• Time to read: 03 minutes
  • 487
  • 0

எலியின் கருணை மனு

By சாரதி

மரணத் தண்டனை விதிக்கப்பட்ட யாருக்கும் கருணை மனு அளிக்க உரிமை உண்டு. எல்லா உயிர்களும் தன்னை காத்துக் கொள்ள கடைசி நிமிடம் வரை அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அந்த உரிமை எல்லா உயிர்களுக்கும் உண்டு. என் வீட்டுப் பொறியில் சிக்கிக் கொண்ட எலிக்கும் உண்டு. ஆச்சரியப்பட வேண்டாம். நேற்று எங்கள் வீட்டுப் பொறியில் ஒரு எலி சிக்கிக் கொண்டு பரிதாபமாக அது பார்வையால் அளித்தக் கருணை மனுவை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.

 

அன்புள்ளம் கொண்ட ஐயா,

ஒரு துண்டு மசால் வடைக்கு ஆசைப்பட்டு மரணத்தின் விளிம்பில் நிற்கும் ஒரு எலியாகிய என் கருணை மனு இது. கடைசி மனு என்று கொண்டாலும் தவறில்லை. உங்களுக்கென்று நீங்கள் கொண்ட சட்டங்களை மிக நுணுக்கமாக வகுத்துக் கொண்டுள்ளீர்கள் என்பதை அறிவேன். தண்டனைகள் குற்றத்தின் தீவிரத்துக்கேற்ற அளவில் ,உரிய விசாரணைகள் நடந்தியப் பின், குற்றம் சாட்டப்பட்டவருக்கு முழு வாய்ப்பும் வழங்கப்பட்டு, பின்னர்தான் தண்டனை என்று மிக அழகாய் வகுத்துக் கொண்டுள்ளீர்கள். ஒரு நபர் செய்தக் குற்றத்துக்கு மற்றவரை தண்டிப்பதோ அல்லது அந்தக் குற்றவாளியின் இனம் முழுவதற்கும் தண்டணை அளிப்பதற்கோ உங்கள் சட்டத்தில் இடமில்லை. அதிலும் மரணத் தண்டனை அரிதிலும் அரிதான சந்தரப்பங்களில் மட்டுமே அளிக்கப்படும் என்பதையும் அறிவேன்.

 

ஐயா!

நான் செய்தக் குற்றம் என்னவென்றே எனக்குத் தெரியாது. அது மட்டுமல்ல. தண்டனையை முடிவு செய்தப் பின்னர்தானே என்னை கைது செய்து அடைத்து இருக்கின்றீர்கள். அதுவும் தண்டனை குற்றம் செய்தவனுக்கில்லை. கையில் கிடைத்தவனுக்கு, தண்டனையின் நோக்கம் குற்றங்களைக் குறைப்பதாகயில்லாமல் ஓர் இனத்துக்கு விடப்பட்டக் கொலை மிரட்டலாகத்தானே இருக்கின்றது. உங்கள் பாஷையில் சொன்னால் இது டெர்ரரிசம், இல்லையா.?

 

ஐயா!

நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் தண்டனைகள் கொடூரமானவை. ஏதோ ஒரு மருந்தை நாங்கள் சாப்பிடும் உணவில் கலந்து ,அதைத் தின்றதால் தண்ணீர் தேடி ஓடிக் களைத்துக் கண் காணாத இடத்தில் இறக்க வைக்கின்றீர்கள். யோசித்துப் பாருங்கள். உலகில் எந்த ஜீவன்களாவது மற்றொரு ஜீவனுக்கு உணவில் விஷம் கலந்து கொல்வதுண்டா?  உங்களில்  ஒருவன் உங்களுக்குச் செய்யும் தீங்கைவிடவா நாங்கள் உங்களுக்குச் செய்து விடுகின்றோம்? சமீபத்தில் மூன்றரை வயது பெண் குழந்தையைச் சீரழித்து கொலைச் செய்தவனுக்கு ஜாமீன் கிடைத்து வெளியில் உலவுகின்றான். அவன் தண்டனைப் பெற எத்தனை காலம் ஆகும். ஒருவேளை தண்டனையே இல்லாமல்கூட தப்பிக்கலாம். ஆனால், நான் இன்று என்ன குற்றம் செய்தேன் எனக் கூட தெரியாமல் உங்களிடம் மன்றாடிக் கொண்டு இருக்கின்றேன். உண்மையில் எங்கள் மீதுள்ள வெறுப்புக்குக் காரணம் எங்களது நிறம் மற்றும் நாங்கள் வசிக்கும் இடத்தின் காரணமாகக்கூட இருக்கலாம். ஆம்! எங்கள் இனத்தைச் சேர்ந்தவைதான் முயல்கள். அவைகளை நீங்கள் எப்படி ரசிக்கின்றீர்கள்? அவைகளும் உங்கள் உணவுப் பொருட்களை நாசம் செய்பவைகளே. அணில்களும் அப்படிதானே! அவைகளை இப்படியா நடத்துகின்றீர்கள்? இன்று உங்கள் நோய்களுக்கு எதிராக எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு மருந்துக்குப் பின்னும் எங்களின் எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன என்பது நீங்கள் அறியாத ஒன்றா என்ன ?

 

ஐயா!

உங்களுக்குள் சமநீதி, சமூக நீதி என்று பேசுபவர்கள் மற்ற உயிர்களிடத்து என்ன சமநீதி காட்டுகின்றீர்கள்? யானையோ காட்டு எருமையோ உங்கள் பயிர்களை நாசம் செய்யும் பொழுது அவைகளை விஷமிட்டா கொல்கின்றீர்கள்? அல்லது பொறியிட்டு பிடித்துக் கொல்கின்றீர்களா? பிடித்துப் பத்திரமாக திரும்ப அதன் இருப்பிடத்திற்கு அனுப்பி வைப்பீர்கள். அவைகள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள். அப்போது நாங்கள்?

 

ஐயா !

உங்கள் உணவுப் பொருட்கள் எங்களால் வீணாகின்றது என்று சொன்னால் ஒவ்வொரு விருந்திலும் வீணாவதை விட குறைவே. உங்கள் துணிகளைக் கிழித்து விடுகின்றோம் என்பீர்கள். நீங்கள் நாகரிகம் எனக் கருதி உடுத்தும் உடைகளைக் கிழித்துத்தானே உடுத்துகின்றீர்கள். உங்கள் உணவை நாங்கள் தின்று விடுவதாகச் சொல்லாதீர்கள். உங்களுக்குச் சேர வேண்டிய தானியத்தில் உங்கள் பெயர் இறைவனால் எழுதப்பட்டிருந்தால் எங்களால் அதைத் தடுக்க முடியாது. நோய்களைப் பரப்பி மரணம் ஏற்படுத்திக் கொன்றோம் என்பீர்கள். போரினால் உங்களுக்கு ஏற்பட்ட சாவைவிட இதில் ஏற்பட்ட மரணங்கள் குறைவே! என் மீது அல்லது எங்கள் மீது குற்றமே இல்லை என்று சொல்லி இந்தக் கருணை மனுவைச் சமர்ப்பிக்கவில்லை. வருடா வருடம்  விநாயகர் சதுர்த்தியன்று மூஷிக வாகனனைக்  கொண்டாடினீர்கள். அந்த மூஷிகத்தின் மேல் இரக்கம் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். இப்படியே நீங்கள் அதிகமாகிப் போனால் என்று அஞ்ச வேண்டாம். எங்களைப் படைத்தப்போதே இயற்கை ஏராளமானப் பாம்புகளுக்கு எங்களை உணவாக படைத்து விட்டது. நாங்களும் வாழ வேண்டும். வாழ எங்களுக்கு உணவு வேண்டும், அதனால், இந்த மனுவை ஏற்று எங்களைக் கொல்லாமல் விடுங்கள்.

 

இப்படிக்கு,

பூனைகளுக்குத் தப்பிப் பொறியில் சிக்கிக் கொண்ட மூஷிகன்.

 

 

 

           உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation