• Time to read: 06 minutes
  • 632
  • 0

Revelations

By பவனீதா லோகநாதன்

எதையெல்லாம் நிறைத்தால் வீடாகும் என்பதைப்போல எதையெல்லாம் நிறைத்து சினிமாவாக்கலாம் என்று எண்ணி தோற்றுச் சரிகின்ற நிலையில் இருக்கின்ற தமிழ்ச் சினிமாவிற்கு, சினிமா என்றால் என்னவென்று  புரிதலை ஏற்படுத்தவும் உலகவெளியில் சினிமாவின் தன்மையை வெளிப்படுத்தவும் சுயாதீன சினிமாக்கள் எப்போதும் முன்னின்று உழைக்கின்றன.

நம் சமூகத்தில், எது சினிமா என்ற ஆரம்பநிலை புரிதல் கூட ஏற்படவில்லை என்பது துயரம் என்றால், ஓரளவு சினிமா சார்ந்த புரிதல் கொண்டவர்கள் கலைப் படைப்புகள், மண் சார்ந்த படங்கள் என்ற ஒற்றைத் தன்மையான நிலைக்குள் சிறைப்பட்டு சிந்திப்பதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தவல்லன. கமர்ஷியல் சினிமா, கலை சினிமா என்ற பேதங்கள் இன்று உலக அரங்கில் பெரும்பாலும் முன்னிறுத்தப்படுவதில்லை. ஒரு திரைப்படத்தின் படைப்பாற்றல் மட்டுமே அவர்களைக் கவனிக்க வைக்கின்றது. படைப்பாற்றலை தீர்மானிக்கும் மையம் Artistic visionஇல் தங்கியுள்ளது. சமூகத்தின் மீதான ஒருவரது அவதானிப்பும் கவனிப்பும்  Artistic vision-னைத் தீர்மானிக்கின்றது. உலக அரங்கினை நோக்கி நகர முனைபவர்களுக்கு Revelationsஐ சமகாலத்து உதாரணங்களில் முக்கியமான திரைப்படமாக கருத அதன் படைப்பாற்றல் மட்டுமே காரணமாகின்றது.

Revelations உறவுச் சிக்கலை மையப்படுத்தி நகர்கின்றது. உறவுச்சிக்கல் என்பதை, எங்கோ தனித்த கதைப்பிரிவு என்ற ரீதியில் பிரித்து வகைப்படுத்த முடியாது. அந்தக் கதைகளில் இருக்கின்ற தனித்துவம் உலகத்திற்கே பொதுவானதாக அமைவதோடு எந்தத் தேசத்திலும் நிகழக் கூடியதாக எந்த மனிதனும் அதில் தன்னைப் பொருத்திப் பார்க்ககூடியதான படங்கள் உலகத்தை நோக்கி பயணிக்ககூடியவை.

Revelations தலைப்பிற்கும் படத்தின் கதைக்கும் இருக்கின்ற நேர்த்தியை உணரலாம். Revelations என்றால் ‘வெளிப்படுதல்’ என்று தமிழில் பொருள். படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்குள்ளும் வெளிப்படுத்தப்பட முடியாத சொல்லப்படாத கதைகளைச் சுமந்து ஒரு தனித்த உலகம் இருக்கின்றது. சேத்தனுக்குக் குற்றவுணர்ச்சி நிரம்பிய கடந்த காலங்கள், கார்த்திக்கிற்கு தன் உடல் ரீதியான இயலாமையால் ஏற்படும் தாழ்வுச் சிக்கல், லக்ஷ்மி பிரியாவிற்குத் தீர்க்கப்படாத உடலியல் ஆசைகள் என்று ஆற்றாமையோடு அனைவரும் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் எதை எதிர்பார்த்து பழகுகின்றான் என்பதை கவனிக்க வேண்டும். உலகத்தில் சகலருக்கும் பிரச்சினைகள் உண்டு. அதற்கான தீர்வுகளை எதிர்ப்பார்த்து யாரும் சக மனிதனை நாடுவதில்லை. பிரச்சினைகளைத் தீர்ப்பவர்களை விட, அதனை செவிமடுக்க காதுகளைதான் நாம் அதிகம் தேடுகின்றோம். எதையோ ஒன்றை வெளிப்படுத்தி சுமை இறக்கி வைத்துவிட்ட மனநிலைக்கு ஏங்கும் மனிதர்கள் தான் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள். ஒரு கட்டத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அகச்சிக்கல்கள், உறவுநிலை குழப்பங்கள் நமக்கு வெளிப்படுத்தப்படுவதோடு அதிலிருந்து மெல்ல அவர்கள் வெளியேறி இயல்பு வாழ்க்கைக்கு இடம் பெயர்கின்றனர். இதே கதை, கதாபத்திரங்கள் உள்ளடக்கிய உறவுச் சிக்களை பேசிய திரைப்படங்கள் ஏராளமாக இருப்பினும் அவற்றில் புறவயமான சிக்கல் நிலையே அணுகப்பட்டிருப்பதை தமிழ்த் திரைப்படங்களில் காண முடியும். Revelations அக உணர்ச்சிகளைக் காட்சிப்படுத்தி அகவயமாக அவர்களின் உலகத்தை மிக நேர்த்தியாக அணுகுகின்றது.

எந்தக் களத்தை தேர்வு செய்கின்றோமோ அந்தக் களமும் கதாபாத்திரங்களின் வாழ்வியலும் இரண்டறக் கலந்திருத்தல் வேண்டும். ஒரு நகர்புறத்தில் நிகழும் கதையில் நகரம் என்பது வெறும் வீதிகளும் கட்டிடங்களும் நிரம்பிய பிரதேசம் மட்டுமல்ல. அவற்றுக்கென்று ஒரு நிலமும் நிலம் சார்ந்த நிறமும் அழகியலும் இருக்கின்றது. Revelations நிகழும் கதை களம் கல்கத்தா. இந்த நகரம் பழைமையும் புதுமையும் நிரம்பி நெரிசலுக்குள்ளாகி இணைந்திருப்பதை உணரமுடியும். பழைமை மாறா கட்டிடங்களுக்கு நடுவே நகர்மயமாதலின் நவீனம் புகுந்து தடுமாறி மூச்சு விட்டு நகரும் தெருக்களை இங்கு காணலாம். மனசஞ்சலத்தோடு அல்லாடும் கதாபாத்திரங்கள் குறுகலான பாதைகளில் பயணிப்பதையும் தங்கள் ரகசியங்களை வெளித்திறக்கும் தருணத்திலும் வாழ்வினை அடுத்த நகர்வுக்கு செல்லும் நிலையிலும் பரந்த சூழலில் நடமாடுவதையும் காண முடியும். மனிதர்கள் தங்கள் மனச்சிறையில் இருந்து வெளிவருதலை அந்த நில அழகியலுடன் தொடர்புப்படுத்திக் காட்சிப்படுத்தியிருந்தமை ரசிக்க வைக்கின்றது.

காட்சிச் சூழலில் சிதலமடைந்திருக்கும் கட்டிடங்களை அதன் அழகியலோடு வெளிப்படுத்திய விதமும் கதாபாத்திரத்தின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக அந்தச் சூழலில் அமைந்திருந்திருக்கும் ஜன்னல், கதவுகள், நிலைகள், தடுப்புக்கள், சுவர், பொருட்கள், சாலை கட்டிட அமைப்புக்கள் என்பவற்றின்  வடிவவியல் அமைப்புக்களையும் பயன்படுத்திய விதமும் நுட்பமான படைப்பாக்கத் தன்மை. Framingஇன் போது கதாபாத்திரத்தை ஒரு சதுர, செவ்வக  அல்லது தடுப்பு கம்பிகள் வழியே காட்டுகையில் சூழ்நிலை கைதிகளாக,சிறைப்பட்ட மனநிலையுடன் இருப்பதாக அர்த்தப்படும். இங்கும் கதாபாத்திரங்களின் சொல்லமுடியா தவிப்போடு இருக்கும்  காட்சிகளை ஜன்னல் கம்பிகளுக்குள் உள்ளேயும் கண்ணாடி தடுப்புகளுக்கு  மத்தியிலும்  கதாபாத்திரங்கள் இருப்பது போல படம் பிடித்திருந்தமைக் காட்சி சூழலில் அழகியல் தன்மையோடு பார்வையாளர்களுக்கு அவர்களது உளவியல் தன்மைகளையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. (இந்த தயாரிப்பு வடிவமைப்பினை பார்க்கையில் இதே மாதிரியான கதையம்சம் கொண்ட In the mood for love படத்தின் காட்சிகள் நினைவில் வந்தன.)

ஒளிப்பதிவைப் பொறுத்தவரை ஒரே ஒரு காட்சி மட்டும் இயல்பு தன்மையிலிருந்து விலகி இருந்தது. சமையலறையில் இருக்கும் சேத்தன்,  சத்தம் கேட்டு அறைக்குள் வந்தால் வயதான பெண்மணி தரையில் வீழ்ந்து கிடக்க, கீழ் தளத்தில் வசிக்கும் லக்ஷ்மி பிரியாவிடம் சென்று உதவி கேட்கும் காட்சி ஒரே ஷாட்டாக ஸ்டெடி கேம் பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. முதன் முதலில் கேமரா தனதிருப்பை அறிவித்தது போல உணர்ந்தேன். கதாபத்திரங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் மத்தியில் யார் வந்தாலும் அது இடைவெளியினை ஏற்படுத்தும். இந்தக் காட்சியில் கேமரா தன் இருப்பைத் தெரிவித்ததோடு சேத்தனுக்கு மிக அண்மையான நகர்வை கொண்டிருப்பதால் யாரோ இடையில் இருப்பது போன்ற உணர்வை தோற்றுவித்து சென்றது.

படத்தின் இயல் ஒளியமைப்பு மிக முக்கியமானது. இந்தப் படத்தில் குடியிருப்பு பகுதி காட்சிகளில் அதிகமாக மஞ்சள் ஒளிவிளக்கை பயன்படுத்தி செயற்கை விளக்குகளையும் இணைத்து சிறப்பாக ஒளியினை கையாண்டுள்ளனர். வெளிப்புறக் காட்சிகளில் நகரத்தின் இயல்பான ஒளி அமைப்பை உள்வாங்கி பதிவு செய்துள்ளனர். படத்தின் மையவோட்டம் சீர்குலையாமல் காட்சியின் நீளமும் வேகமும் கவனமெடுக்கப்பட்ட படத்தொகுப்பு முறை சிறப்பானது.

மோசமான கமேராவில் பதிவு செய்த ஒரு திரைப்படத்தைக்கூட பார்க்க முடியும், மோசமான ஒலியமைப்பைக் கொண்ட படங்களை ஏற்றுகொள்ளவே முடியாது என்று திரையுலகில் நிராகரிப்பார்கள். இயல் ஒலியை பயன்படுத்தாத திரைப்படத்துறையாக நூற்றாண்டை தொட்டிருப்பது தமிழ் சினிமாவின் அவலச் சாதனை.

இந்தியாவிலேயே நெரிசல் மிக்க நகரத்தில் மிக நேர்த்தியாக ஒலிப்பதிவும் ஒலிவடிவமைப்பும் கையாளப்பட்டிருப்பது தனித்துவமான சிறப்பம் சமாகும். பின்னணி ஒலியமைப்பு மட்டுமின்றி பின்னணி இசையும் மிக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. காட்சியைத் தாண்டி ஒலித்து நிறையும் இசைக் கோர்வைகளாக இல்லாது படத்தின் ஓட்டத்திற்கேற்ற நகர்வுடன் பயணிக்கும் இந்த இசை தரும் உணர்வு அலாதியானது.

படத்தின் நடிகர்களில் அர்பிதா தனது கதாபாத்திரத்தினை தனித்துவத்துடன் இயல்பாக கையாண்டிருகின்றார். இந்தப் படத்தில் நடித்தவர்களிலேயே சிறந்த நடிப்பை வழங்கியவர் இவர்தான். எந்த இடத்திலும் நாம் திவ்யா இத்தகைய பெண் என்ற தீர்மானத்தை எடுக்க முடியாதளவு புதிர்தன்மையுடன் அவரது நடவடிக்கைகள் அமைந்திருக்கும்.  அதற்கேற்ப நடிப்பு என்பது பார்வையாளனுக்குத் தெரியாத அளவில் திவ்யா கதாபாத்திரத்தின் உடல் மொழி, பேசும் முறை, நடவடிக்கைகள் உட்பட பல விடயங்களில் நிஜத்தன்மையை பேணியுள்ளார். சேத்தன் மிக முக்கியமான நல்ல தேர்வு. ஏனைய நடிகர்களின் நடிப்பானது  உயிரோட்டமற்று காணப்பட்டது.

படத்தின் திரைக்கதை மிக சிறிதாகவும் அதன் திரைமொழி அடர்த்தியாகவும் அமைந்ததே தனிச் சிறப்பு.மொத்தப் படத்தையும் திரைக்கதையில் அடைத்து எழுதிவிட்டால் அங்கு திரைமொழி சார்ந்த கதை சொல்லலுக்கு இடமின்றிப் போகும்.   இங்கு அந்த நிலை இல்லை. சிறிய உதாரணமாக திரைக்கதையில் எழுதப்படாதபாலத்தில் பைக்கில் பயணிக்கும் காட்சியை கூறலாம். அதேவேளை திரைக்கதையில் சில தொய்வுகளும் இருக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண்டும்.

ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சம்பவங்கள் அனைத்தும் தற்செயல் நிகழ்வாகவே அமைவதாக படத்தில் காணப்படுகின்றது. சேத்தன் லக்ஷ்மி பிரியா பேசும் போது தற்செயலாக வரும் கார்த்திக் அவர்களின் நிலையை அறிகின்றான், அர்பிதாவை பற்றி சக ஊழியர்கள் பேசுவதை தற்செயலாக கார்த்திக் கேட்கின்றான், அர்பிதாவின் பாலியல்வாழ்க்கை தொடர்பான உண்மையை தற்செயலாக அங்கு வரும் கார்த்திக் பார்த்து அறிந்துகொள்கின்றான், சேத்தனை தேடி  குறும்பட இயக்குனர் ஒருவர் வர, அதன் பிறகு லக்ஷ்மி பிரியாவிற்கு கடந்த காலம் தெரிவிக்கப்படுகின்றது. இப்படி முக்கியமான கட்டங்கள் அனைத்தும் தற்செயல் நிகழ்வாகவே அமைந்தமை தவிர்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகின்றேன்.

நூற்றாண்டு கால தமிழ்த்திரையுலகின் முக்கியமான திரைப்படமாக  Revelations திரைப்படத்தை காண்கின்றேன். தமிழ்ச் சூழலில் சினிமாவின் தன்மையும், மொழியும், படைப்பாக்கத் திறனும் சுயாதீன சினிமாக்களில் பேணப்பட்டு வருகின்றது என்பதை மீண்டும் ஒரு முறை இந்தச் சுயாதீனப் படம் உணர்த்தியிருகின்றது.

 

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation