மௌனம் ஒரு நீண்டுயர்ந்த
பெரும் சுவாரய் நம் நடுவே
அன்று நின்றிருந்தது அந்த கணத்தில்..
அந்த கணமொன்றின் அடர்
மௌனம் போல பிறிதொன்றை
அதன் பிறகு அறிந்தேனில்லை..
கடைசி வார்த்தைகளுக்காக
நாமிருவரும் காத்திருந்த கணமது.
மௌனத்தை பிரித்து வெளியேற
நீயும்தான் ஏதேதோ செய்கிறாய்.
பக்கத்து தெப்ப குளத்து நீரில்
தலைகீழாக வரைந்த காட்சிகளை
ஒரு கல் எறிந்து கலைத்து விடலாம்தான்.
என் கையில் கனத்தபடி கிடந்த
உலோகத்தை வருடி இருந்திருக்கலாம்தான்.
நீ உன் தோளில் புரண்ட பின்னலை
ஒரு இயல்பாக கோதி இருக்கலாம்தான்.
ஏதும் செய்யாமல் நாம்
அந்த கடைசி வார்த்தையை தேடிக்
கொண்டிருந்தோம் நமக்குள்ளே.
சில வார்த்தைகள் அடிவயிற்றில்
இருந்தெழுந்து தொண்டைவரை
வந்து நாக்கில் நடந்தும்பின்
வெளிவரவே இல்லை.
மொழியின் போதாமையை
வார்த்தைகளின் தட்டுபாட்டை
நெஞ்சு உணர ஆரம்பித்திருந்தது.
உன் கண்ணில் துளிர்த்த
நீர் தூசியால் வந்திருக்கலாம்
நீ அழவில்லையென எனக்கு
நானே சமாதானம் சொல்கிறேன் மனதுக்குள்.
பெரிதாக நான் இழுத்துவிட்ட
பெருமூச்சு நிச்சயமாக என்
கடைசி வார்த்தை இல்லை.
உறைந்து சுவரெழுப்பிய
மௌனத்தை உடைத்து நீ
அந்த கடைசி வார்த்தையை
சொல்லி விட்டு திரும்பி
பாராமலேயே நடந்து போகிறாய்.
கவனமா இரு
இதோ
இன்னும் உன் கடைசி வார்த்தையை
அடை காத்தபடி இருக்கிறேன்