• Time to read: 28 minutes
  • 719
  • 0

பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்

By யமுனா ராஜேந்திரன்

ஜில்லோ பொன்டெ கார்வோவின் ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்(1966)’ திரைப்படம் வெளியாகி 52 ஆண்டுகள் கடந்துவிட்டன என்றாலும், காலத்தைத் தாண்டிய அரசியல் சினிமா அமரகாவியமாக அவரது திரைப்படம் இன்னும் இருந்துகொண்டிக்கிறது. 2003 ஆம் ஆண்டு ஈராக் யுத்தத்தைத் தொடர்ந்து அவருடைய ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் மறுபடி பேசப்படத் துவங்கியது. அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் தனது அதிகாரிகளுக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ் திரைப்படத்தினை திரையிட்டுக் காட்டியது. அரபு மக்களின் கெரில்லாப் போராட்டத் தந்திரங்களை முறியடிப்பதற்கான தந்திரோபாயங்களை உருவாக்குவதற்கான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அப்படம் அப்போது திரையிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஜனவரியில் துவங்கிய எகிப்து-துனீசிய-லிபியா-அல்ஜீரிய மக்கள் எழுச்சியை அடுத்து மீளவும் ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படம் குறித்து அரசியல் கோட்பாட்டாளர்களும், திரைப்பட விமர்சகர்களும் பேசத் துவங்கினார்கள்.

‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் ஒருவருக்கு இரண்டு மாபெரும் சிந்தனையாளர்களை ஞாபகப்படுத்த முடியும். ஓருவர் புரட்சிகர வன்முறை குறித்த கோட்பாட்டாளரான  பிரான்ஸ் பனான் மற்றவர் அவரது ‘பூமியின் சபிக்கப்பட்ட மக்கள்’ நூலுக்கு முன்னுரை எழுதிய இருத்தலியல் மார்க்சியரான ழான் பால் சார்த்தர். ‘பூமியின் சபிக்கப்பட்ட மக்கள்’ புத்தகம் மூன்றாம் உலக அரசியலின், போராளிகளின் புரட்சிகர வன்முறையின் தார்மீகத்தைப் பேசிய, புரட்சிகர கிளாசிக் எனப் போற்றப்படும் நூல்.

அரசியல் சினிமா வரலாற்றின் முன்னோடிக் காவியம் என ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ திரைப்படத்தினை  இன்றளவிலும் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்‘ திரைப்படம் 1966 ஆம் ஆண்டுக்கான வெனிஸ் சர்வதேச திரைப்பட விழா விருதையும், அதே ஆண்டு சர்வதேச சினிமா விமர்சகர்கள் விருதையும் பெற்றது. ஐரோப்பிய நிறவெறிக்கு உள்ளான ஜில்லோ பொன்டே கார்வோ பாசிச எதிர்ப்பினாலும் மார்க்சிய சோசலிசத்தினாலும் ஆகர்சிக்கப்பட்டார். நாற்பதுகளின் ஆரம்பத்தில் இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணியில் சேர்ந்து தெருப்போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினார். 1956 ஆம் ஆண்டு சோவியத் படைகள் ஹங்கேரியை ஆக்கிரமித்தையடுத்து அவர் இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறினார் என்றாலும், இறுதி வரையிலும் தன்னை ஒரு மார்க்சியச் சோசலிஸ்ட்டாகவும் இடதுசாரிக் கலைஞனாகவுமே அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியுடனான அவரது தொடர்புகள் உலகின் மிகப்பெரும் இடதுசாரி ஆளுமைகளாகக் கருதப்பட்ட பாப்லோ பிக்காஸோ, ழான் பவுல் ஸார்த்தர் போன்றோரின் நட்புறவை அவருக்குப் பெற்றுத் தந்தது. விளைவாகவே அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்திலும் அவரது ஈடுபாடுகள் படர்ந்தது. ஹங்கேரிப் பிரச்சினை மட்டுமே தான் இத்தாலியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறக் காரணம் இல்லை, கட்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்பதன் பெயரால் பேணப்பட்ட இறுகிய தன்மையும் தனக்கு உவப்பானதாக இருக்கவில்லை எனப் பிற்பாடு பொன்டே கார்வோ தெரிவித்தார்.

II

பிரெஞ்சு ஏகாதிபத்தியக் காலனியாதிக்கத்தின் கீழ்  130 ஆண்டுகள் வதைபட்ட அல்ஜீரியா, 1962 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விடுதலை பெறுகிறது. ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் 1950களின் பிற்பகுதியிலிருந்து 1960களின் முதல் மாதங்கள் வரையிலான விடுதலைப் போராட்ட அனுபவங்களை தனது களமாக எடுத்துக் கொள்கிறது. படத்தின் முதல் காட்சி பிரெஞ்சு ராணுவம் அல்ஜீரிய விடுதலைப் போராளிகளின் இருப்பிடத்தை காண்பிக்கச் சொல்லி ஒரு முதியவரை சித்திரவதை செய்வதுடன் துவங்குகிறது. இறுதிக் காட்சி எக்காளப்பறை முழங்க காற்றில் குதித்துக் குதித்துக் களியாடும் அல்ஜீரிய இளம் பெண்களின் நடனமும் கோலாகலமும் பரவ முடிகிறது. விடுதலைக்கு முன்பாக இரண்டு வருடங்கள் இருக்கவே படம் முடிகிறது. போராட்டம் தொடர்கிறது.

இந்தோ சீனாவில் வியட்நாமில் பிரெஞ்சுக் காலனியாதிக்கத்திற் கெதிராகக் கிளர்ந்த வியட்நாம் கொரில்லாக்களை எதிர்கொள்வதில் பயிற்சி பெற்ற பிரெஞ்சு ராணுவ அதிகாரி மாத்யூஸ் அல்ஜீரியாவுக்கு விடுதலை அமைப்பை ஒடுக்குவதற்காக வந்து சேர்கிறார். அவருக்குத் தரப்பட்ட வேலை விடுதலை இயக்கத்தின் தலைமையை வேரோடு அறுத்தெறிவது. எதிர்நிலையில் படத்தின் முக்கியமான நபராக வருகிறவன் அலி. படிப்பற்றவன். வேலையற்ற தொழிலாளி. கலகக்காரன் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறுமுறை சிறை சென்று நிறைய ஆண்டுகள் சிறையில் கழித்தவன். சிறையில் ஏற்பட்ட அரசியல் தொடர்பால் விடுதலைப் போராட்டத்துக்குள் இழுத்து வரப்பட்டவன்.

தலைமைக் குழுவில் ஒருவன் ஒரு சிறுவன். விடுதலைப் போராட்ட முன்னணியின் மத்தியக் குழுவுக்கும் பல்வேறு அடிமட்டத் தோழர்களுக்கும் பாலமாக இருக்கும் பிஞ்சு. 10-12 வயதே இருக்கும் குழந்தை. 1940களில் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி தடைசெய்யப்பட்ட போது தலைமறைவு இயக்கத் தோழர்களுக்கு செய்தி சொல்பவர்களாகச் செயல்பட்ட கூரியர் போன்றவன். தேசீய விடுதலை அமைப்பைச் சேர்ந்த மூன்று மத்தியக்குழுத் தோழர்கள் அவர்களது மனைவிமார்கள் மகள்கள் போன்ற இவர்களே திரைப்படத்தின் கதைமாந்தர்கள்.

பிரெஞ்சுக் காலனிய அரசாங்கத்திற்கு உதவி செய்கிற உளவாளியாகச் செயல்படுகிற தன் சொந்த மனிதர்களையும் சுட்டுக் கொல்கிறான் அலி. பிரெஞ்சு ராணுவத்துடன் ஒப்பிட ஆயுதவலிமை தனக்கில்லையென அவதானிக்கிறது விடுதலை அமைப்பு. விபச்சாரத்தையும் குடியையும் போதை மருந்துப் பழக்கத்தையும் அல்ஜீரிய மக்களிடையில் தடை செய்கிறது விடுதலை அமைப்பு. அங்கங்கே தனித்தனியே இராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். திடீரென்று காய்கறி வாங்க வரும் பர்தா போட்ட பெண் தருகிற துப்பாக்கியால் பிரெஞ்சுக் காவலதிகாரிகள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். நீச்சலுக்குப் போவதாகச் சொல்லும் சிறுவன் அருகிலிருந்த குப்பைத் தொட்டியிலிருந்து துப்பாக்கியை எடுத்து இராணுவதிகாரியைச் சுட்டுவிட்டு சாவகாசமாக தப்பிப் போகிறான்.

தெருவில் சென்ற கிழவன் பிரெஞ்சுக் குடியேற்றக்காரர்களால் குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்படுகிறான். சிறுவர்கள் குடிகாரர்களையும் விபச்சாரத்தை செய்யும் மாமாவையும் நையப் புடைக்கிறார்கள். அன்றாட வாழ்வும் முழுவாழ்வும், தெருக்கள், கடைவீதிகள், அலுவலகங்கள், வீதிகள் தழுவி பிரெஞ்சுக்காரர்களுக்கும் அல்ஜீரிய மக்களின் விடுதலை வேட்கைக்கும் இடையில் இருக்கும் பதட்டம் படத்தின் காட்சிகளாகிறது. பிரெஞ்சுக்காரர்களுக்கான விடுதியொன்றில் குடித்துவிட்டுத் திட்டமிட்ட வகையில் வெடிகுண்டுப் பொதியை எடுத்துக் கொண்டு போய், அல்ஜீரிய மக்கள் குடியிருப்புக்குள் மத்தியில் வைத்து விட்டுப் போகிறார்கள் பிரெஞ்சுக் குடியேற்றவாதிகள், காலனியாதிக்கவாதிகள். அல்ஜீரிய மக்களின் குடியிருப்புகள் வெடித்துச் சிதறுகிறது.

மழை பெய்து சுவர் கரைந்த கறைநிலைத்த சுவர்கள். செத்துக் கொண்டிருக்கும் முதியவர். பிஞ்சுக் குழந்தையின் உடல். எங்கும் சாவின் ஓலம் கோபம் கொந்தளிக்கிறது. கூட்டம் ஆர்ப்பரித்து எழுகிறது. நீதி வேண்டி ஊர்வலமாக அணிதிரள்கிறது. அலி தலைமையேற்று நடத்திச் செல்கிறான். ஓடிவரும் சிறுவன் தலைமைக்குழு ஊர்வலத்தை நிறுத்தச் சொல்வதாகச் சொல்கிறான். இப்படிப் போனால் முழு மக்கள் கூட்டமும் கொல்லப்படும் என்கிறான். இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஜப்பாரின் தலைமையில் அங்கு வரும் தலைமைக்குழு பழிவாங்கும் பொறுப்பை தாம் ஏற்கிறோம் என்கிறது. கூட்டம் கலைகிறது. திட்டம் தீட்டப்படுகிறது. அல்ஜீரியப் பெண்களின் நீண்ட கறுத்த தலைமுடி வெட்டப்படுகிறது. பர்தாக்கள் வீசப்படுகிறது. அவர்களது கறுத்த முடிக்கு வெள்ளைச் சாயமேற்றப்படுகிறது. பிரெஞ்சுப் பெண்களாக அவர்கள் வடிவமெடுக்கிறார்கள். மூன்று இடங்களில் வெடிகுண்டு வைக்கவேண்டும். பால் விற்பனை நிலையம். நடனவிடுதி. அல்ஜியர்ஸ் விமான நிலையம். இராணுவம் பெண்களை சோதனை போடுவதில்லை. பிரெஞ்சுப் பெண்களாயிருந்தால் கொஞ்ச நஞ்ச சந்தேகம் கூட இல்லை. பிரெஞ்சுக் கபே, நடனமண்டபம், விமான நிலையம்  போன்றவற்றில் குண்டு வைக்க வேண்டும் என்பது முழுமையான திட்டம். பெண்களின் பிளாஸ்டிக் கைப்பைகளில் நேரத்திற்கு வெடிக்கும் குண்டுகள் கொண்டு போகப்பட்டு, பயணிகள், நடனக்காரர்கள், குழந்தைகள், முதியவர்கள், காதலர்கள், உணவருந்துபவர்களின் கால்களுக்கிடையில் வெடிகுண்டுப் பொதிகள் புதைக்கப்படுகிறது.

இந்தக் காட்சிகள் ஒரு தேர்ந்த கலைஞனின் மேதைமையில் உருவான காட்சிகள். சுயமரியாதையும் விடுதலை வேட்கையும் கொண்ட மனிதர்களின் ஆத்ம உத்வேகத்தை வெஞ்சினத்தை, மானுடத்தை ஜீவனுடன் மறுபடைப்பு செய்திருக்கிறது இக்காட்சிகள். இதுமட்டுமே தான் வாழ்வின் உண்மையா? இல்லை. நிச்சயமாக இல்லை. வெடிகுண்டு வைத்துப்போகும் இடங்களில் இருக்கிற மனிதர்களின் முகங்களில் இருக்கின்ற சந்தோசத்தை, ஐஸ்கிரீம் சாப்பிடும் குழந்தைகளின் கடைவாய் எச்சிலை, நடனமாடும் காதலர்களின் அணைப்பை, சாவின் பயமற்று சுவடுகளே தெரியாமல் தம் தமது உணர்வுகளில் மூழ்கியிருக்கும் மனிதர்களை, அவர்கள் பிரெஞ்சுக்காரர்களே ஆயினும், மிக மிக மெதுவாக காமெரா பதிவு செய்கிறது. அடக்கு முறைக்கு எதிரான மனிதனின் எதிர்ப்புணர்வை பதிவு செய்யும் கலைஞன், அதனோடேயிருந்த வரலாற்றின் துக்கத்தையும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறான். வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறுகிறது. குழந்தைகள் முதியவர்கள் பெண்கள் உள்பட மனித உடல்கள் சிதறுகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் நடுங்குகிறது. மக்கள் எழுச்சியை அடக்க விடுதலை அமைப்பை வேரோடு அழித்தொழிக்க இந்தோசீனாவில் ஒடுக்குமுறை அனுபவம் பெற்ற மாத்யூஸ் வருகிறார். மாத்யூஸின் பாத்திரம் மிக உறுதியான செதுக்கியெடுக்கப்பட்ட ஒரு பாத்திரம். அவருக்கு தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு என்ன என்று தெரிகிறது. அரசியல் அவருக்கு இரண்டாம் பட்சம். இராணுவத்தின் நோக்கம் வெற்றிதான் என்கிறார். முடிவுகளை நிதானமாக திட்டமிட்டு எடுக்கிறார். பிரெஞ்சுக் காலனியாதிக்கம் தேவையா இல்லையா என்ற கேள்விகளுக்கு அவர் போவதில்லை. பிரெஞ்சு காலனியாதிக்கம் நிலைபெற வேண்டியதைப் பாதுகாப்பதே தன் வேலை என்று அவர் தெளிவாக உணர்ந்திருக்கிறார்.

கொரில்லா அமைப்பின் செயல் முறை பற்றிய திட்ட வட்டமான அபிப்பிராயம் அவருக்கு இருக்கிறது. கொரில்லா அமைப்பை முறியடிப்பது இராணுவரீதியில் இயலாது என்கிறார். வெடிகுண்டு வைப்பு தந்திரோபாயத்திலிருந்து அரசியல் ரீதியான மக்கள் இயக்கங்களைப் பற்றிச் சிந்திக்கிறது விடுதலை இயக்கம். அல்ஜீரியா தழுவிய ஏழு நாட்கள் முழு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அந்த நாட்களில் எந்தவிதமான ஆயுத நடவடிக்கைகளிலும் போராளிகள் ஈடுபடக் கூடாது என்பது இயக்கத்தின் அறிவுறுத்தல். அல்ஜீரிய மக்களின் விடுதலைப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்குச் செல்ல வேண்டும் என்பதுவே அவர்களது நோக்கம். ஏழுநாள் தொடர்ந்து வேலை நிறுத்தம். அல்ஜீரியா ஸ்தம்பிக்கிறது. மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். வாகனங்கள் ஓடாது நிற்க தெருக்கள் வெறிச்சோடிக் கிடக்கிறது.

மாத்யூஸின் இராணுவம் வீடுகளை உடைத்துக்கொண்டு குடியிருப்புகளுக்குள் நுழைகிறது. ஒன்றிரண்டு அடிமட்டத் தொண்டர்கள் பிடிபடுகிறார்கள். சித்திரவதை மூலம் பெறப்பட்ட அவர்களிடமிருந்தான தகவலின் அடிப்படையில் அடுத்த மட்டத் தோழர்கள் பிடிபடுகிறார்கள். கால்கள் உடைக்கப்படுகிறது. கட்டப்பட்டுத் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட அடிக்கப்படுகிறார்கள். காது நரம்பில் எலக்ட்ரிக் ஷாக் வைக்கப்படுகிறது. தண்ணீர் நிரம்பிய வாளியில் மூச்சுமுட்டப் போராளிகளின் முகம் புதைக்கப்படுகிறது. பிரெஞ்சு இராணுவத்தினர் நிதானமாகப் புகைத்துக் கொண்டு, நியமமாகச் சித்திரவதைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களைப் பொறுத்து அது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சட்டபூர்வமான தொழில் நடத்தை. சித்திரவதைக் கூடத்தில் ஓலம் நிறைகிறது. சுவரோடு சேர்த்து தோழர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இக்காட்சிகள் அருகாமைக் காட்சிகளாக மிகத் தெளிவாக விரிவாக சித்தரிக்கப்படுகிறது.

சித்திரவதைகளைத் தொடர்ந்து தோழர்களின் மறைவிடம் கண்டுபிடிக்கப்படுகிறது. சிறையில் மாத்யூஸின் அலுவலகச் சுவற்றில் ஒரு வரைவு இருக்கிறது. விடுதலை இயக்கத்தின் முக்கோணவடிவ ஸ்தபான வடிவத்தின் படம் அது. 1-2-3 எண்கள் தலைமையைச் சார்ந்தவர்கள். 2-3 எண்ணுள்ள நபர்களுக்கு ஒன்று எண் மட்டுமே தெரியும். 2-3 இருவர்க்கிடையிலும் தொடர்பிருக்காது. அதைப் போலவே கீழ்மட்டத்தவர்களுக்குள்ளும் தமக்குள் தொடர்புகள் இருக்காது. மேல் மட்டத்தவரில் சிலரைப் பிடித்து சித்திரவதை செய்வதன் மூலம், அந்தத் தகவல்களின் அடிப்படையில், அடுத்தடுத்த கட்டத்திலுள்ள ஒவ்வொருவராகப் பிடித்து, இறுதியில் முழு விடுதலை அமைப்பினரையும் பிடித்து அழிக்கலாம். தலைமைக் குழுவில் நான்கு பேரில் ஒருவரான மெஹ்தி பிடிபடுகிறார்.

பிரெஞ்சப் பத்திரிக்கையாளர் ஒருவர்; மெஹ்தியிடம் கேட்கிறது :‘நீங்கள் பெண்களின் கைப்பைகளில் கொண்டு சென்று, வெடிகுண்டுகள் வைக்கும் பயங்கரவாதச் செயல் மூலம் அப்பாவி மக்களைக் கொள்கிறீர்களே, இது எந்த வகையில் விடுதலைக்கு உதவக்கூடியது?’ மெஹ்தி சொல்கிறார் : ‘இப்படிச் செய்வதனை விடவும் விமானம் மூலம் நப்பாம் குண்டுகளை வீசி மக்களை அழிப்பது சுலபம்தான். நப்பாம் குண்டுகளை எங்களுக்குத் தாருங்கள். கைப்பைகளை உங்களுக்குத் தருகிறோம். அப்போது தெரியும் யார் பயங்கரவாதிகளென்று?’. மெஹ்தி சிறையில் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்படுகிறது. தனது சட்டையைக் கிழிந்து முறுக்கி அதன் மூலம் அவர் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்படுகிறது. மாத்யூஸ், ‘விசாரணையில் சித்திரவதை என்பதுதான் எமது நியாயம்’ என்று பத்திரிக்கையாளர்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அதனோடு மெஹ்தியின் கௌரவமான மரணத்திற்கும் அவர் மரியாதை செய்கிறார்.

படத்தின் இறுதிக் காட்சிக்கு வருகிறோம். படத்தின் ஆரம்பத்தில் சித்திரவதைக்கு உள்ளான பெரியவரால் அழைத்துவரப்படும் இராணுவம் மிஞ்சியிருக்கும் தோழர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறது. சரணடையும்படி வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அலியும் சிறுவனும், பெண் தோழர்கள் சிலரும் மறைந்து கொண்டிருக்கும் அறை பிரெஞ்சு இராணுவத்தினரால் சூழப்படுகிறது. சரணடைய கால அவகாசம் தரப்படுகிறது. போராளிகள் எவரும் சரணடைய விரும்பவில்லை. கொடுக்கப்பட்ட நேரத்தில் அந்தக் கட்டிடம் வெடித்துச் சிதறுகிறது. வானம் அண்டைக் குடியிருப்புகளில் வாழும் மக்களின் கூக்குரலில் நிறைகிறது. முன்னொரு போதில் இதே மாதிரியிலான சந்தரப்பத்தில,; மற்றொரு மத்தியக் குழுத் தோழரான ஜப்பார், எம்மாதிரியான செய்தியும் வெளியே சொல்லப்படாமல் வெடித்துச் சிதறும் சாவு அர்த்தமற்றது எனக் கைது செய்யப்படுகிறார். மாத்யூஸின் திட்டப்படி விடுதலை அமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்கள் கொல்லப்படுகிறார்கள். அல்லது கைது செய்யப்படுகிறார்கள். பாரீஸிலிருந்து வந்த மேலதிகாரி விடைபெறுகிறார். மாத்யூஸ் பின்பொருநாள் தான் பாரீஸில் அவரைச் சந்திப்பதாகச் சொல்கிறார்.

படத்தின் இடையில் மாத்யூஸ், அல்ஜீரியா மக்களின் போராட்டம் பற்றியும் இங்கு நிகழும் கொலைகள் பற்றியும் பாரிஸில் ஏதேனும் எதிர்வினை உண்டா? என பத்திரிக்கையாளர்களை நோக்கிக் கேட்கிறார். ‘வழக்கம்போல சார்த்தர் கட்டுரை எழுதியிருக்கிறார் என்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள். ஏன் சாரத்தர்கள் எப்போதும் நமக்கு எதிர்ப் பக்கத்திலேயெ இருக்கிறார்கள்?’ எனக் கேட்கும் மாத்யூஸ் தொடர்ந்து ‘எதிரியை விடக் கொஞ்சம் குறைவாக நான் சார்த்தரை  வெறுக்கிறேன்’ என்கிறார்.

அல்ஜீரியா விடுதலைப் போராட்டத்துக்காக ஸார்த்தர் மட்டுமல்ல பெனான் மட்டுமல்ல, முழு அல்ஜீரிய மக்களும் கடல் அலை போல் மறுபடி திரண்டெழுந்தார்கள். அழிந்து விட்டதாக நினைத்த அல்ஜீரிய விடுதலை இயக்கம் மறுபடி உயிர் கொண்டெழுந்தது. இரண்டு வருடங்கள் தொடர்ந்து மக்கள் எழுச்சிகள் அலையடித்தன. விடுதலை வேட்கை வெல்ல முடியாதது என்பதை வரலாறு உணர்த்தியது. விடுதலைப் பதாகை எங்கும் வீசியடித்தது. காற்றில் விசிறி விசிறி நடனமாடியபடி எக்காள முழக்கமிட்டபடி ஆடிவந்தாள் ஒரு இளம் பெண். 1966 ஜூலை அலஜீரியா விடுதலை பெற்றது. பொன்டே கார்வோ சினிமாத்திரையில் ஒரு போராட்ட காவியத்தை உயிர் பெற்றெழச் செய்தான்.

III

‘நான் இசை கற்றுக் கொள்ள முயன்றேன். எனக்கு குறிப்பிட்ட அக்காலத்தில் அந்த வசதி வாய்க்காமல் போனதால் அது என்னால் முடியவில்லை. எனக்கு இன்று அதே மாதிரியான ஒரு தேர்வு இருக்குமானால் படத்தை இயக்குவதைனை விடவும் ஒரு இசைக் குழ நடத்துனராக இருக்கவே நான் விரும்புவேன்’ எனப் பின்னாளில் தெரிவித்தார் பொன்டே கார்வோ. ‘எந்த திரைப்படத்தினையும் அதனது காட்சிப் பிம்பத்தினைக் கருக்கொள்வதற்கு முன்னால், இசைப் பிம்பத்தினை கருக்கொள்வதும், அது எனக்குத் திருப்தியளித்தால் மட்டுமே பிற்பாடு அந்தப் படம் செய்ய முடிவு செய்வதும் எனது வழமை’ என்பார் பொன்டே கார்வோ.

அவருடைய ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ திரைப்படத்தினதும், ‘கெய்மாடா’ படத்தினதும் இசைக் கோர்வைகள் இப்போது ஒலித்தட்டுக்களாகவே கிடைக்கிறது. தேடிப் பார்க்க, தனித்தனிக் காட்சிகளுக்கான-சம்பவங்களுக்கான- திரைப்படத்திக் குணச்சித்திரங்களுக்கான தேர்ந்தெடுத்த இசைக்கோர்வைகள் விற்பனைக்குக் கிடைக்கவும் செய்கின்றன. ‘பேட்டில் ஆப் அல்ஜயர்சின்’ இசைவடிவம் அசலாக மேற்கத்திய சிம்பொனி அல்லது உணர்ச்சியின் உச்சம் நோக்கிச் செல்லும் இசைக் கருவிகளின் கூட்டிசை வடிவம்தான். ஓரு சிம்பனி நிகழ்வை மேடையில் பார்க்கிறபோது அதில் ஒவ்வொன்றாய் இணைந்து கொள்ளும் இசைக்கருவிகளும், அதனை வாசிக்கும் மனிதர்களும் ஒன்றியையும் போது, பூமி மெதுமெதுவாகப் பிளந்து ஒரு நிரூற்று வான் முட்ட எழுந்து, வட்டச் சுழல் போல் மறுபடியும் மேலேறி, ஓசை அமுங்கி மெல்ல மெல்ல நிலத்தில் விழும் உணர்வை நாம் அடையமுடியும்.

பொன்டே கார்வோ மூன்று விதமான இசை மாதிரிகளை ‘பேட்டில் ஆப் அல்ஜியர்சில்’ இணைத்திருக்கிறார். இஸ்லாமியப் பெண்கள் தமது கூட்டுக்குரலாக தமது நாவை மடித்து உள்ளும் வெளியுலுமான வேகமாக எழுப்பும் ‘உல்லாலுலா’ எனும் குலவை அவர்களது எதிர்ப்புணர்வின் வடிவமாகவும், பிறிதொரு புறம் கொண்டாட்டத்தின் வடிவமாகவும் பாவிக்கப்படுகிறது. தமது தனையர்களும் கணவர்களும் சிறைபிடிக்கப்பட்ட பின்னால், அவர்களை எதிர்பார்த்து இராணுவத் தலைமையகத்தின் முன் காத்திருக்கும் பெண்கள், ஒலிபெருக்கியைக் கைப்பற்றும் சிறுவனொருவனின் விடுதலை முழக்கத்தைத் தொடர்ந்து எழுப்பும் ஓலமும், படத்தின் இறுதியில் அல்ஜீரிய விடுதலையின் பின்பு, தமது தேசத்தின் கொடிகளை அசைத்தவாறு காவல்துறையினர் முன் வட்டவடிவமாகி பெண்கள் முன்னும் பின்னும் ஆடிவரும் கொண்டாட்டத்துடன் குதூகலிக்கும் குலவையும் இதற்கான சாட்சிகள்.

பிறிதொரு இசைக் கோர்வை அல்ஜீரியாவின் தெருப்பிச்சைக்காரர்கள் பாடும் ‘பாபா ஸலாம்’ பாடலின் இசையை அடியொற்றியது. கம்பி வாத்தியமும், இருபுறமும் மரக்கோல்களால் அடிக்கப்படும் முரசும், கஞ்சிரா போன்றதொரு கருவியும் இணைந்த கூட்டிசை வடிவம் அது. பிரெஞ்சுக்காரர்கள் அல்ஜியர்ஸ் குடியிருப்பில் குண்டு வைத்து வெகுமக்களைப் படுகொலை செய்ததற்கு பழிவாங்கும் முகமாகத் திட்டமிடும் விடுதலை இயக்கம், அல்ஜீரியப் பெண்களின் கூந்தலை வெட்டியெறிந்து அவர்களைப் பிரெஞ்சுப் பெண்கள்போல மாற்றி, நகரின் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வைக்கவென அவர்களை அனுப்புகிறது. பெண்கள் இந்தக் கடமைக்கென தயாரிக்கப்படும் காட்சியிலும், படத்தின் இறுதியில் அல்ஜீரிய மக்கள் வெற்றிபெற்ற கொண்டாட்டக் காட்சியிலும் இந்தத் தீனமான ‘பாபா ஸலாம்’ இசைக் கோர்வை ஒலிக்கிறது.

படம் சொல்லும் செய்தியொன்றில் பிறிதொருவிதமான ஒத்திசை ஒலிக்கிறது. பிரெஞ்சுக்காரர்கள் அல்ஜீரிய மக்களை குண்டு வைத்துக் கொல்கிறார்கள். விடுதலை இயக்கத்தினர் பிரெஞ்சு வெகுமக்களைக் குண்டுவைத்துக் கொல்கிறார்கள். இரண்டு இடங்களிலும் குண்டுவெடிப்பின் முன்பாக வேறுபட்ட மனிதர்களின் கள்ளமற்ற முகங்கள் தெரிகின்றன. குண்டுவெடிப்பின் பின் மரணித்த உடல்கள் தெரிகின்றன. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பிணங்கள். இந்தக் காட்சிகள் இரண்டிலும் ‘மரணத்திற்கு இரங்கும் மதமரபு இசை’ பாவிக்கப்படுகிறது. இசை இங்கு ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்கிறது. துயர் எல்லா மக்களுக்கும் ஒரே விதமானதுதான். மரணம் எழுப்பும் அவலமும், ஒடுக்குமறையாளன் ஒடுக்கப்பட்டவன் என இருவருக்கும், ஒரே விதமானதுதான்.

பொன்டே கார்வோவின் காலனியாதிக்கம் தொடர்பான ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ மற்றும் ‘கெய்மாடா’ என இரண்டு படங்களிலும் பாத்திரப்படைப்பு என்பது இரு விதமாக இருக்கிறது. தனிமனிதர்கள் எவ்வாறாக ஒரு குணச்சித்திரமாக இருக்கிறார்களோ அதே அளவில் ஒடுக்கப்பட்ட-கோபப்படும்-எழுச்சியுரும் மக்களுக்கும் ஒன்றிணைந்த ஒரு குணச்சித்திரத்தை பொன்டே கார்வோ வழங்குகிறார். வெகுமக்களின் கிளர்ச்சிக் காட்சிகள், கொண்டாட்டங்கள், பேரணிகள், நடனங்கள் போன்றவற்றில் நாம் எங்கெங்கிலும் அசைந்து கொண்டிருக்கும் தனிமனிதர்களைக் கண்டாலும் கூட, அவர்களது குறிப்பான செய்கைகளைக் கண்டாலும் கூட, நாம் மக்கள் கூட்டத்தின் ஒத்திசைவில் மனத்தை இழந்துவிடுகிறோம். ‘கெய்மாடா’வில் போர்த்துக்கீசியக் கோட்டை நோக்கி முகங்களில் தீட்டப்பட்ட வண்ணங்களுடன், வனவிலங்குகளின் ஒப்பனைகளுடன் ஆடிவரும் அந்த மக்கள் நகரும் போது எழும் இசைக் கோர்வை, ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படத்தின் பல்வேறு காட்சிகளில் மக்கள் திரளின் போது எழும் இசைக் கோர்வைகள் என வெகுமக்களின் நேர்மையும் பெருமிதத்தையும் கொண்டாட்ட உணர்வுடன் நமக்குமுன் தனித்த குணச்சித்திரமாக அதற்கான இசைக் கோர்வைகளுடன் படைத்தளிக்கிறார் பொன்டே கார்வோ.

குறிப்பாக ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸின்’ முக்கிய கதாபாத்திரமான அலியின் பாத்திரப் படைப்புக்கெனவே தனி இசைக்கோர்வை இருக்கிறது. இவை இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் என்பது கலைஞனெனும் அளவில் பொன்டே கார்வோவின் பார்வையில் இரு வேறு பரிமாணங்கள் கொண்டதாகிறது.

‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ இசைக் கோர்வையில் மிகவும் உருக்கமான ஒரு இசைக்கோர்வை அல்ஜீரிய விடுதலை இயக்கப் போராளிகளும் வெகுமக்களும் சித்திரவதை செய்யப்படும் காட்சிகளில் இருக்கிறது. எந்தவிதமான சப்தங்களோ, குறைந்தபட்சம் ஒரு சொல்லோ கூட இடம்பெறாத காட்சிகள் அவைகள். தொழில் சிரத்தையுடன் எந்தவிதமான குற்றவுணர்வும் அற்று, புகைபடித்தபடி தமது சக இராணுவத்தினர் பார்த்திருக்கப் பிறர் சித்திவதையில் ஈடுபடுகிறார்கள். காதுகளில் மின் அதிர்ச்சி, கால்களுக்கிடையில் சொறுகப்பட்ட கட்டைகள், தண்ணீர் வாளியில் மூச்சுமுட்ட முக்குளிக்கப்படும் போராளிகளின்  முகங்கள், சுழலும் கூர் ஆயுதங்களின் உடலின் மீதான கீறல் என சித்தரவதைக் காட்சிகள் முகாரி இராகத்தின் பின்னணியில் நிகழ்கிறது. இதற்கெனவே தனியான இசைக்கோர்வை படம்முழுக்கப் பாவிக்கப்படுகிறது.

பொன்டே கார்வோவின் பரந்த ‘நீலப்பாதை’ மற்றும் ‘கப்போ’ எனும் இரண்டு ஆரம்பப் படங்கள் தவிர பிற மூன்று படங்களதும் இசை அமைப்பாளராகச் செயலாற்றியவர் இத்தாலிய பின்னணி இசை மேதையான என்னியோ மோரிக்கோன். பொன்டே கார்வோவின் ரசிகர்களில் ஒருவர் பாலஸ்தீன அறிஞர் எட்வர்ட்ஸைத். இசை கார்வோவின் படங்களில் பெறும் அழுத்தம் தொடர்பாக எட்வர்ட் சைத் பேசுகிறார். ஒரு சம்பவத்தை ஸைத் குறிப்பிடுகிறார். கெய்மாடா படப்பிடிப்பில் நடைபெற்ற ஒரு காட்சி :‘மார்லன் பிராண்டோவுக்கு ஐந்து பக்க வசனம் உள்ள காட்சி இது. கார்வோ முற்றிலும் வசனங்களை விலக்கிவிட்டு, வசன நிமிடங்கள் முழுக்கவும் இசையைப் பிரதியாக வைத்து பிராண்டோவின் மௌன இயக்கத்தின் மூலம் அக்காட்சியைப் படமாக்கினார் பொன்டே கார்வோ. அந்தப் படப்பிடிப்புத் தளத்திலிருந்த எலக்ட்ரீஷியன்கள், தச்சுத் தொழிலாளர்கள் வரை அக்காட்சியைக் கண்டு உற்சாகத்தில் வெடித்தார்கள்’ என்கிறார் சைத்.

பொன்டே கார்வோவின் படங்களுக்கான இசை எப்போதுமே அவர்தான். பாக், ஸ்டராவின்ஸ்க்கி, பிராம் போன்றோரின் இசையில் ஆழ்ந்த ஞானமுள்ளவர் பொன்டே கார்வோ.   ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படத்தின் இசைக்கான ஒப்பந்தத்தில் கார்வோதான் முதலில் கையொப்பமிட்டிருந்தார். பிற்பாடு, ‘பர் எ பியூ டாலர்ஸ் மோர்’  எனும் செர்ஜியோ லியோன் இயக்கிய படத்தைப் பார்த்த பின்னால், அந்த இசையில் ஆகர்ஷிக்கப்பட்டு என்னியோ மோரிக்கோனை ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படத்திற்கு இசையமைக்குமாறு பொன்டே கார்வோ கேட்டுக் கொண்டார். படத்தின் இசை பற்றி இருவருக்கும் எப்போதும் நீண்ட விவாதம் நடந்து கொண்டேயிருந்திருக்கிறது. இருவரது கற்பனைகளும் ஒரு புள்ளியில் இணைகிற நட்பை இவர்கள் கொண்டிருந்ததை பிற்பாடு மோரிக்கோன் நினைவு கூறுகிறார்.

‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸின்’ இசை வடிவமைப்பில் இருவருக்குமே நீண்டகாலம் திருப்தியிருக்கவில்லை. நீண்ட விவாதத்தின் பின் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அதிகாலையில் இசை வடிவத்தைக் கண்டடைந்த பொன்டே கார்வோ, அதனை தனது டேப்ரெகார்டரில் பதிவு செய்து தனது இசைக் குறிப்புக்களை எடுத்துக் கொண்டு என்னியோ மோரிக்கோனை சந்தித்து அதனைக் கேட்கச் சொல்கிறார். அதற்கு என்னியோ மோரிக்கோன் அன்றிரவு தான் கண்டடைந்ததைக் கேட்குமாறு பொன்டே கார்வோவிடம் சொல்லியிருக்கிறார். மோரிக்கொன் தனது இசையாக வாசித்தவை முழுக்க முழுக்க பொன்டகார்வோ கண்டடைந்த இசையாக இருந்திருக்கிறது. ‘இது எனது இசைக்கரு’ என்கிறார் பொன்டே காரவோ. ‘இருவரும் ஒரே அலைவரிசையில் சிந்தித்ததனால் இது சாத்தியமாகியிருக்கலாம்’ என்கிறார் மொரிக்கோன். ‘இல்லை, ‘இது அலைவரிசை இல்லை. அச்ச அசலாக ஒரே இசைக்குறியீடுகள்’ என்கிறார் பொன்டே கார்வோ. ‘மிக நீண்ட காலங்கள் ஒரே விஷயத்தைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் இம்மாதிரி ஒரே தரிசனத்தை அடைவது சாத்தியம்தான்’ என்கிறார் என்னியோ மோரிக்கோன். பொன்டே கார்வோவினதும் என்னியோ மோரிக்கானினதும் துணைவியர் இருவரும் இந்த நிகழ்வுக்குச் சாட்சியமாக அங்கு இருந்திருக்கிறார்கள். ‘இசையின் இயங்கியல்’ என்றும் இதனைச் சொல்ல முடியும்.

எட்வார்ட் சைத் சொல்கிறபடி கார்வோவின் அரசியல் என்பது இசை-இலக்கியம்-சினிமா-கருத்துகள்-கற்பனைகள் எல்லாம் உள்ளிட்டதுதான். சைத்தின் கருத்துக்களை படத்தைப் பார்ப்பவர்கள் அனுபவிக்க முடியும். மூன்று இசை மாதிரிகளை என்னால் உணர முடிந்தது. முஸ்லீம் பெண்களின் கூட்டு ஓலம். பறை முழக்கம் போன்றதொரு எக்காளம். அணி நடைப் பாட்டின் லயம். துயரத்தில், சாவில், இரங்கலில் எதிர்ப்புணர்வைக் காண்பிப்பதாகத் தொடங்கும் முஸ்லீம் பெண்களின் கூட்டு ஓலம், ஆண்களின் கலக உணர்வு சேரும் போது பறையொலியாக வீறு கொண்டெழுந்து, இராணுவ அணி நடைலயத்துக்கு எதிர்த்திசையில் எழுகிறது. படத்தின் காட்சிகளின் மீது இசை படிந்து விடுகிறது. இசையே உணர்ச்சிகளைத் தருகிறது. இசையும் மனித நடவடிக்கையும் ஒன்றாக இணைகிறது. வசனங்கள் இங்கு மிக மிகக் குறைவு. இசை கார்வோவுக்கு அனைத்துக் கலைக்கூறுகளையும் கொண்டிருக்கிறது. படத்தின் முழுமைக்குள் அரசியல், கருத்து, இசை, ஒளி எல்லாமுமே கரைந்து விடுகிறது. அரசியல் பற்றியும் முழுவாழ்வு பற்றியும் புரிதலுள்ள கலைஞனே இத்தகையதொரு நிலையை சினிமாவில் சாதிக்க முடியும்.

IV

‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படம் வெளியாகி 28 ஆண்டுகளின் பின் பொன்டே கார்வோ 1992 ஆம் மறுபடியும் அல்ஜீரியாவுக்குத் திரும்புகிறார். அல்ஜீரிய விடுதலை குறித்து ஒரு நேர்மையான திரைப்படத்தினைக் கொடுத்த அந்தத் திரைக் கலைஞன், தான் ஆதரித்து நின்ற அந்தப் புரட்சியின் பெறுபேறுகள் எத்தகையது, அதனது சாதனைகள் என்ன, அதனது இலட்சியங்கள் எய்தப்பட்டிருக்கிறதா என்பதனைக் கண்டறிவதற்காக மறுமுறையும் அங்கு வருகிறார். இதனை ‘அல்ஜியர்ஸூக்குத் திரும்புதல்’ எனும் தனது ஆவணப்படத்தில் அவர் பதிவு செய்கிறார். ‘அல்ஜீரியாவில் இப்போது ஒற்றைக் காட்சி ஆட்சியிலிருக்கிறது. அரசியல் கைதிகள் சிறையில் அடைபட்டிருக்கிறார்கள். வேலையின்மையும், வீட்டுப் பிரச்சினையும் குவிந்திருக்கிறது, ஏழ்மை அதிகரித்திருக்கிறது. காவல்துறை ஒடுக்குமுறை அதிகரித்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகள் வீறுபெற்றிருக்கிறார்கள். இஸ்லாமியவாதிகளால் பெண்கள் பொதுவாழ்விலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். மதச்சார்பற்ற, ஒற்றைக் கட்சியாட்சி கல்வியில் சாதனைகள் படைத்திருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைப் போற்றுகிறது. அவர்கள் தமது வரலாற்று அனுபவங்களிலிருந்து மேற்கத்தியர்களை வெறுக்கிறார்கள். விட்டு வைக்கப்பட்டிருக்கும் தேர்வு காலரா நோய்க்கும் பிளேக் நோய்க்கும் இடையிலானது போன்றது’ என்கிறார் பொன்டே கார்வோ. ஆளுகிற புரட்சி அரசுக்கும் இஸ்லாமியவாதிகளுக்கும் இடையில் மக்கள் முன்பாக உள்ள தேர்வையே பொன்டே கார்வோ இந்தச் சொற்களால் குறிப்பிடுகிறார்.

பொன்டோ கார்வோவின் பயணத்தின் பின்பு, பத்தொன்பது ஆண்டுகளின் பின்னும் அல்ஜீரிய நிலைமையில் மாற்றம் இல்லை. இன்று வேலையின்மை, வீட்டு வசதியின்மை, ஏழ்மை போன்றன அதகரித்திருக்கிறது. தேர்தல்களைத் தடை செய்து கடந்த இருபதாண்டுகளாக அவசரநிலையைக் கொண்டிருந்த அல்ஜீரிய அரசு, 2011 ஆம் ஆண்டு மாபெரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து இருபது ஆண்டுகளாக அமலிலிருக்கும் அவசரநிலையை அகற்றுவதாகச் சொல்லியிருக்கிறது. இடதுசாரிகளும் தொழிற்சங்கவாதிகளும் மார்க்சியர்களும் இஸ்லாமியவாதிகளும் ஜனநாயக நிறுவனங்களுக்காகவும் சமூக மற்றும் பொருளாதார நீதிகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலினிய அரசியல் ஸ்தாபன வடிவையும் பொருளாதாரத் திட்டமிடைலையும் கொண்ட அரசுகள் காலாவதியாகிவிட்டன என்பதற்கு அல்ஜீரிய அனுபவமும் ஒரு சான்றாக இருக்கிறது. பொன்டே கார்வோவின் அல்ஜீரிய மீள்பயணம் அதனையே சுட்டிக்காட்டியிருந்தது.

கோட்பாட்டு வடிவில் மார்க்சீயத் திரைப்பட அழகியலை, அவன் வாழும் சூழல்தான் ஒரு மனிதனைத் தீர்மானிக்கிறது என்பதில் துவங்கி, மனிதனது தான் விரும்பியபடி அல்ல, மாறாக அவன் வாழ நேர்ந்த சுழலின் நிலைமைகளைப் பொறுத்து சமூகத்தை மாற்றுகிறான் எனும் கார்ல் மார்க்சிலிருந்து துவங்கி, சோவியத் காலகட்டத்தின் சோசலிச யதார்த்தவாதம், இத்தாலிய நவ யதார்த்தவாதம், இலத்தீனமெரிக்காவின் வன்முறையின் அழகியல், மூன்றாவது சினிமாக் கோட்பாடு, இந்திய நிலைமைகளில் சமாந்தர சினிமா என ஒரு விரிந்து பயணத்தை நாம் மேற்கொள்ள முடியும். என்றாலும், நடைமுறையில், ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ எனும் ஒரோயொரு படத்தினை முன்வைத்தும் மார்க்சீயத் திரைப்பட அழகியல் தொடர்பாகச் சில முன்வரைவுகளுக்கு வருதலும் எம்மால் முடியும்.

‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸின்’ கதைத் தேர்வு நிலையிலிருந்து, அதனது உருவாக்கம், அதனது உருவாக்கத்தில் படைப்பாளிகள் முன்தீர்மானித்த விடயங்கள், அவர்கள் கடந்துசென்ற தடங்கல்கள், இறுதி இலக்கை அடைந்த விதம் என அனைத்தும் இப்போது ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ‘பேட்டில் ஆப் அல்ஜியர்சின்’ ஆதரமான யாசுப் சாதியின் போராட்டக் குறிப்புக்கள் நூல், பிராங்கோ சலினாஸின் முழுமையான திரைக்கதை மற்றும் வசன வடிவ நூல், என்னியோ மோரிக்கோனின் ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ இசை ஆல்பம், ஜில்லோ பொன்டே கார்வோவின் திரையாக்க அனுபவங்கள் குறித்தநேர்முகங்களின் தொகை நூல், பொன்டே கார்வோவுடனான எட்வர்ட் சைத்தின் அனுபவங்கள் குறித்த கட்டுரை, பொன்டோ கார்வோவின் வாழ்க்கை வரலாறு, இந்தியானா பதிப்பகம் வெளியிட்ட ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ படத்திற்கான கல்வித்துறை வழிகாட்டு நூல், இதனோடு அவரது திரைப்படங்களில் வெளிப்படும் காலனியாதிக்க வன்முறை முதல் பயங்கரவாதம் வரையிலான பிரச்சினைகள் குறித்த ஆய்வு என ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ எனும் ஒரு தனிப்பட்ட ஒரு திரைப்படம் குறித்து எழுதப்பட்டிருக்கிற நூல்கள் இன்று குவிந்து கிடக்கிறது.

அமெரிக்காவிலிருந்து ‘கிரிட்டேரியன்’ நிறுவனமும், இங்கிலாந்தின் ‘அர்ஜன்டோ’ நிறுவனமும் வெளியிட்ட ‘பேட்டில் ஆப் அல்ஜீரியா’ சிறப்பு ஒளித்தட்டுத் தொகுப்புக்களும் இப்பொழுது கிடைக்கின்றன. 2006 ஆம் ஆண்டு பொன்டே கார்வோ முன்பாக,  2004 ஆம் ஆண்டில் வெளியான கிரிட்டேரியன் தொகுப்பில், 2003 ஆம் ஆண்டில் அவரிடம் எடுக்கப்பட்ட நேர்முகம்  இருக்கிறது. அது போலவே, 2008 ஆம் ஆண்டு யாசப் சாதியுடன் எடுக்கப்பட்ட நேர்முகம் ‘அர்ஜன்டோ’ தொகுப்பில் இருக்கிறது. இந்த ஆவணப்படங்களில் கதைத் தேர்வும் முடிவும் குறித்த விவரங்களை இருவரும் பதிகிறார்கள். பிரான்ஸ் பெனானது எழுத்தினாலும், அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தினாலும் பாதிப்புற்ற பொன்டே கார்வோவும் சலினாசும் முதலில் ஒரு பிரெஞ்சு பாராசூட் படைவீரனின் பார்வையிலும் அல்லது ஒரு புகைப்படக் கலைஞனின் பார்வையிலும் – பொன்டே கார்வோ பத்திரிக்கையாளராக இருந்த காலத்தில், செய்திகளை விடவும் அது குறித்த புகைப்படங்களில் ஆர்வம் கொண்டவராகத் தன்னைப் பதிவு செய்கிறார் – இந்தப் போராட்டத்தைச் சொல்லுவதாகத் திரைக்கதையை அமைத்திருந்தனர். முதன்மைக் கதாபாத்திரமாக ஹாலிவுட் நடிகர் பால் நியூமனையும் சலினாஸ் மனதில் கருதியிருந்தார். சமகாலத்தில்தான் தனது நினைவுக் குறிப்புகளை எடுத்துக் கொண்டு, அதனைத் திரைப்படமாக்க வேண்டும் எனும் யாசப் சாதி இத்தாலி வருகிறார். பால்நியூமன் என்ற வெள்ளையருக்கும் ஆப்ரிக்க விடுதலைப் போராட்டமான அல்ஜீரிய விடுதலைக்கும் என்ன சம்பந்தம் எனும் முக்கியமான கேள்வியை யாசப் கேட்கிறார். நினைவுக் குறிப்புக்களைப் படித்துப் பார்த்துவிட்டு ‘இதனை வைத்துக் கொண்டு திரைப்படமெல்லாம் செய்ய முடியாது’ எனச் சொல்லிவிடுகிறார் பொன்டே கார்வோ. மூவருக்கும் இடையிலான நீண்ட விவாதத்தின் பின்பு, ‘உண்மைக்கு விசுவாசமாக இருப்பது’ எனும் நோக்கில் சலினாஸ் தனது பழைய திட்டத்தைத் தூக்கிப்போட்டுவிட்டு புதிதாகத் திரைக்கதையை எழுதுகிறார். ஐரோப்பியப் பட முதலாளிகள் அரபுக்காரர்கள் குறித்த திரைப்படத்துக்குத் தாங்கள் நிதியளிக்க முடியாது என மறுத்துவிடுகிறார்கள். பொன்டே கார்வோவும் சலினாசும் தமது சொந்தப் பட நிறுவனத்தைத் துவங்குகிறார்கள். அன்றைய மதிப்பில் படத்தின் பட்ஜெட் 800,000 டாலர்கள். புரட்சிகர அல்ஜீரிய அரசு அவர்களது பட ஆக்கத்துக்கு தன்னால் இயன்ற அளவில் உதவுகிறது. படம் வெளியாகி இத்தாலியிலும் உலகெங்கிலும் மகத்தான வெற்றி பெறுகிறது. சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ பரிந்துரை பெறுகிறது. இதனைப் பார்த்து மார்லன் பிராண்டோ நடிக்க ‘கெய்மாடா’ படத்தினைத் தயாரிக்க ‘யுனைடெட் ஸ்டூடியோ’ கார்வோவை அழைக்கிறது. படம் மெய்மைக்கு நேர்மையாக இருக்க வேண்டுமானால் ‘எவரின் பார்வையில் அத்திரைப்படம் சொல்லப்பட வேண்டும் எனும் முக்கியமான கேள்வியை’ திரைக்கதையின் உருவாக்கக் கட்டத்தில் படைப்பாளிகள் தீர்த்துக் கொள்கிறார்கள்.

இரண்டாவது பிரச்சினை, இந்தத் திரைப்படத்தினைச் சொல்வதற்கான வடிவம் என்ன? வரலாற்று ரீதியான, நிறையத் தொலைக்காட்சிப் பிம்பங்களால், புகைப்பட பிம்பங்களால் ஆவணப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வுகளைச் சொல்வதற்கான வடிவம் என்ன? இது உணர்ச்சிகரமான கதையால் அமைந்த படமா அல்லது ஆவணப்படத்தன்மை கொண்ட படமா? இதனைத் தீர்மானிப்பதற்கு முன்னால் அல்ஜீரியாவுக்கப் பயணம் செய்யும் பொன்டே கோர்வோவும், சலினாசும் யாசப்பின் உதவியுடன், வரலாறு நிகழ்ந்த இடங்களுக்குச் செல்கிறார்கள், புரட்சியில் பங்கு பற்றிய புரட்சியாளர்களையும் வெகுமக்களையும் சந்திக்கிறார்கள். நிறைய பத்திரிக்கை நறுக்குகளையும் பிரெஞ்சு இராணுவத்தினர் தரப்பில் எழுதப்பட்டவைகளையும் சேகரித்துக் கொள்கிறார்கள். அல்ஜீரிய விடுதலைப் போராளி ஒரு புறமும், மறுபுறம் பிரெஞ்சு பாராசூட் துருப்புகளின் தளபதி மாத்யூஸூம் இருக்கத் திரைக்கதை வடிவம் பெறுகிறது. நிகழ்வுகளின் திகதிகள் காட்சியமைப்புகளில் கறாராக இடம்பெறுகிறது. திரைப்படத்தில் யாசப், ஜப்பார் எனும் விடுதலை இயக்கத் தலைமைக்குழப் போராளியின் பாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். பொன்டே கார்வோவின் விருப்பம் எப்போதுமே தொழில்முறையில் இல்லாத மனிதர்களே நடிகர்கள். மாத்யூஸ் பாத்திரத்தை மட்டுமே பிரெஞ்சு நாடக நடிகரான மார்டின் ஏற்கிறார். அல்ஜீரிய வெகுமக்களே படத்தின் கதாநாயகர்களாக ஆகிறார்கள். என்றாலும், கதாபாத்திரங்களின் பொறுத்தமான உடல் தோற்றங்களில் அதி அக்கறை கொண்ட பொன்டே கார்வோவின் தேர்வுகள் அதற்கு அமையவே இறுதியெய்துகின்றன.

படம் மெய்மைக்கு அருகில் வர வேண்டும் என்பது முன்கூட்டிய திட்டம். பொன்டோ கார்வோவின் விருப்பமான கறுப்புவெள்ளை படத்தின் நிற வடிவம். படம் நியூஸ்ரீல்களின் கச்சாவான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார் கார்வோ. அழுத்தமான கறுப்பு வெள்ளையைத் தவிர்க்க வேண்டும் என்பதும், அன்றாடத்தைப் பிம்பங்களில் கொண்ட வர வேண்டும் என்பதும் அவரது முடிவு. நிலைத்த காமெராக் கோணம் என்பதனை விடவும், கைகளில் கொண்டு திரியும் ஹேன்ட் ஹெல்ட் காமெரா பாணியை அவர் தேர்ந்து கொள்கிறார். போராட்டத்தையும் அதில் ஈடுபட்ட மனிதர்களையும் தொடர்ந்து சென்று பதிவுசெய்வது அவரது இலக்கு. நியூஸ்ரீல்களின் எபக்டை, அன்றாடத் தன்மையை, கச்சாத் தன்மையை எவ்வாறு கொணர்வது? கறுப்பு வெள்ளையில் படம் பிடித்த பின்னால், அதனது நெகட்டிவ்விலிருந்து பிறிதொரு பிரதியை உருவாக்கி, அந்த நெகட்டிவை மறுபடியும் படம்பிடித்தல் என்பதன் வழி நியூஸ்ரீல்களின் கச்சாத்தன்மையை அவர் சாதிக்கிறார். அடர்ந்த கறுப்புவெள்ளை என்பது மங்கி நிகழ்வின் மெய்மையை இந்த முறையினால் அவர் சாதிக்கிறார். திரைக்கதை ,கதைமாந்தர், திரைவடிவம் என்பதனோடு திரைமாந்தருடன் இசையின் ஊடாட்டம் குறித்த அவரது அதீத அக்கறையும் படத்தை ஒரு முழுமையான அனுபவமாக ஆக்குகிறது.

அடுத்து கதாபாத்திரங்களுக்கு இடையிலான இயங்கியல் குறித்த பிரச்சினை. இப்படத்தில் இது ஒடுக்குமுறையாளனுக்கும் ஒடுக்கப்படுபவனுக்கும் இடையிலான இயங்கியல், காலனியாதிக்கவாதிக்கும் காலனிய அடிமைக்கும் இடையிலான இயங்கியல். ஆதிக்க வன்முறைக்கும் புரட்சிகர வன்முறைக்கும் இடையிலான இயங்கியல். அமைப்புக்கும் தனிநபருக்கும் இடையிலான இயங்கியல். போராளியான அலியும், பிரெஞ்சு இராணுவ அதிகாரியான மாத்யூசும் அவர்களின் மீது சுமத்தப்பட்ட சூழலின்- அமைப்பின்- வரலாற்றின் பிரதிநிதிகள். என்றாலும் இயல்பில் அவர்கள் மனிதர்கள். இன்னொரு மட்டத்தில் அல்ஜீரிய வெகுமக்களைக் கொல்லும் பிரெஞ்சு அதிகாரவர்க்கத்தவரின் வன்முறை மற்றும் பிரெஞ்சு அதிகார வர்க்கத்தவரையும் படையினரையும் பிரெஞ்சு வெகுமக்களையும் கொல்லும் போராளிகளின் வன்முறை. இவர்கள் அனைவருமே மனிதர்கள். வேறு வேறு விதமான வரலாற்று அனுபவங்களில் நின்று இவர்கள் இருவருமே தத்தமது செயலுக்கான காரண காரியத்தை வழங்குபவர்கள். இவர்களைச் சித்திரிக்க வேண்டும் என்றால் இரண்டு தரப்பினரதும் மூளைக்குள் ஆழமாகச் செல்ல வேண்டும் என்கிறார்கள் சலினாசும் பொன்டே கார்வோவும். மத்யூஸ்- போராளிகள் தலைவரான மெஹ்தி தோன்றும் காட்சி உரையாடல் இதற்கான அற்புதமான சான்று. இந்தப் பார்வையை திரைப்படத்தின் இயங்கியலாக நாம் கொள்ள முடியும்.

V

பொன்டே கார்வோவின் காலனியாதிக்கம் மற்றும் இனவிடுதலை குறித்த மூன்று திரைப்படங்களிலும் இந்த இயங்கியல் அதியற்புதமாகச் செயல்படுகிறது. வன்முறையை – இருதரப்பிலான வன்முறைகளையும் – ஒரு போதும் பொன்டே கார்வோ கொணடாடுவது இல்லை. என்றாலும் பல்லாண்டுகளிலான சித்தரவதைக்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளான மக்களின் எதிர் வன்முறையை பொன்டே கார்வோ ஒப்பத்தவருவதும் இல்லை. ‘ஓடுக்கப்பட்டவனின் வன்முறை ஒடுக்குபவனையும் விடுவிக்கிறது, ஒடுக்குமுறையாளனையும் விடுவிக்கிறது’ என்பார் பெனான். ‘பாட்டாளிவர்க்கம் தன்னை விடுவித்துக்கொள்வதன் மூலம் முழு மனிதகுலத்தையும் விடுவிக்கிறது’ என்பார் மார்க்ஸ். இந்த ‘விடுதலை எனும் தார்மீகத்தன்மை மட்டுமே வன்முறையை ஒரு குறிப்பிட்ட வரலாற்றில் நியாயப்படுத்த முடியும்’ என்கிறார் பொன்டேகார்வோ.

‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸில்’ அலியின் மரணத்திற்கும் வீரத்திற்கும் தியாகத்திற்கும் அரப்பணிப்பிற்கும், ‘கெய்மாடா’வில் தோலரசின் மரணத்திற்கும் வீரத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் நாம் தலை வணங்குகிறோம். வில்லியம் வாக்கரின் படுகொலை ஒரு சேர நமக்கு சந்தோஷத்தையும், மனதின் விளிம்பில் துயரத்தையும் விட்டுச் செல்கிறது. மாத்யூஸ் போராளித் தலைவன் மெஹ்தியின் மரணத்திற்குத் தலை வணங்குகிறான். அவனே அலியை- சிறுவனை- பெண் போராளிகளை உயிரோடு வெடிவைத்துத் தகர்க்கிறான். அலியும் மெஹ்தியும் தோலரசும் போலவே வாக்கரும் மாத்யூஸூம் தனிமனிதர்கள். அதே வேளை இவர்கள் எதிரெதிர் அமைப்பின் பிரதிநிதிகள். முன்னவர்கள் வீழ்ந்துபட்டே தீர வேண்டிய உலகின் பிரதிநிதிகள். பின்னவர்கள் வென்றே தீர வேண்டிய எதிர்கால உலகின் பிரதிநிதிகள். அடிப்படையில் மனிதர்களான இவர்களுக்கிடையிலான முரண் அமைப்பு சார்ந்த முரண். இந்த முரணைத் திரையில் படைப்பதுதான் மார்க்சீயத் திரைப்பட அழகியல்.

இறுதியாகச் சில கேள்விகள் மிஞ்சி நிற்கின்றன. பிரெஞ்சு இராணுவத் தளபதியான மாத்யூஸின் பாத்திரப் படைப்பு குறித்த தனது ஆட்சேபங்களை எட்வர்ட் சைத் பதிவு செய்கிறார். மாத்யூஸூன் சித்தரிப்பு அதிக மனிதத்தன்மையுடன் இருக்கிறது.‘அது அப்படி இருப்பது சாத்தியமா?’ என்று அவர் கேட்கிறார். மறுபடியும் இந்தக் கேள்வி இப்படியாகவும் கேட்கப்படலாம் : ஆப்ரிக்கராலோ அல்லது பாலஸ்தீனத்தவராலோ ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் எடுக்கப்படுமானால் அப்போது ‘பேட்டில்ஸ் ஆப் அல்ஜியர்ஸ்’ எவ்வாறனதாக இருக்கும்? மார்க்சீயத் திரைப்பட அழகியல் இந்தக் கேள்வியையும் நிச்சயமாக உரத்துக் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கும். இத்தகையை இன்னும் பல கேள்விகளுக்குமான அடிப்படையாக இருக்கக் கூடிய திரைப்பிரதியாக நிச்சயமாக ‘பேட்டில் ஆப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் உலகத் திரைப்பட வரலாற்றில் நின்று நிலைத்திருக்கும்.

 

 

 

                           

 

 

 

             உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation