• Time to read: 02 minutes
  • 1336
  • 0

நான் எனும் கதைசொல்லி

By முனியாண்டி ராஜ்.

நான் எனும் கதைசொல்லி

 

அப்பா கூறும் கதைகளுக்குள்

எப்படியும் ஒரு பூதம் நுழைந்துவிடும்

எனக் கதை சொல்லத் தொடங்கினேன்

மாதக் கணக்கில் பூதங்களைக் கோர்த்துக்

கதை சொல்லும் பாணியில்

அப்பாவை மிஞ்ச முடியவில்லை என்னால்

முதல் நாள் மரத்தின் மீதிருக்கும்பூதம்

மறுநாள்

பாழடைந்த வீட்டினுள் மிரட்டும்

ஏதாவது பூவைத் தேடி வனம் ஏவும்

அரச குமாரனுக்கு

பூதங்களும் மந்திரக்கிழவிகளும்

கதைகளை ஆண்டுக் கணக்கில் இழுத்த போதும்

எந்தப் பூதமும்

வீடுகளை ஆக்ரமிப்புச் செய்ததாய்

அப்பா கூறியதாய் நினைவேதுமில்லை

இப்போதெல்லாம்

மகளிடம் கதை சொல்லத் துவங்கும் போதே

வண்ணத்திரைகளிலும் ஒளிகளிலும்

பூதங்கள் சூழ்ந்து கொள்ள

சோபாவிலேயே தூங்கி விடுகிறாள் மகள்.

 

 

புறாக் கூண்டுகள்

 

இறக்கைகள் விரிய படபடத்து

தனக்கான அறைக்குள் நுழைந்து கொண்டது புறா

வைத்த கண் வாங்காமல்

தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களையோ

வலை வீசிக் காத்திருக்கும் வஞ்சகர்களையோ

அது திரும்பிப் பார்த்ததாகத் தெரியவில்லை

காலை சிறகு விரிப்பில்

அதன் பயணத்தைத் தொடர்ந்ததில்லை

இதுவரை நானும்

இரைத்து வைத்திருக்கும் இரைகளை

அவ்வப்போது கொத்தித் தின்றுவிட்டு

தன் கூண்டுக்குள் பத்திரமாய் அடைந்துகொள்ளும்

கூண்டுக்குள் இருக்கும் அதன் விரிப்புகள் குறித்து

எனக்கேதும் கவலையில்லை

ஒருநாள் விளக்குக் கம்பம் ஒன்றில் இறந்து

அநாதையாக அது விழுந்ததாக

நண்பன் ஒருவன் கூறியபோது

அதற்காக கொஞ்சம் வலித்தது உள்ளம்

 

 

போர்கள் இன்னும் ஓயவில்லை

 

போர் ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதின்

கடற்கரையில்

கிழிஞ்சல்கள் பொறுக்கிக் கொண்டிருந்தபோது

அப்பாவைக் கேட்டேன்..

கிழிஞ்சல்கள் மட்டும்தான் கரை ஒதுங்குமா

ஆம்.... இல்லை...

என்ற சொல் ஏதுமின்றி

வெகுதூரம் நடந்து கொண்டிருந்தார் அப்பா

சொற்களைச் சிக்கனப்படுத்தத் துவங்கி

வெகுநாள்களாகி விட்டது அவருக்கு

உடலின் சில உறுப்புகள் போல

 

அப்பாவை எளிதில் பிடித்துவிடலாம்

ஒரு கால் ஊன்றி எம்பி நடக்கும் அவரை

ஈரெட்டில் பிடித்து விட முடியும்

 

ஒருநாள்

சில பிணங்களுடன் கரை ஒதுங்கிய

உடைந்த படகொன்றை ஏந்திய துண்டிதழை

வெகுநேரமாக வெறித்துக் கொண்டிருந்தார்

அப்பா......

துண்டேதுமின்றி தன்னைக் கரையில் வீசிய

படகானது அவரை மீண்டும் சுமந்திருக்கலாம்

 

 

மன்னிப்பு

 

கடமை முடிந்த மன்னிப்பு

களைப்பில் மிதந்துகொண்டிருக்க

மடியில் பத்திரமாக செருகிக் கொண்டான்

அடுத்த தவறுக்கான முன்னிறுப்புகளில்

தன்னைத் தயார் படுத்திக் கொண்டே

கைப்பேசியில் விசைகளில் அம்மா வர

இம்மாதமும் பணம் அனுப்ப இயலவில்லை

கடன்களில் அல்லாடுகிறேன் என

கைப்பேசியைத் துண்டிக்க

இடுப்பில் செருகியிருந்த மன்னிப்பு

புதிய ஹோண்டாகாரினைச் சுற்றி வந்து

மீண்டும் இடுப்பில் அமர்ந்துகொண்டது

அப்பா வாங்கிய கடனும்

வங்கியில் வட்டிக் குடும்பத்துடன் இருக்கும்

வீட்டுப்பத்திரம் கண்ணுக்குள் நுழைய

அலறிக் கொண்டிருந்த கைப்பேசியில்

அப்பாவை அலறவிட்டுக் கொண்டே

மடியில் அமர்ந்திருந்த மன்னிப்பைப் பார்க்க

ஒரு புன்முறுவலுடன்

உதடுகளை நோக்கி விரைந்தது அது

 

 

 

 

 

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation