• Time to read: 26 minutes
  • 649
  • 0

மூசாவின் தாழி அல்லது கிளிமஞ்சாரோ

By ச.விசயலட்சுமி

 

 

1

பொறுமையின்றி வெம்மை அள்ளி வீசும் சகாரா பாலைவனம். அதன் வெப்பம்  தாக்காதபடி  சிகப்புக் கடலும் மத்தியதரைக்கடலும் இருக்க நிலப்பரப்பில் பேரழகோடு நைல்நதி ஓடிக்கொண்டிருக்கிறது.

 நைல் நதி ஓடும் எகிப்தின் ஒரு பகுதி சில தினங்களாக இளங்கன்றின் கறியைப் படைக்கும் யாமக்கூடம் போல பரபரப்பாக இருந்தது. ஆனால் அப்படி எந்த சுவடு மற்று நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாகிக் கொண்டிருந்தது. கசக்கிப் பிழிந்து எடுக்கப்பட்ட மக்களின் வரிப் பணம் முழுவதும் மன்னர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கும், அவர்களின் உல்லாச விருந்துகளுக்கும், அவர்கள் இறந்த பின் அவர்களது பிரமிடுகள் கட்டுவதற்குமே செலவானது. பிருமாண்டமாய் எழுந்து நிற்கும் அவர்களின் கட்டடக் கலை பார்ப்பவர்களை அதிசயிக்கச் செய்கிறது. ஆனால் இங்கு கட்டப்படும் பிரமிடுகள் திராவிட நாட்டில் வாழுகின்ற மக்களுக்கான கோயிலைக் கட்டுவது போன்றதில்லை. அங்காவது மன்னர்களின் பண்டகசாலை இருக்கும். தானியங்களை சேமிக்க, செல்வங்களைப் பாதுகாக்க கிடங்குகள் கட்டப்பட்டிருக்கும். ஆனால் இங்கு கட்டப்படும் பிரமிடுகள் இறந்த மன்னர்களின் உடலைப் பாதுகாப்பதற்கானது. இதற்கென குறைந்த கூலியில், கட்டாயப் படுத்தப்பட்ட பல லட்சம் மக்கள் வேலை செய்கிறார்கள். பிரமிடுகளை மன்னர்கள் தாங்கள் இந்தப் பிறவியில் பயன்படுத்திய பொருள்களை மறுபிறப்பில் பயன்படும் என்று அவற்றோடு தாங்கள் இறந்து விட்டால் பதப்படுத்தி வைக்கும் இடமாகவும் பயன்படுத்தினார்கள்.

அதனால் வசதி படைத்தவர்களும் அவரவர் உடலைப் பாதுகாக்கும் சமாதியாக பிரமிடுகளை எழுப்பினர். பிரமிடு வைத்திருப்பவர்களை மிக மிக வசதிபடைத்த குடும்பமாக மக்கள் நினைத்தார்கள். இது தனிக் கட்டட பாணியாக மட்டுமில்லாமல் மக்களுக்கு வேலை தருகிற தொழிலாகவும் இருக்கிறது. வெயிலில் கடுமையாக உழைக்கும் மக்களுக்கு போதிய அளவில் உணவு கிடையாது. அவர்களுக்கு போதுமான  கூலி கொடுப்பதில்லை. இந்த வேலையே வேண்டாம் என விட்டு விட்டு செல்லவும் முடியவில்லை. கடுமையாக அதிகாரிகள் நடந்து கொள்கிறார்கள். உயிரா வேலையா எனில் வேலையே என்று குறைந்த கூலியில் வேலையைச் செய்து பிழைத்து வந்தனர். மக்களின் பொருளாதாரமும் உழைப்பும் மக்களின் விருப்பமில்லாமல் சுரண்டப்பட்டது. இத்தனை பாதிக்கப்பட்ட நிலையிலும் மன்னரின் மீது மக்கள் கட்டுக் கடங்காத மாயத்தனத்தோடு மயங்கிக் கிடந்தார்கள். எவ்வழி மன்னவன் அவ்வழி மக்கள் என சொல்வார்களே அப்படியான நிலை. இது அக்கால சமூகத்தின் பழக்கமாகியிருந்தது.

மன்னரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மக்களுக்கு ஆங்காங்கே தகவல் கிடைக்கத் தொடங்கியது. இதுவரை ஆண்ட மன்னருக்குப் பதிலாக,  இனி தேசத்தை ஆளப் போவது யார் என மக்கள் பேசிக் கொண்டார்கள். அரசனைக் கடவுளைப் போல நினைக்கிற பாமர மக்களால் அரசனின் மறைவை மிக எளிதாகக் கடந்து போக முடிவதில்லை. மன்னரின் உடல் நலனைக் குறித்த கவலையைப் பேசித் தீர்க்க முடியாதவர்களாக சமனற்ற நிலையில் தவித்தார்கள்.

மன்னரின் மறைவு நாட்டில் பல மாற்றங்களையும் திருப்பங்களையும் கொண்டு வருமென்பதால்  அடுத்து நடக்கப் போவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள். மன்னனின் மறைவுக்குப் பின்னால் அரசில் ஏற்படும் பல் வேறு சம்பவங்கள் அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை பாதித்துவிடுமோ என்கிற அச்சம் நிலவியது. தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதியிலும் தங்களுக்குள் ரகசியமாக கிசுகிசுத்தார்கள். மொழியைக் கற்பிக்க, வானியலின் ஆய்வுக்கூடங்கள், தென்னிந்தியாவின் விற்பனைக்கூடங்கள், ஏற்றுமதி இறக்குமதி பணியில் இருப்போர் எனப் பல பணிகளிலும் உயர்நிலையில் இருந்தார்கள். இனி இதெல்லாம் தொடருமா? என்று புரியாத புதிர்த் தன்மையில் மூழ்கியிருந்தார்கள். எகிப்தில் சாலை ஓரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் கூடிக் கூடிப் பேசுகிறார்கள்.

மக்கள் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த ஒருவன், ஆட்சி மாறினாலும் குடிமக்கள் பிரச்சனை தீர வேண்டும். இனியேனும் பொருளாதாரம் முன்னேற முயற்சிக்க வேண்டுமென்றான். மற்றொருவன் அரசாங்கத்துக்குதான் நாம் வேலை செய்கிறோம். அரசாங்கம் குறைந்த கூலியைத் தருகிறது. கொடுக்கிற கூலியிலும் வரிப் பணத்தை வாங்கிக் கொள்கிறது. தொட்டதற்கெல்லாம் வரி விதிப்பதை மட்டுமே செய்கிறது அரசு. வேலைகள் பலவிதமாக இருக்கின்றது. கூலியும் கிடைக்கிறது. தொடர்ந்த விலையேற்றம், வாங்கும் கூலிக்கும் பயன்படுத்தும் பொருள்களுக்கும் உணவுப் பொருளுக்கும் என எல்லாவற்றிற்கும் வரிவசூலிப்பதால் பசித்த வயிற்றை பட்டினி போடவே செய்கிறது என்றான்.

உயர்ந்த உருவம் கொண்ட ஒருவன் ஆம் .அரண்மனைக்கும் நம்மைப் போன்ற மக்களின் வீடுகளுக்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது பாருங்கள் என்றான்.கூட்டத்தை ஒதுக்கி உள்நுழைந்த பெண் மன்னர் குடும்பத்தில் பத்து பேர் வாழ்வதற்கு ஐம்பதும் நூறுமாக அறைகள் வைத்துக் கட்டுகிறார்கள். அறைகள் பலவும் பூட்டப்பட்டு பயன்படுத்து வாரற்றுக் கிடக்கிறது. நம்மவர்களோ ஒரே அறையில் பத்து பேர் பயன்படுத்துகிறோம் என்றாள் .

பேசியவளை இடை மறித்த மற்றவள் அங்கே ஒரு வேளைச் சாப்பாட்டில் எத்தனை விதமான பலகாரங்கள், பதார்த்தங்கள். அவர்களால் சாப்பிட முடியாத போதும் செய்யப்படுகிறது. இங்கே நம் உழைப்புக்கான பணம் கிடைக்காமல் இரண்டு வேளை மட்டுமே உண்கிறோம். அழுகிற குழந்தையின் பசிபோக்க முடியாமல் பால் வற்றிப் போகும் தாய்மார்களைப் பார்த்தால் கண் கலங்குகிறது என்றாள்.

முதியவர் ஒருவர், அப்படி பச்சைக் குழந்தைக்காரியாக இருந்தாலும் கூட அவர்களுக்கு விடுமுறை கொடுப்பதில்லையே. தூக்க முடியாத கற்களை சுமந்து பிரமிடுகளைக் கட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்வதும். மிகப் பெரிய அஸ்திவாரங்களை எழுப்புவதற்கான பணிகளை ஆண்களும் பெண்களும் இணைந்தே செய்கிறோம். வளரும் குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் குடும்பம் குடும்பமாக சாரை சாரையாகப் பணியிடத்தை நோக்கி கட்டாயமாக நகர்த்தப் படுகிறோம். இவையெல்லாம் மாற வேண்டும். அப்படி மாறினால் நான் சாகும் போது நிம்மதியாகச் சாவேன் என்றார்.

இல்லை அப்படி மாற வேண்டுமெனில் தமிழ்ப் பேசுகிறவர் நாட்டைப் போல நதியை விவசாயத்திற்கு மடைமாற்றம் செய்ய வேண்டும்! உணவு பொருட்களை  அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும். இதையெல்லாம் யார் செய்வது? எல்லோரும் கட்டடப் பணியிலேயே இருக்கிறோமே என்றான் ஒருவன்.

மற்ற நாட்டினர் மத்தியில் நம் நாட்டை வளமான நாடாக, வறுமையற்ற நாடாகப் பார்க்கும் படி மன்னர் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், உள்நாட்டில் வாழுகிற மக்கள் மிக மோசமான பின்னடைவுக்கு செல்லும் அளவில் பொருளாதார வளம் குறைந்திருக்கிறது. காவலர்கள் ரோந்து வந்தால் கடும் அடக்குமுறை ஏற்படுமென பயந்து பேசுபவனிடத்தில் கண் நிலைத்து விடாமல் வீதியின் கடைக்கோடியில் சந்தேகத்தோடும் பயத்தோடும் கூடப் பார்த்துக் கொண்டிருந்தனர் சிலர். மன்னன் இறந்ததும் செய்யக்கூடிய சடங்கு குறித்த கருத்து மோதல்கள் மேலும் சிலரிடம் நிகழ்ந்த வண்ணமிருந்தன. பெரும் திரளான மக்கள் உயர்ந்து நிற்கும் அரண்மனைக்கு முன்பாக தேனீக்கள் போல குவிந்திருந்தனர்.

 

2

சூழ்ந்திருந்த மக்கள் திரளில் அதி வேக காற்றடித்தால் கூட அசம் பாவிதம் நேர்ந்து விட்டது போல் அங்குமிங்குமாக அலைந்து கலவரப் படுத்தினார்கள். நகரின் வெளிப்புரத்தில் குடியிருந்த மக்கள் அருகாமையில் இருந்த இரசாயன பதனக்கிடங்கை கவனிப்பதில் நாட்டம் கொண்டிருந்தனர். சிலர் சிறு சிறு துளைகள் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்க எம்பிக் குதித்தாலும் எட்டாத மதில் சுவர்களின் மீது கோபத்தைக் காட்டிவிட்டுக் கலைந்தும் கலையாமலுமிருந்தனர். கிடங்கிற்குள் எண்ணெய்க் கொப்பரையைக் கொண்டு வந்து வைத்தவர்களை இடைவிடாது ஏவிக் கொண்டிருந்தான் மூசா. அவன் எகிப்து தேசத்தின் இராஜ இரகசியங்களை முழுதும் அறிந்தவன். மனிதர்களை மட்டுமல்ல மனங்களையும் பதப்படுத்தத் தெரிந்தவன். ஓங்கி வளர்ந்த நெடும் உயரம் கொண்ட அவனின் தேகம் தளர்ந்த தேகமல்ல, திடகாத்திரமாக, இளம் வயதிற்குறிய உடலோடு இருந்த முதியவன். அனுபவம் நிறைந்தவனாகத் தெரிந்தான். அவனது நெற்றியில் அனுபவத்தின் சுருக்க ரேகைகள்  படியத் துவங்கி இருந்தது.

மூசா என்றால் அனைவரும் சொல்லிவிடுமளவு தேசம் முழுவதும் அறியப்பட்டான். அவனுக்குக் கட்டுப்பட்டவனாக, அவன் சொல்வதற்கு மாறாக நடந்து விடக்கூடாதென்கிற கவனத்துடன் கருத்ததிட காத்திரமான ஒருவன் இருந்தான். அவன் வாசனைத் திரவியங்களைத் தயாரிக்கும் முனைப்பில் இருந்தான். அவன் கைகள் பதைக்கப் பதைக்க வேலை செய்து கொண்டிருந்தது. அவன் கைகள் அசுர வேகத்தில் இயங்கியது. சிலவகை போளங்களை நீரில் ஊற வைத்து அரைத்துக் கொண்டிருந்தான்.   ஒட்டித் திரிந்து, எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஆர்வமிக்க மக்களுக்கு அங்கு நடக்கும் சம்பாஷனைகள் காதில் விழவில்லை. எனினும் அங்கு நடக்கும் வேலைகளைக் கொண்டு ஊகித்திருந்தனர். அரண்மனையில் இருந்து நேரடியாகத் தகவல் வராதபோது சுற்றிலும் நடப்பதை வைத்து முடிவுக்கு வரவேண்டிய ஆர்வங்கொண்டவர்களாக மக்கள் இருந்தனர்.

மூசாவின் கூடத்தில் அத்தர் மணமும், கூடைக் கூடையாக குவித்து வைக்கப்பட்ட பூக்களின் வாசனையும் மூக்கில் ஏறி வதைத்தது. இவைமட்டுமில்லாமல், தென்னிந்தியாவிலிருந்து வந்திருந்த கிராம்பு, ஏலம், லவங்கம், நறுமணப் பட்டை, கிளேரியா இலைகள், யூக்ளிப்டஸ் இலைகள் என பல பொருட்களும் வந்திறங்கின. சுமக்க முடியா சுமையுடன் கழுதைகள் தளர்ந்து நடந்தன. அதனை மேய்ப்பவர்களும் கண்கள் சொருக உற்சாகமில்லாமல் நடந்தனர். இதையெல்லாம் கவனித்த மக்கள், தங்கள் மன்னன் இறக்கப் போகிற நேரம் நெருங்கி விட்டதை உறுதி செய்தனர். சாமானிய மக்கள் இறந்தால், அவர்களது சடலங்களை ஓரிரு நாள்கள் வைத்திருந்து சடங்குகளைச் செய்வதோடு சரி. இந்தக் குடும்பத்தினர் பதப்படுத்தலை செய்து கொள்ளும் பழக்கமுடையவராயிருந்தனர். இவர்கள்  சாதாரணமாக உடல்களை அடக்கம்  செய்வதை விரும்பாதவர்கள். உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப் போல உடல்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பவர்கள். உடல்களையும் பொக்கிஷமெனப் பாதுகாத்தனர். கிடங்கிற்குள் பணியாளர்களை ஏவிக் கொண்டிருந்த மூசாவிடம் தைலம் தயாரிப்பவன் கேட்டான் “எங்களின் மேன்மையானவரே எதற்காக இதையெல்லாம் செய்கிறோம்” சுற்றியிருந்தவர்கள் இவன் கேள்வி கேட்பதே தவறு என்பது போலப் பார்த்தார்கள் . மேன்மை பொருந்தியவனின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

    ”ஒரு சடலத்தைப் பதப்படுத்துவதற்கான முன்னேற்பாட்டினை செய்கிறோம் மகனே”   வேலைக்குப் புதிதாகச் சேர்ந்தவன் துணிவுடன் கேள்வி எழுப்புவது பிடித்திருந்தது. அவரிடம் கேள்வி கேட்க பயப்படுகிறவர்களையும் கேட்டாலும் கண் நிறைய பயத்தோடு இருப்பவர்களையும் பார்த்துச் சலித்துவிட்டிருந்தவருக்கு இவனின் கேள்வியால் உற்சாகம் மிகுந்தது. தன் தொழிலுக்கு வாரிசு இல்லை என்கிற கவலையும் தோதான ஆள் கிடைக்கும் பட்சத்தில் அதனைச் சொல்லிக் கொடுத்துவிடும் மனநிலையிலுமிருந்தார்.

 ”பதப்படுத்துவது தேவையற்றது என்பது என் கருத்து, இத்தனை அரிதான பொருட்களை வீணடிக்கிறோம் .தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்றான் புதிதாகப் பணியில் சேர்ந்த தாஹிர். ”தாஹிர் பதப்படுத்துவதை நான் கலையாகப் பார்க்கிறேன். இதனைத் தேவையற்ற பொருள் விரயம் என நினைப்பது தெரிகிறது. இருந்தாலும் கலைகள் வளரும் பாதை இப்படித்தானே பட்டினி கிடப்பவர்கள் ஒரு பக்கமிருந்தாலும் இந்தக் கலை தொழிலாகப் பல குடும்பங்களின் பசி தீர்க்கிறது. நீயும் அப்படி வந்தவன்தான் என்பதை மறந்துவிடாதே” என்ற மூசாவிடம் இன்னும் பேசஅவகாசமில்லாததால் தாஹிர் வேலைகளில் தீவிரமானான்.

சுள்ளென்ற காலைச் சூரியன் பண்டங்களைச் சுமந்து விற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளின் புத்துணர்விற்கு முன் தோற்றுக் கொண்டிருந்தது. சிந்து நதிக்கழி முகத்தில் இருந்த பார்பரிகத் துறைமுகத்திலிருந்து வந்த மெல்லிய துணிகளுக்கு மக்கள் மத்தியில் மதிப்பு அதிகம். அந்த வணிகர்களுக்கு இயல்புக்கு மீறியதொரு ஆர்வம் எதனாலோ ஏற்பட்டிருந்தது. அவர்களின் அருகாமையிலிருந்த தாஹிர் சுயநினைவு வந்தவனாக வியாபாரிகளைப் பார்த்து “ உங்களிடமிருக்கும் பத்திரி, வெள்ளைபோளம், சிவப்புபோளம், கரியபோளம் முதலான பொருட்களையும் ஜாதிக்காய் கடுக்காய் போன்றவற்றையும் பதனப்படுத்துமிடத்திற்கு கொண்டு வரச் சொல்லப்பட்டிருக்கிறது சிறிதும் தாமதிக்காமல் வாருங்கள் என சொல்லிவிட்டு குதிரையின் மேல் ஏறியமர்ந்து விரட்டினான்.

குதிரையை நிழலில் கட்டி வைத்து வந்தவனுக்கு அங்கிருந்த நறுமணப் பொருட்களையும் மீறி வீச்ச மடித்தது. வரிசைப் பொருட்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்த பணியாட்களில் ஒருவன் முறைப்படி வணங்கி ஏற்றுக்கொள்ளும் படி கூறினான். பொற்காசுகளும் மணிகளும் நீலக்கற்களுமாயிருந்த அவற்றினை ஏற்பதான பாவத்தை செய்துவிட்டு ”மகனே தாஹிர் இவற்றை எடுத்துவை! வியாபாரிகள் வருகிறார்களா? அகில் சந்தனமென அனைத்தையும் கொண்டு வரச் சொன்னாயா?” கேட்ட வண்ணம் மற்றொரு உடலை நெருங்கினார்.

           ”மகனே பார்த்தாயா கொடுக்கப்படும் செல்வத்திற்கேற்ப இங்கும் பேதம் . தரம் பிரிக்க வேண்டியிருக்கிறது உயிரற்ற உடலின் பல ஆண்டு பாதுகாப்பெனப்படுவது அதற்கான தாராளமான செலவுதான். பணமில்லையென்றால் உடல் பாகங்களைக் கத்தியால் கீறித் தைத்து கொப்பறையில் போடுகிறோம். முதல் தரமெனில் கத்தியைப் பிணத்தின் மீது வைக்காத வேறு சில முறைகளைப் பயன்படுத்துகிறோம்.” பேசிக் கொண்டே அவரது கைமருந்துப் பொருட்களையும் வாசனை திரவியங்களையும் சரி பார்த்தது.

தாஹிர் இதுவரை முதல் தரமான சடலப் பாதுகாப்பைப் பார்த்ததில்லை. மிக அரிதாகவே இப்படியான சந்தர்ப்பங்கள் வாய்க்கும். மிகுந்த பாதுகாப்புடனும் அரச மரியாதையுடனும் சில மணிநேரத்தில் வந்திறங்கிய உடலைப் பயபக்தியோடு பார்க்கக் கூடியிருந்த பொதுமக்களில் பெண்களும் கணிசமாயிருந்தார்கள்.

சடலத்தோடு பணி புரியவென சில பணியாட்களும் மருந்தரைக்க இரு பெண்களும் வந்திருந்தனர். வியாபாரிகளிடம் பேசி தேவையான பொருட்கள் இதற்கிடையே இறக்கப்பட்டதில் பணிகள் விரைவானது. குறிப்பிட்ட அறையில் சடலத்தை விரித்தனர். நகரின் அரச குடும்பத்தில் குழப்பம் நிலவியது. அடுத்து பதவியேற்பது யாரென்பது முடிவுக்கு வராமல் தீவிரமான மோதல் கலவரமாகலாம் என ஆங்கிருந்த ஊழியர்களால் செய்திகசிந்தது. கஜானா காலியென்பதாகவும் தானியக் கிடங்கின் இருப்பு குறைவாயிருப்பதாகவும் அதிகாரிகள் சலசலத்தனர்.

மன்னரின் உடைகள் ஒன்றன்மேலொன்றாய் அடுக்கப்பட்டிருந்தன. உடைகளின் கனத்தினால் ஆஜானுபாகுவான உடற்கட்டோடு காட்சியளித்திருக்கிறார். அதன் வேலைப்பாடுகள் படாடோபமாய்க் காட்டின. விரும்பிய வாழ்க்கை அமையாதவர்கள் மன்னனாக இருந்தாலும் பரிதாபத்திற்குரியவர்களே. பகட்டு எனக் கருதும் பரிதாபத்திற்குரியவர்களால் நிரம்பி வழிகிறது நாடு. மனதிற்குள் பல எண்ணங்கள் ஓடத் துவங்க கிடத்தப்பட்டிருந்த உயிரற்ற உடலின் உடைகளைக் களையத்து வங்கினான் தாஹிர்.

நோயினால் பீடித்திருந்த உடல் வெண் சாம்பல் பூசியது போலிருந்தது. மார்பு வீரத்தின் அடையாளமற்று இடுப்பின் கீழான பாகம் சுருங்கி வற்றிக் கிடந்தது. இந்த உடலில் உயிர் இருந்த போது சுகித்தலுக்காக எத்தனை அதிகாரங்களை யார் யாரிடம் செலுத்தியிருக்கும். உடன்படாதவர்களை வன்முறையாக அனுகியிருக்கும். எத்தனை பேர் இதனை சாபமிட்டு அறுத்துவிட துடித்திருப்பார்கள். இணங்கி பலனடைந்தவர்கள் போஷித்து பாதுகாக்கிற ஒன்றாயிருக்கிறது இன்று பதவியாலோ பொருளாதாரத்தாலோ வித்யாசமின்றி எண்ணெய்க் கொப்பரைக்குள் மூழ்கப் போகிறது. மேன்மை பொருந்திய பெரியவர் ”தாஹிர் விரைந்து ஆகட்டும்” என்றார்.

தாஹிர் அங்கிருந்த கருவிகள் சிலவற்றைக் கொண்டு வந்தான். ரக வாரியான கம்பிகளையும் மூங்கில் பட்டைகளையும் பிரித்து வைத்தான். எண்ணெயினை சுமந்து வந்து ஊற்றிக் கொண்டிருந்தனர் பெண்கள். அங்கு அரைத்து வைக்கப்பட்டவை புது வித மணம் பரப்பிக் கொண்டிருந்தது. மூசா பொறுமையற்றவனாக பதற்றத்தோடு அங்குமிங்கும் மேற்பார்வையிலிருந்தான். அங்கு நடப்பவற்றில் திருப்தி கொண்டவனாக கிடத்தப்பட்ட உடலைத் தட்டிப் பார்த்தான். கையில் கூரிய கம்பியினை எடுத்து உடலின் மூக்கிற்குள் நுழைத்து பலங் கொண்ட மட்டும் ஆட்டினான். மூக்கின் வெளிப்புறம் கீறலோ சதைக் கிழிப்போ நேர்ந்து விடக்கூடாதென்ற எச்சரிக்கை கொண்டிருந்தான். நாசித் துவாரங்களுக்குள் ஒரு விதமான கரைசலை ஊற்றி துவாரத்தை பசை கொண்டு அடைத்தான். மற்றொரு கம்பியினை எடுத்தான். அதன் முனை மழுங்கி கூர்மையற்றதாயிருந்தது. விரைத்து இருகத் துவங்கிய உடலின் மலத் துவாரத்திற்குள் பலங் கொண்ட மட்டும் கம்பியைச் செலுத்தினான். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பணிப் பெண்களின் முகத்தில் சிறு சலனமும் இல்லை. பதுமையின் முகம் போல உணர்ச்சியைக் காட்டாமலிருந்த அவர்களின் கண்கள் உணர்வதை வெளிப்படுத்திவிடாத எச்சரிக்கையினைக் கொண்டிருந்தது. லாயத்தில் கட்டப்பட்ட குதிரை அவிழ்த்து விட்டதும் துள்ளிக் குதிப்பதையும் புதிதாகப் பிறந்த குட்டிகள் பயமற்று இலக்கற்று திரிவதன் அழகு இந்த முகங்களுக்கு எட்ட முடியாத தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. தாஹிர் மூசாவிற்கு சில கரைசல்களைக் கொடுத்தான் செருகப்பட்ட கம்பியில் இருந்த மெல்லிய துளை வழியே சிறிது சிறிதாக ஊற்றிக் கொண்டிருந்தனர்.  

விரைவாக பதப்படுத்த சிலமுறைகளில் வயிற்றுப் பகுதியை கிழிக்க வேண்டியிருக்கும். இந்தவுடல் செலுத்தப்படும் திரவத்தை ஏற்றுக் கொண்டதால் அறுக்க வேண்டியதில்லை. மிகவும் வற்றிய தேகமாக இருக்கிறது என மூசா தாஹிரிடம் சொல்லிக் கொண்டான். பின்னதாக ஊற்றிக் கொண்டிருக்கும் திரவத்தின் அடர்த்தி காரணமாக சிறிது பனங் கள்ளினைக் கலந்து கரைத்தான் கிராம்பின் தைலமும் சேர்த்து செலுத்தினார்கள். வாசனை அடர்ந்த பசையினை உருவாக்கி உடலில் இருக்கிற துளைகளில் வைத்து அடைத்து சிறிது காற்றாட விட்டார்கள்.

பெரும் தாழியொன்றினில் களிம்பினைத் தேய்த்து எண்ணெய் நிரப்பியிருந்தனர். தமிழ் பேசுகிற மண் பாண்டம் செய்வோரிடமிருந்து அத்தாழி தருவிக்கப்பட்டிருந்தது. நிரம்பிய எண்ணெய்க்குள் உடலை இனி எழுபது நாட்களுக்கு ஊற விட வேண்டும் அதன்பின் உரிய முறையில் சுத்தப்படுத்த வேண்டுமென சொல்லிக் கொண்டிருந்த மூசா தாழிக்குள் பதமாக உடலை இறக்கினான்.

 

3

        பாலை மணல் சீற்றம் கொண்டு அலைந்தது. நிலையற்ற மனதோடும் இனி வருங்காலம் என்னவாகுமென்ற கேள்விகளோடும், புரவிகள் சில பாய்ந்தோடின. வணிகர்கள் அரண்மனைக்கு செல்வதும் வருவதுமாயிருந்தனர். இளவரசர்களுள் ஒருவன் கடல் கடந்து காவிரிப் பூம்பட்டினம் சென்றிருந்தான். அவனுக்கு செய்தி சொல்லப்பட்டுவிட்டது. உயிருடனிருக்கும் மூன்று இளவரசர்களுள் இளவல் இவன், அன்போடும் மதியூகத்தோடும் செயல்படுபவன். வணிகப் பிரிவினைப் பார்த்துக் கொள்கிறான். மூத்தவன் பாதுகாப்பு மற்றும் படைப் பிரிவினைப் பார்த்துக் கொண்டான். இரண்டாமவன் இணக்கமான மனமற்றவன். பகை வளர்ப்பதில் சாமர்த்தியம் உள்ளவன். மக்களின் தேவைகள் இரண்டாம் பட்சமாகக் கூட அல்ல இறுதியாகக் கூட பரிசீலிக்கும் மனமற்றவன். வரட்டுத் தனமான விசயங்களுக்குள் பழகிவிட்டவன் ஒரு போதும் அவன் பதவிக்கு வரக்கூடாதென்ற பரிதவிப்பு கொண்டவர்களாய் தீர்வு வரும் கணமொன்றிற்காய் மக்கள் காத்திருந்தனர். மன்னன் கொடுத்த பொறுப்புகளில் பாரபட்சத்துடனும் தன்னை நிலை நிறுத்துவதற்கான உள் நோக்கத்துடன் செயல்பட்டுவருபவன். இவன் பதவிக்காக எதையும் எந்த நேரத்திலும் செய்வான் எனக் கருதிய மக்களின் காத்திருப்பு வறண்ட நிலத்தில் தாகத்தோடு தவிக்கும் விலங்கின் மனநிலையைப் போன்றது.

வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள் விதவிதமாய்த் தெரிந்தார்கள். வானம்பாடிகளாக, பாலை நிலக் கழுகுகளாக, வன்மையை எதிர்த்துக் காட்டத் தெரியாத அடிமைகளான ஒட்டகங்களாக குல்மொஹர் மலரின் மிருதுத் தன்மையோடு என மக்கள் பேச்சுக்குள் பல்வேறு மனநிலைகள் அலைந்து கொண்டிருந்தது. லட்சியங்களற்ற மனிதக் கூட்டத்தை உற்பத்தி செய்ய அரசுகள் தொடர்ந்து திட்டமிடுவதாயிருக்கின்றன. மக்களை உதவாதவர்களாக மாற்றுபவர்களும் சிதைத்து தாறுமாறாக வீசுபவர்களுமாகத்தானே இருக்கிறார்கள். கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மன்னர்களை ஊதாரிகளாக பார்ப்பதற்குப் பழக்கப்படுத்தும் பொருளாதாரச் சூழ்நிலை. தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ளுதல் என்பதன் மீது குவிக்கப்படும் பொருளாதாரத்தின் மீது தர்க்கம் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது. இங்கும் பதப்படுத்த ஆகும் செலவு குறித்தும் அது தேவையா என்பது குறித்தும் சதா பேசிக்கொண்டிருந்தனர். மக்கள்திரள் அங்கும் இங்குமாககூட முடியாத நிலையில் ஊருக்கு இடையில் ஓடிக்கொண்டிருக்கும் நைல் நதியின் கரையோரங்களில் திரளும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது. வணிக சந்தைக்கான கூட்டம் என்பதால் ஆற்றோரப் போக்குவரத்து தடையில்லாமல் இருக்க வேண்டும். வணிக வரி கிடைப்பது குறைந்துவிடும் என்பதால் கண்காணிக்க மட்டுமே காவலர்கள் இருந்தனர். வணிகர்களிடம் பெற்ற உபரிப் பணம் விசுவாசமாக இருக்கச் செய்தது.

        புதிதாக ஓர் அழகி கிராமத்திலிருந்து வந்திருந்தாள். இளவரசனுக்கு வேண்டியவள். இளையவன்தான் கொண்டு வந்திருக்கிறான். அவளைத் திருமணம் செய்து கொள்வதாக பேசியிருந்தான்.  மெஹருன்னிசா சாதாரண குடும்பத்துப் பெண், வாசனை திரவியம் செய்யுமிடத்திலும் பேரிச்சம் பழங்களைப் பதப்படுத்தும் இடத்திலும் வேலை செய்தவளுக்குப் புதிய யோசனை தோன்றியது. ராஜாங்க விஷயமும் இங்கு நிலவும் குழப்பங்களும் இவளுக்குத் தெரிந்த தென்றாலும் நகரத்தைக் கண்டு பயப்படக்கூடாது. அதுதான் சாதாரணமானவர்களை உயர்த்தும் என்று நினைத்து வந்தாள். வாசனை பொருட்களை அரைக்கும் வேலையை செய்தவள் இனி இப்படி இருந்தால் போதாதென்று ஒருநாள் அந்தப் புறத்திற்கு சென்றாள். அவளது நிறத்தையும் அழகையும் பார்த்தவர்கள் அதிசயித்துப் போனார்கள். இவள் சாமானியமானவள் அல்ல என்று அதிசயித்த நிலையில் நீராடுவதற்கான வாசனைப் பொருட்களையும் தேய்த்துக் குளிப்பதற்கான பொடிகளையும் செய்துத் தருவதாகவும் இதுவரை யாரும் செய்யாத பக்குவமென்றும் சொன்னாள் . உடனடியாக அதனைத் தருவித்துத் தாருங்களென ஆர்வத்தோடு கேட்ட பெண்களுக்கு சில தினங்களில் பல பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்தாள்.

இப்பகுதியில் கிடைக்காத அழகு தருகிற பொருட்களைச் சேர்த்து தயாரித்திருந்தாள். விலை விஷயத்தில் கராராக இருந்தாள். அரண்மனைப் பெண்கள் கேட்டதை கொடுக்கிற வியாபாரிகள் இங்கு மட்டும் விலை குறைத்து கொடுப்பார்கள். பொதுமக்களுக்கு விற்பதை விட மலிவாக வாங்கிப் பழகியவர்கள் அரண்மனையில் இருப்பவர்கள். மெஹருன்னிசா விலையை நான்கு மடங்காக ஏற்றிச் சொன்னதும் பிரம்மித்துப் போனார்கள். இந்த பொருட்களில் அப்படி என்ன கலந்திருப்பாள் என உள்ளுக்குள் கேள்வி ஓடினாலும் அற்புதம் நிகழ்ந்து விட வேண்டுமென்பதை விரும்பியவர்களாக வாங்கிக் கொண்டனர். எப்படிப் பயன்படுத்த வேண்டுமென இவள் சொன்னது ஒருவருக்கும் விளங்கியிருக்கவில்லை. அவளே உடனிருந்து பல பொருட்களை ஒன்றன்பின் ஒன்றாக பூசுவதும் உரிய முறையில் கழுவுவதுமாக சொல்லிக் கொடுத்தாள். கூடுதலாக சில பொற்காசுகளைக் கூலியாக தந்தால் தானே அவ்வளவையும் செய்து விடுவதாகச் சொன்னாள். இவர்களுக்கு அழகு மிக முக்கியமான கௌரவம், பல நேரங்களில் இந்த கௌரவம்தான் இவர்களுக்கு மூலதனமாகவும் மாறுகிறது என்கிற புரிதலுள்ளவர்கள். அறிவின் அழகும், ஆளுமையின் அழகும் போன்றதல்ல உடலின் அழகு. அழகை மூலதனமாகக் கருதுகிற இவர்களது மனப்போக்கைத் தனக்கான மூலதனமாக்க முயன்றாள் மெஹரூ.

அவள் அந்தப் புரத்திற்கு வரத்தொடங்கிய செய்தி ஊரறிந்த இரகசியமாகியது. அழகிகளை உருவாக்கும் அழகியென அவளை கெய்ரோ நகர மக்கள் அவ்வளவு பேரும் பேசிக்கொண்டிருந்தனர்.  அந்த புரத்தில் அவளின் இருப்பைத் தெரிந்து நெருங்க நிறைய ஆண்கள் முயன்றும் முடியவில்லை. ஒருநாள் தற்செயலாய் அங்கு வந்த கடைக்குட்டி இளவரசனின் கண்களில் பட்டாள். அவனை எதிர்கொள்வதில் எந்த தயக்கமோ அச்சமோ இல்லாமலிருந்தவளின் மிடுக்கு அவனுக்குப் பிடித்துப் போனது. தன்னைக் கண்டதும் பணிந்து வணங்கிச் செல்கிற பெண்கள்,  மாயத்தன்மை பொருந்தியவனென நினைத்து அதிசயமாய்ப் பார்க்கிற பெண்கள், பயந்து ஓடி ஒளிபவர்களுக்கு மத்தியில் எந்த வித பதற்றமுமில்லாமல் தன்னை எதிர் கொண்டவளை அவன் கவனிக்கத் தொடங்கினான். அந்த புரத்தில் அழகு சாதனங்கள் விற்க வந்தவள் சில நாட்களிலேயே குட்டி இளவரசனின் அழகு ராணியாகிப் போனாள். நகர மக்கள் எல்லோரும் அவள் தான் குட்டி இளவரசனை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாய்ப் பேசிக் கொண்டனர்.

காற்றடிக்கிற திசைக்கு ஓடும் புழுதியைப் போல மக்கள் விரைந்து செயல்பட்டார்கள். உடலைப் பதப்படுத்துவதற்கென எடுக்கப்படும் கழிவுகளை அகற்றுபவர்களுக்கும் பதப்படுத்துபவர்களுக்கும் தான் எகிப்தில் அதிக வருவாயிருந்தது. வணிகர்கள் பலரும் உடல் பதப்படுத்தும் கலைஞர்களின் மேல் தீரா வெறுப்புக் கொண்டிருந்தனர். உடல்களுக்குத் தேவையான அவ்வளவையும் விற்க முடிந்த வியாபாரிக்கு அந்த உடலைப் பாதுகாக்கும் வித்தையும் தெரிந்திருந்தால் எத்தனை லாபம்? அப்படி ஒருவன் இருந்துவிட்டால் நைல் நதி முழுக்க அவனது கப்பல்கள்தான் ஓடும். எகிப்து பிணங்களைப் பாதுகாப்பதில் தான் தனது ஆன்மாவைக் கண்டடைந்திருக்கிறது.  அதனை புனிதமான மறு பிறப்பென மக்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களால் தங்களின் குடும்பத்தைக் கவனிக்க முடியவில்லை. குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் அரசாங்கத்திற்கு பணமில்லாமல் வேலை செய்ய வேண்டும். வயிற்றுப்பசிக் குவழியில்லாமல் உழைப்பது எத்தனை நாட்களுக்கு முடியும். இந்தப் பாழும் கல்லை நாள்தோறும் சுமப்பது குழி பறிப்பது மூடுவதென உடலையும் உயிரையும் அடியோடு உறிஞ்சுகிற வேலைகள்.   நாளெல்லாம் முரட்டுத் தனமான வெயிலில் பாரம் தூக்குவதை நினைத்தால் விடியாத நாளாக இருந்து விடக்கூடாதா என்கிற தவிப்போடு தான் மக்கள் தூங்கப் போகிறார்கள்.

பதப்படுத்தப்பட்ட உடல்கள் கிளம்பும் சமயத்தில் அங்கு பணிபுரிந்த பெண்களோடு பேசிக் கொண்டிருந்தாள் மெஹருன்னிசா. அந்த உடல் மரியாதையோடு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவ்வுடல் பிரிக்கப்பட்ட இடத்தில் அதனைத் தூக்கியதும் சில கடிதங்கள் கிடைத்தன. அச்சடங்கிற்கு வந்திருந்தவர்களுக்கு அதில் எழுதப்பட்டிருந்த செய்திகள் பரிமாறப்பட்டன. மக்களின் முகங்களில் கலவரமும் இனி என்ன நடக்குமோ என்கிற அச்சமும்தென்பட்டன. நாட்டின் நிலை சிக்கலாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த மெஹ்ருன்னிசா ஒட்டக மேறி அதிகாலை நேரத்தில் கிராமப் பக்கங்களுக்கு சென்று சிலரை ரகசியமாக சந்தித்துவிட்டு திரும்பினாள். எகிப்தின் எந்த மூலைக் குள்ளும் சென்றுவர இளவரசரின் முத்திரையொன்று அவளிடமிருந்தது. அரண்மனையின் சூழலைக் கவனித்ததில் மெஹருன்னிசா மூத்த இருவரும் ஆட்சிக்கு வரக்கூடாதென முடிவெடுத்திருந்தாள். அப்படி முடிவெடுக்கத் துணிவு வந்ததை காதல் இளவரசனின் நினைவுகளோடு பொருத்திப் பார்த்தாள். இளவரசன் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் இல்லையென்றால் எத்தனை காலத்திற்கு மக்கள் சுமை தூக்கிகளாக மட்டுமே இருப்பார்கள்.

மன்னன் இறந்தான் என்கிற செய்தி கேட்டவள் தாமதிக்காமல் சில வேலைகளைச் செய்தாள். நாட்டின் அமைதிகாக்க ஊர்க்காவல் படையினர் பணியில் முடுக்கிவிடப் பட்டிருக்கிறார்கள்.

4

மன்னரின் கடைசி  மனைவியான கிளிமஞ்சாரோ சந்தோஷத்தில் இருக்கிறாள். எகிப்தின் அழகிகளில் கொஞ்சமும் குறைந்தவள் இல்லை அவள். அதனால்தான் தன்னுடைய பதினான்கு வயதில் இங்கு வந்தவள். இங்கிருக்கும் அனைவரும்அவளைமிகமோசமாகநடத்தினர். அரண்மனை கொஞ்சம் கொஞ்சமாக பழகத் துவங்கியது. வெளியிலிருக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் இங்கிருப்பவர்களின் வாழ்க்கைக்கும் பெரிய வித்யாசங்கள் எதுவுமில்லையெனப் புரிந்துகொண்டாள். வாசலுக்கு வெளியே அரண்மனை மீதும் அங்கிருப்பவர்கள் மீதும் மிகப் பெரிய பிம்பம் இருக்கிறது. இங்கு நடக்கும் ஒவ்வொன்றும் உடனடியாக அனைவருக்கும் சென்று சேர்ந்திடும் வண்ணம் மக்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். இதற்கும் மீறி இங்கு தவறுகள் நிகழ்ந்து விடவில்லை என்று நம்பும்படியாக இருக்கிறது. தவறு நேராத மனிதர்கள் இல்லையெனவானியல் ஆய்வில் ஈடுபட்டு சமீபமாய் இறந்து போன தந்தை சொல்லியிருக்கிறார். பிரமிடுகளில் வேலை பார்த்த மக்களின் உரிமைக்காக போராடி வந்தவர்.

மக்களின் நீர் பாசனத் தேவைகள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு வசதி செய்து தந்தால் விளைச்சல் பெருகும். தமிழ்ப் பேசும் சில திராவிட நாடுகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கின்றன. மக்கள் செழிப்பாக இருக்கின்றனர். அவர்கள் தேசத்தில் பாதுகாப்புப் பணியில், அடிமை முறையில் வேலை பார்க்க நம் தேசத்தவர்கள் போகிறார்கள். விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும். ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். உணவுப் பொருட்களைப் பதப்படுத்த வேண்டும் இதற்கெல்லாம் அரசு தேவையான உதவிகளைச் செய்ய வேண்டுமென பலமுறை அரசரிடம் முறையிட்டிருக்கிறார்.மன்னர்களின் கவனம் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதுஎப்படியெல்லாம் சாத்தியப்படும் என்பதில் மட்டுமே இருந்தது. அதனால்தான் இப்பொழுது ஆடம்பரத்திற்காக செலவிடுபவர்கள் அடுத்த பிறவியில் அல்லது இதே உடலில் மீண்டும் பிறப்பெடுக்கும் சமயத்தில் இவர்களுக்குத் தேவையானவற்றைப் பாதுகாக்கிறதாக சொல்லிக் கொண்டு மக்களின் பொருட்களைச் சுரண்டி பிணத்தோடு வைக்கின்றனர்.

கொதிக்கும் எரிமலையின் பெயர் கொண்ட கிளி மஞ்சாரோ தன் வயதுள்ள குட்டி இளவரசனிடத்தில் மிக நட்பாக இருந்தாள். அவனோடு அரசியல், இலக்கியம், அண்டை நாட்டு விசயங்களென  மணி கணக்கில் விவாதித்தால். மாளிகையிலிருந்து நாம் மக்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். மக்கள் கடும் சிரமத்தில் உழல்கின்றனர். அவர்கள் பசியால் வாடும்போது, நாம் மாடுகள் மற்றும் ஒட்டகக்கறியும், பல்வகை பழங்களும், பழரசங்களும் என விருந்து படைத்து களியாட்டங்களில் சுகிக்கிறோம். இது சரியா மகனே! என்று கேட்பாள். இளைய இளவரசனும் அவளின் ஒத்த கருத்துக்களுடன் விவாதத்தில் பங்கேற்பான். உண்மைதான் தாயே மெஹுருவும் இதே கருத்தை என்னோடு பகிர்ந்துள்ளாள். அரியணையின் சுகபோகங்களில் உழலும் அரண்மனைவாசிகள் மக்களை  மறப்பது கொடிது. நான் இளையவன் என் சொல் அம்பலம் ஏறுமா ஆனாலும்  என் தாத்தாவுடன் இணைந்து பலமுறை தந்தையிடம் சண்டையிட்டுள்ளேன். நைல் நதியின் தீரத்தை நாட்டு மக்கள் விவசாயசேவைக்கு திருப்பிவிட வேண்டுமென. ஆனால் பயன் இல்லை. என்ன செய்ய வாய்ப்புக்கு காத்திருப்போம் தாயே, நமக்கான காலத்தில் நாம் இதைச் செய்வோம்.

ஒத்த வயதுடைய அவர்கள் மக்களைப் பற்றியும் மன்னர்களின் நடைமுறை பற்றியும் பலமுறை பேசியிருக்கிறார்கள். கிளிமஞ்சாரோ பேச்சில் மற்றவரிடத்தில் இதுவரையில்லாத புதுப் பார்வையிருந்தது. அவனுக்கு அதிலிருக்கும் உண்மை ஆட்டிப் படைத்தது. மக்களுக்காக அவன் மனம் கரைந்தான். மற்றவர்களை விட மக்களிடம் நெருங்கிச் செல்லத் துவங்கினான். மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டுமென்பதை விரும்பி மன்னனோடும் தன்னுடைய அண்ணன்களோடும் பேசினான். அவர்கள் இவனை வினோதமாக பார்த்தனர். சந்தோசமாக வாழ நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது அதனால் மற்றவர்களைப் பற்றியோ சிக்க வேண்டியதில்லை. இப்படியான உபதேசங்களை சொல்லி விட்டு மன்னர் தனக்கான மறுபிறவிக்கான தங்கத்தையும் முக்கியமானதாகக் கருதுகிற பொருட்களையும் உரிய படி எடுத்துச் செல்லக் கட்டளையிட்டார். புறப்படும் தினத்தில் அங்கு வந்து பார்வையிட்டார். அத்தனையும் ஆயத்தமான நிலையில் நடப்பதற்கும் இயலாத அளவில் அவருக்கு உடல் மோசமானது. இதோ இறந்து விட்டார்.

கிளிமஞ்சாரோவின் எண்ணங்கள் வேகமாக செயல் படத் தொடங்கியது. நினைத்த படிவெளியே செல்ல முடியாத படி அரண்மனையிலிருப்பவள் குட்டி இளவரசனை அழைத்து தன் யோசனைகளைச் சொன்னாள். பிரமிடில் உடல் வைக்கப்படுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஒட்டகங்கள் முக்கியமானவர்களைச் சுமந்துசென்றது. அரச குலத்தினரும் அங்கே திரண்டனர். பெண்கள் இந்த சடங்கில் பங்கேற்கக்கூடாது. அந்தப்புரத்தில்கூடிப்பேசியபடியிருந்தனர். அரசிகள் மனதில் வேறு சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தாலும் இன்று மன்னருக்கான சடங்குகள் நடப்பதால் மன்னரைப் பற்றி மட்டுமே பேச வேண்டும்.

மெஹருன்னிசா கிளிமஞ்சாரோவைப் பார்க்க வந்திருந்தாள். சில தகவல்களைச் சொன்னாள். கிளிமஞ்சாரோவின் முகத்தில் திருப்தியும் அமைதியும் தெரிகிறது. மன்னரின் மூன்று பிள்ளைகளும் அவருக்கானதை வழக்கப்படி செய்து கொண்டிருந்தனர். குருமார்கள் சொல்லச் சொல்ல வழிபாடுகள் முடிந்து பிரமிடுக்குள் கொண்டு சென்று உரிய இடத்தில் வைத்திருந்தார்கள். ஆனால் ஒரு அசாதாரணச் சூழல் அங்கு நிலவியது.

கூட்டம் கலைவதற்கான தயாரிப்பில் இருக்க பிரமிடுகளுக்காக வேலை பார்த்த ஊழியர்கள் மத்தியிலிருந்து சலசலப்பு. ஊஹுங் … ஊஹூங்… ஒரு ஒசை எழுந்தது. உடல் நடுங்கி எங்கிருந்து அந்த ஓசை எழுந்தது என மதகுருமார்கள் சுற்றிலும் பார்த்தனர். ஆனால் அந்த ஓசை எல்லாத்திக்கிலுமிருந்து எழத்துவங்கியது. அது அடர்த்தியாக அடர்த்தியாக பிரமிடுகளில் கூலித்தொழிலாளிகள் தங்கள் கையில் இருந்த ஆயுதங்களுடன் வெளிப்பட்டனர்.

அரசு அதிகாரிகளின் எண்ணிக்கை அங்கிருந்த மக்களின் எண்ணிக்கைக்கு முன் ஒப்பிட முடியாத  தாயிருந்தது. இவர்களோ சில நூறு பேர் மட்டுந்தான். பிரமிடுகளில் வேலை பார்த்தவர்கள் பதினைந்தாயிரத்திற்கும் மேல் இருந்தனர். பல காலமாய் கொடுக்கப்படுகிற கட்டளையை செய்து முடிக்க பழகியவர்கள். இவர்களுக்குள் சில சங்கேத குரல் ஒலிகள் புழக்கத்திலிருந்தது. அத்தனை ஊழியர்களையும் வேலை நேரத்தில் ஒருங்கிணைக்க இந்த ஒலிகள் பயன்பட்டிருந்தன. அந்த ஒலிகள் இப்போது அங்கும் இங்குமாய் எழுந்தன. சில மணி நேரங்களில் அந்த இடத்தில் பெரும் அமைதி நிலவியது. மன்னரைக் காட்டிலும் இடையில் மக்களை வஞ்சித்தவர்கள்  அதிகாரத்தைக் கையிலெடுத்து செயல்பட்டவர்கள் என்பதை அவ்வப்போது பேசிவந்த பணியாளர்கள் இரண்டு இளவரசர்களையும் மத குருமார்களையும் அவர்களின் உடனிருப்பவர்கள், மன்னனுக்கு வேண்டிய சில அதிகாரிகள் ஆகிய அத்தனை பேரையும் சூழ்ந்தனர். அவர்கள் தப்பிச்செல்ல இயலாதவாறு பாதைகளை அடைத்து வைத்தனர். ஈட்டிகளாலும் கையில் கிடைத்த கற்களாலும்  அத்தனை பேரையும் கடுமையாகத் தாக்கினர். கற்களை சுமந்து பழகிய இரும்புக்கரங்கள் அன்பிற்கு மட்டுமே பணிவதாயிருந்தது. இறந்தவர் உடல்களை மூசாவின் சீடர்கள்   தாழியெனப்படும் பெரிய மண்கலத்தினுள் சில உடல்களை வைக்கத் தொடங்கினர்.

அங்கிருந்த தாழிகள் பிரமிடுகளில் இருந்த அறைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டது. யாருடைய சடலம் வைக்கப்பட்ட தாழியென கண்டறிய முடியாத படி அத்தனையும் ஒரே மாதிரி இருந்தது. பிரமிடுகளின் ஊழியர்கள் விரும்பிய அவர்களோடு பணியாற்றிய ஊழியனான மூசா அங்கு திடீரெனத் தோன்றினார். சில கட்டளைகளைப் பிறப்பித்தான். தங்களுள் ஒருவன் சொல்லுகிறதைச் செய்கிற பெரும் விருப்பத்தோடு அவர்கள் நிறைவேற்றினர். இங்கு நடந்த எதுவும் அரண்மனைக்கும் நாட்டிலுள்ள பிற மக்களுக்கும் உடனடியாகத்தெரியவாய்ப்பில்லை.

அடுத்த நாளின் அதிகாலையில் கிளிமஞ்சாரோவின் உடல் உதறிக் கொண்டிருந்தது. ராஜரகஸ்யம் ஒன்றைப் பாதுகாக்கும் திராணியின்றி அவஸ்தை கொண்டாள்.  அரண்மனையிலிருந்த குருமார்கள் வந்தனர். எல்லோருக்குமே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற குழப்பம். அவர்களிடம் இவள் உதறும் குரலில் பணிப் பெண்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அருள் வந்தவளைப் போல   குரலை உயர்த்தி பேசத் தொடங்கினாள். இனி நாட்டை ஆள்வதற்குத் தகுதியுள்ளவன் குட்டி இளவரசன் மட்டுமே.  அவனுக்கே மகுடம் சூட்ட வேண்டும். இல்லையென்றால் மன்னரின் கல்லறைப் பக்கம் போன அனைவரும் இறந்த பின் இவன் மட்டும் இங்கே அனுப்பப்பட்டிருக்க மாட்டான். ”இந்த தேசம் பிணங்களைக் காக்கும் கல் கூடாரங்களாக இருப்பதற்கு இனியும் அனுமதிக்க முடியாது. மக்களை சுமை தாங்கிகளாக மட்டுமே பழக்கப் படுத்தியதை இனி தொடர முடியாதென்றாள்.

மத குருமார்களுக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. இவளோடு பழகியறியாதவர்கள். தொலைவிலிருந்து இவள்தான் இளையவள் எனப் பார்த்திருக்கிறார்கள். இவள் சொல்வது உண்மையானதென நம்பத் தொடங்கி பணிகளை விரைவாக முடுக்கிவிட்டனர். அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. நைல் நதி ஆக்ரோஷமாக பாய்ந்தது, பாய் மரக் கப்பல்களின் சடசடப்பில் மக்களின் மகிழ்ச்சியைக் காற்றில் கரைத்துக் கொண்டிருந்ததது. கல்லறைகளின்  தேசம் நைலின் நீரோட்டத்தில் கழுவப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவன் அந்த சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தான். மெஹருவும்,  கிளிமஞ்சாரோவும் அவனைக் கண்களால் ஆசிர்வதித்து அணைத்தனர்.

 

5

கிளிமஞ்சாரோதலையில் சில நரைக்கத் தொடங்கி விட்டன. மெஹரு தனது செல்ல மகளில் கன்னங்களை வருடிக் கொண்டிருந்தாள். இளைய இளவரசன் கிளிமஞ்சாரோவிடம் அடுத்த திட்டப் பணிகளை விவாதிக்க பட்டயத்தோடு வந்துக்கொண்டிருந்தான். அரண்மனை சுவருக்கு  அப்பாலிருந்து பாடல் எழுந்தது. . .

மண்ணின் ஆனந்த ஊற்றே நைல் நதியே போற்றி

எங்கள் நாட்டை செழிப்பாக்க வந்தாய்

உணவு தருகிறாய் வளமை தருகிறாய்

வாரி வழங்கும் வள்ளல் நீ

நல்லன தருகிறாய்

எங்களின் தலைமை நீ

எங்கள் களஞ்சியங்களை நிறைப்பது நீ

ஏழைகளுக்கு வளம் தருவது நீ

நைல் நதியே போற்றி

இந்தப் பாடலைப் பாடிக்கொண்டே எகிப்து நாட்டின் உழவர்கள், விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஃப்ளாக்ஸ் செடியின் இழையில் நெய்த ஆடையை உடுத்தியிருந்தனர். விளை நிலத்தைச் செழிப்பாக்க வெய்யில் பார்க்காமல் உழுது கொண்டிருந்தவர்களின் அருகே குழந்தைகளை வளர்க்கும் தாய் போல நைல் நதி ஓடிக்கொண்டிருக்கிறது. பிரம்மாண்டமான நதியின் கரையோரங்கள் கங்காருவின் மடி போல மக்களைச் சுமந்து அவர்களின் வாழ்க்கையை அழகாக்குகிறது. நதியின் ஓட்டத்திற்குள் தன் வலியை மறக்கக் கற்றவர்கள் அந்நாட்டு மக்கள்.  நதிக்கரை மக்களின் வாழ்க்கை, நதியின் அத்தனை அழகையும் கொண்டிருக்கிறது.  நதியோ மக்களை மகிழ்விக்க வளைந்து நெளிந்து கசடுகளைக் கரைத்துக் கொண்டு ஓடுகிறது.உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation