நிலம்
நெடும் பயணம் சென்றவரை
அவர் குழந்தை அறியா
போன திசை வழியெல்லாம்
புகை மிகுந்து பரவும்
கடல் பிரிந்து வழி தெரிந்தும்
கண்ணீர் அதை நிறைக்கும்
ஒளி இழந்த சூரியர்கள்
உதித்தென்ன ஆகும்?
மாலை வரும். காலை எழும்
மனல் முழுதும். குருதி
கடற்பறவை கொண்டு சென்ற
கைக்குழந்தை உனதா?
கனவுகளைக் கரைத்து விட்ட
அலை கரையில் நிலவா?
உப்புதிர்க்கும் காற்றினிலே
எரிகின்ற குடில்கள்
ஒப்பாரி மேலெழவும்
உலர்ந்தழியும். குரல்கள்
அவர்
சப்பாத்தின் ஒலிகளில்
நம் அவலத்தின் களிப்பு
காவல் முகாம்
சொல் அறுந்த காலை
புகார் மூடிய தெருவில்
விளக்குகள் இல்லை
கைகளை உயர்த்திக் கொண்டும்
காவல் படை முகாமைக் கடக்க முடியாது
படையாளின் மொழி இந்தி
அவன் விழித்தெழுந்து
முகாமின் சுவரோரம் மூத்திரம் அடிக்கிறான்
அது கங்கை போலப் பெருக்கெடுத்து
முகாமின் ராமர் கோவில் ப க்கம் போகிறது
பிறகு
கையில். விளக்கை எடுக்கிறான்
இடப்புறமும் வலப்புறமும் ஆட்டுகிறான்
இருளில் நிலை பெறத் தவிக்கும் ஒளி
குறிப்புணர்ந்து முன்னே செல்கிறோம்
வரிசையில் முன் நிற்கும் சிலருக்கு அடிக்கிறான்
ஒரு சில பெண்களின் முலைகளை
எட்டிக் கசக்குகிறான்
அவர்கள் கதறி அழுது சிதறி விலகுகிறபோது
வேறு சிலருக்கு மீண்டும் அடிக்கிறான்
குங்குமச் செறிவில் உழலும் அவன் முகத்தில்
பேயாய்ப் பிறப்பெடுத்த தெய்விகம்
போ என்கிறான்.
போகிறார்கள்.
நாங்கள் முன் நகர்கிறோம்.
என்னுடைய மாமா முஸ்லிம் என
அவனுக்குத் தெரியாது
அலட்சியத்துடன் போ என்கிறான்
எட்டி நடந்து
ரயில் நிலையம் வருகிறோம்
தெற்கே போகும் ரயில்
அதுதான் கடைசி. ரயில்.