• Time to read: 03 minutes
  • 955
  • 0

இந்தச் சமூகம் நின்றுக் கொண்டிருக்கும் இடம்

By சல்மா

சில நாட்களுக்கு முன் ஐடி கம்பெனியில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் எனது நண்பனின் மகன் என்னைக் காண வந்தான். தலைவர் கலைஞரின் மரணம் குறித்து வருத்தத்தை பகிர்ந்து கொண்டு எனக்கு ஆறுதல் சொல்லியவன் இறுதியாக கலைஞர்தான் ஐடி துறைக்கு வித்திட்டவர்   என்பதும் , ஓராயிரம் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த சட்டம் போட்டவர் என்கிற செய்தியே அவர் நோயுற்று இருந்த பத்து நாட்களாகத்தான் தெரியும் என்றவன், இன்றைக்கு அவர் பற்றி இத்தனை விரிவாக சொல்லக்கூடிய ஊடகங்கள் ஏன் இதனை மறைத்தன அல்லது பேசவில்லை? ஏன் அவரைப்பற்றி மோசமான கருத்துக்களால் எங்கள் காதுகளை நிறைத்தன? அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே  எங்களைப் போன்ற இளைஞர்கள் அவரை கொண்டாடியிருப்போமே என்று மனம் வெதும்பி கண்ணீர் உகுத்தான்.

 

தன் வாழ்நாளெல்லாம் சமூக நீதி எனும் நெடும் பயணத்திலேயே கழித்த அந்த மனிதனை இருட்டடிப்பு செய்ததன் பிண்ணணியில் இருந்த வன்மத்தை நான் அவனுக்கு எப்படி புரிய வைப்பது.

 

ஒரு வரலாற்றை மறைப்பதற்கான தொடர் முயற்சிகளை தனது மரணத்தின் வழியே தோல்வியுறச் செய்தவர் அல்லவா கலைஞர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை வேண்டுமென்றே பழி சொல்லியவர்கள் அவரது இறுதி காலத்தில் சரண்டைந்தனர் என்பதே உண்மை. சூரியனை கை கொண்டு மறைக்க யாரால் முடியும்? 

 

இந்த மனிதர் யார்? அவர் இந்த சமூகத்திற்கு என்னவாக இருந்தார், இன்றைய இந்த சமூகம் நின்றுகொண்டிருக்கும் ‘இடத்திற்கு’ அவர் ஆற்றிய பங்களிப்பு என்னவாக இருந்தது? அதனையெல்லாம் அறிந்திராத தலைமுறையினை அவர் தனது துயிலிலிருந்து எழுப்பி விட்டிருக்கிறார் என்பதே உண்மை.

 

அவரைப்பற்றி சொல்வதற்கும் எழுதுவதற்கும் ஓராயிரம் விசயங்கள் உண்டு. கடல் நீரை கைகொண்டு அள்ளுவதாகத்தான் அது இருக்கும். ஆனால் அந்த கடல்  அளவிலும் ஒவ்வொரு துளியிலும்  இந்த திராவிட இயக்கத்தின் கொள்கைகளை தனது சிந்தனையிலும் செயல்பாட்டிலும் தூக்கிச் சுமந்த கதை இருக்கும். சமூக பாகுபாடை களைய தனது வாழ்நாள் முழுக்க கடும் உழைப்பை அவர் தந்து கொண்டேயிருந்தார்.

 

தனது எண்பதான்டு அரசியல் பங்களிப்பினை சமூக நீதியின் பக்கமாக நிறுத்தினார். எதெல்லாம் வீழ்ந்து கிடக்கும் சமூகத்தை நேர்படுத்துமோ அதையெல்லாமும் தனது புத்திசாலித்தனமான திட்டங்களின் வழியே நேர் செய்தார். அதற்கான  ஓயாத  உழைப்பு  அவர்  செலுத்தினார். அவரது சிறப்பே அதுதான்

 

ஒரு தலைவராக அவர் ஏற்றிருந்த பொறுப்பில் துளிக்கூட வழுவாத தன்மையோடு அவர் தனது வாழ்க்கைப் பாதையை வகுத்துக்கொண்டிருந்தார். தமிழகத்தின்  நலன், மாநில  உரிமைகள், சமூக  நீதி  என்கிற  கருத்தாக்கங்கள்  அவரது  அடிப்படையான  நோக்கங்களாக  இருந்தன  என்பதனால்தான்  இன்றைய  தமிழக  வளர்ச்சிக்கு   அவரே  பொறுப்பாக  இருக்கிறார். அந்த  வளர்ச்சியினில்  பிறகு  வந்தவர்கள்  கைவைக்க  இயலாதபடிக்கு  மாநில மக்களது  அன்றாட  வாழ்க்கையின்  உயிர்  நாடியாக  அவை  இணைந்தே  இருந்தன; இருக்கின்றனதனி  மனிதனது  பசிக்கு இந்த  மாநிலத்தில்  இடமே  இருந்ததில்லை  என்பதனை  ரூபாய்க்கு  படியரிசியென  சட்டமியற்றினார். குழந்தைகளது  ஊட்டச்சத்தின்  அவசியத்தை  சத்துணவில்  முட்டை  என  செயல்பாட்டுக்கு  கொண்டு வந்தார். கர்ப்பக் கால  நிதி உதவி  பெண்ணின்  உடல்  ஆரோக்கியத்தில்  பெரும்  பங்காற்றி  தாய்  சேய் நலனை  பாதுகாத்தார். இன்னும்  இனியும் அவர்  இந்த  சமூகத்தை  தனது  இதயத்தில்  வைத்து  பாதுகாக்கும்  பாதுகாவலனாக  இருந்தார். பிற  மாநிலங்களுக்கும்  ஒரு  நிர்பந்தத்தை  அவரே  உருவாக்கினார். பிற  மாநிலங்களுக்கான  வழிகாட்டியாகவும்  அவர்  தனது   சமூக  நலத்திட்டங்களை  முன்மொழிந்தார் .

 

அவரது  மரணப்படுக்கையில்  அனைத்து  சாதியினரும்  அர்ச்சகராகலாம்  எனும்  அவரது  சட்டம்   செயல்பாட்டுக்கு  வந்ததை  நாம்  மறந்து  விட  முடியாது. அவரது  சாதனைகளும்  அவரது  நெடிய  சமூக  நீதி  போராட்டமும்  திட்டமிட்டு  மறைக்கப்பட்டன, அதனால்தான்  அவரால்  முதல்  பட்டதாரியாக  மாறியவர்களும், அவர்  கொண்டு  வந்த  இட ஒதுக்கீட்டிலும்  முன்னேறிய  பெரும்  இளைஞர்  கூட்டத்திற்கு  அவரது  பங்களிப்பு  தங்களது  வாழ்க்கையில்  என்னவாக  இருந்தது  என்கிற  விஷயம்  போய்ச்சேரவே  இல்லை. அவர்  உருவாக்கிய  ஐடி துறையில்  இருந்தபடியே  அவர்  யார்  என்கிற  அறியாமையோடு  இளைஞர்கள்  வலம் வந்தார்கள். 

 

இன்று அவரை மறுபடியும் இந்த சமூகம் அறிந்து கொண்டதன் வழியே அவர் இன்னொரு முறை பிறந்திருக்கிறதை உறுதி

 செய்திருக்கிறது காலம்...வரலாற்றில் என்றென்றும் மறைக்கப்பட  இயலாததொரு   தலைவராக  அவரே  இருப்பார்உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation