• Time to read: 02 minutes
  • 479
  • 0

தாழிடப்பட்ட கதவுகள்

By அ.மு.நெருடா

“அண்ணே! அடுத்த வாரம் எனக்குக் கல்யாணம் விட்டுடுங்கண்ணே, அண்ணே ப்ளீஸ்ணே! தொண்டையிலிருந்து கெஞ்சல் வார்த்தைகள் நடு நடுங்கி விழுந்தன”

“பெட்ரோலை ஊற்றியவன் அஸ்ரப்பின் பேண்ட்டை அவிழ்த்து இறக்கினான். ஜட்டியையும் கீழே இறக்கிவிட்டான். அஸ்ரப் அலறினான்”

“அஷ்ரபின் ஆண்குறி செல்வபுர ராமனின் கைகளில் நெறிபட “அல்லாவே அல்லாவே” என அலறினான் அஷ்ரப். செல்வபுர ராமன் “பாரத் மாதா கீ ஜே!” என ஆண்குறியை அறுத்தெடுத்தான்”.

முதல் கதை “மொஹல்லாவின் மையத்துகள்”  படித்தப்போது நெஞ்சு அடைத்து வெடித்துவிடும் போல தோன்றியது. புத்தகத்தை வைத்துவிட்டு சிறிது நேரம் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அடுத்த கதையைப் படிக்கத் துவங்குகிறேன். “மௌத்துக்களின் காலமிது” நெற்றியில் நீண்டு விட்டிருந்த சென்தூரப் பொட்டோடு தர்க்காவின் வாசலை கொலைவெறியோடு உடைத்துக் கொண்டிருந்த ராம பக்தர்களின் கொலைவெறி பிடித்து சிவந்த கண்களைக் கண்டு மிரட்சியுடனே முழுப் புத்தகத்தையும் வாசித்து முடித்தேன்.

ஒவ்வொரு கலவரத்திலும் பாதிக்கப்படுவது சாதாரண ஏழை, எளிய அஷ்ரப்களும், அப்பாசாமிகளுமே. மத வேறுபாடின்றி சமூகமாய் பழகி வந்தவர்கள் சில குறிப்பிட்ட மதவாதிகளின் வெறிக்கு பலி ஆவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபமாக தமிழகத்தில் திட்டமிட்டு அமைதியை சீர்குலைக்கும் முயற்சிகள் வெகு தீவரமாக நடந்து கொண்டுதான் இருக்கிறன.

அ. கரீமின் “தாழிடப்பட்ட கதவுகள்” 1998 கோவை கலவரத்தால் ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட எளிய மக்களின் உண்மையான பாதிப்புகளை ஒவ்வொரு கதையும் வெளிக்கொணருகிறது. இக்கதைகளில் வரும் சில காட்சிகள் மிக அழுத்தமாக நம் நெஞ்சில் பதிந்துவிடிகின்றன. அதுவும் குறிப்பாக மொஹல்லாவின் வீதிகளில் வெள்ளைத்துணியில் சுற்றப்பட்ட உடல்கள் யாரென்று தெரியாமல் அனிபா பாய் ஒவ்வொரு துணியாக விலக்கும் நேரத்தில் பெண்கள் அவர்களது தாலியை பிடித்துகொண்டு தவிக்கும் காட்சியை வாசிப்பவர்கள் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது. நம்மையும் அறியாமல் கண்ணீர் வழிகிறது.

கேரளாவில் இருந்து பிழைக்க வந்த சலீம், வீடிழந்த பாத்திமா, போர்வையை போர்த்திக்கொண்டு அழக்கூட முடியாமல் தவிக்கும் அமானுல்லா-ஆயிஷா, பயன்படுத்தப்பட்டு பின் விடப்பட்ட அருந்ததியன மக்கள் என ஒவ்வொருவரும்நம் நெஞ்சில் நிலைபெற்றுவிட்ட கதாப்பாத்திரங்கள். குண்டு வைத்தான் என்று குற்றம்சாட்டப்பட்டு அகமது கைது செய்யப்பட்டு பின் 17 ஆண்டுகளுக்குப் பின் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்டதை வாசித்ததும் அத்தனை வருடங்கள் வருமானமின்றி தன் குழந்தைகளைக் காப்பாற்ற அகமதுவின் மனைவி பட்டபாடு, ‘குண்டு வச்சவன் பொண்ணு’ என ஜாஸ்மி பள்ளியில் ஏளனம் செய்யப்படுவதும் அதனாலேயே தந்தை மேல் வெறுப்பு கொள்வதும் அப்பப்பா! நெஞ்சை பிழியும் தருணங்கள்.

மதவாத சக்திகளுக்கு எதிராக மக்களை திரட்ட, மதவாத சக்திகளை எதிர்கொள்ள இது போன்ற கதைகள் அனைத்து மக்களையும் சென்றடைவது அவசியமாகிறது. விருப்பு வெறுப்பின்றி அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழும் நம் நாட்டில் இந்தத் தீய சக்திகள் காலூன்றிவிடவேகூடாது. மதக் கலவரங்களில் பாதிப்பிற்கு உள்ளாகும் எளிய ஏழை மக்களின் வேதனையை மக்களுக்கு எடுத்துச் செல்வது ஒவ்வொரு எழுத்தாளரின் கடமை. மதவாத சக்திகளுக்கு எதிரான குரலாக இந்த கதைகள் மக்களை சென்றடைய வேண்டும்.

“தாழிடப்பட்ட கதவுகள் உடைப்படட்டும் அமைதிக்கான நகர்வாய்”

 

நூல்: தாழிடப்பட்ட கதவுகள்

ஆசிரியர்: அ. கரீம்

பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation