• Time to read: 06 minutes
  • 558
  • 0

இந்த மனிதர்களோடுதான் அப்பா இல்லாத உலகத்தை பகிர்ந்து கொண்டேன்

By இயக்குனர் நவீன்

மதிப்பிற்குரிய ஜி.குப்புசாமி அவர்களுக்கு என் ப்ரியங்களும்  வாழ்த்துகளும்…

 

எல்லா கதைகளும் மரணத்தோடு முடிந்துவிடும் என்பதால் இந்த கதையையும் மரணத்தின் நிழலிலிருந்தே ஆரம்பிப்பதே சரியென்று நினைக்கிறேன். மனித வாசம் பட்டாலே மறைந்துகொள்கிற கூச்ச சுபாவமுள்ள பாம்பைப் போல மறைந்தே இருக்க நினைப்பவன் நான். இது பிறரிடம் பேச கூச்சப்படுகிற ஒருவனின் கதை. அவன் உங்களை வந்தடைந்த கதை.

 

நெருங்கியவரின் மரணம் தந்த வெறுமையை இலக்கியங்களால் இட்டு நிரப்பிகொண்டவர் என்று உங்களைப் பற்றி அறிந்திருக்கிறேன். என்னை உங்களிடம் கொண்டு வந்து நிறுத்தியதும் ஒரு மரணம்தான். ஓரான் பாமுக்கின் ”என் அப்பா” கட்டுரையின் இறுதி வரி ”ஒவ்வொரு மனிதனின் மரணமும் அவன் அப்பாவின் மரணத்தோடுதான் தொடங்குகிறது” என்று முடிகிறது.

இங்கு சில சமயம் மரணம் கதைகளை முடித்துவைப்பதற்கு மட்டுமல்ல… கதைகளை தொடங்கிவைப்பதற்கும் கூட பயன்படுகிறது. என் கதை என் அப்பாவின் மரணத்திலிருந்து தொடங்குகிறது. அது நடந்தபோது என் வயது 9. அப்பாவின் கைகளிலிருந்து என் கைகள் வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டன. அப்போது அழ கூட தெரியவில்லை. என் ஆளுமைகள் குவியத்தொடங்கிய போதே சரிந்துவிட்டது.

 

சுள்ளெறும்புகளை டப்பாக்களுக்குள் சிறைப்படுத்திய.. தும்பிகளின் காலில் கற்களை கட்டிவிட்டு பறக்கவிட்ட.. பொன்வண்டுகளுக்கு கொடுக்காப்பில்லி இலையை உணவாகப் போட்டுகொண்டிருந்த.. மின்மினிப்பூச்சிகளை இரசித்துகொண்டிருந்த என் பால்யத்தை ஒட்டுமொத்தமாய் வேட்டையாடிய நிகழ்வு அது.

 

உன் அப்பாவைப் பற்றி சொல் என்று யாரவது கேட்டால் அனேகமாக அது அவரின் மரணத்திலிருந்துதான் தொடங்குகிறது. நான் விரும்பாத போதும் கூட…

அப்பா இறந்த நான்காம் நாள் பள்ளி செல்கிறேன். வழக்கம்போல ஒரு மாணவனை வம்புக்கு இழுக்கிறேன். அப்போது அவன் சொன்ன வார்த்தை இன்னும் செவிப்பறையில் ஒலித்து கொண்டே இருக்கிறது. ”டேய் உங்க அப்பா செத்துட்டாரு. இனி உன்னைய திட்டக்கூடாதுன்னு டீச்சர் சொல்லிருக்காங்க..” என்றான்.

 

”இனி எவனும் வேணாம்” என்கிற வைராக்கியம் அப்போது ஏற்பட்டது. இப்போது வரை தொடர்கிறது. ஒரு மரணத்தினால் ஏற்பட்ட வெறுமையை தவிர்ப்பதற்காய் தினம் தினம் மரணம் வரைக்கும் சென்று வந்திருக்கிறேன். வலுக்கட்டாயமாக நிறைய அழுதேன். காரணங்களே கிடையாது அழுது தீர்த்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அதிலும் வெறுமை தோன்ற கூடவே வறுமையும் சூழ என் பதின் பருவத்தின் தொடக்கத்தில் அது நிகழ்ந்தது.

 

வாசிப்பு… புத்தகங்களால் என்னை சுற்றி ஒரு சுவர். வெறுமையிலிருந்து, பசியிலிருந்து, நிராசையிலிருந்து, ஏக்கத்திலிருந்து, எல்லாவற்றிலும் இருந்து என்னை அது காத்தது. கரைந்து கொண்டிருந்த என்னை மீட்டது. எனக்காக நானே சிருஷ்டித்த உலகம். அதற்குள் இருப்பவர்களுக்கு நான் அப்பாவை இழந்தவன் என்பது தெரியாது. அதனால் யாரும் என்னிடம் பரிதாபம் காட்டவில்லை. அது எனக்கு நிரம்ப பிடித்துப்போய்விட்டது. அந்த உலகத்திலேயே கூடாரமிட்டு தங்க ஆரம்பித்தேன்.

 

தாகூர் என்னருகே அமர்ந்து தண்ணீரை மணிக்கணக்காக வேடிக்கைப் பார்த்து கொண்டிருப்பார். என்ன புரிந்ததோ தெரியாது திடீரென்று சிரிப்பார். ஒருபுறம் கி.ராஜநாரயணன் கரையான் அரித்த கதவை வெறித்து பார்த்தபடியே நிற்பார். பெளலோ கொய்லோ சந்தியாகுவை தேவாலயத்திற்கு அழைத்து சென்றதை தூங்காமல் பார்த்துகிடந்தேன். கொஞ்சம் அழுதால் தேவலாம் என நினைக்கும்போது புதுமைப்பித்தன் ”செல்லம்மா” கதையை மறுபடி எனக்காக சொல்ல ஆரம்பித்திருப்பார். பள்ளத்தாக்கில் குதித்து சாக வேண்டும் என்று தோன்றினால் பெய்ரூட்க்கு வாவென கலீல் கிப்ரான் அழைப்பான். மோகமுள்ளில் யமுனாவை “யாரோ ஒரு அம்மா. பாக்க வயசானவங்க மாதிரி இருக்காங்க..” என்று அறிமுகப்படுத்துகிற இடம்.. அய்யய்யோ யமுனாவுக்கும் வயசாகுமா என்று நடுநடுங்கியிருக்கிறேன். ரொம்பவே மோசமானவன் தஸ்தாயெவ்ஸ்கி, பலீனாவை அறிமுகப்படுத்தி இவள் கெட்டவள் என்பான். நானும் நம்பிவிடுவேன். அடுத்த வினாடியே இவள் தேவதை என்பான். அதையும் நம்பிவிடுவேன். ”நாஸ்தென்கா உனக்கு இல்லை ஆனாலும் அவள்தான் உன் காதலியென்பான்”. எந்த மறுப்புமின்றி ஏற்றுக்கொண்டேன். எங்கிருந்தோ பஷீர் வந்து அமர்வார், சாரம்மாவிடம் நம் குழந்தைக்கு இந்தியா, காதல், சிறுகதை, மிட்டாய், நாடகம், நிலா வெளிச்சம் என்றெல்லாம் பெயர் வைக்க வேண்டுமென்பார். தோப்பில் முகம்மது மீரான், முஸ்தப்பாகண்ணு எவ்வாறு அதபு பிரம்பை பிடித்து கொண்டிருந்தார் என நடித்துகாட்டுவார். வண்ணதாசன், நீலநிறப்பூக்களோடு நந்தியாவட்டை இலையை தடவிக்கொண்டிருப்பார்.

 

இந்த மனிதர்களோடுதான் என் அப்பா இல்லாத உலகத்தை பகிர்ந்துகொண்டேன்.சில காலங்கள் வாசிப்புக்கும் ஓய்வு கொடுத்தேன்.

அப்போது என்னை ஆக்ரமித்த இராட்சசர்கள் இளையராஜாவும், வான்காவும்… இவர்களை என் ஆன்மாவின் இரட்சகர்கள் என்றும் சொல்லலாம்.

இரை விழுங்கும் மலைப்பாம்பை பார்ப்பது போல இளையராஜாவின் இசையை வியப்போடு பார்ப்பேன். என்னிடம் என்னதான் வேண்டுமென்று பல நடுஇராத்திரிகளில் அந்த இசை முன்னால் மண்டியிட்டு கேட்டிருக்கிறேன். துருயேறிய என் பால்யத்தை துடைத்துவிட்டது அந்த இசை.

 

வான்கா… கோதுமை வயல்வெளிகளை, நட்சத்திர இரவுகளை, உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களை எனக்கே எனக்காக படைத்து சென்றவன் வான்கா. வெறுமையையும் தனிமையையும் நிறமாகவும், ஓவியமாகவும் ஆக்கியவன். குற்றம் செய்தவன் குழந்தை யேசு முன்னால் கைகூப்பி கிடப்பதைப்போல அவன் ஓவியங்கள் முன்னால் கிடந்திருக்கிறேன். மீண்டும் நண்பர்களை சந்திக்கலாமென்று சிறுகதைகளாக தேடியபோதுதான் உங்களை சந்தித்தேன்.

பீட்டர்ஸ்பெர்க்கில் தஸ்தாயெவ்ஸ்கியோடு தங்கியிருந்த நான் உங்களின் மூலமாகத்தான் நைஜீரீயாவில் சீமமாண்டா என்கோஸி அடீச்சீயை சந்தித்தேன். அம்மம்மா எவ்வளவு உக்கிரமான பெண் அவர்.  அவரோடு இருந்தபோதெல்லாம் காய்ச்சலில் தவித்திருக்கிறேன்.

 

கந்தர்வனோடு செடி நட்டுகொண்டிருந்த நான் ரேமண்ட்டை சந்தித்தேன். முரடர் அவர். என்னை எங்கெங்கோ இழுத்து செல்கிறார். எனக்கு இது பிடிக்குமா, பிடிக்காதா எதையும் அவர் கேக்க தயாரில்லை. ஒரு சர்வாதிகாரி போல தன் தாளத்திற்கு என்னை ஆட்டும் ரேமண்ட் கார்வரை உங்களால்தான் சந்தித்தேன்.

இப்போது சில நாட்களாக உங்கள் பெயரை சொல்லிக்கொண்டு அய்மணத்தில் அருந்ததியோடு தங்கியிருக்கிறேன்.  உங்களை பற்றி பேச வந்துவிட்டு ஓரானைப் பற்றி பேசாமல் எப்படி தவிர்க்கமுடியும்.. என்றாலும் தவிர்க்கிறேன். காரணம் மாசக் கடைசிகளை கடக்கவே சிரமப்படுகிற ஜீவன் நான். படித்த புத்தகத்தில் பல திருப்பி கொடுத்துவிடலாம் என்று கடன் வாங்கி படித்தவை அல்லது அப்படி நினைத்துகொண்டு திருடி வந்தவை. விரைவாக என் பெயர் சிவப்பையும், பனியையும் அடைவேன். அதன் பிறகு பாமூக் பற்றி.

 

என்னை ”அப்பாவின் சூட்கேசை திறந்து பார்க்கிற ஓமான் பாமுக்காக, நாரைகளை எதிர்பார்த்து குன்றின் மேலேறிய ஜீலியன் பார்ன்ஸாக, கிளிகளின் இசையை கேட்டறிந்த கெவின் பிராக்மைராக ஆக்கிய உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள்.”

 

இன்மையின் மூலமாக நிலைத்துவிட்ட கலைஞன் நீங்கள். உங்களின் மூலமாகத்தான் அவர்களின் மண்ணில் அவர்களை சந்தித்தேன். அப்போது நீங்கள் வெளியே சென்றுவிட்டீர்கள். உங்களையும் வைத்து கொண்டு அவர்களோடு உரையாட வேண்டுமென்பதே என் விருப்பம். அவர்களின் மொழியை அறிந்துகொண்டு நாம் நம் மொழியில் பேசுவதற்கான வேலையை தொடங்குகிறேன்.

 

முன்னமே சொன்னதைப்போல இந்த சமூகத்தை எதிர்நோக்க கூச்சப்படுகிற பிறவி நான்.. அ.முத்துலிங்கம் குறிப்பிடுவதைப் போல மொழியாக்ககாரர்கள் கண்ணாடிகள். என் தனித்த அறையில் நிர்வாணமாய் கண்ணாடியைப் பார்ப்பது போலத்தான் இதை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். இதை இந்த நாளில் பகிர்ந்து கொள்வது சிறப்பு. நம் இரண்டாவது சந்திப்பில் பகிர்ந்து கொள்ள ஏராளமான விடயங்களை விட்டுவைத்து இங்கேயே நின்றுவிடுகிறேன். முதல் சந்திப்பு ABBA- THE MOVIEயைப் போலவே கடந்து போகப்போகும் தருணம். எல்லாம் முடிந்துவிட்டது என்று தோன்ற வைக்கிற மரணம் கூட எதையாவது தொடங்கிவைத்துவிட்டே போகிறது.. ஒரு வகையில் மரணம் நமக்கு புது வாழ்க்கையைத்தான் தந்திருக்கிறது…

[எரிச்சலூட்டியிருந்தால் உங்களுக்கு வருகிற GAME INVITATIONS போல கடந்து சென்றுவிடுக…..]  

         

 

 

குறிப்பு: ஒரு வாசகனின் வாழ்த்து கடிதம்உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation