• Time to read: 06 minutes
  • 598
  • 0

ஆரண்யக் கன்னியின் பிரசவ வாசம்

By அனாமிகா

ஆன்மாவிற்குள் எங்கோ இடறி வீழ்கிற எனை சொஸ்தங்களாய் தாங்கிப் பிடிக்கிறது கவிதை  அனுகூல ஸ்தலம் மீது கிடந்து பொன்னொளி மினுங்க இக்கணம் அப்படியே சாய்ந்து கொள்கிறேன். என் இருட்குகையின் எல்லா பாகங்களிலும் எனை பிய்த்த கனவுகளின் குரல்களுக்கு மனநோயின் தளும்புகள் வெண்மையிலிருந்து வேறு நிறத்திற்கு மாறுபட்டிருந்ததை இக்கவிதைகள் எனக்குள் மொழியச் செய்கின்றன.

        உங்களுக்குள் பேசிக்கொண்ட தீராத் தனிமையின் அவஸ்த்தைகளை வலிகளை நிராகரிப்புகளை தனிமொழி சொல்களை மீறி வாசக மன அடுக்ககங்களில் முடுக்கிவிட்ட அக்கணத்தை அருகுபோய் எனை நிறுத்தியிருக்கிறேன்.

        "என் உடலின் தேவைகளைப் புறக்கணித்து மீளும் தருணங்களில் என்னை நான் அதிகம் சந்தித்திருக்கிறேன். எதற்கெனவும் எதுவும் இல்லை. எனினும் உடலிடம் அவரவர் உலகை மீட்டுத் தரும்படி மன்றாடுங்கள்” என நீங்கள் இறஞ்சுகிற பிரார்த்திக்கிற திசை நோக்கி எனை இறுத்தியிருக்கிறேன்.

நான் பனிக் குடத்தில் மூளை உருவாகும் காலத்தில் இருக்கின்றேன் என்பது உங்களுக்கு எது எப்படி  தோன்ற வைத்தது  விதி பற்றிய பிரக்ஞை குழப்பத்தில் இருக்கும் நீங்கள், கையில் பிடிக்கப்பட்ட விளக்கு உங்களின் உருவத்தை நகர்த்துவதென நம்பும் ஒன்றிற்குள் புகுத்திக் கொண்ட விதம் பீடிகைக்கு உற்படுத்தியிருக்கிறது. கருமைக்குள் சிக்குண்டதுபோக எதைப் பிடித்துணருகிறது? உங்கள் மனம் மனப் பிரயாசைப்படும் கணத்தில் 
ஓவென கத்துக்கொண்டு எனக்குள்ளிருந்து பிய்த்துக்கொண்டு ஓருருவம் இருளின் அரவத்தில் உங்களுக்கு முன்னாக ஓடுகின்றன.

"நகரத்தில் இந்நேரம் காவலாளிகள் அலைந்து கொண்டிருக்கலாம் 
ஏதேனும்  ஒரு இருள் தோட்டத்தினுள் பவள மல்லிகள் பூக்கத் துவங்கியிருக்கலாம் . ஒரு கோப்பை பழங்களாலும் சில நூதனமான வார்த்தைகளினாலும் மதுவில் கமழும் பொய்களாலும் அவளை நீ அலங்கரித்திருக்கலாம். உன் காதலிகளின் உடல்கள் மேலும் என் இரவுகளைக் கசப்பாக்குகின்றன. என் நாவு மேலண்ணத்தை தடவுகிறது. மதுவின் வீச்சம் இந்த நிஜவுடலிலிருந்து பவளமல்லி பூக்கும் மணத்தோடு நாசி உறுஞ்சுகிறது. அலங்கரிக்கப்பட்ட அவள் பின்னால் நீளும் நிழலின் கழுத்தின் மீதேறி என் அரூம் நிலைகொள்ளத் தயங்கி நிற்கிறது இப்போது அவ்விரவு அவளின் காதலின் உதடு என்னை புதைத்து குளிர் காமத்தை அடை காப்பதை உணரமுடிகிறது. மீண்டு வர இயலாததின் தவிப்பு அந்நிழல் நடுங்குவதை பதை பதைப்போடு இருநிலையில் நோக்குகிறேன்.

கற்பனைகளால் அலங்கரிக்கப்பட்ட அவள் என்னை எதிர்கொண்ட விதம்  அவள் நரம்பில் என் கண்கள் கிடப்பதை உங்களுக்கு எப்படிச் சொல்வது "அன்பிற்கென நடப்பதே இவ்வுலகின் வலிமையான போராட்டம்" என்று எப்போது சொல்லுமவளை இதோ இப்போது என் ஜெஸியா பார்க்கிறேன்.

எல்லாவற்றையும் ஒரு மரத்தினடியில் இறந்த அவள் நாய்க் குட்டியைப் போல் புதைப்பவளை நீங்கள் இக்கவிதை வரிகள் தாண்டி உள்சென்று கவனித்தால் ஒருவேளை உங்களுக்குப் புரியக்கூடும் . அவள் மனது தவிர மற்றவை மரித்துப் போனதையும் முரணாக ஆழம் என்பது கடலிலும் இல்லையென்பதையும் வாழ்வு அதைவிடக் கீழே நமக்கெல்லாம் கிடப்பதையும் அவள் தன் நாய் குட்டிகளின் கண்களுக்குள் வசிப்பதில் பெரும்பகுதி நிறைவுறுகிறதையும் 
அவளது அறைக்குள் நுழைந்து தனித்த காற்றில் அகலின் நிழலில் வௌவாலாய் அலைவதையும் நீங்கள் காணக் கூடும்.

அவளுக்குள் முற்றுப் பெறாதவொரு காடிருக்கிறது.
பாறைகளின் நீர்க் கசிவைக் கண்ணீரென பாவித்து வருந்திய காலம் அவளது அது அவள் தனிமையின் பிடிமானம் இறுக்கிக்கொண்ட உள் அலறலின் வெளிப்பாடுதான்.

அவனுள் வைராக்கியமாய் உண்டாக்கி வைத்த தசைப்பாறை நீர் அவ்வப்போது அது உலர பட்டாம்பூச்சியின் மேனியில் படிந்த வெயிலென தொலைந்த பருவம் கசந்து வெறுமை தவிர்க்க உண்ணிப் பூக்களின் கரிய கனிகளில் அவள் தனித்து உருவாக்கிய மொழி காடடைந்து கிடந்தன.

"கிராம்பு மரத்துப் பூக்களின் வாசனை காட்டுச் சுனையோடு பாயும் கரைகளில் அவள் உள்ளங்கை ரேகைகள் மரங்களாயின.  முற்றுப் பெறாத அவளுக்குண்டான காட்டிற்குள் என்றேனும் தீயோடு சகலத்தையும் கண்டெடுத்து மூதாதையரை முத்தமிடும்  அவளை இன்னும் நெறுங்கித் தொடர்கிறேன்.

எனக்குள்ளும் காட்டின் பச்சையத்தின் கொடிகள் தொப்பிலிலிருந்து வெண் சாம்பல் நிற மூளைக்குள் அதன் வேர் கைகள் ஊடுறுவி மனித தேவைகளின் நரம்புகளை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

ஒற்றை மாம்பூவாய் நெற்றியில் குறுகுகிற அவள் உயிரை மரணத்தின் இருள் மூளையின் செதில்களை உழுகின்றன. யாருமே தேடிவர இயலாத உணர்வு அவளன் பினை பரிமாறப் படுகையில் உதாசினத்தின் வேருக்கடியில் அவள் குழம்பிச் சாகிறதைச் சகிக்க முடியவில்லை.

அவளுக்குள்ளே அவள் வாழுகிற தனிமையின் வலிமை மிக்க சக்தியின் எல்லா விளிம்புகளிலும் அதன் அனல் பரவிக் கொண்டேயிருக்கின்றது.
சிலநேரம் சபித்தவளின் செவியறைக்குள்ளே மெழுகுவத்தியிலிருந்து ஔியினை விட குரல்களே அதிகம் கேட்கின்றன.

காமத்தின் பின் தொடரலில் ஊற்றுக் கண்கள் கொண்ட ஸ்தனங்களின் ஒலி. அவளது கழுத்தின் மேல் பொன்னையும் மிஞ்சத்தக்க ஆபரணமாய் விழுகிறபோது யாருடனும் பேசாத மௌனம் சப்தமிக்கின்றன. அவளது உள்ளாடையைத் திருடிச் சென்றவனின் காமம் போல் அல்லாது தன் இச்சைகளைக் காலணியென விட்டுவிட்டு கதவைத் தாழிடும் அவளை மிருதாய் சிநேகிக்கத் தொடங்குகிறேன்.

தனிமையிடம் கையளிக்கப்பட்ட இவ்விரவு நிலவின் பின் நகருவதாகவும் மழையின் ஆரவாரம். பள்ளத்தாக்குகளின் அடியில் மரிப்பதையும் அவளுக்குள் ஊறி நிறைந்த வார்த்தைகளால் தன் உறக்கம் தொலைத்திருந்ததையும் நேற்றின் மீது அவள் தாழிடுகையிலேயே என் தொண்டைக்குழி அடைத்துக் கொண்டது. ஆச்சரியமொன்றுமில்லை அவளின் அபிப்பிராயங்களுக்கு மருதாணி பூசிவிட்ட காலப் பிடியில்தான் உறைந்த இரத்தத்திற்கு அன்றின் உப்பை இட்டிருக்கின்றன.

எவ்வளவோ தொலைந்துவிட்டிருந்த வாழ்வின் விநோத காழ்ச்சைகளுக்கு நிலவுக்கு சாம்பலின் அங்கமென அவளால் கணிக்க முடிந்திருக்கிறது. உடலை மேகத்தின் இருட்டில் புதைத்துவிட்டு பூமியின் உச்சியில் முத்தமிட்ட அவளை நான் பகலாகப் பார்க்கிறேன்.

வெளிச்சத்தின் வீச்சில் தனது தண்டனையை முடித்துக்கொள்ளும்போது எங்கோ பூமியில் பேரதிர்ச்சியில் ஒன்று ரூபங்கெட்டு வீழும்போது யாதொரு சலனத்தையும் எங்களுக்குள் நிகழாது போகலாம். சில நட்சத்திரங்களை வழிநடத்திக்கொண்டு மேகங்கள் தொங்கும் வெளியில் கண்களாய் காத்து நிற்கலாம் வெளிச்சம் பரவுவதற்கும் இருள் மூடுவதற்கும் இடையே நியமங்கள் ஏதுமில்லை என்றானபின்னும் (இங்கே நீ என்பதின் ஒருமை விளியை நான் ஆணுக்கே வழங்கியிருக்கிறேன் ஜெஸி)அவன் ஏதோவொன்றை பேசிக் கொண்டிருக்கலாம்.

மின்னல்களில் தொங்கும் தண்டனைகளை அவிழ்க்கிறபோது அப்போது அவன் வராதிருக்க வேண்டுமென சொல்லும் உங்களின் எண்ணவோட்டத்தை அதன் பதற்றத்வனியை கவனித்து நிற்கிறேன்.

திடீரென எங்கிருந்தோ மூன்று முட்டைகளிலிருந்து நீர்க்குமிழியென உடைந்து பெருகி ஒன்றன் பின் ஒன்றாக சிங்கம் குதிரை கொம்புகளுள்ள மான்குட்டிகளுக்கும் மனித சாயலை பூசி நிறுத்துகிற உங்கள் மனம் கற்பிக்கும் ஒன்றை இலகுவாகுவதற்கான தந்திரபோயத்தை இப்படியாக மேற்கொள்கிறது என புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

மனிதநேயம் வேண்டிய அலறல்களின் கூக்குரல்களால் சபிக்கப்பட்ட அந்நிலத்தில் சகக் கூட்டுக்காரியின் கதறலை எதிர்கொள்ள திராணியற்று நிர்மூலமாக்கப்பட்ட இரத்தநிலத்தில் மண்டியிட்டு கைக்குலுக்கிக்கொண்ட உலக நாடுகளுக்கு கேட்கும்படி உரக்கக் கத்தும் மனம் பிறழுக்கு முன்னான நிலைக்கு அழுந்திப்போயிருக்கிறது.

குற்றவுணர்வு மிக்க அவர்கள் கண்கள் ஒரு கணம் அழுகிறதை உயிர்களை குப்பைகளைவிட கீழாய் குவிந்திருந்ததிற்காக இருக்கலாம். மரணம் கையடக்க சாம்பலாகலாம். எங்கள் மண் சர்வாதிகாரத்தால் கரையாது என்றாலும் துரோகிகள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். அப்போது அவளது கண்ணீர்த் துளிகளை ஆகுருதியற்ற கைகளால் சேகரித்து தேசம்தாண்டி சிந்தப்பறக்கிறது. ரூபபட்சி செல்லடியில் வீழ இருந்த தன்னை சமுத்திரம் தாங்கிய அக்கணம் ஒரு இனம் அழிக்கப்பட்ட துயரம் செவ்வலையில் நுரைக்கத் துவங்கியது.

இப்படியாக கவிதைகளின் பரிமாணங்களைப் பிரசவித்திருக்கும் அவளை புதிதாகவே அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. எத்தனை அபத்தமானது 
அநேகமாக இவ்வுலகில் இறந்த முதல் பட்டாம்பூச்சியை நிராசைகளின் ஆதித்தாயாக இருக்கக்கூடுமென சொல்லிக்கொண்டிருப்பவளை கொண்டாடியே ஆகவேண்டும்.

நானும் நீங்களும் கண்டிருக்கிற கேட்டிருக்கிற உணர்ந்திருக்கிற எல்லாவற்றையும் அதிபூர்ணமாக விளம்பியிருக்கிற தேன்மொழி தாஸ்க்கு ஆத்மார்த்தமான சிநேகத்தை வழங்குகிறேன்.

இன்னும் சூசனின் நிலத்தில் சாம்புராணி மரத்துப் பூக்கள் விழுகிறது. மகிராவில் ஆந்தை அலறும் இரவுகள் இருக்கின்றன. மகாமகத்தில் மூளையின் மடிப்புகளை கொத்தித் தின்னும் மனமும் தேவதாரு மரத்தில் வாயில் கதவுகளைச் செய்துக்கொண்டும் இருக்கிறார்கள். புளியமரத்து நிழல் பகலுக்குள் நுழைகிறபோது மகர யாளியோ யானை யாளியோக்கூட அக்காட்டில் பிளிரலாம். அதோடு வாழப் பெண்ணின் தீராத் துயரத்தோடு வாழட்டுமென விட்டிருக்கலாம் மண்ணுள் மாய்வேனென கதறிக்கொண்டு பிறழ்ந்து ஓடுபவளை தூரம்வரை நோக்கியபடி இருக்கின்றன அப்பெரும்வனம்.

கவிதைகளில் சுட்டப்பட்ட வெளி 
காட்சியின் நுட்ப நகர்வு 
வாழ்நிலத்தின் மீதான பெரும்பற்று 
கொஞ்சம் கழிவிரக்கத்தின் சாயல் 
சுயபச்சாதாப தன்மை மேன்மைமிகு கரங்களால் பற்றெடுக்கப்பட்ட தீவிரத்தனம் 
மனநோய்க்கான குறியீடுச் சொற்கள் 
அகம் சார்ந்த பிரதியின்மையின் சலனம் 
ஒவ்வொன்றிலும் வெவ்வேறான நிலைப்பாடு
அதன் முகமிருத்தும்பாவம் முழுக்க 
ஆரண்யக் கன்னியின் பிரசவ வாசம்

இக்கவிதைத் தொகுப்பு முழுக்க உளவியலை உணர்வு ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் நவீன தமிழ்க் கவிதைளில் தனக்கென  ஓருயறிய பாங்கில் விளம்பியிருக்கிற தேன்மொழி தாஸ்க்கு அன்பை  பெருவாரியாகவும் வாழ்த்தை கைகளில்  அளித்து நினைவில் தேங்கி நகர்கிறேன்.

தேன்மொழி தாஸ்
நிராசையின் ஆதித்தாய்
உயிர்மை வெளியீடு

 

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation