• Time to read: 07 minutes
  • 527
  • 0

கூலி

By சு.மோகன்ராஜ்

“காத்தாடி! டேய்காத்தாடி”, என்று அழைத்துக் கொண்டே காத்தாடி வீட்டிற்குள் நுழைந்தான் சின்னமணி.  காத்தாடி சாப்பிட்டு கொண்டிருந்தான். நல்ல வேளை வீட்டில் காத்தாடிங்க சின்னம்மா இல்ல. இருந்துச்சுன்னா அவ்வளவுதான்! நல்லா வசவு விழும். ‘முனியாண்டி' என்கிற பெயரை ‘காத்தாடின்னு' கூப்பிட்டா, பெரியவனா ஆன பிறகும் அதே பெயராக மாறிவிடும்னு பயங்கரமாக கோபப்படும்.”

“சீக்கரம் சாப்பிடுடா, இன்னைக்கு முசுறு கிணத்து பக்கத்து குண்டுலதான், கதிரு அறுக்குராங்க. அங்க கதிரு பொறக்க போகலாம்டா”, என்று சின்னமணி கூற, சின்னமாவின் பழையத் துணியை எடுத்துக்கிட்டு வேகமாக முசுறு கிணற்றை நோக்கி காத்தாடியும், சின்னமணியும் நடக்க ஆரம்பித்தனர்.  “உங்க அம்மா எங்கடா கதிர் அறுக்க போயிருக்காங்க”, என்று கேட்டான் காத்தாடி. “வெள்ளச்சாமி மாமா ‘கொத்துல' தான்டா” என்று சின்னமணி கூற, “சரி, சரி, வா”! போகலாம், என்று நடக்க ஆரம்பித்தனர்.”

“டேய்! சின்னமணி, திங்கட்கிழமை,” அ”ன்னா, ”ஆ”வன்னா”, முழுசா எழுதி காட்டணும்னு, பாய் வாத்தியார் சொல்லிருக்காருடா”, “நீ எழுதிகாட்டிருவியா?” என்று காத்தாடி கேட்க,” டேய்! அதெல்லாம் எத்தனை தடவ ஒன்னாவதிலிருந்நு நாலாவது வரைக்கும் எழுதி காமிச்சுருப்போம், அஞ்சா வகுப்புலேயும் எழுதி காமிச்சிட்டா போச்சு”, என்று சின்னமணி கூற, “நம்ம காஞ்சிவனம்தான் செத்தான், பாவம்! ல,ழ,ள மட்டுந்தான் மாத்தி, மாத்தி எழுதிருவான்டா”, என்று காத்தாடி கூறினான்.

சின்னமணி, தன்டவுசர் பாக்கெட்டிலிருந்து 25 பைசாவை எடுத்து, பொன்னம்மா கடையில் ‘காசுமிட்டாய்’ வாங்கினான். மிட்டாய் கவருடன் பல்லில் வைத்து கடித்தான் சின்னமணி. உள்ளே காசு இல்லை, காத்தாடியும், சின்னமணியும் ஆளுக்கு பாதியைவாயில் போட்டுக் கொண்டு முசுறுகிணற்றை வந்தடைந்தனர்.

கதிர் அறுத்து வயலில் தொகுப்பாக வைத்துவிட்டு, எல்லோரும் மர நிழலில் கஞ்சி குடித்துக் கொண்டிருந்தனர். பிறகு ,பெண்கள் எல்லாம் கதிர் தொகுப்புகளை அள்ளி, அள்ளி கொடுக்க, வைக்கோல் பிரியில் வைத்து,  ஆண்களெல்லாம் கதிர் தொகுப்புகளைக் கட்டுகளாக கட்டிக் கொண்டிருந்தனர். அதில் ஒரே ஒரு கட்டு மட்டும் பெரிய கட்டாக இருக்கும். அதை “கொத்தனார் கட்டு” என்றுதான் கூறுவர்.

கொத்தனார் கட்டைத் தூக்கிவதற்கு இள வட்டங்களிடையே போட்டி இருக்கும். “எப்போதும் மன்னார் அண்ணேதான்டா தூக்குவாரு” என்று காத்தாடி கூற, “இல்லடா! முத்து பாண்டி அண்ணேதான் தூக்குவாரு, நேத்தே எங்கிட்ட சொல்லிச்சு” என்று சின்ன மணிகூற, வழக்கம் போல, மன்னாரு அண்ணன்தான் தூக்கினார். கொஞ்சம் வயதானவர்கள், மற்றவர்களுக்குக் கதிர்கட்டுகளைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டிருந்தனர்.

“ஏம்மா !பள்ளிக்கூடத்துக்குப் பின்னால இருக்கிற களத்துல போடுங்கம்மா”! “ரெண்டாவது நடவாங்கம்மா” “அப்புறமா இராமலிங்க வயலுக்குப் போகலாம்” என்று வெள்ளச்சாமி மாமா உரத்தக் குரலில் கத்தினார். வரிசையாக நெற்கட்டுகள் களத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. சின்னமணியும், காத்தாடியும் கதிர்கட்டுகளில் இருந்து சிதறிய கதிர்களைச் சேகரித்துக் கொண்டே களத்து மேடு வரை சென்றனர்.

களத்தில் சின்னமணியின் அம்மா, இவர்களைப் பார்த்து, “லீவு விட்டா, வீட்ல இருந்தோம்ன்னு இல்லாத ஏன்டா? வேகாத வெயில்ல இப்படி திரியீரிங்க” என்று கேட்க, “அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என்றான் சின்னமணி. “விடுக்கா! கதிர பெறக்கி, அவிங்க, வாங்கித் தின்ன வச்சுக்கு வாய்ங்கல்ல” என்றார் வளர் சித்தி. சின்னமணியின் அம்மா அவனை வாஞ்சையோடு பார்த்து விட்டு ரெண்டாவது நடை சென்றார்.

சின்னமணி, காத்தாடி கைகளில் நிரம்ப கதிர்கள் இருந்ததால் களத்திற்கு பக்கத்து வீட்டில் வைத்துவிட்டு, தண்ணீர் குடித்துவிட்டு, மீண்டும் வயலை நோக்கி நடந்தனர். இரண்டாம் நடை கதிர்களைத் தூக்கியவுடன், வயலில் சிதறிய கதிர்களைச் சேகரித்தனர். பிறகு முசுறுகிணற்றுப் பக்கத்தில் கதிர்களைப் பத்திரமாக வைத்துவிட்டு, கிணற்றுக்குள் தாவினர். இரண்டு பேரும் மோட்டார் அறையின் மீது ஏறி நின்று கொண்டு கடப்பாறை , சொரக்கா நீச்சல் போட்டு கும்மாளம் இட்டதில், மோட்டார் அறை, சுவர் அனைத்தும் தண்ணீர் தெரித்து ஈரமாகிப் போனது. புறப்பட தயாரான போது,

“டேய்! முசுறு வாராருடா! வேகமாக வாடா காத்தாடி”, என்று விரைவு படுத்தினான் சின்னமணி. முசுறு, இவர்களைப் பார்த்து, தூரத்திலுருந்தே வைய ஆரம்பிச்சட்டாரு. ஏன்னா? சின்ன பசங்க குளிச்சாவே, மோட்டார் கிணற்றை ஈரமாக்கி விடுவார்கள் என்று அவருக்குத் தெரியும். அதனாலே சின்ன பசங்கள கிணற்றில குளிக்கவிட மாட்டாரு.

அவருடைய பட்ட பெயர்தான் முசுறு. உண்மையான பெயர் அய்யனண். ஏன் முசுறுன்னு கூப்பிடுறாங்கன்னு தெரியவில்லை. கிணற்று பக்கதிலேயே ஒரு கொய்யாமரம், மிகவும் சுவையான பழத்தை தன்னகத்தே கொண்டது. ஆனால், அதன் பழத்தைப் பறிக்கனும்னா, முசுறு இருக்கக்கூடாது. அப்படியே மரத்தின் மேல் ஏறினாலும் ,கொய்யா இலைகளால் ஆன எறும்புகூடுகள் நம்மைப் பதம் பார்த்துவிடும். அந்த முசுறுகடிகள் எல்லாம் வாங்கி கொண்டு பழத்தைப் பறிச்சு தின்றதுல, அலாதி பிரியம் சின்னமணிக்கு. அதனாலயே முசுறு இல்லாத நேரமா பார்த்து, கிணற்றுல குளித்து விட்டு, கொய்யா பழத்தைத் தின்றுவிட்டு போவதுதான் விடுமுறை நாட்களில் சின்னமணியின் வழக்கம். ஆனால் இன்றைக்கு முடியவில்லை.

 

அப்படியே, இரண்டு பேரும் திண்ணையில் வைத்துவிட்டு வந்த கதிர்களை எடுத்துக் கொண்டு அவரவர் வீட்டை சென்றடைந்தனர். குளித்து விட்டு வந்ததில் சின்னமணிக்குப் பசித்தது. சென்று பானையைப் பார்த்தான், பழையக்கஞ்சி, பக்கத்தில் மோர் கிண்ணம் இருந்தது. கஞ்சியைக் கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, கொஞ்சமாக உறைக்கு மோர் எடுத்து வைத்துவிட்டு, பழையக் கஞ்சியில் மோரை ஊற்றினான். ஐந்தாறு உப்புகல்லை போட்டு, சின்ன வெங்காயத்தை உரிச்சு, உரிச்சு கஞ்சி கிண்ணத்துல போட்டு, உப்புக்கல் கரையும் வரை கரைத்தான். அப்படியே சோற்றோடு ஒரு சின்ன வெங்காயத்தை உள்ளே வைத்து, வைத்து சாப்பிட்டு, கடைசியாக கஞ்சித் தண்ணீரைக் குடித்தான். வயிறு புடைப்பாயிற்று. அப்புறம் கொஞ்ச நேரம் தூங்கினான்.

சின்னமணியின் அம்மா , கதிர் அறுத்து விட்டு ஐந்து மணிக்கு வீட்டிற்கு வந்தார். “டேய்! சின்னமணி, சின்னமணி! எந்திரிப்பா, கடைக்குப் போயிட்டுவா”, என்று எழுப்ப, முகம் கழுவிக் கொண்டு , “என்னமா வாங்கனும்”னு கேட்டான். ந.எண்ணெய் 2ரூபாய்க்கு, புளி 50 பைசா, சீரகம் 25 பைசாவுக்கு, கடுகு 25 பைசாவுக்கு குவாங்கிட்டுவா” மத்ததெல்லாம் இருக்கு “,என்று மூன்று ரூபாயும் வயர் கூடையுல எண்ணெய் கிண்ணமும் வைத்துக் கொடுத்தார். “எனக்கு வாங்கி தின்ன காசு” என்று சின்னமணி கேட்க, அம்மா 25 பைசா கொடுத்தனுப்பினார். கடைக்கு வேகமாக ஓடினான். பொன்னம்மா கடையில, கொஞ்சம் கூட்டமாகதான் இருந்தது. பதினைந்து நிமிடம் நின்று அம்மா சொன்ன பொருட்களோடு, விரலு அப்பளம் ஐந்து விரல்களில் மாட்டிக் கொண்டு ஒவ்வொன்றாக தின்று கொண்டு வீட்டுக்கு சென்றான், அம்மாவிடம் ஒரு அப்பளத்தைக் கொடுக்க வாங்க வாயில் போட்டு கொண்டே, “அம்மாவுக்கு வெங்காயம் உரிச்சு கொடுப்பா” என்று கேட்க ,வேண்டா, வெறுப்பாக வெங்காயத்தை உரித்துக் கொண்டிருந்தான். “சின்னமணி! “ஏழு மணிக்கு மேல, பள்ளிக்கூடத்து களத்துல கூலி போடு வாங்க, நீ கோணிய எடுத்துக்கிட்டு போ, அம்மா குளிச்சிட்டு வந்திடுறேன்னு” கூற சரியென்று தலையாட்டினான்.

ஏழுமணி ஆயிற்று. “பஞ்சக்கா!, பஞ்சக்கா!, கூலி வாங்க நேரமாச்சு, வாக்கா!” என்று வெளியில் இருந்தபடி வளர் சித்தி கூப்பிட, “இந்தா, என் மகன் வாராண்டி” கோணிய எடுத்து கிட்டு வரச் சொல்றேன்” என்றா ர்உள்ளிருந்தவாரே.

சின்னமணி கோணிய எடுத்துக் கொண்டு களத்தைச் சென்றடைந்தான். அப்போதுதான் கதிர் அடிக்கற வண்டி வெளியேறி கொண்டிருந்தது. இரண்டு நெற்குவியல் குவித்து வைத்திருந்தனர். வைக்கோல் படப்பு களத்திற்கு வெளியே வேயப்பட்டிருந்தது. வெள்ளைச்சாமி மாமாவும், தங்கராசு தாத்தாவும் வயல் உரிமையாளரிடம் கூலியைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர். கூலி முடிவான பின்னர், தங்கராசு தாத்தா, வரிசையாக பெயர்களை கூப்பிட, முத்து பாண்டி அண்ணனும், வெள்ளைச்சாமி மாமாவும் கூலியை அளந்து போட்டனர். மன்னாரு அண்ணண் கூலி வாங்கியவர்களின் எண்ணிக்கையை நெல்மணிகளை கொண்டு குறித்து கொண்டிருந்தார்.

“பஞ்சு!” என்று கூப்பிட , சின்னமணி ,கோணியின் வாய் பகுதியை விரித்து, சற்றே தாழ்வாக பிடித்தான். “ஏம்மா,! வளரு, கோணிய ஒழுங்கா பிடிக்கச் சொல்லி கொடுங்கம்மா” என்று சத்தம் போட ,வளர் சித்தி சின்னமணியுடன் சேர்த்து கோணியைப் பிடித்தார். கூலியை வாங்கி தூக்க முடியாமல் தூக்கி ஓரமாக வைத்தான். அனைவரும் வாங்கியப்பின், நெற்குறிகளின் எண்ணிக்கையை சரி பார்த்தனர். சரியாக 44 பேர் இருந்தது. இறுதியாக ஐந்து மரக்கா நெல் மீதம் இருந்தது.” ஆளுக்கு, ஒரு செரங்கை வாங்கிக்கங்க” என்று வெள்ளைச்சாமி மாமா கூற அனைவரும் வாங்கியபின்  ,கோணியைத் தலையில் வைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்தனர். சின்னமணி, வளர் சித்தியிடம், “சித்தி எங்கம்மாவ வரச் சொல்லுங்க” “வரச் சொல்றேன்”னு சொல்லி விட்டு நடந்தார்.

சின்னமணியின் அம்மா வந்து கோணிய தூக்கும் போது “எவ்வளவுடா கூலி போட்டாங்க” என்று கேட்க “பொம்பளையாளுக்கு, நாலுமரக்கா, ரெண்டுசேரு, ஒருசெரங்கை ஆம்பளை ஆளுக்கு அஞ்சுமரக்கா, ஒரு செரங்கை” என்று கூறினான்.

சின்னமணி, அடுத்தநாள், தங்கராசு தாத்தாவிடம்,” ஏன் தாத்தா பொம்பளை ஆளுங்களுக்கு, ஆம்பளை ஆளுங்களை விட கூலி குறைச்சு போடுறீங்க” என்று கேட்க ,அதெல்லாம் “அப்படிதான்டா, உனக்குப் புரியாதுடா” என்று கூறி கொண்டே நடந்து சென்றார்..

 

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation