ஜெயமோகனின் 'சோற்று கணக்கு' சிறுகதையை வெவ்வேறான கால கட்டங்களில், மூன்று கட்டமாக வாசித்திருக்கிறேன். எனக்கு 'கெத்தேல் சாகிப்' நல்ல பரிட்சயம். அவரின் கட்டுமஸ்தான உடலமைப்பை என்னால் துல்லியமாக சொல்லி விட முடியும். சமீபத்தில் மீண்டும் 'சோற்று கணக்கு' வாசித்த போது 'கெத்தேல் சாகிப்' உயரம் மூன்றடி குறைந்திருந்தது, தலை மயிர் நீண்டு வளர்ந்து நரை பழுத்திருந்தது. எடுப்பான பற்கள், சோர்வடைந்திருந்த கண்கள், உடலும் மலிந்திருந்தது. ஆனாலும் கூட அதே பாவனை. சட்டென்று மனம் கனத்தது. அம்மா இறந்து 12 வருடங்கள் கடந்துதிருந்தன. அவரின் முகம் கூட ஞாபகத்திலிருந்து மறைந்திருந்தது. உள்ளிருந்து கேட்கும் அவர் குரலை தவிர. ஒரு படைப்பும் இப்படிதான் சாத்தியப்படுகிறது.
'கெத்தேல் சாகிப்' தன் இயல்புக்கு பழகியிருக்கிறார். அவர் தன் மனம் போன போக்கில் வாழ்பவர். அதன் பொருட்டே அவரிடம் அன்பு இயல்பாகவே வெளிப்படுகிறது. அவர் முரட்டு குணமும், அதன் பால் வெளிப்படும் அன்பும் கெத்தேல் சாகிபின் இயல்பு நிலை. எப்போதும், ஒரு படைப்பின் மைய கதாபாத்திரம் ஒருமையில் பேசப்பாட்டாலும், அது பன்முக தன்மையைக் கொண்டது. அதுவே அப்படைப்பின் உருவகத்தை தாங்கி நிற்கிறது.
ஒரு படைப்பு சக மனிதனிடமிருந்து, இயல்பாக வெளிப்படும் அன்பை சொல்கிறது; மற்றொன்று அன்பை புறகணிப்பதும் மனிதனின் இயல்பு என பேசுகிறது. இவ்விரு படைப்புகளும் அன்பின் இருவேறு முகங்களைக் காட்டி செல்கின்றன. அன்பின் இருப்பை விவாதிக்கவும் செய்கின்றன. வாழ்வின் சமநிலையை நோக்கி உரையாடும் படைப்புகள் இவை.
இதே தளத்தில் வைத்துதான் எழுத்தாளர் பாலமுருகனின் 'பேபி குட்டி' சிறுகதையை என்னால் அணுக முடிகிறது. இரண்டு கதைகளும் வெவ்வேறான உணர்வு தளத்தில் இயங்கினாலும், அவை கொடுக்கும் பாதிப்பின் கனம் வெவ்வேரான அளவு.
கதை ஒரு கனத்த இருக்கத்தை கெட்டியாக, எங்கேயும் தளரவிடாமல் பிடித்து வைத்திருக்கிறது. காலம் ஒரு மாயை, அது தன்னிகரற்றது. நாம் வளரும் பொழுது நம்முள் ஒரு குழந்தைமையை அது வளர்தெடுக்கிறது. தினவெடுத்த மாமிசத்தின் மீது கொண்ட கர்வத்தால் , அதன் யதார்த்தத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
நமக்கு கற்று கொடுக்கப்பட்ட குழந்தைமையின் வடிவம் வேறு. அதற்கான கவனத்தை நம்மால் கொடுக்க முடியும். ஆனால், காலம் வளர்தெடுக்கும் குழந்தைமை தனக்கான ஒரு கவனத்தை கோரி அது நிற்கிறது. அதன் தொடுதலை எந்தவொரு குற்றவுணர்ச்சி இல்லாமல், நம்மால் புறக்கணிக்க முடிகிறது. ஒரு குழந்தைமையை அதீத அளவில் நேசிக்கவும், மற்றொரு குழந்தைமையை அதீத அளவில் வெறுக்கும் குரூர மனித மனம், அதை தன் மரபான இயல்பாகவே மாற்றிக் கொள்கிறது.
சவபெட்டிக்குள் படுத்திருக்கும் குழந்தைக்கும், சப்பாத்திகளை சீராக அடுக்கி கொண்டிருக்கும் பேபி குட்டிக்கும் மத்தியில் கதை நிகழ்கிறது. பாலமுருகன் தேர்ந்த கதை சொல்லிகளில் ஒருவர். அவரால், வெவ்வேறு சூழல்களில் வைத்து இதே கதையை சொல்லிருக்க முடியும். அப்படி சொல்லும் பட்சத்தில் அதன் வீச்சம் ஆழமாக இருந்திருக்காது.
கதை விவரிப்புகளின் பின்னால் மரணம் ஓர் ஆழ்ந்த உறக்கத்தை போல பின் தொடர்கிறது. அது யாரையும் பயமுறுத்தவில்லை. மாறாக பேரழுகைகள்குள் ஒரு மெல்லிய மௌனத்தை படரவிடுகிறது. கதைக்கு பாலமுருகன் தேர்தெடுத்த சூழல், அதன் மைய ஓட்டத்திலிருந்து விலகாமல், அதன் படிமத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்கிறது.
முதுமையை எட்டியிருந்த பேபி குட்டியின் இருப்பு கூட சக மனிதர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவளின் இருப்பு அசூசையாக பார்க்கப்படுகிறது. அது ஒரு முதுமையான ஜடம் அவ்வளவே. குழந்தையின் மரணத்திற்காக பேபி குட்டி சபிக்க படுகிறாள். முதுமை மரணத்தின் குறியீடாகவே சராசரியான யதார்த்த சூழலில் பார்க்கப்படுகிறது.
அச்சூழலின் இருக்கத்தையும், அதன் இழப்பு குறித்தும் பேபி குட்டிக்கு எந்த ஒரு பிரக்ஞையும் இருக்கவில்லை. அவளின் உலகம் தனக்கு பரிச்சயம் என நம்பும் சொற்ப மனிதர்கள் மீது காட்டும் அன்போடு முடிவடைகிறது. அக்கூட்டத்தில், மற்றவை எல்லாம் அவளுக்கு ஒவ்வாத இரச்சல்கள். யாரும் அந்த குழந்தைமையை அணுகி, அரவணைக்க தயாராக இல்லை. மரணத்தின் இல்லாத பயமும், வெறுப்பும் முதுமையின் மீது பற்றிக் கொள்கிறது. சொல்ல போனால் முதுமையை விட மரணத்தை ஏற்றுக் கொள்ளும் மன பக்குவத்திற்கு நாம் பழகிருக்கியிருக்கிறோம் அல்லது பழக்கபடுத்தப்பட்டிருக்கிறோம் .
ஒரு தரமான இலக்கிய கலை படைப்பு வெவ்வேறு காலகட்டத்தின் வாசிப்பின் போது, பல திறப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. அது வாசிப்பின் முதிர்ச்சி பொருத்து நிகழும். பேபி குட்டியின் தாக்கமும் அவ்வாறானதே.
பாலமுருகன் தொடர்ந்து, படைப்பிலக்கியம் சார்ந்து இயங்கி வந்தாலும், நல்ல சிறுகதைகளை எழுதிருந்தாலும், அலமாரிக்கும் பேபி குட்டிக்கும் ஒரு நீண்ட இடைவெளி இருக்கவே செய்கிறது. இது ஒரு படைப்பாளியின் தொய்வு என்று சொல்வதை விட ஜனரஞ்சக இலக்கியத்தை முன்னெடுக்கும் மலேசிய இலக்கிய சூழலின் போதாமைகள் இவை. மலேசியத் தமிழ் படைப்பிலக்கிய சூழலில் பெரும்பாலும் தொடர்ந்து தேய்ந்த வழக்கில் எழுதுவதும் புற சூழலின் மீது கூர்மையான அவதானிப்பு இன்றியும் எழுதப்படுகிறது. ஜனரஞ்சக எழுத்து அகம் சார்ந்து எந்த ஒரு எழுச்சியையும் ஏற்படுத்தாது. அவை ஓரிடத்தில் தொக்கி நிற்கும்.
இலக்கியம் கலை இயக்கங்களின் மற்றொரு வடிவம். அது செழுமையான சிந்தனை தளத்தில் இயங்குகிறது. அதுதான் கலையின் தன்மை, கலையில் ஆழ்ந்திருக்கும் அமைதியும் கூட. இலக்கியத்தின் நீட்சியும் இப்படி தான் சாத்தியப்படுகிறது. இச்சிறுகதை சிறந்த கலை அம்சத்தோடு எழுதப்பட்டிருக்கிறது. எந்தவொரு திட்டமிட்ட முடிவு என்றில்லாமல் அதன் போக்கில் முடியும் கதை, பேபி குட்டி எனும் குறியீட்டுக்கு அழுத்ததைக் கொடுக்கிறது. பேபி குட்டிகுள் ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறாள் .