• Time to read: 07 minutes
  • 579
  • 0

நீங்கள் திட்டமிட்டிருந்தபடியே

By ஜி.குப்புசாமி

உங்களைச் சுற்றி கம்பளியை போர்த்திக்கொண்டு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறீர்கள். நீங்கள் எழுந்து நிற்கும் போது உங்கள் உடம்பு முழுக்க ஆர்த்ரைடிஸை என்னால் உணரமுடிகிறது. நகரும்போது உங்களிடமிருந்து முறிகின்ற ஒலிகள் கேட்கின்றன. நீங்கள் ஏன் இவ்வளவு சிற்றடி வைத்து நடக்கிறீர்கள் என்று எனக்குப் புரிவதில்லை.

       நாம் காட்டில் இருக்கிறோம். என் தலைமுடியை உங்கள் விரல்களால் கோதிவிடுகிறீர்கள். நான் தலையைக் குனிந்தபடி அமர்ந்திருக்கிறேன். நீங்கள் என் முடியை பிடித்திழுத்து சிக்கெடுக்கிறீர்கள்.  இது அவசியமானதுதான். என் கூந்தலை வாரி விடுகிறீர்கள். மான் ஒன்றைப் பார்க்கிறோம். என்னை அமைதியாக இருக்கும்படி சொல்கிறீர்கள். அது தனியாக ஓடுகிறது. ஒரே ஒருமுறை அது நம்மை திரும்பிப்பார்த்து விட்டு ஓடுகிறது. அதன் பழுப்பு கண்களையும்  நீளமான இமைகளையும் என்னால் பார்க்க முடியவில்லை. அது பீதியடைந்திருந்ததாகத் தெரியவில்லை, வெறும் ஆர்வம்தான் அதற்கு. உங்கள் கையை இறுக்கி அழுத்துகிறேன், ஆனால் நீங்கள் கண்டு கொள்வதில்லை.

       பனியில் சறுக்கி விளையாடச் செல்கிறோம். ஒரு குழந்தையின் மேல் நாம் மோதிவிடுகிறோம். அதனால் நீங்கள் குடித்திருப்பதாக யாரோ நினைக்கிறார்கள். நாம் சூடான சாக்லேட் பானம் அருந்துகிறோம்.- அது சில்லென்றுதான் இருக்கிறது - பனியில் ரொட்டித்துணுக்குகளை இறைக்கிறோம்.

       மறுபடியும் எனக்கு நுரைக்குளியல் கொடுக்கிறீர்கள். என் உடம்பு முழுக்க நுரைக்குமிழ்கள் போர்த்தியிருக்கின்றன. இதமான சூட்டுக்குள் ஊர்ந்து செல்கிறேன். நீங்கள் என் பக்கத்தில் வந்து நிற்கிறீர்கள். என்னை மிக மென்மையாகத் துடைத்து விடுகிறீர்கள். டூத்பிரஷ் கொண்டு எப்படி பல்வரிசையில் சின்னச்சின்ன வட்டத்தில் பல்லைத் தேய்க்க வேண்டுமென்று காட்டுகிறீர்கள். நான் நறுமணம் கமழ இருந்தாக வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதற்காக நான் அருவருக்கிற அந்த டென்டல் ஃபிளாஸை என் முகத்தில் தெளிக்கிறீர்கள்.

       என் பெயர் பொறித்த சாவிவளையம் ஒன்றை எனக்குத் தந்திருக்கிறீர்கள். அதைப் பார்க்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்.  உங்களை பைக்குள் வைத்துக் கொண்டு திணறித்திணறி  நடக்கிறேன். உங்களை பையிலிருந்து வெளியே எடுத்துக் கொண்டு உள்ளே நுழைகிறேன். இரவு நேரங்களில் எனக்கு பயமாக இருக்கும் போது அந்தக் கூர்மையான சாவியை உள்ளங்கையில் பதித்து இறுக்கும் போது உங்களை இறுக்கிக் கொள்கிறேன். இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டுமென்று நீங்கள் திட்டமிட்டிருந்த படியே.

       உங்கள்  சகோதரர் உள்ளே நுழைகிறார். அவரும் வயதானவர்தான். நர்ஸ்கள் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அவர்களுடைய நடுங்கும் கைகளாலும் முத்தமிடும் வாய்களாலும் உங்களை களைப்படைய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை மீணடும் படுக்கையில் படுக்க வைத்துவிட்டு தொலைக்காட்சியை போடுகிறார்கள், என்னவோ நீங்கள்தான் கேட்டதைப்போல.

       கடைசியில் அவர்கள் வெளியேறுகிறார்கள். நீங்கள் உங்கள் நாற்காலியில் அமர்கிறீர்கள். நீங்கள் எழுந்து நிற்பதை, மீண்டும் அதே போன்ற சிற்றடி வைத்து நடப்பதை வாசல் நிலைப்படியிலிருந்தபடி உங்களைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். நாற்காலியின் விளிம்பில் உட்கார்கிறேன். கைநீட்டி என்னைப் பிடித்துக் கொள்வீர்கள் என்ற நம்பிகையில் கீழே விழப்போவதைப்போல பாசாங்கு செய்கிறேன். உங்கள் கை என் கையை பற்றுகிறது. உங்களிடம் இன்னும் கொஞ்சம் பலம் மிச்சமிருப்பதை கவனிக்கிறேன்.

       நாயை கூட்டிக்கொண்டு நடைப்பயிற்சி செல்கிறோம். ஒரு குச்சிஐஸ் வாங்குகிறோம். ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டு அதை நான் சாப்பிட, நீங்கள் தாவரவியல் பற்றி பேசுகிறீர்கள். எனக்காக ஈரல் கறி சமைக்கிறீர்கள். அது ஈரல் சுவையில் இருப்பதில்லை. மற்றவர்களும் கொஞ்சம் கேட்கிறார்கள். அவர்களும் அது ஈரல்தான்  என்பதை நம்புவதில்லை. அதை எப்படி தயாரிப்பது என்று அவர்களுக்குச் சொல்கிறீர்கள். Kinder Surprises கடையில் வாங்கிய பொம்மைகளை, விளக்குகளை பாகம் பாகமாக பொருத்துகிறீர்கள். இதைச் செய்வது உங்களுக்குப் பிடித்திருப்பதாகச் சொல்கிறீர்கள், எனவே உங்கள் விருப்பப்படி விட்டுவிடுகிறேன், இல்லாவிட்டால் இது பெரிய விவகாரம் ஆகிவிடும். என் ஷூக்களுக்கு  பாலிஷ் போடுகிறீர்கள். அதன் பளபளப்பில் என் கண்கள் கூசுகின்றன. தெருப்புழுதி படிந்து அதில் கறை உண்டாவதைப் பற்றி அக்கறையின்றி இருக்கிறேன். நான் வீட்டுக்கு மிகவும் தாமதமாக வரும்போது அதுவரை விழித்தபடி காத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அழும்போது உங்களைப் பார்த்து கத்துகிறேன். காலையில் ஆறுமுறை நீங்கள் எழுப்பிய பிறகு மெதுவாக எழுந்து நீங்கள் சமைத்த பன்னை சாப்பிடுகிறேன். தோட்டத்தில் ஒரு பெரிய மரத்தில் கயிற்றில் கட்டியிருக்கும் ஊஞ்சலில் என்னை உட்காரவைத்து சலிப்பில்லாமல் ஆட்டுகிறீர்கள். கயிறு மிகவும் தளர்வாக, தாழ்வாக இருப்பதாக நான் சொன்னால் சிரிக்கிறீர்கள்.

       இரவு நேரங்களில் நான் உங்களை அனுமதிக்கும் போது என்னை தூக்கிக் கொள்கிறீர்கள். இன்றிரவு பௌர்ணமி என்கிறீர்கள். தெரியும் நட்சத்திரங்கள் எல்லாமே என்னுடையவை என்கிறீர்கள். சூப் செய்யும் போது காய்களை நெருப்பில் காட்டிவிட்டு வடிசாறு எடுக்கிறீர்கள். வாயில் உணவை வைத்துக்கொண்டு பாடுகிறீர்கள். நீங்கள் தனியாக இருக்கும்போது மட்டுமே படிக்கிறீர்கள். உங்கள் உடம்புதான் உலகத்திலேயே கதகதப்பான உடம்பு. உங்கள் கைகள்தான் உலகத்திலேயே வலிமைவாய்ந்த கைகள்.

       இஞ்சியும் மிளகாயும் சிவப்பு மிளகும் போட்டு தேநீர் தயாரிக்கிறேன். தேநீர் எப்படி உங்களுக்குள் ஊடுருவி உங்களுடைய நோயுற்ற உதிரத்தோடு கலந்து உங்களை பிரகாசமடையச் செய்விக்கிறது என்று பார்க்கிறேன். ‘உங்கள் மேல் மோசமாக நாற்றம் அடிக்கிறது‘ என்கிறேன், நீங்கள் எழுந்து குளிக்க வருவீர்கள் என்பதற்காக. ‘உங்கள் சருமம் உலர்ந்திருக்கிறது‘ என்கிறேன். உங்களுக்கு எண்ணெய் தடவி விடுவதற்கு அனுமதிப்பீர்கள் என்பதற்காக. எண்ணெய் தேய்த்து விட்டதும் நீங்கள் மினுமினுக்கிறீர்கள். படுக்கை விரிப்பையெல்லாம் எண்ணெய் கறையாக்கிவிட்டு, எலும்பு துருத்திக்கொண்டிருக்கும் உங்கள் இடுப்புத் தோலைப்போல அது மெல்லீடானதாகி விடுகிறது.

       நீங்கள் குறட்டை விடும்போது ஒவ்வொரு முறையும் உங்களை எழுப்பி விடுகிறேன். மிகவும் பலமாகவோ, மிகவும் மெலிதாகவோ மூச்சுவிடும்போது உங்களை உலுக்குகிறேன். வெயில் மிகச்சரியாக உங்கள் மேல் விழுகிறது. எல்லா சன்னல்களையும் திறந்துவிடுகிறேன். உங்கள் மொத்த உடம்பும் உதறி, பந்து போல சுருட்டிக் கொள்கிறது. வெயில் உங்களைச் சூழ்ந்து இன்னும் கொஞ்சம் அதிகமாக உங்களை ஜொலிக்க வைக்கிறது.

       மரங்களிலிருந்து எல்லா நிறங்களிலும் பறவைகளை சேகரித்து, மேலும் சிலவற்றை வாங்கி, உங்களுக்கு அருகில் விடுகிறேன், அவை உங்கள் முகத்தருகே கிறீச்சிட்டு , நீங்கள் தூங்க முற்படும்போதெல்லாம் எழுப்பி விடுவதற்காக. ‘Up Little Hans’ பாடுவதற்காக தெருப்பாடகன் ஒருவனை நூறு க்ரோனருக்கு வாடகைக்கு அமர்த்துகிறேன். உங்களுடைய முதிய, செவிட்டுக் காதுகளில் கிசுகிசுக்கவும் உங்களோடு சேர்ந்து படுக்கவும் விலைமாது ஒருவளை அமர்த்துகிறேன். நர்ஸ்கள் நிறுத்தப் பட்டுவிட்டார்கள். உங்கள் உடல்நிலை தேறிவிடும் என்று ஏறக்குறைய என்னால் உணரமுடிகிறது. ஒவ்வொருமுறை உங்களைப் பார்க்கும் போதும் நீங்கள் என்னைப் பார்த்து புன்னகைக்கிறீர்கள். நான் பொய் சொல்லக் கூடாது என்று கடவுள் மிகவும் எதிர்பார்ப்பதால் அவரோடு ஒரு உடன்பாடு வைத்துக் கொள்கிறேன். தெருவில் விஞ்ஞானி ஒருவரை சந்திக்கிறேன். அவரை உங்களிடம் அழைத்து வந்து, இது வாழ்வா சாவா என்ற பிரச்சனை என்கிறேன். அவர் உங்கள் கரங்களைப் பிடித்துப்பார்த்து, சின்னச்சின்ன பிளாஸ்டிக் பைகளில் நீங்கள் சேகரித்து வைத்திருக்கும் சளியை ஆய்வு செய்கிறார். நான் ஒரு பிள்ளையைப் பெற்று விஞ்ஞானியிடம் ஸ்டெம் செல்களைத் தருகிறேன்.

       ஆயிரம் கன்னிமார்கள் கண்ணீர் சிந்துவதைக் கண்டு, அவற்றை குறைவான சூட்டில் கொதிக்க வைத்து, கைக்குட்டை ஒன்றில் நனைத்து பத்து போடுகிறேன்.

       ஒருநாள் புத்துயிர்ப்போடு எழுந்திருக்கிறீர்கள், உடனே தூக்கத்தில் ஆழ்ந்து விடுகிறீர்கள். உங்களை எழுப்புவது மிகக் கடினமாக ஆகிவிடுகிறது. விலைமாது படுக்கையின் கால்மாட்டில் நெளிகிறாள். தெருப்பாடகன் எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதென்று பாடுகிறான்.

       உங்கள் கண்ணிமைகளில் சிறிய ஊசிகளை பொருத்துகிறேன். தோல் மிகமிக தொளதொளப்பாக இருக்கிறது. உங்கள் விழிகள் இப்போது முழுதாக மூடிக்கொள்ளலாம். உங்கள் கன்னங்களை கிள்ளுகிறேன். உங்கள் முகம் இன்னும் சாம்பல் நிறத்தில்தான் இருக்கிறது. உங்கள் கணுக்கால்களில் ரப்பர் பேண்டுகளை மாட்டுகிறேன். அவை அறுந்து அல்லது நழுவி விழுகின்றன.

       வெதுவெதுப்பான நீரில் உங்களை குளிப்பாட்டுகிறேன். ஆனால் குளிக்க வர மறுக்கிறீர்கள். உங்கள் கண்கள் வெளுத்துவிட்டன. உங்களோடு படுக்கையில் பக்கத்தில் உட்காரச்சொல்கிறீர்கள். பறவைகள் இன்னமும் பறந்து கொண்டிருக்கின்றன. சன்னல்களில் மீண்டும் மீண்டும் மோதி சில இறந்து விழுகின்றன. வெளியே காற்று யாராலும் கவனிக்கப்படாமல் வீசிக்கொண்டிருக்கிறது. அது நேற்றுதான் என்பது போல இலைகளை சிலிர்க்க வைத்து சத்தமெழுப்பிக் கொண்டிருக்கிறது.

       நான் உங்கள் அருகில் படுக்கையில் அமர்ந்து உங்களுக்காக மென்குரலில் பாடுகிறேன். இல்லை எல்லாமே தப்பு. பாடுவது நீங்கள்தான். உங்களுடைய தெளிவான அமைதியான குரலில் பாடிக் கொண்டிருக்கிறீர்கள். சூரியன் அஸ்தமித்தாகி விட்டது. பறவைகள் மௌனித்து விட்டன. இருள் கீழிறங்கப்போகிறது.

 

 

 

மொழிபெயர்ப்பு சிறுகதை : நீங்கள் திட்டமிட்டிருந்தபடியே - லீனா மரியா லாங்

(தமிழில்: ஜி.குப்புசாமி)

 

 

 

 

 

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation