• Time to read: 13 minutes
  • 1489
  • 0

மதுக்கூடம்

By கரன் கார்க்கி

நகரில் இப்படியானதொரு மதுக்கூடத்தை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை, இவ்வளவு பெரிய முதலீடா….இதைவிடப் பைத்தியகார தனம் வேறெதுவுமில்லையென அவனைச் சார்ந்தவர்கள் எல்லாமே முணுமுணுத்தார்கள். மதுக்கூடத்துக்கு இவ்வளவு பிரமாண்டம் தேவையா? அவன் தனது நாற்பத்தெட்டு வயதிற்குள்ளாக பல வியாபாரங்களைச் செய்து நிறைய பணமீட்டி சலிப்புற்றிருந்தான். எல்லா வியாபாரமும் ஏதோ ஒரு விதத்தில் அவனுக்கு கேலி கூத்தாக இருந்தது  மதுவகம் நகரின் மையத்தில் இருந்ததுடன் இரண்டு வல்லரசு நாடுகளின் தூதரகத்துக்கு மையத்திலிருந்தது.

புகழ் பெற்ற ஜெர்மன் நிறுவனம் அந்த இடத்தில் தன் மகிழுந்து தயாரிப்புகளுக்கான காட்சியகத்தை வைக்க பெருந்தொகையொன்றைத் தர முன் வந்தது. அப்படியும் ஏன்?அவன் இந்த தொழிலைத் தேர்ந்தெடுத்தான் என்று ஐரோப்பாவில் குடியுரிமை பெற்று வாழும் அவனது சகோதரிகள் அவனை பைத்தியக்காரனென்று திட்டித் தீர்த்தார்கள்.

நூற்றி நாற்பது வருடமாக அவனது குடும்பத்தினரின் ஆண்கள் மட்டுமே புழங்கிய இடமது, அதனடியே அவர்கள் வாழ்ந்ததற்கான நூற்று பன்னிரென்டு ஆதாரங்கள் புதைந்துக் கிடக்கிறது. உலகம் காணவில்லையெனத் தேடிய இரண்டு பெண்கள், ஒரு ஆண் உடல் உட்பட இப்போதும் அந்த மூன்று எலும்புகூடுகள் அடையாளமற்றுப்போன அந்தக் கிணற்றில் கிடக்கிறது. அவனது பாட்டன்கள் பயன்படுத்திய கோச் வண்டி இன்னமும் குலைந்துப் போகாமல் மெருகுடன் மதுக்கூடத்தின் மையத்தில்  நான்கடி உயர பளிங்கு மேடையில் நிற்கிறது. பாட்டனார்களின் ஆவிகள் அதில் இருப்பதாக அவன் நம்பினான். அது எப்போது வேண்டுமானாலும் பாய்ந்து ஓடக்கூடும் என்பதுப்போல உயிரோடு நிற்கிறது.அந்த மதுக்கூடத்தைவிட வாடிக்கையாளர்களின் வாகனம் நிறுத்துமிடம் இரண்டு மடங்குப் பெரியது.

2

அந்த மதுக்கூடத்தை வடிவமைக்க கொரிய நிறுவனம் ஒன்றைத் தேர்ந்தெடுத்திருந்தான். அவர்கள்  ஐந்து வடிவ மாதிரிகளைத் தந்தார்கள். கண்ணாடி இழைகளால் வடிவமைக்கப்பட்ட ஒருமாதிரியை தேர்ந்தெடுத்திருந்தான்.எட்டுவார்ப்பிரும்புதாங்குத் தூண்களாலான கூடம்  எட்டு தூண்கள் கூடத்தின் மையத்தில் நேர்கோடாய் வரிசையாய் நிற்கிறது.மேற்கூரை திறந்த வானம்போலிருக்கிறது.தாரகைகள் சுடர்கின்றன, நிலவு தோன்றி மேகங்களில் மறைகிறது, மேகம் கறுக்கிறது, இடியும்,மின்னலும் தோன்றுகிறது, எப்போதேனும் ஒரு விமானம் கடந்துப் போகிறது.ஒரு எரி நட்சத்திரம் விழுகிறது, இருபத்துநான்கு மணி நேரத்துக்கான வானமும் அப்படியே அதை அவர்கள் செய்துக்காட்டிய போது அவன் வியந்து மின்னணு பொறியாளர்களை கட்டியணைத்துக்கொண்டான். சுற்றுச்சுவர்கள், தடுப்புகள் என எல்லாமே வலுவூடடப்பட்ட கண்ணாடியாலானது.சுவரை உற்றுப்பார்த்தால்டிராகன்களும், பாம்புகளும் பறவைகளும் அண், பெண் நிர்வாண உடல்களாலான புடைப்பு சிற்பங்கள், மதுக்கூடத்திலிருந்துப்பார்த்தால் திறந்தவெளியில் இருப்பதுப் போன்றிருக்கிறது.மூன்று வாயில்களில் உள்ள கைபிடிகள் தான் பயத்தில் உடல் கூச்சத்தை தருகின்றன, பம்பு தனது வாயைப் பிளந்துக்கொண்டு நெளிகிறது, அச்சமூட்டும் அசலான பாம்புபோல அவனேகூட முதன் முதலில் தொட அஞ்சினான், இப்போது பழகியப்பின்னும் அவநம்பிக்கையோடு அதை உற்றுப்பார்க்கிறான். மதுவருந்துபவர்களுக்கு பன்னிரென்டு ஓய்வறைகள் , ஐரோப்பிய, தென்கிழக்காசிய உணவு வகைகளென  அந்த மதுக்கூடம் துவங்கிய நாற்பது நாட்களிலேயே நகரின் அடையாளமாகிவிட்டது. அந்தக்கடையில் வைக்கும்படியான உள்ளூர்  மது ஒன்றுமேயில்லை. எல்லாமே ஆறாயிரம் மைல், பத்தாயிரம் மைல் பயணித்து வந்தது. பன்னிரண்டு சர விளக்குகளை தவிர வேறு விளக்குகள் எதுவும் அந்தக் கூடத்தில் இல்லை. அதுவும் மிக மங்களான ஒளி,கூரை உயரத்திலிருந்தது.

மதுக்கூடத்தினுள்ளே நுழைந்தவர்கள் கலைடாஸ்கோப்பில் நுழைந்துவிட்டவர்கள் போல குதுகலமாகிவிடுகிறார்கள். மதுபறிமாறுபவர் மின்னணு கண்ணாடிக்காகிதத்தில் ஆறாயிரம் வகையான மதுவகைகளின் பட்டியல் வரும்,தேவையானதை தொட்டு உறுதிப்படுத்தினால் ஐந்து நிமிடத்திற்குள் பறிமாறப்படும். மதுவக முகப்பில் வண்ண நீறூற்று முப்பதடி உயரத்துக்கு இசைக்கு தகுந்தபடி வித்தை காட்டிக்கொண்டிருக்கிறது.

உங்கள் மது….உங்கள் உரிமையென்று விளம்பரம் செய்ய ஆலோசித்தான், அதற்கு வாய்ப்பில்லை தரமான உணவகம் என்று விளம்பரம் தரலாம், அதில் தந்திரமாக மதுவுக்கான காட்சிகளை வைத்துவிடலாம், பிறகு யாராவது கோர்ட் வழக்கு என்று வந்தால் நீக்கிவிடலாமென்ற ஆலோசனை வந்தது, ஆனால் நாற்பது நாட்களிலேயே விளம்பரம் தேவையில்லை என்கிறளவில் மதுவகம் நகரெங்கும் பிரபலமாகிவிட்டது. இருபது நாடுகளின் சாராயம் அங்கு கிடைக்கிறது.

போயும் போயும் ஒயின் ஷாப்பா என்று முகம் சுளித்த அவன் சகோதரிகள் இப்போது அவனுக்கு வாழ்த்தச் செய்தி அனுப்பினார்கள்அவன் பிரபலமானவனாகியிருந்தான்.

அவன் வாடிக்கையாளர்களை கூர்ந்துப் பார்க்கிறவனாகி.எதுமாதிரியான ஆட்கள் வருகிறார்கள் ,எப்படி நடந்துக் கொள்கிறார்கள், எதை அதிகம் விரும்புகிறார்கள்  என்று வாடிக்கையாளரை ஆய்வு செய்கிறவனாகிவிட்டான். தனியாக வருகிறவர்கள், கும்பலாக வருகிறவர்கள்,

 

 

 

4

மதுக்கூடத்தில் நுழைந்தவுடன் எதையாவது உடைத்துவிடுவோமோவென நாசுக்காக நடந்துக் கொண்டு மது வெறியேறியப்பின் கண்ணாடி மேசையில் ஓங்கியடிக்கிறார்கள், ஓசையுடன் இரண்டொரு ரத்த துளிகளுடன் மேசை விரிசலிட்டிருக்கிறது, தங்கள் கைகளில் கண்ணாடி சில்லுகள் குத்திவிட்டதாவென  அச்சத்துடன் பார்ப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை அதற்குள் அந்த நாகரீகமற்ற குடியரை சீருடை அணிந்த உடல் வலுமிக்க ஊழியர்கள் அப்புறப்படுத்திவிடுவர்கள். அடுத்த நொடியில் அந்த மேசை விரிசலற்று அதே பளபளப்புடன்,மின்னணு மாயங்களால் ஆனது அவனது மதுவகம். அறுபது நாட்களுக்குள் அவனுக்கு எல்லாமே பழகிவிட்டது. மதுக்கூடத்தை நினைத்துப் பெருமையாக இருந்தது.

ஒரு ஓவியனைப்போல, அல்லது ஒரு நாவலாசிரியனைப் போல, அவன் அதிகாலையிலேயே எழுந்து கடற்கரையை ஒட்டிய தனது வீட்டின் சாளரம் வழியே  தனது படைப்பை போல கடலைப்பார்ப்பான்  அப்போது கதிரவனின் வருகைக்கான எந்த அறிகுறியும் இருக்காது. ரோல்ஸ்ராய்ஸை எடுத்துக்கொண்டு  நகரின் அகலமான சாலையில் பறப்பான்.முடிவில் அவனது மதுகூடத்தினெதிரே வண்டியை நிறுத்திவிட்டு மதுவகத்தின் முழு தோற்றத்தையும் பார்ப்பான். அதிகாலையிலும் மதுக்கூடம் இயங்கியபடியிருக்கிறது, குடியர்களுக்கான ஓய்வறைகள் காலியாவதேயில்லை.  தனது ரோலஸ்ராய்சில் சாய்ந்தபடியே மதுவகத்தைப் பார்த்து ரசிப்பான்.புகழ்பெற்ற சினிமா கலை இயக்குனரால் உருவான கடல் நண்டு நீரூற்றுக்கு மேலே உயிர்ப்போடு அசைந்துக்கொண்டிருக்கிறது. இப்போது சூரியன் முளைத்து செவ்வானம் படருகிற நேரம் ,சிவப்பு புள்ளிகளால் ஆன நண்டு கடல் நீரூற்றுக்கு மேலே தூணின் ஆதாரத்தில்  தப்பியோட தவித்துக்கொண்டிருக்கிறது. இப்போது சூரியன் முளைத்து செவ்வானம் விரிகிற நேரம் நண்டு வேகங் கொள்கிறது.

5

அவனது மனம் துள்ளுகிறது…குடியால் உடலழிந்து நாசமான தனது பாட்டன்களை நினைத்துக்கொண்டான். அவர்களை அவன் பார்த்ததில்லை அவர்களது வரலாற்றால் அவர்களது பல நூற்றாண்டு செல்வத்தால் அவன் நிரப்பப்பட்டிருந்தான்.  அவர்கள் இந்த மதுக்கூடத்தைக் கண்டால் என்று கற்பனை செய்துப்பார்த்தான்,அவர்களின் ஆவிகள் அந்த கோச் வண்டியில் இருப்பதாக அவன் நம்பினான்.மதுக்கூடம் துவங்கி பதினாறாம் நாள் மது வெறியேறிய இளைஞனொருவன் கோச்சில் ஏறி உட்கார முயன்று விழுந்து காலை உடைத்துக்கொண்டான், இது தன் மூதாதை ஆவிகளின் வேலை தானென உறுதியாக நம்பினான். மதுக்கூடம் குறித்த பலவிதமான கற்பனைகளுடன் சிகரெட்டைப் பற்ற வைத்தான், அவன் செலவழித்த தொகை, வருவாய் என எல்லாவிதத்திலும் லாபமான ஒன்றாகவே இருப்பதற்க்கான விடைகளே வருகிறது.மனநிறைவாக உணர்ந்தான். அதே நேரம் சளிப்பாகவும் இருந்தது.ஒரு வாடிக்கையாளன் வருகிறான்  பாம்பு நெளியும் கைபிடிகளைப்பார்த்து கூச்சமடைகிறான்,கண்ணாடி சுவரின் புடைப்பு சிற்பங்களைப் பார்த்தப்பின் விரும்பிய மதுவை குடித்து கன்னம் விறுவிறுக்க பணத்தை தந்துவிட்டு போகிறான்.இதிலென்ன இருக்கிறது. என்று தனக்கு தானே கேட்கவும் செய்தான்.

தனது சொந்த மதுக்கூடத்தை யாரோ போல ரசிக்கும் எசமானரை ஊழியர்கள் மதுக்கூடத்திலிருந்துப் பார்ப்பார்கள். அவர்களுக்கு  போதுமான அன்பளிப்புகள் அங்கு கிடைக்கவே செய்தன. மதுக்கூடத்தில் எட்டு நாடுகளை சேர்ந்த சமையல்காரர்கள்,பதினாறு நாடுகளை சேர்ந்த மது பரிமாறுபவர்கள், அதில் பத்து நாடு ஆப்பிரிக்கா கண்டத்திலிருக்கிறது.அதனாலோ என்னவோ வெளிநாட்டுப் பயணிகள் கடல் நண்டை ஒரு சுற்றுலாதளமாக்கிவிட்டார்கள், இருபத்தைந்து நாடுகளை சேர்ந்த இசை கலைஞர்கள் ஒருமணி நேர இடைவெளிவிட்டு பன்னிரெண்டு மணி நேரம் வாசித்தபடியே இருக்கிறார்கள்.  எல்லாம் மிக சரியாகப்போய்க் கொண்டிருக்கிறது. ஆனாலும் எதோ ஒரு குறை அவனுள்ளதில்,

6

வழக்கம் போல அன்றும் தனது ரோல்ஸ்ராய்சில் சாய்ந்தபடி மதுகூடத்தை பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான், ஜப்பான் ஸ்பைடர் கிராப் வகையை சேர்ந்த நண்டு தப்பியோட துடித்துக்கொண்டிருந்தது. அதன் கால்கள் பன்னிரண்டு அடி நீலத்துக்கு நீண்டு அசைந்துக்கொண்டிருப்பதால் பறவைகள் கூட அதன் மேல் உட்காரஅஞ்சுகின்றனஎன்பதை அவன் கவனித்தபோது துயரமாக உணர்ந்தான்.அந்த நேரம் பார்த்து கடற்கரை பக்கமிருந்து பறந்த வந்த இரண்டு மீன் கொத்திகள் ஒரே நேரத்தில் கடல் நண்டின் கண்களில் பக்கத்துக்கு ஒன்றாய் உட்கார்ந்தன,  பன்னிரெண்டு வினாடிகளுக்கு ஒரு முறை கண்கள் வலதும் இடதுமாக அசையும் தருணத்தில் பறவைகள் இரண்டும் அதிர்ச்சியில் பறந்தபடி நண்டை அச்சத்துடன் பார்த்தன. இவ்வளவு பெரிய நண்டை அவை பார்த்ததே இல்லை, இந்த இடத்தில் எப்படி? அவை குழம்பிவிட்டன,  பொரியாளர்கள்கடல் நண்டை அவ்வளவுநேர்த்தியாகஉயிருள்ளதைப்போல் வடிவமைத்திருந்தார்கள் ஆறு விதமான அசைவுகளை அது நிகழ்த்தும், கடல் நண்டு தனது அலகை விரித்து அவனைப்பார்த்துக் கொண்டிருந்தது. பறவைகள் என்ன நினைத்தனவோ மீண்டும் நண்டின் பல்லில் வந்தமர்ந்துக்கொண்டு ஓசையெழுப்பின. நண்டுடன் அவன் பறவைகளையும் ரசித்துக்கொண்டிருந்தான். மின் கொத்திகள் இரண்டும் அசட்டையாக இருந்த சமயம் நண்டு விழித்துக்கொண்டது போல் கொடுக்கை அசைக்க, அவனே ஓவென அலறிவிட்டான்.அதைவிட வேகமாக மீன் கொத்திகள்  வானில் எழும்பி மேற்க்கு நோக்கி பறந்து விட்டன. தன் சொந்த நண்டின் மேல் அவனுக்கு கோபம், அந்தப் பறவைகளுக்காக இரக்கப்பட்டான். அன்று முழுதும் அந்த பறவைகளின் நினைவாகவே இருந்தான். நண்டையும், பறவைகளையும் நண்பர்களாக்க முடியாது என்பதை நினைக்க அவனுக்கு கவலையாக இருந்தது.

 

7

மறுநாள் அதிகாலையும் அதேபோல் மதுவகம் முன்பாக தனது ரோல்ஸ்ராய்சில்  சாய்ந்தபடி நின்று புகைத்தபடி மதுவகத்தைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அவன் கண்கள் வானத்தில் அந்த மீன் கொத்திகளை தேடியது. அந்த மீன் கொத்திகள் திரும்ப வரப்போவதில்லை.என்று அவன் தனக்கு தானே சொல்லிக் கொண்டான். அவன் எப்போதும் பறவைகளை நேசிப்பவனாய் இருந்தான்.தனக்கான சொந்த பறவைகள் பூங்கா ஒன்றைகுழந்தைப் பருவத்திலிருந்தே கனவு கண்டு வருகிறான். பறவைகளின் மீதான காதல் அவன் பரம்பரைக்கு ஒரு நோய் போல, அவனதுப்பாட்டனார் போர்ச்சுகீசியன் ஒருவன் தந்த மூன்று வண்ணக்கிளிகளுக்கீடாக தனது ஆசை நாயகியையே  தந்துவிட்டாராம். அவனது பாட்டனார்கள் பறவைகளால் ஆன பெரிய தோட்டங்களை வைத்திருந்தார்கள். ஆசியாவின் பறவையினங்கள் எல்லாம் அதில் இருந்ததாம் சுதந்திரம் பெறுவதற்க்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பான ஒரு மோசமான புயலில் அவை அழிந்துப் போனதாக ஒரு  குடும்ப கதை அவன் நினைவில் தங்கியிருந்தது.அந்த நோய் இப்போது அவனைத் தாக்கியது.

 நீருற்றும், வண்ணக்கொடிகளும்,கடல் நண்டும் வழக்கத்தை மீறி இன்று அவனுக்கு சளிப்பூட்டுகிறது , ஒரு பெரிய மரம் அந்த மரத்தின் கிளை அதன் மீது இருபது பெரிய வண்ணக்கிளிகள் உட்கார்ந்திருந்தால் என்ற யோசனை வந்தது.மது கூடத்தினுள்ளேயே அழகான வண்ணப்பறவைகள் சிறகடித்தால் எப்படியிருக்குமென யோசித்தான்.

அந்த நேரம் அவன் இது வரையிலும் பார்த்திராத வாடிக்கையாளன் இவ்வளவு அதிகாலையிலே பறவை போன்ற தன்நீளமான ஹார்லி டேவிசனில் மதுவக வளாகத்துக்குள் நுழைவதை அப்போது தான் கவனித்தான் அவனது தோள்களில் இரண்டு மீன் கொத்திகள் உட்கார்ந்திருப்பதை. அந்த ஆள் உள்ளூர்காரனுக்குரிய தோற்றமற்று செம்பால் உருக்கி வார்க்கப்பட்டவன் போலிருந்தான்.

8

 அவனது ஆடைகள் மிக தொலதொலப்பாக காற்றால் நிரப்பப்பட்டது போலிருந்தது. அவன் இதுவரை பார்த்த மனிதர்களிலேயே உயரமாக, வீழ்த்த முடியாத மல்யுத்தக்காரனைப் போலிருந்தான். அவன் மீதிருந்த பறவைகள் பருத்த மரக்கிளையின் மேல் உட்கார்ந்திருப்பது போலிருந்தது. இந்தப்பறவைகள் தன் எசமானனுக்கான மதுக்கடையை கண்டுபிடித்து அவனை இங்கு அழைத்து வந்திருக்கலாம்  என்று யோசித்தான் .

பறவை மனிதன் வண்டியை நிறுத்த மதுகூடத்துக்கு பக்கவாட்டுக்குப் போய்விட்டான்.அவனை மதுகூடத்துக்குள் வரவேற்க்க ஆர்வம் கொண்ட உரிமையாளன் மதுக்கூடத்துக்குள் நுழைந்து தயாராக நிற்க, பறவை மனிதன் நுழைவாயிலின் கதவு கைப்பிடியை தொட முயன்று அவசரமாக தனது கையை இழுத்துக்கொண்டான், கைப்பிடியில் பாம்பு வளைந்து நெளிந்தது அவனை திடுக்கிட வைத்தது.அவன் சுற்றிலும் ஒருமுறைப்பார்த்தப் பின் தன் இடது முழு கால்சட்டைப்பையிலிருந்து ஒருப்பறவையை உருவியெடுத்தான்அது விண்ணுக்குத்தாவி ஒரு வட்டம் போட்டு அவன் மரக்கிளைப்போன்ற கையில் வந்து உட்கார்ந்தது. அவன் அதை கைபிடியினருகே கொண்டுப்போனான், அது கோபத்தில்  பாம்பை பாய்ந்துக் கொத்தியது. தனது வலது காலால் வன்மத்தோடு தாக்கி ஏமந்தகருடனை அவன் சாந்தப்படுத்தினான், அது பாம்பல்ல உலோகம் தான் என்று புரிந்து அதன் நேர்த்திக்காக குனிந்து  பாம்பின் தலையில் முத்தமிட்டான்.மதுக்கடை உரிமையாளனுக்கு உள்ளம் குளிர்ந்துவிட்டது.  கருடனை மீண்டும் அவன் கால்சட்டை பையில் நுழைத்துக் கொண்டு மதுவகம்புகுந்தவனை பெரும் மகிழ்ச்சியோடு வரவேற்றான். பறவை மனிதன் தனக்காக தனியாள் மேசையை தேர்ந்தெடுத்தான். சுற்றிலும் ஒருமுறைப் பார்த்தவன் அலங்காரமான கோச் வண்டியை நோக்கி நடந்தான், நெருங்கி அதை உற்றுப்பார்த்தவன் எந்த முன்னறிவிப்பின்றி ஓட்டுனரிடத்தில் தாவி ஏறினான். கம்பீரமாக குதிரைகளை வழிநடத்துபவன் போல்  சாட்டையை சொடுக்கினான்.

9

கம்பீரமாககீழிறங்கி பயணிகள் நுழைவு கதவைத் திறந்தவன் அதனுள் புயல் போல தாவியேறினான்.ஆனால் மதுக்கூட உரிமையாளன் எதிர்பார்த்தது நடக்காமல் பறவை மனிதன் நலமுடன் கிழிறங்கி கதவை சாத்தினான். வண்டியை இரண்டு கைகளாலும் பற்றி ஆழ்ந்து முத்தமிட்டான். பிறகு தனது சொந்த மாளிகையில் நடப்பதுப்போல் கம்பீரமாக தனது மேசைக்கு போயமர்ந்து ஆறு நாட்டின் சாராயத்தை ஆறுக்கோப்பைகளில் ஒரே நேரத்தில் கொண்டுவரச்சொன்னான்.

இதையெல்லாம் பத்தடி தொலைவில் நின்று வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருப்பவனை காட்டி மது பறிமாறபவனிடம்

“யார் இவர்”

“மதுவக உரிமையாளர்”

பறவை மனிதன் வியப்புடன் எழுந்துப்போய் மதுவக உரிமையாளனை மேற்க்குப் பாணியில் கட்டியணைத்து கை குலுக்கினான். பார்வைக்கு தெரிந்ததைவிட அவன் உலோகத்தைப்போல் பலமாக இருந்தான்.

தன் பாட்டனார்களின் ஆவி இவனை ஒன்றும் செய்யாதது ஏன்?ஒரு வேளை என் பாட்டனாரின் ஆவி இவனை வழி நடத்துகிறதா? என்று சந்தேகித்தான். அவனது மேசைக்கு ஆறு கோப்பை மது வந்ததும் அதை உறுதியாக நம்பினான்.அவன் நம்பிக்கைக்கு பறவைகள் பலமூட்டின. அந்த நேரம் தன் கால் சட்டைப்பையிலிருந்து கருடனை எடுத்து மேசையில் விட்டான். அது இடதும் வலதுமாக சிறகை விரித்துக்கொண்டு நின்றது.

“இந்தப் பறவைகள் என்னுடன் இருப்பது உங்களுக்கு தொந்தரவில்லையே” தன் பாட்டனார் தன்னோடு உரையாடுவது போலிருந்தது அவனுக்கு,

10

“நிச்சயமாக இல்லை பறவைகளை எனக்கு பிடிக்கும்  கொஞ்சம் முன்புஇது மாதிரியே இரண்டு மீன் கொத்திகளைப் வெளியேப் பார்த்தேன் அது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.”  அதே நேரம் இரண்டுப் பறவைகளும்  நாங்கள் தான் என்பதுப் போல தங்கள் வலது காலை உயர்த்திக் காட்டின,

மதுவக உரிமையாளனின் முகத்தில் ஊதா நிறத்தில் ஆச்சரியம் வழிவதை பறவை மனிதன்பார்த்தான்.

“என் பறவைகளை தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்”

“அப்படியா”

“ஆமாம்  என்னிடத்தில் இரண்டாயிரத்து பதினெட்டு பறவைகள் உள்ளன அதில் ஐம்பத்தோரு பறவைகள் என்னுடன் பேசும் எல்லாமே வெளியில் சுதந்திரமாக திரிகின்றன வேண்டும் போது அழைத்துக்கொள்வேன்”

“ ஆமாம் நாங்கள் தான் எங்கள் தலைவருக்கு பொருத்தமான மதுக்கடையை கண்டுப்பிடிக்க வந்தோம், கடல் நண்டு எங்களை கடிக்கப்பார்த்தது” இரண்டுப் பறவையும் பேசியதைக்கேட்டு அவன் மூச்சுவிட மறந்துவிட்டான்.தன் முன்னே பிரம்மாண்டமான மனிதன் ஒரு பறவைப்போல உட்கார்ந்திருப்பதைப்பார்த்தான் .

தன் குடிகார பாட்டனாரும், பறவைகள் மோகியுமென இரண்டுப் பாட்டனார்களின் கலவை இவன்

வரிசையாக வைக்கப்பட்ட ஆறுக் கோப்பைகளையும் இடைவெளியற்று எடுத்துப்பருகினான்.

“உங்களுக்கு பறவைகளைப்பிடிக்குமா?”

“ரொம்ப” மது பறிமாறுபவனைப்பார்த்து வாயில் கதவை திறக்கச் சொன்னான்.

11

ஏனென்று புரியாமலே கதவை திறக்க பறவை மனிதன் எதோ முணுமுணுத்தான்  ஆறு பெரிய வண்ணக்கிளிகள் சிறகடித்துக் கொண்டு மதுக்கூடத்தினுள் நுழைந்தன.

“இந்தக் கிளிகளை நீங்கள் அனுமதிக்கிற இடத்தில் மட்டும் தான் இருக்கும் “என்றவன் வேறு ஏதோ முணுமுணுத்தான் களிகள் காலியான மேசைகளில் போய்  நின்றுக்கொண்டன. அடுத்து பத்து கோப்பைகள் கனிகளில் தயாரித்த மது வகைகளை கொண்டுவரச் சொன்னான் ஒரு கோப்பைக்கு ஒரு பறவையென அவன் மதுவால் நிரம்ப, மதுவகம் பறவைகளால் நிரம்பிக் கொண்டிருந்த்து.  அவன் ஒருவனே எல்லா சேமிப்புகளையும் தீர்த்துக்கட்டிவிடுவான் போல மது பறிமாறுபவர்கள் அஞ்சினார்கள்

மதுக்கூடம் பறவைகளின் காட்சிக் கூடம் போலாகிவிட்டது. அதிகாலையில் தொடங்கியவன், நள்ளிரவில் முடித்தான்.தேய்த்த செம்பு உலோகத்தைப்போல அவனது முகம் சுடர்ந்தது. அவனருந்தியது அத்தனையும் நூறாண்டு பழமையான மது அவனருந்திய மதுவுக்கான தொகையை வைத்திருக்குமளவு அவனிடம் பைகளில்லை என்பது தெரிந்து மது பறிமாறியவன்  பண அட்டைக்கான மெஷினோடு வந்தவனிடம் … “என்னிடம் அப்படி எதுவுமில்லை……” என்று கை விரித்தான். விரிந்த அவன் கைகளிலிருந்து இரண்டு செந்நிற சிட்டுகள் பறந்துப்போய் சர விளக்கில் உட்கார்ந்தன. அவன் போதையேறிய கன்னங்களை தேய்த்துக் கொண்டு கையை தலைக்கு மேலே தூக்கி தனது பெரிய உடலை முறுக்கி சோம்பல் முறித்தான். அச்சத்தோடு பார்க்கும் மது பறிமாறியவனிடம் “ உன் முதலாளியிடம் போய் சொல் என்னிடம் பறவைகள் மட்டும் தானிருக்கிறது. பண அட்டைகள் இல்லை” விவரம் சொன்ன ஊழியனிடம்

“அவரிடம் எதுவும் கேட்காதே அவருக்கு வேண்டியதை தா…அவர் விரும்பினால் ஓய்வறைக்கு அழைத்துப் போ”

 

12

அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பறவை மனிதன் மதுக்கூட வாயில் கதவை திறந்துக்கொண்டு வெளியேறிக்கொண்டிருந்தான். அவனது மேசையில் நீலம் ,சிவப்புக்கிளிகள், இரண்டிரண்டாக  கொஞ்சிக்கொண்டிருந்தன. அவன் இறங்கி பறவை மனிதனை வழியனுப்ப மதுவகத்துக்கு வெளியேஓடினான், பறவை மனிதனின்  வாகனம் மின்னல் போல சீறிச் செல்லும் ஓசை மட்டும் அவனுக்கு கேட்டது. துக்கத்தோடு சாலையை வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு

ஆறு கோப்பை...ஆறு கோப்பை….

என்ற கரகரப்பான குரல் கேட்டு அன்னாந்துப் பார்த்தான். கருடன் கடல் நண்டின்  கண்களை  கொத்திக் கொண்டிருந்தது.உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation