1.
உதிர்ந்த இறகு
அதிகாலையாக
நாள் துவங்கிற்று
வழக்கமான அதே அதேகள்
கழிந்தபடி இருக்க
சூரியன் சிதறிக்கிடந்த மதியத்தில்
நிழற்கூடையுள் ஒதுங்கிக் கிடந்த கிழவி
இழுத்து விடப்பட்ட சுருட்டின் புகை
கோர்த்தும் பிரிந்தும் நீண்டும்
தோற்றம் கொண்ட மாய வளையங்கள்
அன்றாடத்தை அர்த்தமுள்ளதாக்கியது.
2.
அவயம் வைத்த
சொல்லொன்று
பிறப்பற்றுப் போனதன்
வலியைக் கூறிட
வார்த்தையற்று தவித்தான்
காகம்
கரையத் துவங்கிற்று.