• Time to read: 05 minutes
  • 1157
  • 0

‘4D’ குறும்படம்

By

பீஷான் நூலகத்தில்  செப் 22, மாலை உற்சாகத்துடன் களைகட்டியது "4D" வெளியீட்டுவிழா. கலை-விமர்சக மூத்தவர் ஏபி இராமன் வழிநடத்த, குறும்படதயாரிப்புக்குழு இயக்குனர் சந்தோஷ், தயாரிப்பாளர் எம்.கே.குமார், நிர்வாகத்தயாரிப்பாளர் பாண்டிதுரை, கதாசிரியர் உமாகதிர், கதாநாயகன் மோகன் முன்னிலையில் படத்தை வெளியிட்டார் திரைப்படத் தயாரிப்பாளர் திரு அருமைச்சந்திரன் (8 பாய்ண்ட் எண்டெர்டெய்மெண்ட்). இன்னொரு சிறப்பு விருந்தினரான "சென்னை தோசா" நிறுவனத்தின் ராஜூ அவர்கள் சிறப்புப்பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்த குறும்படத்தின் வசனத்தை மகேஸ்குமார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். சிராங்கூன் டைம்ஸ் மாத இதழில் வெளிவந்த உமாகதிர் எழுதி 'மார்க்கும் ரேச்சலும்' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டது 4D.

நிகழ்ச்சியைத்தொகுத்துவழங்கியவர் எழுத்தாளர் அழகுநிலா, நிகழ்வினை  கவிஞர் பாரதிமூர்த்தியப்பன்  மற்றும் கார்த்திக் பதிவு செய்தனர். படத்தைப்பற்றிய சித்திரமான தத்தம் பார்வையைத்தந்தனர் இலக்கிய நண்பர்கள் சித்ரா ரமேஷ், நெப்போலியன், குழலி, ரமா சுரேஷ், ஷாநவாஸ், அர்விந்த் மற்றும் சிவா ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். யாருக்கும் தனிப்பட்ட அழைப்பிதழ் அனுப்பவிட்டாலும் முகநூலின் அழைப்பையே பெரிதுடன் ஏற்று 150 நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வந்து சிறப்பித்த STTFE ன் நிறுவனர் சலீம் ஹாடி,  டாக்டர் எம்.எஸ் லக்ஷ்மி சிங்கப்பூர் இலக்கிய நண்பர்கள், வாசகர் வட்ட நண்பர்கள், முகநூல் நண்பர்கள், திரு தெய்வகுமார், ராஜ்மோகன், ஜெயராமன், சரவணன், ஞானசேகரன் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை சார்ந்த நண்பர்கள், உடன்பிறந்த சகோதரன் அய்யப்பன் மற்றும் அலுவலக நண்பர்கள், சுந்தரம், மணிசரவணன் உள்ளிட்ட வேலையிட நண்பர்கள் என   நேரில் வந்து அன்பு காட்டிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

 

இது ஒரு இனிய தொடக்கம்தான். வியாபாரத்தின் சாதகபாதகங்களை மறந்து, சிங்கப்பூரின் முக்கிய படைப்பிலக்கியத்தின் நீட்சியாக அதனையொட்டிய குறும்படங்களும் பெரும்படங்களும் வரவேண்டியதன் தேவையையும், ஓரளவுக்கு அதைச் செம்மையாகச் செய்யமுடியும் என்பதையும் இதன் மூலம் துவக்கிவைத்திருப்பதில் மகிழ்ச்சி. '4D' குறும்படத்தை  பற்றி பரவலாக பலரும் பதிவுசெய்த கருத்துக்களை தொகுத்தளித்திருக்கிறோம்.

-இவண்- எம்.கே.குமார்

 

 

சிங்கப்பூர் இளம்படைப்பாளிகளின் கன்னி முயற்சியில் வெளிவந்துள்ளது ஒர் குறும்படம். ஆக்கம், இயக்கம், கதை, உரையாடல், காட்சி அமைப்பு, ஒலி, ஒளி அனைத்தும் சிறப்பு.

 

-வலைபதிவர் கோவி கண்ணன்

 

 

இதுவரையில் கேட்காத உள்ளூர் கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தது மிக அருமை. அடிக்கடி பார்த்த இடங்கள் கூட படத்தில் புதுமையாக இருந்தது. ஹார்ட் அட்டாக்கு கரப்பான் பூச்சி துடித்தது, நாள் ஓடுவதைக் காட்ட எம்.ஆர்.டி இடையே ஓடியது, ஓடும்போதே கார் கண்ணாடி வழியே நாட்களையும் ஓடவிட்டது காரோடு ஓடிய நாட்கள் ஹைவேயில் வேகமாக ஓட வைத்து நயமாய் உவமைப்படுத்தியிருந்தார்கள். வசனங்களைவிட காட்சிகளை பேசவைத்திருந்தது மிக அருமை. எண்கள் தான் வாழ்க்கையென்று அனுபவத்தைச் சொன்னது பாராட்டுக்குரியது

 

-கவிஞர் இன்பா

 

 

கதை முழுக்க முழுக்க நிகழ்வது மார்க்கைச் சுற்றித் தான். சுமார் அறுபது வயதை நெருங்கும்,நிரந்தர பணி இல்லாமல் வாழும், சிங்கப்பூர் இந்திய விவாகரத்து ஆன ஒரு மனிதனின் வாழ்வைப் பிரதிபலிக்கும் கதையாகத்தான் 4D-குறும்படத்தைப் பார்க்கிறேன்.இந்த சிங்கப்பூரில் நிறைய மார்க்குகள் இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவர் தான் நம் மார்க்கும். மார்க்கின் இறுதிக் கட்ட வாழ்க்கையின் ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றமே இந்த 4D.

 

-கார்த்திக் அருண்குமார்

 

 

என்னை மிகவும் கவர்ந்த விஷயம் என்னவென்றால் சிங்கப்பூரை மக்கள் வசிக்கும் ஒரு ஊராக காட்டியதுதான். இதுவரைக்கும் திரையில் பார்த்த சிங்கப்பூர் எல்லாம் சுற்றுலாத் தலமாகவே தெரிந்தது. இப்போதுதான் ஒரு உயிருள்ள சிங்கப் பூரைப் பார்த்தேன். அதற்கே உங்களுக்கு மிகப் பெரிய மலர்க்கொத்து.

 

-நந்தன் ஸ்ரீதரன்திரைப்பட கதையாசியர்

 

 

நன்றாக வந்திருக்கிறது. மார்க்காக நடித்தவர் நன்றாக நடித்திருக்கிறார். கதையின் ஆன்மா படத்தில் பிடிபட்டிருக்கிறது. க்ளோஸ் அப் ஷாட்கள் கொஞ்சம் சேர்த்திருந்தால் பாத்திரங்களை இன்னும் நெருக்கமாக உணர முடிந்திருக்கும். பாராட்டப்படவேண்டிய முயற்சி. வாழ்த்துகள்.

 

-எழுத்தாளர் ஷான்

 

 

தனியனாக வாழ்தலின் விடுதலை நிலைப்பாடுகளையும் அதன் உச்சத்தை நோக்கிய நகர்வில் ஏற்படும் சிடுக்குகளையும் சொல்லும் சிறுகதையை அதன் சொல்முறையோடு படமாக்கியிருக்கிறார்கள். அதிர்ஷ்டம், மாதச்சம்பள வேலையை நிராகரித்தல், பணத்தின் தேவை, பணத்தைச் செலவழித்தல், கணவன் - மனைவியாக இருப்பதில் பிள்ளைப்பேறின் இடம், விவாகரத்து, காதல் என நிகழ்கால வாழ்வின் அடுக்குகளுக்குத் தர்க்கங்களற்ற பதிலை வைத்திருக்கும் ஒருவனின் வாழ்நாளின் சில காலத்தைக் குறுக்குவெட்டாக - அவனது நண்பனின் பார்வையில் சொல்கிறது. இவ்வகையான வாழ்க்கைச் சிக்கல்களைத் தர்க்கங்களோடு புரிந்துகொண்டு தனது அன்றாட வாழ்க்கையை நகர்த்தும் கதிர், அவை அனைத்தையும் தர்க்கங்கள் இல்லாமல் எதிர்கொள்ளும் மார்க்கை நேசிக்கும் அந்த நட்பு ஆச்சரியமூட்டுகிறது. ஒருவிதத்தில் கதிரின் கூற்றாகப் படத்தை நகர்த்துவதில் வெளிப்படும் நகைமுரண் திரும்பத்திரும்பச் சிந்திக்க வைக்கிறது. நீங்களும் ஒருதடவை பார்க்கலாம்.

குறும்படத்தின் அளவுக்குள் அதன் அடிப்படைப் புரிதல்களோடு எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் பார்ப்பவர்கள் ஏமாந்துவிட வாய்ப்பில்லை.

 -அ. ராமசாமி - பேராசிரியர் & எழுத்தாளர்

 

 

மரணம் என்பது மட்டுமே கலையின் உச்சம் அல்ல; அல்லது மரணித்தவர்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் நினைவுகள் மட்டும் அல்ல. மார்க் போன்ற அடையாளமற்றவர்களின் பெரும்பாலான முடிவுகள் மரணம் அல்லது இழப்பு என்றே பல படைப்புகள் காட்டிவிட்டன. அதிலிருந்து எப்படிஇ எந்தப் புள்ளியில் நாம் தனித்தன்மையை ஏற்கப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டிய ஓர் அவசியத்தை இக்குறும்படம் நமக்குச் சவாலாக விட்டுச் செல்கிறது. 4D குறும்படம் சிங்கை மண்ணில் ஒரு முக்கியமான முயற்சியாகும். சிங்கை பெருநகரின் விளிம்புநிலை வாழ்க்கை இதற்குமுன் அழுத்தமாகப் பதிவாகாத சூழலில் சந்தோஷ் நம்பிராஜன்இ உமா கதிர்இ எம்.கே.குமார்இ நீதிபாண்டி போன்றவர்களின் ஆர்வமும் அக்கறையும் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. இதுவேகூட சிங்கை கலைப்படத்துறையில் ஒரு புதிய திறப்பு என்றும் வகைப்படுத்தலாம். அனைத்து பெருநகர்களிலும் இதுபோன்ற சிதைவுண்ட பகுதிகள் இருக்கும் என ‘4D’ குறும்படம் காட்டிச் செல்கிறது.

 

-கே.பாலமுருகன் - எழுத்தாளர்

 

ஒரு சிறுகதை பார்த்த உணர்வு இருந்தது. சந்தோஷ் ஒளிப்பதிவு உமாகதிர் உடைய கதை மற்றும் Mark பாத்திரத்தில் நடித்தவர் மூவரும் படத்தை ஒரு நியாயமான பதிவாக மாற்றி உள்ளனர். படத்தொகுப்பு மட்டும் ரொம்ப அவசரமாக இருந்தது. அது கொஞ்சம் படத்துடைய mood க்கு out of synch லயே இருந்தது. சிங்கப்பூர் அடிக்கடி செல்வதால் படத்தோட மிகவும் ஒன்றமுடிகிறது. சந்தோஷ் இயக்குநராக முதல் படம். நல்ல முயற்சி. சிங்கப்பூர் மலேசியா பகுதியில் இருந்து அதன் வாழ்க்கை பதிவு செய்யும் பிற முயற்சிகளோடு ஒப்பிடுகையில் இது மிகவும் முக்கியமான படைப்பாக மாறுகிறது. தொடர்ந்து படம் நடிப்பதோடு இயக்கத்தையும் செய்வது சந்தோஷிற்கு இன்னும் காத்திரமான படைப்பை உருவாக்க உதவும்.

-இலஷ்மணராஜா கண்ணன்
 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation