• Time to read: 15 minutes
  • 834
  • 0

பேய் வீடு

By ஜி.எஸ். தேவகுமார்

பரபரப்பான  இந்தக் காலத்தில் வாடகை வீடு தேடுவது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். அந்த சிரமத்தை மனது சகித்தே ஆக வேண்டும். காரின் வேகம் குறைந்ததும் மெதுவாக அந்த தாமானுள்ளே நுழைந்தேன். மூன்று மாடி வரைக்கும் மேகத்தின் அருகில் சென்று ரசிக்கும் பேராசையின் அடையாளமாய் ராட்சத வீடுகள். சைனா டவுன் வாடை மத்தியில்  தமிழர்கள் வீடுகளைத் தேடினேன். ஒரு அடையாளத்தையும் காட்டவில்லை. ஒரு பிள்ளையார் சிலை மட்டும், வீட்டின் முன் என்னை வரவேற்றது. அலைந்து அலைந்து வீடு எங்கும் கிடைக்கவில்லை. மீண்டும் சண்டைக்காரனின் காலில் விழுவதுதான் வழி. அவனிடம்  நாள் அவகாசம் கேட்க வந்தேன். பிள்ளையாருக்கு பின்னிருந்த இரண்டு பெரிய குட்டி டைனசோர் நாய்கள் குரைக்காமல் என்னை நெருங்கின.  குரைக்கும் நாய்களை கூட நம்பி விடலாம். உற்று பார்த்தே கலங்க வைக்கும் நாய் எந்நேரத்திலும் தாக்கும் பயம் அண்டியது. வாசல் இரும்புக் கதவை திறந்து எகிறி குதித்து காரினுள் சிறையானேன். நாய்கள் இரண்டும் வீட்டு வாசலை தாண்ட வில்லை. நீண்ட நாக்கை நீட்டி எச்சில் வடிய என்னை முறைத்துப் பார்த்தன. தாக்குவதற்கு அனுமதி தர தாமதம் ஆகியிருக்கலாம். வளர்த்தவன் போட்ட கோட்டை தாண்டாத இந்த நாய்கள் சட்டென்று பாய்ந்தால்... கற்பனை செய்து பார்க்க முடியாமல் கண்ணை இறுக்கி மூடி கொண்டேன். அங்கும் காட்சிகளே நாயின் உருவமாக...


உள்ளேயிருந்து ஒரு சீனக் கிழவன் மெதுவாக நடந்து வந்தான். அவன் பின்னால் அரைகுறை ஆடையில் வீட்டின் வாசல் கதவின் மேல் சாய்ந்துக் கொண்டு அப்பாவியாக ஏதோ ஏக்கத்தில் பார்த்தாள் அவனின் மகள். என்னைவிட வயது குறைவாக இருக்கும். அவன் மலாய் மொழியை சீன மொழி பாணியில் பேசியது முழுமையாக புரியவில்லை. மலாய் மொழியை அரை வேக்காடாக பேசினாலும் சொகுசு கப்பல் போன்ற வீட்டில் வாழ்கின்றான். அவனுக்கென்ன, சொகுசாக வாழ மொழி அவனுக்குச் சிக்கல் இல்லை. ஆனால், அகிலன்,  மலாய்மொழியில் சந்தேகம் கேட்கும்  மலாய்க்காரர்களுக்கு பாடம் சொல்லி தரும் அளவிற்கு இருப்பவன். மொழியறிவு இருந்தாலும் மலிவுவிலை வீடு வாங்க கூட சம்பள எண்ணிக்கை போதவில்லை. அனைத்து வங்கியிலும் நிராகரித்து விட்டார்கள். அந்த கொழுத்த சீனக் கிழவன் கேவலமாக பார்த்ததை மனது உணர்ந்தது. நாய்களின் ஒரு மாத உணவு செலவுகூட எனது சம்பளத்தை தாண்டி விடும்.  இவனிடம்  பேசி பயன் இல்லை என்றதும் கிளம்பினேன்.  அந்த பிள்ளையார் சிலை நன்றாக இருப்பதாகவும் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டான். கேள்வி புரிந்ததோ இல்லையோ ஆனால் பிள்ளையாரை புத்தர் என்று சொன்னது மட்டும் புரியவில்லை.  பிள்ளையாரோ புத்தரோ  வேண்டிக் கொண்டுதான் கிளம்பினேன்.

 

வந்த வழியை விட்டு, யார் வழியிலோ வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காரைச் செலுத்தினேன். வீட்டை ஒட்டியபடி கோவிலின் உள்ளே கருப்பாக அரிவாள் மீசையுடன் ஒரு முரட்டு சிங்கத்தின்  தோற்றத்தைப் பார்த்தேன். அவர் முதலில் முறைத்தார். பிறகு “வாங்க தம்பி” என உபசரித்தார். வேலை முக்கியம் என்பதால் போடப்ப்பட்ட பிளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்தேன். அவரிடம் வாடகை வீட்டைப் பற்றிக் கேட்க பழையத் தோல்விகளின் பயம் தடுத்தன.

 

 

உண்மையில் அது ஒரு கோவில் இல்லை. பாதுகாவலர் உட்கார்ந்து காவல் காக்கும் அறை. அதன் பிரமாண்டம் என்னை ஏமாற்றியது. நான் வசிக்கும் தாமானில் பலர் இது போன்று கோவில்கள்தான் கட்டியுள்ளார்கள். வீட்டுக்கு வீடு  கோவில்கள். இந்த குடியிருப்பில்  மூன்று வீடு தள்ளி  ஒரு  வீட்டில் குளிர்ச்சாதன வசதியுடன் தனியார் பாதுகாவலர்  நிலையம். அதில் காவல் தெய்வமாக பாதுகாவலர் அமர்ந்திருக்கிறார். சிலையின் வடிவில் காவல் தெய்வங்களோடு, அவர்களின் வாகனமான நாய்களும் ஏழைகளின் குடியிருப்பில் வீட்டின் முன் காவலுக்கு  இருப்பதற்கு நேரெதிராக மனிதனே காவல் தெய்வமாகவும்  இறக்குமதி செய்யப்பட்ட  கடித்து குதறும்  மேற்கத்திய நாய்களும் பாதுகாப்பு பணிக்காக அமர்த்தப்பட்டிருந்தன.

கொஞ்சம் முயற்சிக்கும் வகையில் அவரிடம் கேட்க வாயெடுத்தேன். வைத்திருந்த குளிர் பானத்தைப் பருக கொடுத்ததும் மறுக்காமல் குடித்தால் வந்த வேலை நடக்கும் என்ற சுயநலத்தில் கை நீட்டி வாங்கிக் குடித்தேன்.  அவர் என்னிடம் பேச்சிக் கொடுத்தார். அறிமுகம் இல்லாத என்னை உபசரிப்பது அவரின் பெருந்தன்மையானாலும் எனக்குள் பயமே வந்தது. அறிமுகம் இல்லாதவனிடம் விருந்தாளி போல உபசரிப்பதை பார்க்க பாதுகாவலரின் தனிமையின் கொடூரம் தெரிந்தது.

 

“அந்த கெழவன் ஆணவமாக பேசுறான் அண்ணே. மனுஷனை அண்டாதவன் போல”, வாய் முந்திக் கொண்டது. “இல்லை தம்பி, போன வாரம் ரெண்டு தமிழனுங்க வீடு பூந்து கழுத்துல கத்தி வைச்சிட்டானுங்க. அதனால இருக்கும்”. தமிழன் ஒருவன் இன்னொரு இனத்தவனுக்கு ஏதாவது கெடுதல் செய்யும் போது , பாதிக்கப்பட்டவன் அவன் சார்ந்த இனத்தையே குற்றம் சாட்டி வெறுத்து ஒதுக்கும் உலகப் பண்புதான்.  அதற்காக மட்டும் அகிலன் மீது அவன் இறக்கம் காட்டாமல் இருந்திருக்கவில்லை.  மேலும் பணத்தைத் தேடும் நோக்கத்தில் அடிப்படை வசதி கூட இல்லாதவன் மீது இறக்கம் கொஞ்சமும்  சீனனுக்கு வரவில்லையே.

 

அந்த சீனக் கிழவன் முரண்டுப் பிடித்து கண்டிப்பாக இருந்தான் என்றதும் “உள்ளே ஒரு சிறு வயது பெண் இருந்திருப்பாலே?” என்று கேட்டார். பாதியான உடையில் , கண்கள் பார்த்து கொண்டேயிருக்கும் உடலின் அங்கங்களை எக்ஸ் ரே எடுத்து காட்டியபடி இருந்தாள் என்று சொல்லாமல் சொன்னேன். அவனின் இரண்டாம் மனைவி என்றவர் முதல் மனைவி வேறு வீட்டில் இருக்கிறாள் என்றார். அவளை பார்த்து  ரசித்த எனது கண்களைப் திட்டினேன்.
 

அங்கு நான்கு பிள்ளைகளுடன் இருக்க வீடில்லாமல் தவிக்க, இங்கு உறவில் திருப்திப்படுத்தும் வயதில்லாமலும் இளம் பெண்ணுடன் ஒரு பெரிய வீட்டில்  ஒரு கிழவனின் விபரீத விளையாட்டு.... சமூக அமைப்பின் இந்த கட்டுமானம் எனக்குள் எரிச்சலானது.

 

“அவனுக்கு எஸ்.பியில  மட்டும் பத்து வீடு இருக்கு. லேலோங் வீட்டை வலை போட்டு தேடுவான்...” அவர் முடிக்கும் போது, அவன் வீட்டில்  எனது நண்பனும் வாடகைக்கு இருந்தான் , ஆனால் இப்போது வீட்டை காலி செய்ய சொல்கிறான். வீட்டை விற்க போகிறானாம். நண்பனுக்கு கொடுத்த மூன்று மாத அவகாசம் நாளையோடு முடிவதால், அவன் காலில் விழவே வந்தேன் . ஆனால் , அவன் வளர்க்கும் நாயிடமும் இளம் மனைவியிடமும் மட்டும் அன்பாக இருப்பவன் போல. அப்படியே பேசிக்கொண்டு இருக்கையில் மண்டையில் மணி ஒன்று அடித்தது. போன வாரம் திருடர்கள் வந்திருக்கிறார்கள்.  என்னையும் அப்படி நினைத்து பொறி வைக்கிறாரோ.  குறித்து கொடுத்த நேரத்தில் இவனின் ஆட்கள் கைத்தொழிலை காட்டுவார்கள். இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் திருடர்கள் நேர்த்தியான திட்டம் போட்டு வேலையை காட்டிவிடுகிறார்கள்.

 

இந்த பணக்கார குடியிருப்பில் கஞ்சா அடிக்காதவன் மட்டுமே திருட வருவான். சுய நினைவு உள்ளவன் ஏழைகளின் குடியிருப்பில் ஒன்றும் இருக்காதென்பதை அறிந்துள்ளவன். பணக்காரக் குடியிருப்பில்  திருடப்படுவதால் அந்த வீட்டுக்காரனுக்கு பெரிய இழப்புகளில்லை. அவர்களுக்கு ‘காவல் மனிதர்கள்’. ஏழை குடியிருப்பில் திருடப்படும் சிறு பொருளையும் வாங்க பல நாள்களின் உழைப்புகள் தேவைப்படும்.. இவர்களுக்கு ‘காவல் தெய்வங்கள்.’

 

 “ஏன் வீட்டை காலி செய்ய சொல்றான். சேவா கட்டலையா?” அவரின் பேச்சு திசை மறைத்ததால் மனதோடு பேசுவதை தற்காலிகமாக நிறுத்தினேன். சீனன் வீட்டை விற்க போவதாக சொல்கிறான். எந்த தாமானென்று அவர் கேட்டதும் , வீட்டையும் சேர்த்து சொன்னேன். அதே வீட்டை சீனக் கிழவன் என்பதாயிரத்துக்கு வாங்கினானாம். ஆனால் இப்போது அந்த வீட்டை 170 ஆயிரத்து விற்கிறான்.


ஒரு வருடம் வாடகைக்கு கொடுத்தான். சீனர்கள் ஏன் தனது மொழியை விடாமல் பிடித்தாலும்  பணக்காரர்களாக இருப்பது பற்றி லேசாக புரிந்தது. முதலில் அகிலன் அந்த வீட்டை வாங்கவே ஆசைப்பட்டான். பெரிய வீட்டின் மீதான  ஆசை சம்பளத்தை பார்த்து வராது. சம்பளம்தான் ஆசையை ஏங்க விடும்.  அகிலனின் மனைவி வீட்டில் நான்கு குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறாள். வெளியே பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள தலைக்கு நானூறு  வெள்ளி கேட்கிறார்கள். அவன் ரொம்பவே பொருளாதாரத்தில் சிக்கியுள்ளான். பலமுறை பிள்ளைங்களுக்கு பால் மாவு வாங்க கடன் கேட்டிருக்கிறான். எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கொடுத்தபோது கண்கள் கலங்கியும் உள்ளான். வீட்டு வாடகையும் கொடுத்து உதவியிருக்கிறேன். படிக்கும் காலத்தில் அவன் செய்த உதவியை இன்னும் மறக்கவில்லை. அந்த ஒரே உதவியால் மட்டுமே கேட்ட போதெல்லாம் உதவுகிறேன். சில நேரம் ஒருவர் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு  சளைக்கால்  நன்றியாக, உதவுவோம். அதனால்தான், எப்படியாவது அவனுக்கு வீடு ஒன்றை பார்த்து தரவேண்டும். இல்லாவிட்டால் என் வீட்டில் தற்காலிகமாக அடைத்து கொண்டு இருக்க வேண்டியதுதான். சீன கிழவன் நாளையே வீட்டை காலி செய்ய சொல்வதில் உறுதியாக இருக்கிறான்.  அகிலனுக்கு போன் செய்தும் பயனில்லை. கடைசி பையனுக்கு காய்ச்சல் என்று சொன்னான். நேரில் வீட்டில் சென்று பார்க்க வேண்டும். விடிந்தால் நான்கு பிள்ளைகளுடன் மனைவியோடு அவன் எங்கே போவான்.

 
ஏற்கனவே நல்ல வேலை சம்பளம் என்று இருந்தவன். இடையில் அரைக் கிறுக்கன் ஒருவனுடன்  பேசியதன் விளைவால் இவனுக்கு முழுக் கிறுக்குப் பிடித்து விட்டது. மாதம் பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர் சம்பளம் என்று ஆசை காட்டினான். மனைவியின் நகைகள்  எல்லாவற்றையும் அடகு வைத்து அவனோடு போனான். நிச்சயம் பஸ்ஸில் தூங்கி இருக்க மாட்டான். சிங்கப்பூர் டாலரில் கோட்டை கட்டிருப்பான். பஸ்ஸில் வழி அனுப்பினேன். ஒரு வாரத்தில் திரும்பி வந்தவன் , அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்றும் தூக்கம் போதவில்லை என்பதால் உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்ற காரணம் சொன்னான். இன்று

 

விதி விட்ட வழி என்று எந்த வேலையிலும் தொடராமல் வாழ்கிறான்.
 
அவரிடம் வீடு எதாவது காலியாக இருக்குமா என்று கேட்டேன். “இருக்கு”, ஆனால் என்று இழுத்தார். வாடகை எவ்வளவு என்றாலும் பரவாவில்லையென்றேன். வாடகை மிக குறைவுதான் என்றவர் தொடர்ந்து அந்த வீட்டில் யாரும் நிலைப்பதில்லை, அந்த வீட்டை வாங்க வந்தவர்கள் கூட கடைசி நிமிடத்தில் வேண்டாம் என்று பின் வாங்கியதாகவும் சொன்னார். எங்கே அந்த வீடு என்று துணிந்து விசாரித்தேன். முக நூலில் தேடிய போது கிடைக்காத வீடு என் பக்கத்து தாமானில்  இப்போது இவர் வழியில் கிடைக்கிறது. அகிலனுக்கு சிறு பிள்ளைகள் இருப்பதால் பயந்து மறுத்தார்.  நடுத் தெருவில் நிற்பதை விட இது பரவாவில்லை என்றேன். அவர் தயங்கி ஒத்துக் கொண்டது அவரின் உறவினர் வீடுதான். வீடு பிடிக்கவில்லை என்றால் கிளம்பி விடுங்கள், பிறகு என்னை குறை சொல்லாதீங்கன்னு எச்சரித்தார். “ஏன்?” என்றேன். “ரொம்ப நாட்களாக பூட்டி கிடந்த வீடு பிறகு அங்கு தங்கியவர்கள் யாரும் நிலைக்கவில்லை என்பது பதிலானது. மின் விளக்குகள் தானே திறந்தும், அணைத்தும் கொள்ளும் , தண்ணி பைப்பில் தானே தண்ணீர் திறந்துக்கும்” எனச் சொன்னார். “சாமி படங்கள் வைத்து பூஜை செய்தால் சேட்டைகள் போய் விடுமே”, என்றேன். “எத்தனையோ தடவ யார் யாரோ வந்து பார்த்து பணம்தான் ஓடியது தவிர பேயின் சேட்டை ஓடவே இல்லை”, என்றார். பேய் பிசாசுகள் குறித்து பேசும் போது பயம் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. நாற்பது நாட்கள் காலியாக ஒரு வீடு கிடந்தால் அந்த வீட்டில் துஷ்ட தேவதைகள் வந்து தங்கி விடும். அவர் கைகளின் தடித்த உரோமங்கள் விரைத்துக் கொண்டு எழுந்தன. என்னுடல் சிலிர்த்தது.


வாட்சப் வழியில் வந்த வரிகளை படித்த போது அகிலனின் அழுதுக் கொண்டு அனுப்பி இருப்பான் என்பது தெளிவாகப் புரிந்தது. நாளையே வீட்டை காலி செய்தாக வேண்டும் என்று சொல்ல மனம் வரவில்லை. நாளை தெரிந்த நண்பனின் லாரி வருவதால் பணம் எதுவும் கொடுக்க தேவை இல்லை. இன்னும் சில நண்பர்கள் வந்து உதவுவார்கள். நாளை காலையே வீட்டை காலி செய்து விடலாம்.  வேறு வீடு பார்த்தாகி விட்டது . விரல்கள் நடுங்க அகிலனுக்கு தகவல் அனுப்பினேன்.


“அந்த வீடு வேண்டும்”, கட்டாயப்படுத்தினேன். அவர் கொஞ்சம் தள்ளி சென்று யாருடனோ கைப்பேசியில் பேசினார். கைகடிகாரத்தில் மணி மாலை ஆறு கடக்கும் நேரம். பிறகு வந்து “சரி தம்பி, நான் சொல்ற வீட்ல போய் நில்லுங்க சாவி வரும் , வீட்டை பாருங்க. புடிச்சிருந்தா நாளை வாடகை எல்லாத்தையும் பேசலாம்”  என்றார்.
 
சரி என்றவுடன் கிளம்பினேன்.  அந்த வீட்டை தனியாக சென்று பார்க்க பயம் என்பதால்  அகிலனையும் அழைத்து சென்று போகவேண்டும். வீட்டில் இருக்கும் பேய்கள் பற்றி எதுவும் சொல்ல கூடாது. வறுமையின் கொடுமையில் வாழ்பவனுக்கு பேய்கள் பற்றிய சிந்தனைகள்  பயம் காட்ட முடியாது. மனிதர்களுக்கே சொந்த வீடுகள் இல்லை. மனிதர்கள் அகதிகள் போல வாடகை வீட்டை மாற்றி கொண்டிருக்கும் போது பேய்கள் நிரந்தரமாக மனிதர்களின்  மனது கட்டிய வீட்டில் குடிக் கொண்டு விட்டன.

 

நாங்கள் ஏற்கனவே ஒரு வீட்டைப் பார்த்தோம். உள்ளே எத்தனை அறையில் குளிர்ச்சாதன வசதி என்பதை வெளியில் இருந்தே பார்க்க முடிந்தது. அந்த வீட்டை பற்றி விசாரித்ததில் ‘அது நாய்களின் வீடு’ என்றார்கள்.


மிதமிஞ்சிய பணக்காரர் தம்பதிகளுக்குக் குழந்தைகள் இல்லை என்பதால் வெளி நாட்டில் இருந்து இறக்குமதி செய்த பத்து நாய்களை வாங்கி வளர்க்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் இருந்த குடியிருப்பு பகுதியில் பலர் புகார் கொடுத்ததால் இந்த வீட்டை வாங்கி இருக்கிறார்கள். மொட்டை மாடியில் நாய்கள் நிற்க வசதிகளோடு வீடு புதுப்பித்துள்ளது. நாய்களை வாரிசாக வளர்ப்பவர் இங்கு தங்காமல் ஆள் வைத்து பார்த்துக் கொள்கிறார்.  அதை பார்த்துக் கொள்ளுபவருக்கே சொந்த வீடு இல்லை.

 
 

நாய்களுக்கு ஒரு வீடென்று நினைக்கையில் மொட்டை மாடியில் இருந்து தன் இரண்டு கால்களையும் தூக்கி வைத்து கிழே நிற்கும் எங்களை இளக்காரமாக பார்த்தன  முதலாளித்துவ நாய்கள். அவைகளின் வீடாயிற்றே . நாயாக இருந்தாலும் முதலாளித்துவம் இருக்கும். மிருகத்தின் மேல் உள்ள அதீத அன்பால்  மனிதர்களை மனிதன் மறந்து விட்டான். இந்த நிலையில் அகிலன் எப்போது சொந்த வீடு வாங்குவான் என்ற கேள்விக்கு பதிலை தேடமுடியாது.

‘அந்த நாய்’ வீட்டிற்கு பக்கத்து வீடுதான் வாடகைக்கு விடப்படுவதாக பார்த்திருந்தேன்.  அழைத்து கேட்டபோது இந்தியர்களுக்கு கொடுக்க மாட்டோம் என்றான். 

“ஃபக் யூ பிச்ச்...”பதிலளித்தேன்.

நான் வசிக்கும் குடியிருப்பில் மட்டும் ஆறு வீடுகள் காலியாக இருக்கின்றன. யாருடையது என்று தெரியவில்லை. காலி வீட்டை சில காலி பையன்கள் பலாத்காரம் செய்து விட்டார்கள். எல்லா ஜன்னல் கம்பிகளையும் திருடிவிட்டிருந்தார்கள். எல்லா வீடுகளுமே  குழு பாலியல் வல்லுறவில் சிதைந்த பெண் உடல் போல. எனக்கு தெரிந்த பல நண்பர்கள் இன்னும் வாடகை வீட்டிலேயே வசிக்கிறார்கள். அதே சமயம் பல வீடுகள் அதே குடியிருப்பில் வீட்டின் தன்மையை இழந்தும் உள்ளன. வீட்டை சும்மா பேயிக்கும்,  நாயிக்கும், கொடுப்பார்களே தவிர இல்லாதவர்களுக்கு கொஞ்சக் காலம் இலவசமாக கொடுக்க மனம் வருவதில்லை.
 நவீன மனிதர்களோ எப்போதும் சமூக வலைதளத்தில் தனது சேவை மனப்பாண்மையைக் காட்டி செல்பி எடுப்பவர்கள்.


 சாலை வழியெங்கும் பார்த்த காலி வீடுகள் முன்னால் மனமொழிகள் ஆற்றிய எதிர்வினைகளோடு அவர் சொன்ன வீட்டின் முன் வந்து நின்றேன். சாவியை கொடுப்பவர் இங்கே நேராக வருவதாக சொன்னதால் இங்கு முதலில் வந்து விட்டேன். இரு நண்பர்கள் வருவதாக சொன்னார்கள். 


 பாதுகாவலர் சொன்ன கதைகளில் ஒன்று அந்த வீட்டின் முன்பு நிற்கும் போது மனதில் ஒரு சினிமா கதையைத் திறந்தது. புதியதாக திருமணமான ஜோடி இங்கே கடந்த மாதம் வாடகைக்கு வந்தார்கள். கணவன் கழிப்பறைக்கு  சென்று திரும்புகையில் வீட்டிலுள்ள நாற்காலில்  உடலுறவின் திருப்தியிலும், அசதியிலும் மனைவி படுத்து கிடப்பதைப் பார்த்திருக்கிறான்.  எதற்கு இவள் இங்கு வந்து படுத்து கிடக்கிறாள் என்று அவளின் நெற்றியில் முத்தம் இட்டவுடன் தலையணை எடுக்க அறைக்குள் சென்றவனின் மனைவி அறையிலும்  படுத்திருப்பதை பார்த்து பயத்தோடு  குழம்பியும் விட்டான். மீண்டும் நாற்காலியில் பார்த்த போது அங்கும் மனைவி படுத்துக் கொண்டிருக்கிறாள். சற்று முன்பு தனக்கு சுகத்தை ஈடுக்கொடுத்தது  யாரென்று தெரியாமல், பூஜை அறைக்கு சென்று மஞ்சள் நீர் எடுத்து வந்து பார்த்த போது நாற்காலியில் யாரும் இல்லை.  படுக்கை அறையில் மனைவி படுத்து கொண்டிருந்தாள். வீடு முழுவதும் மஞ்சள் நீர் தெளித்ததும் பிறகு படுத்தான். படுத்த பிறகு நீர் குழாயை யாரோ திறந்து விட்டதாக சத்தம் கேட்டது. வீட்டில் மின் விளக்குகள் தானே அணைந்து மீண்டும் எரிந்தன. அன்று இரவு அவன் தூங்கவே இல்லை. மறுநாள் மனைவி பயந்து விடுவாள் என்று மறைத்து விட்டான். காலையிலேயே சாமி பார்த்ததும் அங்கே அருள் இறங்கி ஆடிய ஐயா சாமி உனக்கு நான் பாதுகாப்புக் கொடுக்கிறேன். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டை காலி செய்ய சொல்லி ஒர் எலுமிச்சைக் காயை எடுத்து திரு நீரில் உருட்டி சூடத்தின் அனலில் குளிர் காயவைத்து அவனிடம் கொடுத்து வைத்திருக்கிறார். நீதான் அதை எழுப்பி விட்டதாக சொன்னவர், அவளோடுதான் நீ நேற்று கூடியதாகவும் சொல்லியிருக்கிறார்.

பயம் வந்த வழியைத் தேடி பிடிக்க முடியவில்லை. அவர் குறிப்பிட்ட வீட்டின் பக்கத்து வீடும் காலியாக இருந்தது. பக்கத்து வீட்டை விட இந்த வீடு பார்க்க நன்றாகத்தான்  இருக்கிறது. ‘பேய் வீடு’ பாதுக்காப்பானதாக தோன்றியது.

இந்த வீட்டில் பேய் உண்டா என்று பயம் வந்த மூலத்தை தேடிச் சென்றேன். வீட்டின் சாவியை ஒருவன் எடுத்து கொண்டு வந்து நின்றான். உடல் முழுவதும் கரு நாகத்தின் முகத்தை பச்சை குத்தியிருந்தாலும் அவனின் தோளின் கருப்பு நிறம் கரு நாகத்தின் கருமையை குறைக்க வில்லை. கழுத்தில் ‘தங்காய்’ சங்கிலியில் புத்தர் தியானக் கோலத்தில் அமர்ந்திருந்தார்.

இவனின் தலை மயிரின் செயற்கை வர்ணத்திற்கும் முகத்தில் இருக்கும் வெட்டுக் காயத்துக்கும் ,முரட்டு மூஞ்சிக்கும்  கழுத்தில் அணிந்துள்ள சிறு  புத்தர் சிலைகும் கொஞ்சம் கூட சமன்பாடே இல்லை.. புத்தர் இவனை மாற்றவில்லை. பேய் போல உள்ள இவன் புத்தரையும் மாற்றி விடுவான்.

 

   “வீட்டை பாருங்கள்”, சாவியை கொடுத்தான். “நண்பர்களுக்கு காத்திருக்கிறேன்” என்றேன். கடைக்கு சென்று வருவதாகவும் நீங்கள் உள்ளே போய் பாருங்கள் , வாடகை தொகையைப் பற்றிப் பிறகு பேசலாம் என்றவனின் வரிகள் காதுக்கு இனிமையானாலும்  சிகரெட் துர் நாற்றம் மூக்குக்கு இனிக்கவில்லை.

அவன் கிளம்பியவுடன் கைப்பேசியை பார்த்தேன். வறுமைப் பேய் தினம் தினம் அவன் ரத்தத்தை உறிஞ்சும் போது அவன் மனது பயம் கொள்ளாது. வீட்டை நேரில் பார்க்காமலேயே ‘ஓகே’ சொல்லிவிட்டான். படங்கள் மட்டும் விதவிதமாக பிடித்து அனுப்பினேன். இன்னும் எத்தனை வீடுகள் கதை சொல்லப்பட்டு குடியேற தடையாகியுள்ளன.


 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation