவன் இரண்டு மூன்று முறை சொல்லிப் பார்த்தான்.

“உன்னை நான் மாலோனுதான் கூப்பிடுவேன்.”

மாலோ மாலோ. டர்ட்டிஃ பெல்லோ.

பொரித்த கோழி வந்தது. தட்டின் மேல் மல்லாக்க வைக்கப்பட்டிருந்த கோழி இறக்கைகள், சகல வித அலங்காரங்களோடு. அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் இந்தக் கிழவனின் வயதுதானே இருக்கும் என்று மாலோலன் யோசித்தான். அவர்கள் ஏன் இப்படியெல்லாம் சின்ன வயது பையனைத் தேடிப் போகவில்லை என்றும் யோசித்தான். கிழவனும் அவனும் அம்ர்ந்திருந்த குடிக்கும் விடுதி பெரிய கண்ணாடி அறையாகவும் அதன் அரையிருட்டில் மின்னிய விளக்குகள் பட்டாம்பூச்சிகளாகவும் மாலோலனுக்குத் தென்பட்டன.

“ம். சாப்பிடு.”

சித்திக்குக் குழந்தைகள் இல்லை. மாலோலனுக்கு உணவிட்டு விட்டு ஒருவித பெருமிதத்தோடு அவன் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பாள். கிழவன் மாலோலனின் கையைத் தன் கைக்குள் எடுத்து ஈரமான முத்தங்களைத் தந்து கொண்டிருந்தான். அவன் கொடுத்த முத்தங்களின் இறுதியில் பொரித்த கோழியின் எண்ணெய் பிசுபிசுப்பு வழுக்கியது.

ஒவ்வொரு முத்தத்தின் நடுவிலும் கிழவன் குழறினான். என்னோடு வந்து விடுகிறாயா. இத்தாலிக்கு அழைத்துச் செல்கிறேன். எல்லாம் என் செலவு. பெண்டாட்டி இல்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். அங்கு இதெல்லாம் மிக சகஜம். மாதம் மூவாயிரம் டாலர்.

மாலோலன் கோழியை நன்றாக மென்று தின்று கொண்டிருந்தான். அவன் கண் முன்னால் ஓரிரு இரவுக்குள் மாயமாய் மறைந்துபோன அம்மாவும் அப்பாவும் மங்கலான கல்யாண நாள் புகைப்படங்களாக வந்து போனார்கள். சித்தப்பாவும் சித்தியும் சுற்றி நின்று அவனைப் பார்த்து ஓஹோவென்று பேய்ச் சிரிப்பு சிரித்தார்கள்.

திடீரென்று மாலோலனுக்கு கண்ணாடி அறையும் அதில் மாட்டிக் கொண்ட பட்டாம்பூச்சிகளும் எல்லாம் தெளிவாய் விளங்கின. இடதுகையால் மேசை மீது பலமாக அடித்தான். கோழித்துண்டுகள் இருந்த தட்டும், சாப்பாட்டு உபகரணங்களும்,  கண்ணாடிக் கோப்பைகளும் பலமாய் அதிர்ந்தன.

“நான் எங்கயும் வரமாட்டேன் புரியுதா? இதுதான் என் இடம். நான் இங்கதான் இருப்பேன்.”

மாலோலன் ஏறக்குறைய கத்தினான். வெள்ளைக்காரக்கிழவனின் கண்கள் குழப்பத்திலும் பயத்திலும் விரிந்தன.

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation