• Time to read: 01 minutes
  • 431
  • 0

வாழ்வு சிறுகுடில் மரணம் பெருநெடில்

By அனாமிகா

என் மரணம் சம்பவிக்கும்போது நான்

உறுதியுடன்தான் இருக்க வேண்டும் 

என் கால்சட்டையும் மேலுடுப்பும் 

கசங்காமல் இருக்க வேண்டும்

 

தொடர்ந்து சங்கிலிபோல் 

9தாவது சிகரெட்டின் நிக்கோடியன் சாம்பல் 

ஆஸ்டிரேவில் தாமதமாய் உதிரும்போது 

நான் தற்கொலைக்கு தயாராக வேண்டும்

 

பிடித்த மது நிறைந்த குப்பி 

பகுதி தீர்ந்த நிலையில் 

எனக்கெதிர் மேசையில் நடுக்கமின்றி 

நான் வைத்திருக்க வேண்டும்

 

அதோ என் மரணத்தை கொண்டாட 

சில பல்லிகளும் கரப்பான் பூச்சிகளும்கூட 

வந்து சேர்ந்திருக்கின்றன

 

அறைக்குள் மூஞ்சி எலியும் பெருச்சாலியும் 

கீச் கீச் கீச்சென சப்தமிட்டு களிக்கின்றது

என் கண்கள் ஈரம் நிரம்பி வழிகின்றன

அதோ மீண்டும் என்னை அழைக்கும் குரலுக்கு

 காரூண்யத்தின் நாவு பலவாக இருக்கின்றது

 

உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை 

நான் சர்வநிச்சயமாக மரணத்தை நேசிக்கிறேன்

ஒரு போதும் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத துயரத்தை என் ஆன்மா கொண்டிருக்கின்றது  

 

ஏதோ இனம்புரியாத வலி அழுந்துகின்றது   

தனிமைபடுத்திக்கிற மனதின் ஆசுவாசம் மீது 

நோய்மை மிகுந்த இருள் கவிகின்றன

 

பெரும்பித்தாகி அலைகிற 

வாழ்வின் கடிகை  

மணற் சரிகையைப்போல்  

இரண்டிரண்ட நீர்த்துளிவடிவ இருத்தலுக்குள் அவகாசமிட்டு சரீரக் குடுவைக்குள்

சரிந்தபடி வீழுகின்றன

 

மறுதலித்தலைக்குறித்து 

யாதொரு புகாரும் என்னிடமில்லை 

என்றபோதிலும் சிநேகம்கொள்ளும் 

எவரிடமும் பேச மறுக்கிறேன்

 

இந்த நிசியின் குளிர்மை மலையடிவார வீட்டில் உறங்கிக்கொண்டிருப்பவளை

ஆழுணர்வில் காணுகிறேன்

கனவின் மகரந்த வெளிகளில் 

அவள் என்னை சல்லாபித்துக்கொண்டிருக்கக்கூடும்

 

தயவுசெய்து நாளை 

என்னுடலை தனியாக காண 

அவளுக்கு பிரத்தேகமாக அனுமதியளியுங்கள்

 

என்னை கொஞ்சம் முதலும் கடைசியுமாய் 

கட்டியணைத்துக்கொண்டு கதறி அழட்டும் 

அவளுக்கு ஆறுதல் என்ற பெயரில் 

உங்கள் சொற்களால் காயப்படுத்தாதீர்கள் 

பாவம் அவள் அழுதே தீர்க்கட்டும்

 

இந்த உலகில் நிர்மாணிக்கப்பட்ட

ஓழுங்கீனங்களின் முன் என்னை

நிர்வாணப்படுத்தி  நிறுத்தியிருக்கிறேன்

 

இந்த மையஇரவைத்தாண்டும் 

எனக்கான உயிர் காற்றை 

இறுதியாய் சுவாசித்துவிட்டு

விலையுயர்ந்த திரவ விசத்தை 

தொண்டைக்குள் லாவகமாய் 

அன்னாந்து ஊற்றுகிறேன்  

அது சிறுநாவு தீண்டி 

சன்னக் கசப்போடு இறங்கும்வரை 

அவளை நினைத்துக்கொள்கிறேன்

 

சின்ன வலி உயிர்பிரிவு 

ஆஹா எவ்வளவு சுதந்திரம் 

எவ்வளவு அற்புதம் 

எவ்வளவு  பேரானந்தம்

வாழ்வு சிறுகுடில் மரணம் பெருநெடி

 

 

 

 

 

 

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation