• Time to read: 02 minutes
  • 1008
  • 0

மையத்திலிருந்து விரியும் அந்த இருள்

By அதீதன்

ஒரு நீண்ட பயணத்தை முடித்து வீடு வந்திருந்தேன். படிப்பதற்காக கொழும்புக்குச் சென்றதிலிருந்து என்னவோ நான் வீட்டுக்கு விருந்தினன் போல மாறிப் போய்விட்டேன். மாதம் ஒருமுறையோ, சிலவேளை இருமாதத்திற்கு ஒருமுறையோதான் வீடு. இந்த ஏழு வருடங்களும் அப்படித்தான் கழிந்திருக்கிறது. இன்றும் அப்படித்தான் வீட்டுக்கு வந்தேன். வீட்டாரின் வழமையான எல்லாவற்றையும் தாண்டி எனது கதிரையில் வந்து அமர்ந்தேன். இந்தக் கதிரை இன்னாருக்கு என வீட்டில் யாருக்கும் பட்டயங்கள் எழுதியிருக்கவில்லை ஆனாலும் நான் வீட்டிலிருக்கும் பொழுதில் அது என்னுடைய கதிரைதான்.

அதனால்தான் வீடு வந்ததும் முன்னுக்கே இருந்த நான்கு கதிரைகள் தாண்டி அந்தக் கதிரையில் வந்து அமர்ந்தேன். அமர்ந்து கொஞ்ச நேரம் ஆகியிருக்கும். எனதருகே வந்தது எங்கள் வீட்டுப் பூனை. நான் எப்போதும் அதை என்னுடைய பூனையாகக் கொண்டாடியதில்லை. அதுவும் தான். பசித்தால் அருகில் வரும் நான் உணவு வைப்பேன். அவ்வளவுதான் எங்கள் உறவு. பூனை எங்கள் வீட்டிற்கு வந்த பன்னிரண்டு வருடங்களில் இது மாறியிருக்கவில்லை. இன்று மாறியது.

எனதருகில் வந்து எனது முகத்தை ஒரு கணம் பார்த்தது. நானும் பார்த்தேன். அதன் கண்களில் ஒரு பெரும் மாற்றம். அந்தப் பழைய கம்பீரம் அதனிடம் இல்லை. வயது போனது அதன் கண்களில் அப்படியே தெரிந்தது. அந்தக் கண்களுக்குள் ஒரு நிச்சயமின்மையை நான் கண்டேன். நாளை பற்றிய நிச்சயமின்மையாய் இருக்கலாம். சுழலாது நிற்கின்ற ஒரு பூமியினை சூழ்கின்ற இருளின் கருமை அந்தக் கண்களின் மையத்திலிருந்து விரியத் தொடங்கிதைக் கண்டேன்.

நான் என்றும் உற்றுப் பார்த்திராத போதும், அந்தக் கண்கள் எப்போதும் இப்படி இருந்ததில்லை என்பதை என்னால் உறுதிபடக் கூற இயலும்.
இதைக் கவனிக்க எனக்கு ஒரு கணம் மட்டுமே தேவையாய் இருந்தது. பூனைகளால் மனிதர்களிடம் பேசமுடியும் என்ற புனைவை என்றும் நம்பியதில்லை. இப்போது அதுபற்றி மீள்பரிசீலனை ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறேன். இத்தனை ஆழமான ஒரு கண்ணை நான் இதுவரை நேரில் கண்டதில்லை. மையத்திலிருந்து விரியும் அந்த இருள் மிகவும் பொல்லாதது. என் பூனையை அது விழுங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த இருளை மரணத்துடன் ஒப்பிட முடியுமா என்ற கேள்வியை நான் கேட்க விரும்பவில்லை. அந்த இருள் உண்மையிலேயே மரணத்தின் பிரதி விம்பமாய் இருந்து அதனை அந்த வயதான பூனையின் கண்களில் நான் அடையாளம் கண்டிருக்கிறேன் என்பது மன உளைச்சல் தரும் உண்மையாக மாறிவிடக் கூடியது. இன்னும் அந்த ஒரு கணம் முடியவில்லை என்று நான் சொல்லியாக வேண்டும். மிகவும் நீண்ட கணம் அது. இந்த இருள் மரணத்தின் வாசலுக்கான அறிவிப்பாக இருக்கக் கூடாதென்கிற விருப்பத்தோடு முடிகிற கணத்தில் மெதுவாகத் தாவி ஏறி மடியில் அமர்கிறது அந்த பூனை.

என் கண்களை அது படித்திருக்கிறது என நினைக்கிறேன். அதை தூக்கியெடுக்க நான் எண்ணியது அதற்குப் புரிந்திருக்க வேண்டும். சிலவேளை எனது மடியில் அமர அது விரும்பியிருக்கலாம். என் கண்களை படிக்கும் உத்தி அதற்குத் தெரியாமலும் இருக்கலாம். அதன் கண்கள் பற்றிய என் சிந்தனைகள் வெற்றுக் காற்றுக் கதைகளாகவும் இருக்கலாம். ஆனாலும் என் பூனை என் மடியில் அமர்ந்திருக்கும் இந்தப் பொழுது மிகவும் புதுமையானதுதான்.

மடியில் அமர்ந்திருக்கும் பூனையின் தலையைத் தடவுகிறேன். என்னை நிமிர்ந்து மீண்டும் பார்க்கிறது. இம்முறை நான் நிச்சயமாய்ச் சொல்வேன், என் பரிவு தடவுகை மொழி அதற்குப் புரிந்திருக்கிறது. அதன் கண்களில் அமைதியை நான் காண்கிறேன்.


 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation