• Time to read: 05 minutes
  • 959
  • 0

டிப்பா கடை

By தீக்சா தனம்

‘டிப்பா கடை’யைப் பற்றி நான் உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். ஏனென்றால் டிப்பா கடை பெயர் கொண்ட கடை எந்த ஊரிலும் இருக்காது என்னும் காரணத்தால். எங்கள் ஊரில் யார் விருந்தாளியாக வந்தாலும் அந்த வீட்டிலிருந்து ஒருவர் டிப்பா கடைக்கு போகும் வழக்கம் இருந்தது. இத்தனை முறை டிப்பா கடை, டிப்பா கடை என்று சொல்லியாகிவிட்டது . அப்படி அங்கு என்னதான் கிடைக்கும். அங்கு முக்கியமாக ஒரு கிழவனும் ஒரு கிழவியும் இருப்பார்கள். சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகளில் சிறுவர்களுக்கான பலூன், குச்சி மிட்டாய், பருப்பி, கல்ல உருண்டை, எள்ளு உருண்டை, இருக்கும். பெரியவர்களுக்கு என்று கப்பார் பீடி, கணேஷ் பீடி சிசர் பில்ட்டர் மற்று கோல்டு பில்ட்டர் இருக்கும்.

எங்களுக்கெல்லாம் டிப்பா கடைதான் தெரியும். கடைக்குள் இருக்கும் அந்த கிழவன் கிழவியின் நிஜபெயர் எங்களுக்கு தெரியாது. அவர்களுக்கு நிஜ பெயரே அதுதான் என்று நம்பினோம். அவர்கள் இருவரும் எப்போதுமே பிரிந்து இருந்ததை பார்க்கவே முடியாது. இருவருமே நல்ல நிறம் பாட்டிக்கு சுருளை முடி இளமை காலத்தில்    அவர்களின் நிறத்தை வைத்து அழகான ஜோடி என்று ஊரில் பல பேர் பேசியிருக்ககூடும்.

முக்கியமாக நான் சொல்ல வந்ததையே மறந்துவிட்டேன். டிப்பா கடை என்றால் முறுக்கு, வடை, போண்டா தான் பிரபலம். அதை சுவைக்காத விருந்தாளிகளின் வாயே இருக்காது என்றுதான் சொல்லமுடியும்.

பக்கத்து நகரில் உள்ள ஒரு ஆசாரியின் மூலம் மரப்பலகையால் ஆன பெட்டியை போன்று, பார்ப்பதற்கு ஒரு சிறிய வீடு போன்று, ஒரு ஆள் சுருண்டு படுக்கும் அளவுக்கு இருக்கும் பெட்டிகடையை தயார் செய்து ஊரில் முதல் பெட்டி கடையை வைத்தவர் டிப்பா கடைக்காரர்தான்.

என் ஊரின் அந்த முதல் பெட்டி கடை அதுதான். டப்பாவை போல் இருந்ததால் பெட்டிகடை டப்பா கடை ஆனது. பிறகு டப்பா டிப்பாவானது. டிப்பா கடைக்காரரை இளமைக்காலத்தில் எல்லோரும் பெயர் சொல்லி அழைத்திருப்பார்கள். அந்தப் பெட்டி கடையால்தான் அவருக்கு இந்தப் பெயர் வந்ததென்று பின்னால் பிறந்தவர்கள் அறிந்திருந்தார்கள்.

நான் சிறுவனாக என் கூட்டாளிகளோடு திரிந்துகொண்டிருந்த காலத்தில் அவர் வயதாகிப் போனவறாய் இருந்தார். டிப்பா கடைக்குள் வெறும் உடம்போடு உட்கார்ந்திருக்கும் அவரின் பக்கத்திலேயே அவர் மனைவி போண்டா வடைகளை சுட்டு போட்டுக்கொண்டு இருப்பார். பெரும்பாலான நேரத்தில் தடி ஊனிய கிழவர்கள் கையில் இருக்கும் போண்டாவையோ வடையையோ தவறிவிட்டுவிடாதபடி பத்திரமாக பிடித்துக் கொண்டு வாயில் போட்டு மெண்டபடி உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.

மின்சாரம் பல வீடுகளில் இல்லாத காலமது. மண்ணென்னை விளக்கையே அதிகம் பயன்படுத்தினார்கள். டிப்பா கடையிலும் மண்விளக்குதான் இருந்தது. அம்மாக்களிடமிருந்து இரண்டு ரூபாயோ மூன்று ரூபாயோதான் கிடைக்கும் பத்து ரூபாய் போன்ற பெரிய தொகையெல்லாம் கிடைக்காது.

எனக்கும் என் கூட்டாளிகளுக்கும் செல்லாத, கிழிந்த ரூபாய் நோட்டு கிடைத்தால் ஒரே கொண்டாட்டம்தான். அதை செல்லும் நோட்டாக மாற்றும் வழி எங்களுக்கு தெரியும். டிப்பா கடைக்காரருக்கு இரவு நேரங்களில் அவ்வளவு தெளிவாக  கண்  தெரியாது.   கிழிந்த ரூபாய் நோட்டுகளை எருக்கம் பால் வைத்தோ, சோரு வைத்தோ யாரும் கண்டுபிடிக்காதபடி ஒட்டி வெயிலில் காய வைத்து  அவரை நன்றாக ஏமாற்றுவோம்.

இப்படியே அவர் பல வழிகளில் பல முறை எங்களிடம் ஏமார்ந்து போய் இருக்கிறார். நாங்கள் கூட்டமாக செல்லும்போது அதில் ஒருவன் மட்டும் அவருடன் பேச்சி கொடுத்து எதையாவது வாங்குவான். மற்றவர்கள் அவர் பார்க்காத சமயத்தில் அங்கிருக்கும் ஏதோ ஒரு பண்டத்தை திருடி அவரவர் டவுசர் பைகளில் போட்டுக்கொள்வார்கள். நாங்கள் அவரை ஏமாற்றுகிறோம் என்பது அவருக்கு தெரியும். ஏமாருவதாய் வெளிகாட்டிக்கொள்ளாத அவர் எங்களை அங்கிருந்து விரட்டுவதிலே குறியாக இருப்பார்.

சில வருடங்களுக்கு முன்புதான் டிப்பா கடைக்காரர் இறந்தார். அதை தொடர்ந்து கொஞ்ச நாளிலே அவரது மனைவியும் இறந்து போன செய்தி எனக்கு தெரிந்தது. டிப்பா கடைக்காரரின் மகள் வெளியூரில் குடும்பத்தோடு வசித்து வருவதாக சொல்லுவார்கள். ஆனால் நாங்கள் யாரும் அவரது மகளை பார்த்தது கிடையாது.

இப்போது டிப்பா கடை இருந்த இடத்தில் புள்ளும் பூண்டுமாய் முளைத்திருக்கிறது. சமீபத்தில் ஊருக்கு போயிருந்த போது என் பழைய டைரி ஒன்றில் ஒரு கிழிந்த பத்து ரூபாய் நோட்டு இருந்தது. டிப்பா கடைக்காரரின் ஞாபகம் வந்து அம்மாவிடம் போய் டிப்பா கடைக்காரரின் நிஜப்பெயர் என்னவென்று கேட்டேன். உடனடியாக அம்மா டிப்பாகடைக்காரர்தான்னு சொன்னாங்க. பிறகு யோசித்து தெரியலையே-ன்னாங்க. அவரின் நிஜப் பெயர் ஊரில் பல பேருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. யாரிடம் கேட்டாள் தெரியும் என்று விசாரித்த போது டிப்பா கடைக்காரரின் நெருங்கிய நண்பரான தெப்பக்காரன் தாத்தாவிடம் கேட்க சொன்னார்கள்.

உடம்புக்கு முடியாமல் படித்திருந்த தெப்பக்காரன் தாத்தாவிடம் போய் “டிப்பா கடைக்காரரின் பேரு உங்களுக்குதான் தெரியுமாமே அவரு பேரு என்ன தாத்தா..” என்று கேட்டேன். அவர் தலையை மட்டும் ஆட்டினார் அது தெரியும் தெரியாது என்பதற்கான பதிலாக இல்லை. நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவர் “தம்பி அவருக்கு காது செவிடுப்பா. என்ன வேணும்ன்னு சொல்லு” என்றார். அடப்பாவிகளா அவருக்கு காது செவிடுன்னு யாருமே சொல்லலயே.. எனக்கு ஏமாற்றமாய் போய்விட்டது.

அவரிடமே விசயத்தை சொன்னேன். டிப்பா கடைக்காரரோட பேரா... ம்.. மானிக்கம்ன்னு நெனைக்கிறேன். என்றார். உங்களுக்கு எப்படி தெரியும். நான் போஸ்ட் மேனுப்பா. அவருக்கு ஒரு ரெண்டு தடவ லட்டரு வந்திருக்கு. ஓ...யாரு வீட்டு பையன் நீங்க பாத்ததேயில்ல..நான் முருகேசன் பையன் மேட்ராசுல வேலை. அங்கயே செட்லாகிட்டேன். மேலும் என்னிடம் நலம் விசாரித்துவிட்டு அவசர வேலையாக கிளம்பினார். எனக்குள் சிறியதாய் ஒரு நிம்மதி. ஒரு மனிதனுக்கு பெயர் எவ்வளவு முக்கியம். பெயர் என்பது ஒரு வரலாறு.

சிறிது தூரம் நடந்து போய்க் கொண்டிருந்த போஸ்ட்மேன் என்னை பார்த்து தம்பி என கூப்பிட்டார். தெப்பகாரன் தாத்தாவோட நெஜப்பேரு உனக்கு தெரியுமா ? என்ன இவரு திடீர்ன்னு இப்படி கேட்டுட்டாரே. தெரியவில்லை நீங்களே சொல்லுங்க. எனக்கும் தெரியலப்பா.. இவருக்கு எதுவும் “லெட்டர்” வருமா ? என்றேன். போஸ்ட்மேன் லேசான சிரிப்பை சிரித்துவிட்டு தன் அவசர வேலைக்காய் போய்க்கொண்டிருந்தார்.உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation