• Time to read: 09 minutes
  • 1118
  • 0

சிறகு முளைத்த எழுத்துகள்

By புதிய மாதவி

மனித நாகரிக வளர்ச்சியில் புலம்பெயர்தலும் இனக்கலப்பும் நடந்து கொண்டே இருக்கின்றன. ஓரின மக்கள் இன்னொரு இன மக்களுடன் தொடர்பு கொள்ளும் சாதனமாக மொழியே இருந்திருக்க முடியும். இத்தொடர்புகள் மொழிகளைச் செழுமைப்படுத்தியதுடன் இன்னொரு கலப்பு மொழி உருவாக்கத்திற்கும் கூட காரணமாக இருந்திருக்கின்றன. இன்றைக்கு நாம் வகைப்படுத்தும் மொழிக் குடும்பங்கள் இக்கருத்தை உறுதி செய்கின்றன.

 

மொழிபெயர்ப்பு தமிழ்மொழிக்குப் புதியதல்ல. மொழிபெயர்ப்பு பற்றிய குறிப்பை சின்னமானூர் செப்பேடு “மா பாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும் “பாண்டியர்கள் தமிழ்மொழியை வளர்த்தனர் என்று சொல்லுகிறது. தமிழ்ப்படுத்திய மா பாரதம் கிடைக்கவில்லை என்றாலும் தமிழ்ப்படுத்தி தமிழ் வளர்த்து காத்த பாண்டியர்களின் காலத்தை இச்செப்பேடு உறுதி செய்கிறது.

 

பதினெட்டு மொழி பேசிய மக்கள் காவிரிப்பூம்பட்டணித்தின் கடைத்தெருக்களில் சுற்றித் திரிந்தார்கள் என்பதை பட்டினப்பாலையும் மணிமேகலையும் குறிப்பிடுகின்றன. சீனர், அரேபியர், யவனர் என்றழைக்கப்பட்ட கிரேக்கர் ரோமானியர் என்று கடல் கடந்து வணிகம் பொருட்டு தமிழகம் வந்தவர்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இவர்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் நடைபெற மொழிபெயர்ப்பு ஒரு தளமாக இருந்திருக்க வேண்டும். அதாவது தமிழ்மொழியும் பிறமொழியும் அறிந்தவர்கள் இருந்தக் காலக்கட்டம்.

 

தமிழ் வரலாற்றின் ஆகச்சிறந்த இலக்கண நூலான தொல்காப்பியம் நூல்களை வகைப்படுத்தும் போது முதல் நூல், வழி நூல் என்று வகைப்படுத்துகிறது. வழி நூலை விளக்கும் போது தொகை நூல், விரி நூல், தொகை விரி நூல், மொழிபெயர்ப்பு நூல் என்று நான்கு வகையாகப் பகுத்துள்ளது. “தொகுத்தல் , விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து அதர்ப்பட யாத்தலோடு அனை மரபினவே” என்ற நூற்பா மொழிபெயர்த்து .. உருவான நூல்களைப் பற்றியே பேசுகிறது.

 

தமிழ் காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகிய மூன்று மட்டுமே தமிழ் நாட்டு கதைகளை மூலக்கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட இலக்கியங்கள். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் பிராகிருத மொழியில் குணாட்டியர் என்ற புலவர் உதயணன் சரித்திரத்தை ‘பிருகத் கதா’ என்ற பெயரில் காப்பியமாக இயற்றினார். அதைத் தழுவி கங்க நாட்டு அரசன் ‘பிருகத் கதா’ என்ற காப்பியத்தை சமஸ்கிருதத்தில் எழுதினார். சமஸ்கிருத ‘பிருகத் கதா’ வை தழுவி பெருங்கதை தமிழில் எழுதப்பட்டது. சீவகசிந்தாமணிக்கும் மூலமாக கருதப்படுபவை  க்ஷ்த்திர சூடாமணி, கத்திய சிந்தாமணி, ஜீவன் தர சம்பு, சீறப் புராணம் ஆகியவை.

 

இந்திய இதிகாசங்களான இராமயணமும் மகாபாரதமும் இந்திய மொழிகள் அனைத்திலும் வாய்மொழியாகவும் கூத்துகளாகவும் கதைகளாகவும் காவியங்களாகவும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. மதவழிபாடுகள் பெருகி வந்தக் காலக்கட்டத்தில் மதங்களைப் பரப்ப அந்தந்த மதத்தவர்கள் மொழிபெயர்ப்பு என்ற ஆயுதத்தை பயன்படுத்தினார்கள். கிழக்கு ஆசியாவில் பௌத்தமும் உலக நாடுகளில் கிறித்தவமும் மொழிபெயர்ப்புகளை மதப் பரப்புரைகளுக்காக வளர்த்தெடுத்தன. மொழிக்காகவோ இலக்கியத்திற்காகவோ செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகள் அல்ல அவை. ஆனால் மதங்களுக்காக செப்பனிடப்பட்ட மொழிபெயர்ப்பு பாதை தான் பிற்காலத்தில் இலக்கிய மொழிபெயர்ப்புக்கும் பெரும் காரணமாக இருந்தது.

 

அச்சு ஊடகம் வளர்ச்சி, மொழிப்பெயர்ப்புகளை எளிதாக்கியது. வீரமாமுனிவரும் கால்டு வெல்லும் தமிழ் இலக்கியப் பரப்பில் நிரந்தரமான இடம் பிடித்தார்கள். கிறித்தவர்களின் பைபில் பல உலக மொழிகளில் எல்லாம் மொழிபெயர்ப்பு பெற்றது என்றால் திருவள்ளுவரின் திருக்குறள் உலகின் பல மொழிகளிலும் தன்னை எழுதிக்கொண்டது. கீழைத்தேசமும் மேற்கத்திய தேசங்களும் மொழிபெயர்ப்புகளில் தங்கள் எல்லைகளைக் கடந்துப் பயணித்தன. பிரெஞ்சு புரட்சியின் கருத்துகள் இந்திய மண்ணில் எதிரொலித்தன. காரல்மார்க்ஸும் லெனினும் தேசங்களைக் கடந்தார்கள். காந்தியும் லியோ டால்ஸ்டாயும் கருத்துப் பரிமாறிக்கொண்டார்கள். வேதங்கள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன.  மொழிகளின் இலக்கியம் மொழிகளின் எல்லைகளைக் கடந்து கடந்து உலகமொழி இலக்கியம் என்ற பொதுவான தளத்தை உருவாக்கியது. Universal literatureக்கு உலகம் முழுதும் வாசகர்கள் உருவானர்கள்.

 

இன்றைய மொழிபெயர்ப்பு உலகத்தில் மூலத்திலிருந்து மொழிபெயர்ப்பது அரிதாக இருக்கிறது. ஜப்பான் மொழியில் எழுதப்பட்டதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆங்கிலத்திலிருந்து பிற உலக மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது நடைமுறையில் சாத்தியமாக இருக்கிறது. இந்த வழிப்பாதையில் சில சொற்களும் கருத்துகளும் சிறிது சிறிதாக மாறி மாறி உலகில் ஏதொ ஒரு மூலையில் நடைபெறும் மொழிபெயர்ப்புக்கும் அதன் மூலத்திற்கும்  பாடபேதங்கள் உருவாகிவிடுகின்றன.

 

கிறித்துவ மதத்தில் புனித ஏசுவைப் பெற்றெடுத்த கன்னிமேரி குறித்த ஒரு செய்தியை இங்கே பதிவு செய்வது கூட பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றேன். THE JESUS PAPERS என்ற புத்தகத்தின் ஆசிரியர் மைக்கல் பைகன்ட் (MICHAEL BAIGENT) சில உண்மைகளை முன்வைக்கிறார். ஹிப்ரு மொழியில் தான் பைபில் முதன்முதலில் எழுதப்பட்டது என்பது நமக்குத் தெரியும். அதில் யங் வுமன் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள் என்று வருகிறது. யங் வுமன் என்ற ஹிப்ரு சொல் அல்மா. (alma) அல்மா என்ற சொல் கிரேக்க மொழியில் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் மொழிபெயர்க்கப்பட்ட போது பர்த்தனஸ் (parthenos) என்று மொழியாக்கமாகிறது.

 

கிரேக்க மொழியில் பர்த்தனஸ் என்றால் வெர்ஜின் - கன்னிப்பெண் என்று பொருள். இப்படித்தான் கன்னிமேரியாகிறாள் ஏசுவைப் பெற்றெடுத்த பெண். ஆண் பெண் பாலியல் உறவை கடவுள் பிறப்பில் விலக்கியதன் மூலம் இன்றளவும் கிறித்தவ மத போதகர்கள், கன்னியாஸ்திர்களும் பாலியல் உறவு விலக்கி வைத்திருப்பவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.

 

கடவுளின் பிறப்பு பெண்ணின் கருப்பையில் தான் என்பதை ஏற்றுக்கொள்ளும் கிறித்தவமதம் அவள் கருப் பையின் புனிதத்தை ஆண்வாடையிலிருந்து காப்பாற்றிக் கொண்டது ஒரு மொழிபெயர்ப்பின் ஊடாக நடந்து அதுவே வெற்றிகரமாக இன்றுவரை தொடர்கிறது.

 

இப்படியாக பயணித்த மொழிபெயர்ப்புகள் இன்று கணினி யுகத்தில் எதையும் சாதிக்க முடியும் என்று கணினி மூளைக்கு முன்னால் தடுமாறுகிறது. கூகுள் மொழிபெயர்ப்பு உதவியாக இருக்க முடியுமே தவிர அதை மட்டுமே கொண்டு மனித உதவியின்றி இலக்கியத்தை மொழிபெயர்க்க

முடியாது . இலக்கியப் படைப்பு என்பது வெறும் சொற்களின் தொகுப்போ கோர்வையோ அல்ல. அதற்கு ஒரு தனி வாசனை உண்டு. அந்த மொழிப்பேசும் மக்களோடும் மண்ணொடும் கலந்த வாசனை. அந்த வாசனையை அப்படியே இன்னொரு மண்ணுக்குக் கொண்டு வருவது என்பது கோழிமுட்டையை வாத்து முட்டையாக ஆக்கும் முயற்சி என்று சொல்வதுண்டு. ஆனால் கோழி முட்டையை வாத்துமுட்டையாக்குவது பொருத்தம், குதிரை முட்டையாக்குவது தான் கூடாது என்று இதற்குப் பதில் சொல்பவர்களும் உண்டு.

 

Translation  - என்பதை மொழிபெயர்ப்பு என்றும் trans-creation என்பதை மொழியாக்கம் என்றும் இன்று சொல்கிறார்கள். A translator is a Reader, an interpreter and a creator - all in one. இந்த மூன்றுமாக இருப்பவர்தான் சிறந்த மொழிபெயர்ப்பாளராக இருக்க முடியும்.

 

எழுத்தாளன் அவன் மொழியில் எழுதுகிறான். அவனை அவன் எல்லைகளைத் தாண்டி உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் மொழிபெயர்ப்பாளனும் உண்மையில் ஓர் இலக்கியகர்த்தா தான். தமிழ் மொழியாக்கப்பணியில் சங்க இலக்கியம் முதல் பாரதி, பாரதிதாசன் வரை மொழியாக்கம் செய்தவர் அண்மையில் மறைந்த ம.இல. தங்கப்பா அவர்கள்.

 

பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்ற பாரதி வரியில் வரும் ‘பேய்’ என்பதற்குத் ஆங்கிலச் சொற்களஞ்சியத்தில் தரப்பட்டுள்ள specter, phantom, apparition, visitant, spirit, wraith, soul, shade, shadow, presence, spook[colloquial] ஆகிய ஆங்கிலச் சொற்களில் எந்த ஒன்றையும் ஏற்காமல் அரேபிய மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற ‘ghoul’ என்ற சொல்லையே இடம் பொருளறிந்து பயன்படுத்தியுள்ளார். அவ்வரியில் இடம்பெறும் ‘பிணந்தின்னும்’ என்ற தொடரில் வரும் ‘பிணம்’ என்ற சொல்லுக்கும் இலத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்ற ‘cadaver’ என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளார். படைப்பின் ஜீவனை அப்படியே மொழியாக்கத்தில் கொண்டு வருவதற்கு மொழிபெயர்ப்பாளன் கண்டம் தாண்டி பல மொழிகளின் ஊடாகப் பயணிக்கவும் தவறுவதில்லை என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.  இருமொழிகளில் இருக்கும் புலமையும் மூல படைப்பின் ஜீவனை அதைப் படைத்தவனைப் போலவே மொழிபெயர்ப்பாளனும் வெளிக்கொணர முயற்சி செய்கிறான்.

 

தங்கப்பாவின் வள்ளலார் மொழிபெயர்ப்பு (Songs Of Grace)

 

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்

றென்றுவரு மோஅறியேன் எங்கோவே – துன்றுமல

வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து

சும்மா இருக்கும் சுகம்.

 

இப்பாடலின் மொழிபெயர்ப்பு பின்வருமாறு:

Will it be today, or will it be tomorrow?

When will it be at all, the one event of my life –

my discarding of all this ignorance and reaching beyond

the immeasurable within the immeasurable –

to come at last into the quiet bliss of inaction?

 

வள்ளலாரின் பாடலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் போது பாடலாக இல்லாமல் உரை நடைப் பாணியில் மொழியாக்கம் செய்திருப்பதைக் கவனிக்க வேண்டும். மரபு வழி ஆங்கில மொழிபெயர்ப்பாக இருந்திருந்தால் வள்ளலார் தங்கப்பாவின் மொழிபெயர்ப்பில் மறைந்துப் போயிருக்கக்கூடும். ஒரு மொழிபெயர்ப்பாளன் எப்போதும் திருப்தி அடைந்துவிடுவதில்லை. அவன் மூலப் படைப்புக்கு மிகவும் நெருக்கமாக தன் மொழியாக்கத்தைக் கொண்டு வர எல்லா வகையிலும் தொடர்ந்து முயற்சி செய்கிறான். மிகுந்த சிரத்தையுடன் இப்பணியை செய்கிறான்.

 

இப்படியான மொழியாக்கப்பணிகளின் ஊடாகவே இன்று இலக்கியப் பரப்பில் அதிகம் பேசபப்டும் தலித்தியமும் பெண்ணியமும் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆப்பிரிக்க வானம் , பிணத்தை எரித்தே வெளிச்சம், கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் போன்ற எழுத்தாளர் இந்திரனின் மொழியாக்கங்கள் தமிழ் தலித்திய இலக்கியத்திற்கு வழிகாட்டியாகவும் பெரும் துணையாகவும் ஊக்கமாகவும் இருந்திருக்கின்றன. இந்திய பெண்மொழி எழுத்துகளைத் தொகுத்து வெளியிடும் எழுத்தாளர் அம்பையின் ஸ்பேரோ பெண் எழுத்துகள் பெண்ணிய தளத்தின் பல்வேறு மொழிகள் பேசும் இந்தியப் பெண்களின் குரலாக இருக்கின்றன.

 

ஏழு நாடுகள், ஏழு மொழிகள், ஏழு கலாச்சாரங்கள், ஏழு வெவ்வேறு வாழ்க்கை. ஆனால் பிரச்சினை ஒன்றுதான் என்பதை வெளிப்படுத்தியது “ஏழு” என்ற நாடகம். ரஷ்யாவில் குடும்ப வன்முறைக்கு எதிரான அவசர உதவி மையம் நடத்தும் மரினா பிஸ்கலாகோவா பார்க்கர், கம்போடியாவின் பெண்கள் நலத்துறை முன்னாள் அமைச்சர் மூ சுச்சுவா, குவாத மாலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனெபெல்லா டி லியொன், வடக்கு அயர்லாந்தின் மனித உரிமை மற்றும் தொழிற்சங்கத் தலைவர் இனெஸ் மெக் கோர்மாக், ஆப்கனிஸ்தானில் விளிம்பு நிலைப் பெண்களுக்காகப் போராடும் பரீதா அசிசி, நைஜீரியாவின் மனித உரிமைப் போராளி ஹப்சத் அபியோலா, பாகிஸ்தானில் பெண்கள் உரிமைகள் மற்றும் கல்விக்காகப் போராடிவரும் முக்தர் மயி என ஏழு பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாடகம். உலகமெங்கும் பெண் என்ற ஒற்றைக் காரணத்தால் கொடூர வன்முறைக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு, தொடர்ந்து வன்முறைக்கு எதிராகச் செயல்பட்டு வருபவர்களின் அனுபவங்களைப் பேசும் போது நாடகத்தின் மொழியும் பேசுபவர்களும் அவர்களின் நிறமும் உடையும் வேறுபட்டாலும் அவர்கள் சந்தித்த வலியும் வேதனையும் உடலும் உடல் சார்ந்த பெண்மொழியும் ஒன்றாக இருக்கின்றன. பெண்ணிய தளத்திலும் தலித்திய பரப்பிலும் நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தின் வளர்ச்சிக்கு இதுவே காரணமாக இருக்கிறது. பெண்மொழிக்கு மொழிகள் இல்லை, தேசங்கள் இல்லை. அவர்கள் ஒரே மொழியைத்தான் வெவ்வேறு ஒலிக்குறிப்புகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மொழிபெயர்ப்புகளும் மொழியாக்கங்களும் தங்களுக்கான பாதையில் பல்வேறு சோதனைகளைக் கடந்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் இலக்கியத்தின் சிறகுகளாக இருக்கிறார்கள். எல்லைகள் கடந்து பயணிக்கும் சிறகுகள் பறவைகளுக்கு மட்டுமல்ல படைப்புகளுக்கும் பெருமை சேர்க்கின்றன.உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation