• Time to read: 15 minutes
  • 791
  • 0

மனப் பிறழ்வில்லாமல் கலைப் படைப்புகள் சாத்தியம் இல்லை.

By வீ.அ.மணிமொழி

“மிகப் பெரிய கலைப் படைப்பை உருவாக்கும் அளவிற்கு என்னுடைய வாழ்க்கை பெரியதாக தாக்கப்படவில்லை”.


“மொழிபெயர்ப்பு மட்டுமில்லையெனில் நான், என் நாட்டு எல்லைக்குள் சுருக்கப்பட்டிருந்திருப்பேன். மொழிபெயர்ப்பாளர்  எனக்கு மிக முக்கியமான சேர்க்கை. அவன் இந்த உலகத்தை எனக்கு அறிமுகம் செய்திருக்கின்றான்”, என்பது இத்தாலிய எழுத்தாளர் இதலோ கேல்வினோவின் கூற்று. இலக்கியச் சூழலில் அடுத்தவன் வீட்டை வலம் வருவது உத்தமாகின்றது. ஒரு மொழிபெயர்ப்பாளர்  மற்றொரு மொழிபெயர்ப்பாளரின் படைப்புக்குள் நுழைவதற்கு தடைவிதிக்கப்படுவதில்லை. மொழி தெரியா வாசகனுக்குத் தேரோட்டியாக ஒரு மொழிபெயர்ப்பாளன் காலமறிந்தும் தேவையறிந்தும் செயல்படுகின்றான். அந்த வகையில் மிக எளிமையான பழகுவதற்கும் இனிமையான மொழிபெயர்ப்பு துறையின் ஆளுமையாக மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி அவர்களை அடையாளப்படுத்தலாம். இவர் தமிழ் இலக்கிய உலகத்திற்கு பல மேல்நாட்டு கலைப் படைப்புகளை மொழிபெயர்ப்பின் வழி நமக்கு அறிமுகம் படுத்தியும் வருகின்றார். இவரின் முக்கியமான  ‘என் பெயர் சிவப்பு’, ‘பனி’, ‘சின்ன விஷயங்களின் கடவுள்’,’பூனைகள் நகரம், ‘வணக்கத்துக்குரிய எலும்புத் துண்டுகள்’, ‘சே குவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை’, ‘வெண்ணிறக் கோட்டை’, ‘அயல் மகரந்தச் சேர்க்கை’,இஸ்தான்புல் மற்றும் சமீப வெளியீடான ‘உடைந்த குடை’ போன்ற நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்து தந்துள்ளது தமிழ் இலக்கியத்திற்கு இன்னொரு திறப்பு. அவர் நேர்கோடுவிற்காக வழங்கிய நேர்காணல் வாசகர்களுக்காக...

நேர்கோடு: தமிழ் இலக்கியப் பரப்பில் பல இலக்கிய வடிவங்கள் இருக்கும் பட்சத்தில் குறிப்பாக தாங்கள் மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்துள்ளதைப் பற்றி...

 

ஜி.குப்புசாமி: மொழிபெயர்ப்பும் சுயப் படைப்பும் இவையெல்லாம் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்னைப் பொறுத்தவரை. நானும் எனது இளையப் பருவத்தில் கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி வந்துள்ளேன். ஆனால், எழுதுவதைக் காட்டிலும் அடிப்படையில் நான் ஒரு வாசகன். வாசிப்பில் அதிக ஆர்வம் உண்டென்பதால் இது  என்னுடைய தனிப்பட்ட ஒரு தேர்வு எனலாம். ஒரு மிகப் பெரிய கலைப் படைப்பை உருவாக்கும் அளவிற்கு என்னுடைய வாழ்க்கை பெரியதாக தாக்கப்படவில்லை என்பதே உண்மை. பல நேரங்களில் நம்முடைய பார்வையில் படுகின்ற விசயங்கள் அல்லது வாழ்க்கையில் அனுபவிக்கின்ற விசயங்கள்தான் ஒரு படைப்பாளிக்கு ஏற்படுத்திய பெரிய பாதிப்பு எழுத்தில் உருவாகும். தமிழ்ச் சூழலில் இனி ஜெயகாந்தன், வண்ணநிலவன் சுந்தராமசாமியை விடவோ அல்லது அசோகமித்ரனைவிடவோ மிகச் சிறப்பான கதையை என்னால் எழுத முடியுமென ஒரு நம்பிக்கை இருந்திருந்தால் நானும் எழுதி இருந்திருப்பேன். நான் வாசிப்பிற்காக அர்ப்பணித்துக் கொண்ட ஒருவன். பல விதமான எழுத்துகளை நான் ஆர்வத்தோடு படிப்பவன். அதனால், இயல்பாகவே என்னிடமிருந்த அந்த வாசிப்பு ஆர்வம் மற்றும்  வாசிப்பு நடை இவை எல்லாம் என் எழுத்துகளில் பிரதிபலித்தன. என்னுடைய சின்ன வயதில் பல எழுத்தாளர்களுடைய நடையில் நானும் எழுதிப் பார்ப்பேன். ஜானகிராமன், சுந்தராமசாமியின் கதைநடைகளியிலே என்னுடைய பயிற்சிக்காக சும்மா அப்படியே எழுதிப் பார்ப்பதுண்டு.  ஒரு மிமிகிரி பேசுவர் போல் இது எனக்கு இயல்பாகவே இருக்கின்ற ஒரு திறமை. இத்திறமை மொழிபெயர்க்கும் போது பெரிய உதவி செய்கின்றது. மொழிபெயர்ப்பு எந்த வகையில் எனக்கு உதவி செய்கின்றது? பல எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்க்கும் போது ஆங்கிலத்தில் எந்த நடையில் சொல்லப்பட்டதோ அதே நடையில் மொழிபெயர்ப்பதுதான் சவாலான விசயம். அருந்ததி ராய் அவர்களின் நடை மிக வித்தியாசமானது. ஆங்கிலத்தில் அவரின் எழுத்தைப் படிக்கும் போதே அதே குரல், அதே தொனி, அதே நடை மனதில் தமிழில் வாசிக்கும் போது இணையாகவே தோன்றும். எப்படி ஒரு கதையை வாசித்து மற்றவர்களுக்கு அப்படியே சொல்லுகின்றோமோ அதேபோல் இது ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு இருக்க வேண்டிய முக்கிய அம்சம் என நினைகின்றேன். ஆதலால், மொழிபெயர்ப்யைத் தேர்வு செய்வதற்குக் காரணம் என்னுடைய மன அமைப்பும் எனக்குள் இருக்கும் அந்தக் காப்பி அடிக்கும் திறனும்தான்.

 

நேர்கோடு: பல ஆங்கிலப் புத்தகங்களை வாசிக்கும் தாங்கள், “இதுதான் எனது தேர்வு” என ஒரு புத்தகத்தை மொழிபெயர்க்கத் தொடங்குகின்றீர்கள். எந்த அடிப்படையில்  அந்தப் புத்தகம் உங்களது தேர்வாக அமைக்கின்றது?

 

ஜி.குப்புசாமி: இது ஒரு முக்கியமான கேள்வியாகத்தான் நினைக்கின்றேன். எந்த மாதிரியான புத்தகங்களை நான் மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுக்கின்றேன்? முதலில் அந்தப் புத்தகம் எல்லா விதத்திலும் என்னை மிகவும் பாதித்திருந்திருக்க வேண்டும். அடிப்படையான விசயமும் கூட. எனக்குப் பிடிக்காத அல்லது என்னை அதிகம் கவர்ந்திராத எந்த ஒரு புத்தகத்தையோ ஒரு சிறுகதையையோ மற்றும் தெரிந்த  அல்லது நெருங்கிய நண்பர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களோடு சமரசத்தின் கட்டாயத்திற்காகவோ நான் மொழிபெயர்ப்பதே இல்லை. மற்றொன்று, இதுவரை எவரும் என் தலையில் ஒரு புத்தகத்தைக் கட்டி “மொழிபெயர்த்துக் கொடு” என சொன்னதுமில்லை; அப்படிச் சொன்னாலும் நான் செய்யமாட்டேன். இரண்டாவது, எந்த மாதிரியான புத்தகத்தை தேர்ந்தெடுகின்றேன் என்றால் முதலில் அது தமிழுக்குத் தேவையானப் படைப்பாக இருக்க வேண்டும். அது எப்படின்னா, தமிழில் ஏற்கனவே பழகிப்போன கதை வகைகளை நான் மொழிபெயர்க்க விரும்புவதில்லை. கிளாசிக் படைப்புகளை மொழிபெயர்க்க விரும்பாமல் சமகாலத்தில் எழுதப்படுகின்ற அயல் இலக்கியங்களை மட்டுமே மொழிபெயர்த்து வருவதற்கு இதுதான் காரணம். நான் மொழிபெயர்த்த இனி மொழிபெயர்க்கப் போகின்ற எல்லாப் படைப்புகளுமே சமகாலப் படைப்புகளாக மட்டுமே இருக்கும். அது தமிழுக்கு ஒரு புதியப் பாதையை அடையாளம் காட்ட வேண்டும்.  அதோடு,  தமிழில் இதுவரை சொல்லாத ஒரு பகுதியைச் சொல்லாத ஒரு விசயத்தை சொல்லுகின்ற ஒரு படைப்பாகவும் இருக்கணும்.

 

நேர்கோடு: மொழிபெயர்க்கும் பொழுது சொல் சிக்கல் வருவது உண்டு. அந்தச் சொல் சிக்கல்களை ஒரு மொழிபெயர்ப்பாளன் எதைக் கொண்டு நிரப்பிக் கொள்கின்றான்?

 

ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பாளர் சந்திக்கும் மிக பெரிய சிக்கல் சொல் தேர்வுதான். பிரச்சனையும் கூட. அதை எப்படி சமாளிக்கின்றான் என்பதைத் தீர்மானிப்பது அவனது மொழி பயிற்சியும் வாசிப்பு அனுபவமும்தான். சில வேளைகளில் அகராதியில் உள்ள சொற்களைக் கொண்டு காலியான இடத்தை நிரப்பி கொண்டாலும்  நல்ல மொழிபெயர்ப்பாளனுக்கு அது உறுத்திக்கிட்டேதான் இருக்கும். ஓரான் பாமூக், ரேமண்ட் கார்வர் இவர்களுக்குத் தமிழில் ஒரு வார்த்தைகூட தெரியாது என்பது எனக்கு தெரியும். ஆனால்,  அவர்கள் தமிழில் எழுதினால் இன்னின்ன தமிழ்ச் சொற்றொடர்களைதான் பயன்படுத்துவார்கள், இன்னமுறையில், நடையில் எழுத மாட்டார்கள் என்றெல்லாம் எனக்கு உள் மனதில் தோன்றும். இதுக்கு லாஜிக் கிடையாது. கலை வெளிப்பாடே ஒரு வகையான பைத்தியக்காரத்தனம்தானே. மனப் பிறழ்வில்லாமல் கலைப் படைப்புகள் சாத்தியம் இல்லை என்று ஆங்கிலத்தில் கூற்று உண்டு. மொழிபெயர்ப்பாளனுக்கும் அது பொருந்தும்.

 

நேர்கோடு: தங்களின் நான்கு மொழிபெயர்ப்புகள் நூல்களும் ஓரான் பாமூக் படைப்புகளாக இருக்கின்றன. தமிழில் இவரின் படைப்புகளை நீங்கள் அறிமுகம் செய்ய காரணம்...

 

ஜி.குப்புசாமி: ஓரான் பாமூக்கின் நான்கு நூல்களை இதுவரை மொழிபெயர்த்துள்ளேன். அந்நூல்களில் மொழிபபெயர்ப்பாளர் குறிப்புகளில் பாமூக்கை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியிருக்கின்றேன். முதல் காரணம், நமது கலாச்சாரத்துக்கும் துருக்கிய கலாச்சாரத்துக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள். மொகலாயர்களின் காலத்திலிருந்தே துருக்கிய தொடர்பு நமக்கு இருக்கின்றது. ஆட்டமன் சாம்ராஜ்ய அழிவில் உலகின் மையம், ஒற்றைக் கலாச்சாரம் போன்ற கருத்தாக்கங்கள் சிதைந்து போனதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. மேலைத்தேய பார்வைக்கும் கீழைத்தேய பார்வைக்கும் பாலமாக இருக்கும் பாமுக் தமிழுக்கு புதிய வாசிப்பு சாளரங்களைத் திறப்பார் என்ற நம்பிக்கை இன்னொரு காரணம். இவை எல்லாவற்றையும் விட அவரது பார்வையின் ஆழமும் கருத்துக்களின் செறிவும் ஒரு வாசகனாக என்னை பிரமிக்க வைப்பது பிரதானமான காரணம்.

 

நேர்கோடு: தங்களின் புதிய வெளியீடான ‘உடைந்த குடை’ நூலை சர்வேந்திர தர்மலிங்கம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ஒப்பீடு செய்து உறுதி செய்துள்ளார். இது தங்களின் படைப்பைப் பரிசோதிக்கும் அல்லது சந்தேகிக்கும் ஒரு முயற்சியாக எடுத்துக் கொள்ளலாமா?

 

ஜி.குப்புசாமி: சர்வேந்திர தர்மலிங்கம் நார்வே நாட்டில் வசிக்கும் தமிழர். அவர் தாக் ஸூல்ஸ்தாதின் நார்வீஜிய மூலத்துடன் (ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த) எனது தமிழ் மொழிபெயர்ப்பை ஒப்புநோக்கி திருத்தங்கள் பரிந்துரைத்தார். எழுத்தாளரின் தரப்பும் மூலப்பிரதியுடன் ஒப்பிட்டு சரிபார்க்கக் கேட்டுக்கொண்டதால்  அவருக்கு நாங்கள்தான் பிரதியை அனுப்பி திருத்தம் செய்ய கேட்டுக்கொண்டோம். ஒரு மொழிபெயர்ப்பு பிரதியை இப்படித்தான் பல தளங்களில் ஒப்புநோக்கி மேலாய்வு செய்ய வேண்டும். இதில் சந்தேகப்படுவது என்றெல்லாம் எதுவும் இல்லை. நான் மொழிபெயர்க்கும் படைப்புக்கு நான் சொந்தக்காரன் அல்ல. ஒரு எடிட்டர் அல்லது மேலாய்வர் எனது பிரதியை மூலத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்தால் மட்டுமே அந்தப் பிரதி நம்பிக்கைக்குரியதாக இருக்கும். வாசகன் ஒருபோதும் மூலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப் போவதில்லை. அந்த ஒரு காரணத்துக்காகவே மொழிபெயர்ப்பாளன் அதிகப் பொறுப்புணர்வோடு இருக்க வேண்டாமா? இதுபோன்ற ஒப்புநோக்கல்கள் மேலாய்வுகள் ஆங்கிலப் பதிப்புலகத்தில் பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருப்பவை. இங்கே இப்போதுதான் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் நார்வே நண்பர் என்.சரவணன் நடராஜா அவர்களிடம் மீண்டும் ஒருமுறை திருத்தங்கள் செய்துகொண்டேன்.என்னுடைய எல்லா மொழிபெயர்ப்பு நூல்களும் குறைந்தது இரண்டு மேலாய்வர்களால் ஒப்புநோக்கி திருத்தங்கள் செய்யப்பட்டே வந்திருக்கின்றன.

 

நேர்கோடு: மொழிபெயர்ப்பாளனுக்கு  மூலப் படைப்பின் மீது அனுமதிக்கப்பட்ட சுதந்திரம் பற்றி...

 

ஜி.குப்புசாமி: மொழிபெயர்ப்பாளனின் நேர்மையான மொழிபெயர்ப்புதான் இங்கு அவசியம்.

அனுமதிக்கப்பட்ட சுதந்திரம் மிக குறுகலானது. அவன் சலுகைகள் எடுத்து கொள்ளலாம். எப்படி என்றால்,  மொழிபெயர்க்க சிரமமான பகுதிகளை அவன் மொழிபெயர்க்காமல் விடுவதற்கு அவனுக்கு எந்தச் சுதந்திரமும் உரிமையும் வழங்கப்படவில்லை. மொழிபெயர்க்க சிரமாக இருந்தால் அது தமிழின் குறைபாடு இல்லை. அது அந்த மொழிபெயர்ப்பாளனின் குறைபாடு. அந்தப் பிரதியில் தன்னை   அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். சல்மான் ருஷ்டி ஒரு வாக்கியத்தை முப்பது வரிகளுக்குக்கூட எழுதுவார். தொடர் வாக்கியமாக இருக்கும். அதை தமிழில்  மொழிபெயர்க்க இலக்கணம் அனுமதிக்கவில்லை என்றால்  வாக்கியங்களை உடைத்து கொள்ளலாம்.  இடமறிந்து சில நுட்பங்களைக் கையாள வேண்டும். சின்னச் சின்ன வாக்கியமாக எழுதி மூலத்தில் எழுதியுள்ள தன்மையைக் கெடுக்கும் அளவில் அது வந்து நின்று விடக்கூடாது. You have to catch the letter by the  spirit of it. உங்கள் திறமை குறைவிற்காவோ, சொந்த ஆர்வத்தின் காரணமாகவோ மூல ஆசிரியர் சொல்லாத எந்த வரியையும் எடிட் செய்வதோ, மாற்றி எழுதுவதோ  இருட்டடைப்பு செய்வதோ கூடாது. அது ஒரு படைப்பிற்குச் செய்யும் பெரும் பாவம்.

 

நேர்கோடு: மொழிபெயர்ப்புகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இதை பற்றி...

 

ஜி.குப்புசாமி: மொழிபெயர்ப்பு என்பது எப்போதும் ஒரு நாட்டினுடைய இலக்கியத்திற்கு முன்னாடி போய் கொண்டிருக்கின்ற விசயம். அதுதான் பல நேரங்களில் ஒரு நாட்டினுடைய மொழியினுடைய இலக்கியம் பயணிக்க வேண்டிய பாதையைக் காட்டும். புதுமை பித்தன் காலத்திலிருந்தே பல உதாரணங்கள் சொல்லலாம். அயல்மொழிகளில் எழுதப்படுகின்ற பல விதமான படைப்புகள் புதிய இலக்கியப் போக்குகளை ஒரு மொழியில்  உருவாக்குகின்றன. அது எல்லா மொழிகளுக்கும் பொருத்தமான ஒரு விசயம்தான். லத்தீன் அமெரிக்கா சிறுகதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு தமிழில் எழுதப்படுகின்ற கதைகளுடைய முகமும் மாற ஆரம்பித்தது. போர்கஸ், மார்க்கேஸ் போன்ற மேதைகளுடைய படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அவர்களுடைய கதைகள் பற்றி தமிழில்  விரிவான கட்டுரைகள் எழுதப்பட்ட பிறகு 80களின் மத்தியில் மிகப் பெரிய எழுத்து மாற்றங்கள் ஏற்பட்டன. மேஜிகல் ரியலிசம் தமிழில் அறிமுகமானது. பிறகு எழுத்தாளர்களுடைய பார்வைகள் மாறின. எதிர் கவிதைகளிலும் பெண்ணியக் கவிதைகளிலும் இது நடந்திருக்கின்றன. இவை எல்லாமே மொழிபெயர்ப்புகள் மூலமாக தமிழ் இலக்கியத்தில் வந்த மாறுதல்கள். இந்த மாதிரியான rebel poetry, தலித் எழுத்துகளுக்கும் கதவுகளைத் திறந்து விட்டன எனச் சொல்லலாம். எப்படின்னா,  ஒரு அயல் எழுத்து புதிய பாதையைக் காட்டும்போது அந்தப் பாதையில் நம்முடைய அனுபவத்தை நம்முடைய மண் சார்ந்த அனுபவத்தை அதில் ஓட்டி பார்ப்பது. அதுதான் ஓர் உண்மையான படைப்பின் வெற்றி. ஓர் உதாரணமாக, தேவிபாரதினுடைய ‘நட்ராஜ் மஹராஜும்’ , ‘நிழலின் தனிமை’ ஒரு அயல்நாட்டு இலக்கியத்தின் பாதிப்பால் வந்த படைப்புகள் என்றுதான் சொல்ல முடியும். மொழிபெயர்ப்புகள் அந்தப் பாதைகளைப் காட்டிடாவிட்டால் தேவிபாரதியால் அந்தக் கதையை எழுதிருக்க முடியாது என தோன்றும். அதேபோல் பா. வெங்கடேசனுடைய ‘பாகிரதியின் மதியப் பொழுது’ நம்முடைய மண்ணை பற்றிச் சொல்வதாக இருப்பினும் சித்தரிக்கப்படுகின்ற விசயங்கள் மொழிபெயர்ப்பின் பாதிப்புகளால் வந்தவைதான். நவீன இலக்கியத்தின் முகத்தைக் காட்டுவதற்கு மொழிபெயர்ப்பு படைப்புகள் காரணமாக இருக்கின்றன. ‘என் பெயர் சிவப்பு’, தமிழில் ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்திருப்பதைப் பார்க்கலாம். பிற்காலத்தில் எழுதும் எழுத்தார்களின் படைப்புகளில் இவர்களுடைய பாதிப்பை பார்க்க வாய்ய்புண்டு என நினைகின்றேன். ‘உடைந்த குடை’ ஒரு உள்நோக்கிய படைப்பு. இது பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றது. இந்தப் படைப்பின் பாதிப்பைக் கொண்டு எழுத்தாளன் தனது சொந்த அனுபவங்களை எழுதும் போது அது இன்னும் உக்கிரமாக அமையும்.  

 

நேர்கோடு: ஒரு மொழிபெயர்ப்பாளனுக்கு இருக்க வேண்டிய அடையாளங்கள்...

 

ஜி.குப்புசாமி: அடிப்படையில் ஒரு மிகச் சிறந்த வாசகனாகவும் மேலும் இரண்டு மொழிகளிலும் நல்ல புலமை கொண்டிருப்பவனாக இருக்க வேண்டும். இவைதான் மிக முக்கியமான அடையாளங்கள். பல மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் பொழுது மிக அபத்தமான தவறுகளைச் சாதாரண வாசகனால்கூட கண்டு பிடிக்க முடிகின்றன. சில நேரங்களில் மொழிபெயர்ப்புகள் படிக்கவே முடியாத மிக உலர்ந்த நடையில் சுவாரிசியமற்ற நடையில் எழுதப்படுவதாக வருகின்ற குற்றசாட்டுகளுக்கும் இதுதான் காரணம்.  மொழிபெயர்ப்புகளை வாசிப்பதற்கு கடினமாக இருப்பதாக சொல்வதற்கு இரண்டு கிளைகள் இருக்கின்றது. அத்தனை எளிதாக, மொழிபெயர்ப்பாளனின் திறமையின்மையினால் தான் என காரணம் சொல்லிவிட முடியாது. இதைப் பற்றி விரிவாக மற்றொரு பகுதியில் பேசலாம்.  இரண்டு மொழியிலும் நல்ல தேர்ச்சி இருக்க வேண்டும் என நான் சொல்வதற்கு காரணம் எந்த ஒரு படைப்பிலும் நுட்பமான உட்பிரதிகள் உண்டு. ஒரு நல்ல வாசகனுக்கு அவற்றை முழுதாக உள்வாங்கிக் கொள்வதற்கு பண்பட்ட வாசிப்பு மனமும் மொழித் தேர்ச்சியும் வேண்டும்.  பல நேரங்களில்  மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது ஒரு மரபுதொடர் என்பது அறியாமல் அந்த மரபுதொடர்களைக் கூட அப்படியே நேரடியாக மொழிபெயர்த்திடும் வேடிக்கைகள் எல்லாம் தமிழில் நடந்ததுண்டு. அதனால், மொழிபெயர்ப்பாளன் என்பவன் தீவிர இலக்கியப் படைப்புகளை மட்டும் படிக்காமல் அவன் அரசியல், வரலாறு, விளையாட்டு, திரைப்படங்கள் என்று எல்லா விதமான எழுத்துகளையும் படிக்க வேண்டும். பரிச்சயமும் இருக்க வேண்டும். அவனுக்கு நிறைய சொல்லாட்சிகள் தேவைப்படுகின்றன. மொழிக் கிடங்கில் நிறைய சொற்கள் இருக்க வேண்டும். ஒரு வார்த்தைக்கு அகராதியில்  இருக்கும் அர்த்தத்தை மட்டும் நம்பி இருக்காமல் அவன் சில பல சமயம் சூழலோடு ஒன்றிணைய தெரிந்திருக்க வேண்டும். செறிவான வார்த்தை வங்கி இல்லாமல் மொழிபெயர்ப்பாளன் இயங்க முடியாது.

“நான் வாசிப்பிற்காக அர்ப்பணித்துக் கொண்ட  ஒருவன்”.

நேர்கோடு: உங்களுக்கு முன்மாதிரியான மொழிப்பெயர்ப்பாளன்...

ஜி.குப்புசாமி: ஆர்.சிவக்குமார் தான் என்னுடைய குரு. அதே போல் வெ. ஸ்ரீராம், மொழிப்பெயர்பில் அவர்கள் காட்டுகின்ற முனைப்பும் உத்திகளும் என்னை வழிநடத்துபவை. மொழிபெயர்ப்பு குறித்த நுட்பங்களை, உத்திகளைக் கற்றுத் தந்த நண்பர், வழிகாட்டி சா.தேவதாஸ்.நேரடியாக அவரிடம் நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் என்னைச் செழுமைப்படுத்தின என்பேன்.

 

நேர்கோடு: தமிழில் இலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்புக்கான விமர்சனப் போக்கு...

ஜி.குப்புசாமி: தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்புக்கான விமர்சனங்கள் ஏமாற்றமாகத்தான் இருக்கின்றன. காரணம் மொழிபெயர்ப்பை எப்படி அணுக வேண்டும் என்பதே இங்கு பலருக்குத் தெரியவில்லை. எது நல்ல மொழிபெயர்ப்பு,  மோசமான மொழிபெயர்ப்பு என்ற வித்தியாசம்கூட விமசர்களுக்கும் வாசகர்களுக்கும் தெரியவில்லை. அப்படியே அந்த விமர்சனம் எழுதப்படுகையில் இறுதி வரிகளாக “தமிழில் எழுதப்பட்டது போலவே இருக்கின்றது”, “வாசிப்பதற்கு இலகுவாக இருக்கிறது”, “சரளமான மொழிபெயர்ப்பு” போன்ற template வாசகங்களாகவே இருக்கும். இதெல்லாம் மிகத் தட்டையான விமர்சனமாக நான் பார்க்கின்றேன். சரளமாக இருக்கின்றது என்பது ஒரு மொழிபெயர்ப்பின் கூறாக நான் பார்க்கவில்லை. எது சரளம் என எதை ஒருவர் நினைக்கின்றார் என்றால்  வாசிப்பதற்கு தடையில்லாத ஒரு மொழிநடை நல்ல மொழிபெயர்ப்புகான  உதாரணமாக ஒரு போதும் இருக்கவே முடியாது. மூலப் படைப்பின் நடை சரளமாக இல்லாமல் இருந்தால்  முண்டும் முடிச்சுயுமாக  திக்கித் திணறிச் சொல்லப்படுகிற ஒரு படைப்பைத் தமிழில் எப்படிச் சரளமாக மிக எளிமையான நடையிலே கூறமுடியும். அப்படிச் சொன்னால் அது ஒரு சரியான மொழிபெயர்ப்பு என்று சொல்லவே முடியாது. உதாரணத்திற்கு அருந்ததி ராயின் மொழியை கூறலாம். அவர் பல நேரங்களில் வார்த்தைகளை வெட்டி ஒட்டி, பல நேரங்களில் தப்பான இலக்கணத்தில் தப்பான வாக்கிய அமைப்புகளில் எழுதுவார். அது போன்ற வார்த்தை விளையாட்டுகளால் அமைக்கப்பட்ட ஒரு பிரதியை நீங்கள் மொழிபெயர்க்கும் போது சாதாரண நாளிதழ் மொழிநடையில் அந்தச் சிடுக்குகளை எல்லாம் நீக்கிச் சரளமான மொழி நடையில் சொல்லிடவே முடியாது. எப்படி ஒரு நடையில் சொல்லப்பட்டதோ அதே நடையில் தான் நீங்க மொழிபெயர்த்தும் சொல்ல வேண்டும். அதுதான் நேர்மையான  மொழிபெயர்ப்பாக இருக்க முடியும்.  ஆனால், படிப்பதற்குச் சுலபாக இருக்கின்ற ஒரு மொழிபெயர்ப்பை நல்ல மொழிபெயர்ப்பு என்ற கண் மூடித்தனமான கூற்று நம்முடைய வாசகர்களிடையே உண்டு.  இதற்கு என்ன தீர்வு என எனக்கு உண்மையிலே தெரியவில்லை. அதாவது, தமிழில் மட்டுமே வாசிக்க தெரிந்த ஒரு வாசகனுக்கு ஒரு சிக்கலான மொழியில் எழுதப்பட்ட கதையை  அதே மாதிரியான சிக்கலான மொழியில் மிகச் சரியாக மொழிபெயர்க்கப்பட்ட ஒரு பிரதியை அவன் எப்படிப் பார்ப்பான்? அது எனக்கு ஒரு பெரிய கேள்வியாகவே இருக்கு. அவன் அதை படிக்கும் போது அது ஒரு மிக மோசமான மொழிபெயர்ப்பு என்றுதான் நினைப்பான். ஆனால்,   அதுதான் சரியான மொழிபெயர்ப்பாக இருக்கும். உதாரணத்திற்கு,  Dag Solstad வின்  ‘உடைந்த குடை’. நார்வேஜியன் மூலத்தில் மிக மிக நீளமான சொற்றொடர்களைக் கொண்டு எழுதப்பட்ட நாவல் அது. ஆங்கிலத்திலும் அதே பாணியில் மொழிபெயர்க்கபட்டுள்ளது. இந்நாவலை இதே முறையில்தான் நானும் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். இந்த மொழிபெயர்ப்பை வாசிப்பு பயிற்சி இல்லாத சிலர் கடினமானதாக கருதலாம். ஆனால், கூர்மையான வாசகன் புரிந்து கொள்வான்.

 

நேர்கோடு: இதுவரை நீங்கள் மொழிபெயர்த்தப் புத்தகங்களில் அதிக விமர்சிக்கப்பட்டவையாக எதை சொல்லலாம்?

 

ஜி.குப்புசாமி: இதுவரை என்னுடைய எந்த புத்தகமும் தீவீர விமர்சனத்திற்கு உட்படுத்தபட்டதே இல்லை. ஆனால் என்னுடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘என் பெயர் சிவப்பு’,  ‘சின்ன விசயங்களின் கடவுள்கள்’  அதிகமாக வாசிக்கப்பட்ட புத்தகங்கள். ‘உடைந்த குடை’யும் அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. ‘பனி’ பல இலங்கை தமிழ் எழுத்தாளர்களால் ஆர்வத்தோடு வாசிக்கப்பட்ட புத்தகம். என்னுடைய மொழிபெயர்ப்பைத் தீவிரமாகக் கண்காணித்து அதை குறித்து அ.முத்துலிங்கம் என் பெயர் சிவப்பை ஆங்கில மூலத்தோடு ஒப்பீடு செய்து அதை பற்றிய ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார். மற்றப்படி தமிழில் ஒப்பீடு செய்து விமர்சனம் செய்யும் முறை இனி தமிழில் நடக்கும் என நம்பிக்கையும் எனக்குமில்லை.

 

நேர்கோடு: பதிப்பங்கள் மொழிபெயர்ப்புக்கான ராயல்டி பணத்தை நியாயமான முறையில் வழங்குகிறதா?

 

ஜி.குப்புசாமி: என்னளவில் ஆம் என்பேன். காலச்சுவடுதான் என்னுடைய பெரும்பாலான நூல்களை வெளியீட்டுள்ளது.  தமிழ்ப் பதிப்புலகத்தில் முறையாக ராயல்டி வழங்கும் நிறுவனங்களில் காலச்சுவடு முக்கியமானது. 

 

நேர்கோடு: இனி வரும் காலங்களில் தமிழில் மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கை கூடுமா? இந்தத் துறையின் எதிர்காலம் இலக்கியச் சூழலில் எப்படி அமையும், அமைய வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

 

ஜி.குப்புசாமி: வாசிப்பும் விற்பனையுமிருப்பதால் மொழிபெயர்ப்புகள் பெருகிக் கொண்டுதான் வருகின்றன. ஆனால், அவை எல்லாம் தரமானதா எனக் கேட்டால் பதில் என்னிடம் இல்லை. சொல்லவும் விரும்பவில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளனாக இருப்பதால் என்னுடைய சக மொழிபெயர்ப்பாளர்களின் மீதான விமர்சனத்தை தவிர்த்தே வருகின்றேன். பண்பின் அடிப்படையில் சரியாக எனக்கு படவுமில்லை.

 

நேர்காணல்: வீ.அ.மணிமொழி

படங்கள்: ரவிசந்திரன்

 

 

 

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation