• Time to read: 02 minutes
  • 1712
  • 0

ஸ்டாலின் சரவணன் கவிதைகள்

By ஸ்டாலின் சரவணன்

உன் ஞாபகத்துக்கு நாக்கு கொஞ்சம் நீளம்தான்

வண்டுகள் முயங்கும் இருளைப் பாய் விரித்து

குளிரில் வெடவெடக்கும் வனத்தில்

மலங்காட்டு காளியென நாக்கைத் துருத்துகிறது அவள் ஞாபகம்.

மண்டியிட்டு அதன் சூலத்தை பவ்யமாக வாங்கி

நெஞ்சின் நேர் பொருத்தி

கண்களை இறுக்கிக் கொள்ளும்

பச்சிளம் சிசு அவன்.

எஞ்சியிருக்கும் ப்ரியத்தின் கால்களைக் கட்டிக் கொண்டு

ஒரே குத்தில் போய்சேர வழி செய்ய வேண்டுபவனை

நெட்டித் தள்ளி மென்னியில் இறக்கி

குருதி வழியும் கூர்முனையை நாக்கில் வைத்து சுவைக்கிறது

கழுத்து திருகப்பட்ட கோழியென

உதைத்துக் கிடக்கிறான்.

அன்றைய கோட்டா முடிந்ததென

கழுத்திலிருக்கும் எலுமிச்சைகளில் ஒன்றை பிழிந்து

உப்பு ,ரத்தம் கலந்து அருந்தும் காளியிடம்

ஐஸ் போடவா என வழியவந்து கேட்கிறாள்

அவளின் அசலொத்த நகலொருத்தி.

 

2.

தோளில் அமரும் வண்ணத்துப்பூச்சி எடையில்

மதுக்கோப்பையிலிருந்து வடியும் சிறு துளிதான்

என் காதல்.

அண்ணாத்திக்கொள்ளும் 

தேநீர்க்குவளை அடிச்சர்க்கரையில்

ஒளிந்துக்கொள்வது அதன் வாடிக்கை.

கடற்கரையில் புட்டத்தில் படிந்த

ஒரு தட்டு தட்ட போதுமான மணற்துகளெனில்

தெருமுனை தள்ளுவண்டி வாணலியில் வறுபடும்

சிறு துண்டு மீனென சின்னஞ்சிறு ப்ரியம்.

முதல் குளிர் நீர் குவளைக்கு

சிலிர்க்கும் படியாக கைகளில்

முளைத்திருக்கும் பூனை ரோமங்களில்  ஒரு மயிர்.

சொல்லொண்ணவியலா மயக்கம் தந்து

புகையும் சிகரெட் கங்கை

காலில் சுட்டு அணைக்கிறான் ஒருவன்.

நீயும்தான்

இவ்வளவு சொல்லியும் கேளாமல்

மிதிக்க எத்தனிக்கிறாய்.

ஒரு நிமிடம் கொடு

பாதங்களை முத்தமிட

எவ்வளவு நேரமாகிவிடும்.!?

கண்டிப்பாக நசுக்கத்தான் வேண்டும்

இந்த எளிய அன்பை.

 

3.

காலத்தின் பெருவெளியில்

உருண்டு புரண்டு இளைத்து 

கூழாங்கல்லென

சிறுவனது பெருவிரலில் 

இடறிக் கிடக்கிறது

 

முன்னாள் மலையை

உள்ளங்கையில் ஏந்தினாலும்

கனப்பதில்லை

மெல்ல வருடுகையில்

முன்பின்னாக 

காலத்தின் மேலேறி

பயணிக்கின்றன விரல்கள்

 

உடலெங்கும் 

காலத்தின் வாசம் 

அப்பியிருக்கும் கூழாங்கல்லை

அருகிருக்கும் 

திக்கிப் பேசுமொருவன்

பறிபறித்து

தன் வாய்க்குள் 

எறிந்து கொள்கிறான்

 

மலையென இறுமாந்திருக்கையில்

அச் சிறுவிரல்கள் 

தன்னைத் திருகியெறிந்துவிட 

முயல்வதை எண்ணி 

மலை சிரித்துக் கொள்ளும்

பொல்லாக் காலமோ

நின்று வெல்லும்.

 

4.

தீண்டலுக்கு ஏங்கும் நேரத்தில்

உன் விரல்கள் இங்கில்லை.

ஏதோ ஒரு சாலையோரத்தில்

சிகரெட்டை ஏந்திக் கொண்டிருக்கலாம்

கவிதையொன்றோடு உடன்பாட்டை முடித்து கையெழுத்திடலாம்

தேநீர்க் கோப்பையை சுடச்சுட பிடித்துக் கொண்டிருக்கலாம்

யார் கண்டது எந்தக் கன்னத்தையாவது வருடி மிதக்கலாம்

நிறைய வேலைகள் இருக்கிறது உன் விரல்களுக்கு

இந்த உடலுக்குதான் நேரம் காலமெல்லாம் தெரிவதில்லை

 

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation