• Time to read: 17 minutes
  • 257
  • 0

தலைபிரட்டை

By கே.பாலமுருகன்

சரசு அக்கா தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து முன்னாடி இருக்கும் தலை பிரட்டையைப் பார்த்தாள். அதுவொரு இரக்கமற்ற பார்வை. சதையைத் தின்னத் துடிக்கும் பசி மிகுந்த வேட்டை நாயின் பார்வையை ஒத்திருந்தது.  கண்களை நாலா திசையிலும் உருட்டியப் பிறகு தொண்டை கிழியக் கத்தினாள். ஒரு வாரத்திற்குப் பிறகு இப்பொழுது மீண்டும் சரசு அக்காவிற்குப் பேய் பிடித்திருந்தது. தலையை விரித்துப் போட்டுக் கொண்டு மூடுந்திற்குள்ளேயே அலறினாள். அநேகமாக அருகில் இருக்கும் மற்ற பெண்களுக்கு நகக் கீறல் சதையைப் பதம் பார்த்திருக்கக் கூடும். காயூ பாலாக் பாதையைக் கடந்து போகும் வரை பீதி அனைவரின் முகத்திலும் உறைந்திருந்தது. சரசு அக்கா நாற்காலி மெத்தையை அழுத்திப் பிடித்து தன் உடலை மேலே தூக்க முயன்றாள். கால்கள் இரண்டையும் முடிந்தவரை பரப்பிப் பார்த்தப் பிறகு அது முடியாத போது பாதி நாக்கு பல்லுக்கிடையில் வைத்துக் கடித்தாள். தொண்டைக்குள்ளிருந்து அலறியபோது அவளுடையக் குரல் ஆணினுடையதாக மாறியிருந்தது. உச்சத்தை அடைந்து அடைப்பட்டு குமுறியது.

காயூ பாலாக் பாதையைக் கடக்கும்போது இதுபோன்று அடிக்கடி ஏற்படும். அவர்களுக்கு அது  வாடிக்கையாக இருந்தாலும் மூன்று மாதத்திற்கு முன் இப்படிப் பேய்ப் பிடித்த சுகுனா அக்கா பிறகு தூக்குப் போட்டுக்கொண்டு செத்துப் போனது பெரும் மிரட்டலாக எல்லோர் மனத்திலும் அப்பிக்கொண்டது. சுகுனா அக்காவின் கணவன் ஓடிப் போனதிலிருந்து அவள் பித்துப் பிடித்துதான் இருந்தாள். பிறகு பலகைத் தொழிற்சாலையில் லைனில் வேலைச் செய்யும் குமாருடன் தொடர்பு இருந்து அதுவும் 2-3 மாதத்தில் பிரச்சனையாகிப் போனதால் அவள் மனம் உடைந்து போயிருந்தாள். குமாருடன் உறவில் இருந்த சமயத்தில் தற்காலிகமாக அவளுக்குப் பேய்ப் பிடிப்பதும் இல்லாமல்தான் இருந்தது. ஆனால், அதன்பிறகு அடிக்கடி பேய்ப் பிடித்து அலற ஆரம்பித்திருந்தாள். பேய்ப் பிடிப்பது முதலில் ஒரு அதிர்ச்சியாக இருந்து பிறகு ஒரு வாடிக்கையான சடங்காக மாறியிருந்த காலக் கட்டம் அது. அதைப் புரட்டிப்போட்டது சுகுனா அக்காவின் மரணம்தான். அதுவரை அத்தனை பரப்பரப்பில்லாமல் இருந்த பேய்ப் பிடித்தல் என்கிற விசயம் கொஞ்சம் பீதிக் கிளறத் துவங்கியிருந்தது.

சரசு... வேணாம்கா... வெளிய வா... வெளிய வா. பேய்ப் பிடிச்சா செத்துப் போயிருவடி..” முன்னாடி அமர்ந்திருந்த பாக்கியம் அழுதுகொண்டே அலறினாள். அவளுக்கு உடலெல்லாம் வியர்த்திருந்தது. வழக்கத்தைவிட அன்று பேய்ப் பிடித்தல் நடுக்கத்தை உண்டு செய்தது.

பாக்கியம் சட்டை பாக்கெட்டிற்குள் வைத்திருந்த திருநீர் பொட்டலத்தைப் பயப்பக்தியுடன் வாயில் ஏதோ முனகிக் கொண்டே வெளியில் எடுத்தாள். சட்டென்று பிடிப்படாத ஒரு மந்திர உச்சாடனம் அது. அப்பொழுது அங்கே ஒரு பூசாரி தேவைப்பட்டது. அந்த வேனில் அமர்ந்திருக்கும் எல்லோரும் பலகைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்தபிறகுத்தான் மிகவும் சாமிப் பக்தியாக மாறினார்கள். குறிப்பாக நள்ளிரவு வேலை என்றால் எல்லோரின் பாக்கெட்டிலும் திருநீரும் குட்டி சாமிப் படங்களும் வைக்கப்பட்டிருக்கும். திருநீர் பேயிடமிருந்து மட்டுமல்ல இன்னும் பல அழுத்தங்களிலிருந்தும்  பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரு குறியாகவே அவர்களின் நெற்றியை அலங்கரித்திருக்கும்.

கட்டை விரலில் தடவிய திருநீரை வைக்க முயன்ற பாக்கியத்தின் கையை உதறிவிட்ட சரசு இடைநாக்கை மடக்கி வெளியே பிதுக்கினாள். அவளுடைய கண்கள் சொருகியிருந்தன. அவள் அடுத்து நாக்கைக் கடிப்பாள் என வனிதாவிற்குத் தெரியும். சரசுவின் தலையைப் பின்பக்கமாகச் சாய்த்து இருகைகளையும் தாடைக்கு வாட்டமாகப் பிடித்து எதிர்த் திசையில் இழுத்தாள். சரசுவின் எச்சில் வனிதாவின் முகத்தை நனைத்தது. பல்லுக்கிடையிலிருந்து எச்சில் நுரை பீய்த்து அடித்தது

தலை பெரட்ட சீக்கிரம் போடா... சாவுக்கு வண்டிய நவுத்தர மாதிரில ஓட்டறான்...

சரசு அக்காவை இழுத்துப் பிடித்திருந்த வனிதாவின் குரல் கணத்திருந்தது. தலைபிரட்டை வனிதாவிற்கு மூத்தார். தன் தம்பியின் மரணத்திற்குப் பிறகேவனிதாபலகைதொழிற்சாலையில்வேலைக்குச்சேர்ந்தாள். அதற்கு முன் இந்த மூடுந்தை தலைபிரட்டையின் தம்பித்தான் வைத்திருந்தான். இப்பொழுது அந்த மூடுந்து தலைபிரட்டையின் கைக்குமாறியது. வீட்டுக்கு வெளியே வலது மூலையில் ஒரு கயிறு கட்டில். அதுவும் அவன் படுத்துப் படுத்துத் தொங்கிக் கிடக்கிறது. நாள் முழுக்க பகலையும் வெயிலையும் தின்று தீர்த்தக் களிப்பில் படுத்தே கிடப்பான். அல்லது வெளியில் கிடக்கும் மூடுந்திற்குள்ளேயே படுத்துக் கொள்வான். அந்த மூடுந்துதான் அவனுக்கு எல்லாமும். தம்பி விட்டுப் போன அந்த மூடுந்து முழுக்க தலைபிரட்டையின் வாசம்தான். சட்டென மூடுந்திற்குள் ஏறும் யாராலும் அது தலைபிரட்டையின் மீது வீசும் சாப்பாடு ஊசிப்போன வாடை எனத் தெரிந்து கொள்ள முடியும். பலநாள் அதற்குள்ளேயே படுத்து வாந்தியெடுத்து மயங்கியிருக்கிறான். வனிதாதான் அவனை வெளியே இழுத்து மூடுந்தைச் சுத்தம் செய்வாள். எவ்வளவு கழுவியும் அவனுடைய வாடை அங்கிருந்து நீங்கியதில்லை.

ய்.. மதுரை வீரன் எல்லைக்குப் போயிருடா... வெரைப்பு அடங்கும்பாக்கியம் ஒரு பூசாரியாகவே மாறியிருந்தாள். பேய் இருக்கும் இடத்தில்தானே பூசாரிக்கு மவுசு. கடந்த சில மாதங்களாகவே பேய்ப் பிடிக்கும் பெண்களுக்கு பாக்கியம் அக்காத்தான் பூசாரி. அவள் நெற்றியில் எப்பொழுதும் வசியம் குறையாத திருநீர்பட்டை அடிக்கப்பட்டிருக்கும். பெரிய வட்டமான குங்குமப் பொட்டு. அந்தப் பொட்டுத்தான் அவளை மிரட்டலாகக் காட்டும். முகம் முழுக்க மஞ்சள் பூசப்பட்டிருக்கும். பலகைத் தொழிற்சாலையின் கோடு போட்ட வெள்ளைச் சட்டையும் முழங்காலுக்குக் கீழே விரிந்திருக்கும் கருப்புப் பாவாடையும் அணிந்து கொண்டிருந்தாள். அதுதான் எல்லோரின் சீருடையாக இருந்தாலும் பாக்கியம் அக்காள் அதிலேயே ஒரு தனியான தோற்றத்தில் தெரிவாள்.

பாக்கியம் அக்கா பேய்ப் பிடித்தவர்களை எதிர்க்கொள்ளும் விதம், கையில் வேப்பிலை இல்லாத குறைத்தான். அவள் முதலில் பேய் பிடித்தவர்களின் கண்களைத்தான் உற்று நோக்குவாள். எது பொய் சொன்னாலும் அவர்களின் கண்கள் பொய் சொல்லாது. அது அவர்களைக் காட்டிக் கொடுத்து விடும் என்பார்கள். யாரையும் சந்தேகிக்க வில்லை என்றாலும் அவர்களின் கண்களை ஒரு மருத்துவரின் கவனத்தோடு கூர்ந்து பார்க்கும் பழக்கத்தை முதலில் உருவாக்கியதுபாக்கியம்அக்காத்தான். பேய்ப் பிடித்தால் கண்களைப் பார்த்துதான் கணிப்பார்கள். ஒருவேளை அது ஆணின் பேயாக இருந்தால் கண்கள் அதிக படியாகச் சிவந்திருக்கும் என்றும், பெண் பேயாக இருந்தால் கண் முழியை நான்கு திசைகளிலும் உருட்டிக் கொண்டே இருக்கும் என்றும் திருமணம் ஆகாத இளம் பேயாக இருந்தால் தரையையே பார்த்து வெட்கப்படும் என்றும் குழந்தை பேயாக இருந்தால் கண்களைச் சிமிட்டி சிமிட்டி விளையாடும் என்றும் துறை சாமி பூசாரி முன்பு சொல்லியிருக்கிறார்.

இந்தச் சமயங்களில் காயூ பாலாக் பாதைக்குள் புகுந்து வெளியேறுவதற்குள் தலை பிரட்டைக்கு மூச்சு முட்டும். தனது மூடுந்தின் இரட்டை பல்ப் வெளிச்சத்தைத் தவிர வழி நெடுகிலும் வெறெந்த ஒன்றையும் பார்த்திட முடியாது. சட்டென எதிரில் வந்து விழும் வெட்டு மரத்தை பல முறை மூடுந்து மோதியிருக்கிறது. அதுவொரு வெட்டு மரங்கள் திரள்கள் போடப்பட்டிருக்கும் பகுதி. ஒவ்வொரு வெட்டு மரமும் ராட்சத அளவில் இருக்கும். 4-5 அடுக்குகளில் வெட்டு மரங்களைச் சேர்த்து வைக்கப்பட்டிருப்பதால் சாதரணமாகவே மரக்கட்டைகள் உருண்டு சாலைக்கு வந்துவிடும். அது உருண்டு வந்து சாலையில் குபீர் என விழும் கணம் மண்டை கிரங்கடிக்கும்.

சாலை விளக்குகளே இல்லாத அப்பகுதியில் அது எப்பொழுதும் நிகழும் என வாகன மோட்டிகளுக்குத் தெரியாது. அதனாலேயே தலை பிரட்டைக்குத் தொடை நடுங்கும். கும்மிருட்டைக் கிழித்துக் கொண்டு தைரியமாக மூடுந்தை ஓட்ட மிக மோசமான ஒரு பழக்கம் தேவை. தலை பிரட்டையை எல்லோரும் ஒரு மரக்கட்டை என்றுத்தான் அழைப்பார்கள். சொன்னப்படி கொஞ்சமும் பிசகில்லாமல் மூடுந்தை ஓட்டுவான் தலைபிரட்டை. பின்னாடி உள்ளவர்கள் யார்யாரென்று எந்தப் பிரக்ஞையும் அவனுக்கு அநாவசியம். ஏற்கனவே திட்டமிட்டதைப் போல சொற்களை அடுக்கியே பேசுவான். மூடுந்தில் ஏறும் பெண்களுக்கு முதலில் உள்ளேயிருந்த தலை பிரட்டை என்கிற ஆணின் மிக மோசமான வாடை எரிச்சலூட்டியது. ஆனால், அவர்கள் நாளடைவில் அதைப் பழகிக் கொண்டார்கள். சொல்லப் போனால் அந்த வாடையை அவர்களால் துல்லியமாக நுகர முடிந்தது.

தலைபிரட்டை காலையில் ஒரு நடை, மாலையில் ஒரு நடை , இறுதியாக நள்ளிரவு 12 மணிக்கு ஒரு நடை என மூடுந்தை எடுத்துக் கொண்டு சாவி கொடுக்கப்பட்ட பொம்மையைப் போல ஒரே மாதிரி சுற்றுவான். சவாரியில் வரும் எந்தப் பெண்களிடமும் தலைபிரட்டை அவ்வளவாகப் பேசியதில்லை. பாக்கியம் அக்கா மட்டுமே கொஞ்சம் உரிமையுடன் தலைபிரட்டையை அதட்டுவாள். அவனுடைய முகம் குறுக்கலாக ஒரே இடத்தில் குவிந்திருப்பதைப் போல இருக்கும். கறுத்து மெலிந்திருப்பான். பலமுறை வண்டியை ஓட்டும் போது தன் தலையைத்தானே ஓங்கி தட்டிக்கொள்வான். அது தூக்கத்தைக் களைத்துக் கொள்ள என முதலில் நினைத்தார்கள். ஆனாலும் நிதானமான இருக்கும் கணங்களிலும் அவன் அப்படிச் செய்து கொள்வதுண்டு.

அன்று மூடுந்தை அவன் வழக்கத்திற்கு மாறாக ஓட்டியாக வேண்டும். எதிரில் வந்து குபீரென்று விழும் மரக்கட்டைகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் காயூ பாலாக் பாதையைக் கடந்தாக வேண்டும். ஒரே வாகனம் மட்டுமே வசதியாகச் செல்லக்கூடிய மிகக் குறுகலான பாதை. எதிரில் இன்னொரு வாகனம் வந்துவிட்டால் யாராவது ஒரு ஆள் வழி விட்டு சரிவில் இறங்க வேண்டும். மீண்டும் திமிறி மேலேறி வருவதற்குள் சாலைக்கு இரு மருங்கிலும் இருக்கும் செம்மண்ணைக் கிளற வேண்டியிருக்கும். மரக்கட்டைகள் விழுந்து பள்ளமான சாலை என்பதால் குண்டும் குழியுமாகவே இருக்கும். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம். கடை முற்சந்தியில் பிரியும் வலது சாலையில் நுழைந்து விட்டால் எதிரில் ஜாலான் லாமா மதுரை வீரர் கோவில். சாலையைப் பார்த்தவாறு கையில் அரிவாளுடன் கண்கள் மிரள அமர்ந்திருப்பார். யாரையோ வெட்டிச் சாய்க்க ஆக்ரோஷமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருந்த ஒருவரைச் சிலையாக்கிக் கடத்திக் கொண்டு வைத்திருப்பதைப் போல அச்சிலையில் எப்பொழுதும் ஓர் உயிர்ப்பும் மிரட்டலும் இருக்கும். சட்டென காருக்குள்ளிருந்து கவனக் குறைவுடன் பார்க்கும் கணம் யாரோ நம் மீது பாயத் தயாராக இருப்பது போன்று காட்சியளிக்கும். எல்லோருக்கும் அது வசதியாகவும் இருந்தது. அங்குக் கொண்டு போய் சேர்த்து விட்டால் பிடித்தப் பேய் தானாகச் சமாதானம் ஆகும் என்ற நம்பிக்கை. ஆனாலும், அப்படிப் பேய்ப் பிடித்த பெண்கள் வீடு சேரும் வரை உறுமிக் கொண்டே வருவது நடக்கும்.

தலைபிரட்டைக் குத்தலை சுற்றியது. பாதை ஒரு உருண்டையாக மாறி வளைந்து சுழன்றது. இருள் மூடுந்தைத் தவிர மற்ற அனைத்தையும் கௌவ்வியிருந்தது. சரசு அக்கா இப்பொழுது உச்சத்தில் கதறி குரலை வெடிக்கச் செய்தாள். மீண்டும் சரசு அக்கா முன்னாடி இருக்கும் தலைபிரட்டையைத்தான் கூர்ந்து கவனித்தாள். இப்பொழுது அவள் பார்வையில் ஆக்ரோஷம் பரவியிருந்தது. சரசு அக்கா கணவனை இழந்தவள். வனிதாவிற்கும் அவள் மீது தனி இறக்கமும் கவனமும் இருக்க அதுவே காரணமாக இருந்திருக்கலாம். 3 குழந்தைகளுடன் தன்னந் தனியாகப் போராடி வருகிறாள். பலகை தொழிற்சாலையே கதி என்றே இருப்பாள். முடிந்த வரை காலையில் வேலைக்கு வருபவள் ஓட்டிகிடைத்தால் அதையும் நள்ளிரவு வரை இருந்து செய்துவிட்டுத்தான் போவாள்.

பலகை டீ! ஒன்னும் இல்ல. வெறும் மண்ணு... நசுக்கு! நசுக்கு!”

சரசு மேலும் ஆக்ரோஷத்துடன் மூடுந்திற்குள்ளேயே குதித்தாள். அதுவரை அவளுடைய தோளைக் கெட்டியாகப் பிடித்திருந்த வனிதாவின் பிடி மெல்ல தளர்ந்தது. அவளுக்கு அதற்கு மேல் திராணியில்லை. வனிதா இங்கு வேலை செய்யத் துவங்கியிதிலிருந்து முதலில் இப்படிப் பேய்ப் பிடிப்பது அவளுக்குப் பீதியைக் கொடுத்திருந்தாலும் பிறகு அவளுக்கு அது பழக்கமாகியிருந்தது. சட்டென எழுந்து பிறகு சமாதானம் ஆகும் ஒரு அன்றாடமாகவே அது இருந்தது. தலைபிரட்டையின் மூடுந்தில் ஏறும் பெண்களில் இதுவரை பலருக்குப் பேய்ப் பிடித்த அனுபவம் உண்டு. வனிதாவிற்குப் பேய்ப் பிடித்த பெண்கள் மீது அதீத கவனமும் இறக்கமும் வர என்னவோ காரணம் இருந்ததாகவே அவள் உணர்ந்தாள். பேய்ப் பிடித்துக் கொண்டவர்களின் வீடு வரும் வரை அவர்களை அடக்குவது வனிதாதான். அவள் மட்டுமே உடல்வாகு கொஞ்சம் பெரியதாக இருக்கும். வாட்டம் சாட்டமாகக் காணப்படுவாள்.

முனியம்மா அக்காவிற்கு ஜனவரி இறுதியில் பேய்ப் பிடித்த போதும் கூட வழியில் மூடுந்து பழுதடைந்து விட்டதால் வனிதா வெகுநேரம் முனியம்மா அக்காவுடன் போராட நேர்ந்தது. வண்டியை விட்டுக் கீழே இறங்கி முதலில் தலைபிரட்டையின் சட்டையைப் பிடித்து இழுத்தாள். அவனுக்கும் அது திகைப்பாகவும் அலறலாகவும் இருந்தது. அவன் கையைப் பிடித்து உதறவும் மூடுந்தை விட்டு ஓட முயன்ற முனியம்மா அக்காவை வனிதாதான் தாங்கிப் பிடித்து தம்கட்டினாள். கும்மிருட்டில் அவள் ஓடி சட்டென மறைவது அல்லது காணாமல் போவது வெகு சுலபத்தில் நடந்து விடும் என்பதால் வனிதா ஜாக்கிரதையாக முனியம்மாவைக் கையாண்டாள். கைகள் இரண்டையும் மார்பில் அடித்துக் கொண்டு நாக்கை மடக்கி சுர்ர்ர்ர்... சுர்ர்ர்... என அலறிய முனியம்மாவின் பின்னந் தலைமுடியைப் பிடித்துக்கையில் சுருக்கிக்கொண்டு அவள் நெஞ்சைப் பிடித்தழுத்தி அமர வைக்கும் சாமர்த்தியம் வனிதாவிற்கு மட்டுமே இருந்தது. மல்லுக்கட்டி முடியாத நிலையில் தனக்குப் பின்னே இருக்கும் வனிதாவை ஓரக் கண்ணால் முறைக்கும் முனியம்மாவின் கண்களை வனிதாவிற்கு நன்றாகத் தெரியும். அது அவளுடைய பார்வையே இல்லை. அவளுடைய கண்கள் இப்பொழுது வேறு மாதிரி மாறியிருந்தன. அப்படிப் பேய்ப் பிடித்த ஒரு பெண்ணின் கண்களை மிக சமீபத்தில் பார்த்தது அதுவே வனிதாவிற்கும் தலைபிரட்டைக்கும் முதல் முறையாகும்.

தலபெரட்டெ தூக்கு...” முனியம்மாவை மீறி எழ முடியாத வனிதா தடு மாறினாள். தலைபிரட்டை முனியம்மா அக்காவை மெல்ல தூக்க முயலும் போது முனியம்மாவின் கண்களை அவனால் மிக அருகாமையில் பார்க்க முடிந்தது. கண்கள் சிவந்து சொருகியும் சொருக விடாத படிக்கு மல்லுக்கு நிற்கும் தோரணையிலும் அது வேறொரு நபரின் கண்களாக மாறியிருந்தன. மூடுந்து சரியானதும் வனிதாவும் தலைபிரட்டையும்தான் முனியம்மா அக்காவைத் தூக்கி உள்ளே உட்கார வைத்தார்கள். பேய்ப் பிடித்தாலும் சாமிப் பிடித்தாலும் அவர்களைக் கொண்டு சேர்த்தாக வேண்டும். உயிர் வாழ்ந்து தொலைவதற்கான ஒரு கட்டாயத்தின் உந்துதல்.

இந்தச் சனியன் பிடிச்ச பேய் எங்கருந்துதான் வருதோ...?” பலகை தொழிற்சாலையில் வேலைச் செய்யும் பெண்கள் புலம்பி புலம்பி தீர்த்த வசனம் அது. எங்கிருந்து எந்தக் கணத்திலிருந்து அந்தப் பேய்கள் வருகின்றன என யாருக்கும் தெரிந்ததில்லை. முதலில் அது பேயல்ல பைத்தியம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால், மறுநாள் அவர்கள் சுயநினைவுக்குத் திரும்பும்போது மீண்டும் சாதாரணமாகி விடுவதுதான் ஆச்சர்யமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் நள்ளிரவு வேலை வரும்போது வனிதா மூடுந்தில் தயாராக இருப்பாள். ஏன் எப்படி எனத் தெரியாமல் பேய்ப் பிடித்துத் தொலையும் பெண்களைச் சமாளிக்க அவளிடம் தெம்பிருந்தது. அல்லது வலிந்து அந்தத் தெம்பை அவள் உருவாக்கிக் கொண்டாள். இவர்களைச் சமாளிக்கும் தலைபிரட்டையின் உயிரற்றபார்வை, காலங்களைக் கடந்து தேங்கும் ஓடை. காலத்தின் மீது வெறும் உடலாக மட்டுமே மிதக்கிறார். தலைபிரட்டைக்கும் அவன் தம்பி மூர்த்திக்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அவன் தோற்றத்தில் கொஞ்சம் சுமாரான கலரில் இருப்பான். தலைபிரட்டையை விட கொஞ்சம் உயரமாக இருப்பதோடு அவன் கண்கள் வசீகரமாக இருக்கும். மூர்த்திக்குக் கொஞ்சம் பொம்பளை ஜோறு அதிகம் என்பார்கள். அவன் மூடுந்தில் ஏறும் பெண்களோடு சாவகாசம் இருந்ததாகச் சொல்லப்பட்டு வனிதா வண்டியின் கண்ணாடியை உடைத்துத் தள்ளி மூர்த்தியிடம் மல்லுக்கு நின்றாள். அன்றுத்தான் தலைபிரட்டையின் மனிதாபிமானத்தை வனிதா கண்டாள். மூர்த்தி எட்டி உதைக்கும் போது வனிதாவை அவன் பிடித்துத் தாங்கவில்லை என்றால் அன்றோடு அவள் பின் மண்டை இரண்டாகத் தெறித்திருக்கும். இதுநாள் வரை வெற்றுடல் என நினைத்துக் கொண்டிருந்த, உணர்வற்ற ஜடம் என நினைத்துக் கொண்டிருந்த தலைபிரட்டை திமிர் பிடித்து மூர்த்தியை ஓங்கியடிக்கவும் செய்தான்.

மூர்த்தி குடித்து விட்டு வந்து அடித்தால் ஊரையே கூப்பாடு போடுவாள் வனிதா. முடியை விரித்துக் கொண்டு சாலைக்குள் நுழைந்து மூர்த்தியின் அட்டுழியங்களைத் தம்பட்டம் அடித்துக் கொண்டே ஓடுவாள். மூர்த்தி பின்னாடி ஓடிப் போய் அவளை அடித்துத் தறதறவென இழுத்துக் கொண்டு வருவான். அதன் பிறகு வனிதா அவனுடன் மல்லுக்கு நிற்பது குறைந்திருந்தது. அன்றொரு நாள் வனிதாவைப் பிடித்துத் தூக்கியதோடு சரி, அதன்பிறகோ அதற்கு முன்போ அவன் வனிதா இருக்கும் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டான். தலைபிரட்டையிடம் எந்த மாற்றமும் இருந்ததில்லை. அவன் மீண்டும் செத்த பிணம் போலத்தான் கிடந்தான். போத்தக் கடைக்கு வேலைக்குப் போய்விட்டு வருவதோடு சரி. மூர்த்தியிடம் கோபம் வரும்போது அவனிடம் மல்லுக்கு நிற்கும் வனிதா தலைபிரட்டையின் மீது வெறுப்பு வரும்போது அதிகப் படியாக மங்கையோ குவளையோ அவனிருக்கும் பக்கமாக விட்டடிப்பாள். அவன் அதையும் கண்டு கொள்ளாமல் வெறுமனே தரையைப் பார்த்தப்படி இருப்பான்.

ஒங்காத்தா ஒன்னையெ எதுக்கு பெத்தா... சோத்துமாடு...என எங்கோ பார்த்துப் புலம்பி விட்டுத் தலைபிரட்டையின் பக்கமாகக் காறி துப்புவாள்.

இப்பொழுது தலைபிரட்டை கடை முற்சந்திக்கு வந்து மூடுந்தை வலது பக்கமாகத் திருப்பினான். அவனிடம் பதற்றம் அடங்கிப் போயிருந்தது. மதுரை வீரர் கோவில் பக்கமாக வந்ததும் வண்டியைக் கொஞ்சம் நிறுத்தினான். எல்லோருக்கும் மூச்சிரைத்தது. சரசு அக்காள் வெகுநேரம் அரற்றியதில் இப்பொழுது கொஞ்சமாக உறுமிக் கொண்டிருந்தாள். அவள் கண்களின் சிவப்பு மேலும் கூடியிருந்தது. அவளுக்கு மெல்ல தணியும் கணம் பக்கத்தில் இருந்த வேடி அக்காவிற்குச் சட்டென ஆட்டம் கிளம்பியது. மூடுந்தின் கதவைப் படாரென திறந்தடித்துவிட்டு தலைபிரட்டை அமர்ந்திருக்கும் கதவு பக்கமாக இறங்கி வெறிச் சோடி போயிருக்கும் மதுரை வீரர் சாலையில் இறங்கி கத்திக்கொண்டே ஓட ஆரம்பித்தாள். வனிதா சரசை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

தலபெரட்டெ நீ போவாத...” சரசு அக்காவைப் பிடித்துக் கொண்டே கத்தினாள் வனிதா. தலைபிரட்டை அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இறங்கி அவளுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய படியே ஓடினான். தொழிற்சாலை சப்பாத்தியைக் கழற்றி எறிந்து விட்டு இருகைகளையும் விரித்துக் கொண்டு வேடி அக்கா ஓடினாள். வேடி அக்கா வீட்டில் மூத்தப் பிள்ளை. கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் 10 வருடம் கடந்து வந்து விட்டாள். அவளுக்குக் கீழே இருந்த 3 தம்பிகளுக்கும் அவள்தான் பாதுகாப்பு எல்லாம். பெரிய மாமா அவளுடனே வீட்டில் தங்கி அவர்களுக்குத் தொந்தரவாகவும் சுமையாகவும் இருந்து வந்தார். அவருடைய தொல்லை தாங்காமல் பலமுறை தற்கொலை முயற்சிக்கு இறங்கியவள் தான் வேடி அக்கா.

தலைபிரட்டை காற்றில் களைந்து அலையும் வேடி அக்காவின் பின் மண்டை முடியை எக்கிப் பிடித்தான். பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருப்பதை அன்றுத்தான் அவன் மெச்சினான். இருவரும் சாலையில் விழுந்தனர். அநேகமாக தலைபிரட்டைக்கு முட்டி தேய்ந்திருக்கும். வேடி அக்காள் அவன் பிடிக்கு விட்டுக் கொடுக்காமல் முரடு பிடித்துக் கத்தினாள். நாக்கைக் கடித்துக் கொண்டதில் அவளுடைய வாயிலிருந்து இரத்தம் சொட்டியது. தலைபிரட்டைக் கொஞ்ச நேரத்தில் பதறிப் போனான். மூடுந்தில் இருந்த மற்ற இரு பெண்களும் கையில் வைத்திருந்த பொருளையெல்லாம் கீழே போட்டு விட்டு தலை பிரட்டையை நோக்கி ஓடி வந்தனர். நள்ளிரவு குளிரில் சாலை தனித்திருந்தது. தூரத்தில் எரியும் தூங்கு மூஞ்சி சாலை விளக்கைத் தவிர போதுமான வெளிச்சமும் இல்லை. இருட்டில் வேடி அக்காவின் முகம் பயங்கரமான தாகியிருந்தது.

வேடி அக்கா தரையை இருகைகளாலும் அலசிக் கொண்டே உறுமினாள். பின் வந்த இரண்டு பெண்களும் அவளைக் கெட்டியாகப் பிடிக்கத் தலைபிரட்டை வேறு வழியில்லாமல் அவளைத் தூக்கிக் கொண்டு வண்டிக்கு வந்தான். அவன் வேடி அக்காவை உள்ளே வைத்து அடைத்து விட்டு சட்டென மூடுந்தைக் கிளப்பினான். இப்படி ஒரே தடவை இருவருக்குப் பேய்ப் பிடித்தது இதுவே முதல் முறை என்பதால் தலைபிரட்டையால் சமாளிக்க முடியவில்லை. எப்படியும் இன்று கள்ளுக் கடையில் உடும்பு இறைச்சையைப் பதம் பார்த்தால் தான் அவனுடைய உடல் சோர்வு அடங்கும்.

மூடுந்து ஜாலான் லாமா கம்பத்தை அடைந்ததும் எல்லோருக்கும் ஒரே பரப்பரப்பு. வீடுகள் மெல்ல விழித்துக் கொண்டன. எல்லோரும் சரசு அக்காவையும் வேடி அக்காவையும் தூக்கிக் கொண்டு துரைசாமி பூசாரியிடம் ஓடினர். தூரத்தில் யாரோ மாரியாத்தா கண் இல்லாதவளே எனப் பதறி கத்தும் சத்தம் கேட்க தலைபிரட்டை மூடுந்தை எடுத்தான். வனிதா அமைதியில் உறைந்தாள். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. ஏதோ ஒரு சாகசத்தைக் கடமை உணர்ச்சியுடன் நிறைவேற்றிய ஆசுவாசம் அவளிடம் தெரிந்தது. தலைபிரட்டையின் கண்கள் செத்திருந்தன. அது வனிதாவிற்கு நன்றாகத் தெரியும். அதனைப் பார்த்தால் அவளுக்கு மேலும் எரிச்சல் உண்டாகும். சட்டென அவன் கண்களைப் பிடுங்கி அதில் காறி துப்ப வேண்டும் என அவளுக்குத் தோன்றியது.

மூடுந்து முழுவதும் தலைபிரட்டையின் வாடை. ஓர் அகன்ற நாக்கால் மூடுந்தின் அனைத்துப் பகுதிகளையும் அவன் நக்கியிருப்பான். எங்கும் அது பரவியிருந்தது. அதற்குள் மூடுந்து வீட்டை அடைந்தது. தலைபிரட்டை இறங்கிவிட்டு தரையைக்க வனித்துக் கொண்டே நின்றிருந்தான். வனிதா பெருமூச்சி வாங்க கீழே இறங்கினாள். அதிகாலை மௌனம் அத்தனை ஆபத்தானது என அன்றுத்தான் புதியதாக உணர்ந்தாள். அதுவரை அமைதியாக இருந்தவள் சட்டென கத்திக் கொண்டே தலைபிரட்டையின் மீது பாய்ந்தாள். வெறிப் பிடித்துக் கத்தியவள் பலம் கொண்டு உறுமினாள். அவன் மீது உடைந்து புரண்டாள். மரணத்திற்கு முன்பான ஒரு திட்டமிடப்படாத கரைதல் அது. உடைந்து அவன் மீது நதியானாள். பெருக்கெடுத்தோடும் அவளைத் தடுக்க முடியாமல் தலைபிரட்டை திமுறினான். ஒருவேளை வனிதாவிற்குப் பேய்ப் பிடித்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. பாக்கியம் அக்கா சொன்ன உத்தியை நினைவுப்படுத்துக் கொண்டே திகைப்புடன் அவள் கண்களைப் பார்த்தான். அது எந்தச் சலனமும் இல்லாத வாடிக்கையான வனிதாவின் கண்கள்.  



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation