• Time to read: 02 minutes
  • 1115
  • 0

புரியாத புன்னகையின் திருப்தி

By ஜி.எஸ். தேவகுமார்

 

 

சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘ஹரே பய்யா’ என்ற ஒரு சிறுகதை எழுதி நயனத்திற்கு அனுப்பியிருந்தேன். நயனம் மலேசியத் தமிழர்கள் நன்கு அறிந்த இதழ். பதிலுக்கு எனக்கு ஆங்கிலத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘என்னை தொடர்பு கொள்ளுங்கள்’ ஆதி. இராஜகுமாரன். என்று இருந்தது. அந்த காலக்கட்டத்தில் நவீன கைப்பேசியின் வேகம் மிக குறைவு. நான் மடி கணினியில் மட்டுமே மின்னஞ்சல் பார்ப்பேன். ஒரு வாரம் சென்று மீண்டும் ஒரு மின்னஞ்சலில் ‘ உங்கள் அழைப்புக்கு காத்திருக்கிறேன். உங்கள் கைப்பேசியின் எண் அனுப்புங்கள்’ என்று ஆங்கிலத்தில் இருந்தது. அந்த இரண்டு தகவல்களையும் தாமதமாக பார்த்த பதற்றத்தில் உடனே அவரை தொடர்பு கொண்டேன்.

என்னைப் பற்றி நேர்முகத் தேர்வு போல விசாரித்தார். ஒரு கட்டத்தில் ஏன் இதையெல்லாம் விசாரிக்கிறீர்கள் என்று கேட்டேன். “.... கதை சிறப்பாக உள்ளது. உங்கள் மொழி அருமை” என்றார்.  பிறகு தொடர்ந்து எழுத சொன்னார். எனக்கு இனிமேல் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. பிறகு ஒரு கட்டத்தில் நான் எழுதுவதை தள்ளி போட்ட போது எனக்கு வாட்சப் அனுப்பி “...இப்போதெல்லாம் நயனத்திற்கு எழுதுவதில்லையே..” என்று கேட்டார். நான் அதிக வேலை சார் என்றேன். அவரின், பதில் “..மாதம் ஒரு கதையாவது எழுதுங்கள் . விட்டு விடாதீர்கள்” என்றார்.

அவர் அப்படி சொன்ன பிறகு தான் நான் ஒன்றை புரிந்துக் கொண்டேன். அவர்களை போல உள்ளவர்கள் கொஞ்சம் தட்டிக் கொடுத்து புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்கிறார்கள் என்பது. அதன் பிறகு நாம் தொடர்ந்து இலக்கியம் குறித்து தனித்த கருத்துடன் வளர தொடங்கி விடுவோம். அவர் அப்படி சொன்ன பிறகு ‘ நாமா சாயா செல்வி’ என்ற கதை எழுதினேன். அந்த கதைக்கு பரிசு கிடைத்த போதுதான் அவரை நேரில் சந்தித்தேன். உங்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றேன். புன்னகையித்தார். ‘நயனத்தில் வெளிவந்த கதைக்கு பரிசு கிடைத்தது. உங்களுக்கும் பெருமை தான் சார்.’ என்றேன். அதற்கும் அதே புன்னகை.

நயனம் இப்போது ஏன் வருவதில்லை என்று கேட்ட போது இனி அச்சில் வெளிவர வாய்ப்பில்லை என்றார். இணைய இதழாக வர வாய்ப்புள்ளதாக சொன்னார். நன்றி சொல்லி விடைப் பெற்றேன். சுங்கைப் பட்டாணி வந்தால் என் வீட்டுக்கு வரும் படி கேட்டேன். ‘நிச்சயமாக’ என்று மீண்டும் அதே புன்னகை முகத்தில்.  பிறகு நிகழ்ச்சி முடிந்து நான்  நண்பர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் போது அவர் முன்னால் வந்தார். எல்லோரும் கிளம்பியிருந்த நேரம். எப்படி செல்வீர்கள் என்று விசாரித்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் நண்பன் வந்து விடுவான் என்று கைகுலுக்கி விடைப்பெற்றேன். அதே புன்னகையில் விடைப்பெற்றார். 

அவர் இறப்புச் செய்தி வந்த புகைப்படத்தில் அவரிடம் மீண்டும் அந்த புன்னகையைப் பார்க்க முடிந்தது. எழுத்துலகில் பல புதிய முகங்களை அறிமுகம் செய்ததில் ஏற்பட்ட திருப்தி புன்னகையாக எனக்கு தெரிந்தது. மலேசிய இலக்கியச் சூழலில் என்றும் அழியாது அவரின் புன்னகை, அவரிடம் பல ஆண்டு காலம் நெருங்கிய நட்பில் இருந்தவர்களில் யாராவது அவரின் வாழ்க்கை வரலாற்றையும் அவரின் குடும்பம், சிறு வயது புகைப்படம் போன்றவற்றையும் இணைத்து புத்தகம் வெளியிட்டால் அவரை நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல முடியும்.

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation