• Time to read: 1 minute
  • 97
  • 0

தைலமரக் காடு

By கு.விநாயகமூர்த்தி

தைலமரக் காடு பக்கம்
திருட்டு தம் அடிக்க ஒதுங்குவதுண்டு.

தைலமரக் காடுகளில் சல்லாபிக்க நுழைகிற 
காதல் ஜோடிகளுக்காகக் காத்திருப்பவர்களிடம்
பற்ற வைக்க  தீப்பெட்டி வாங்குகிற பழக்கமுண்டு
அவர்கள் மேல்  கஞ்சாவாடையடிக்கும்.

ஒருமுறை தம் அடிக்கையில்
அழுதுக் கடந்த ஜோடி 
என்னைக் கண்டதும்
தலை குனிந்தபடி சென்றது.
பின் அந்தப் பெண் என்ன நினைத்தாளோ
"செயினைப் புடுங்கிட்டாங்க அண்ணே."
என பக்கத்தில் வந்து கதறினாள்.

 

இதற்கு முன் இதேபோல் ஒரு பையன்
என்னைக் கண்டதும்
"போட்டோ எடுத்துவச்சிட்டு
காசை புடுங்கிட்டாங்கண்ணே" என்றான்.

 

நான் சாந்தமான கண்களுடையவன்.
இதையெல்லாம்
பார்க்கத் திராணி இல்லை.
இப்போதெல்லாம்
தீக்குச்சிகள் கொண்டுபோய் விடுகிறேன்.

 

இன்றைய பிற்பகலில் ஆடோட்டிச் சென்ற
இடையப்பொடியனொருவன்
இரண்டு தீக்குச்சிகள் கேட்டு வாங்கினான்.
"
பீடி குடிப்பியா" வெனச் சிரித்தேன்.
"
நரிவெரட்ட" என்று
கண்ணைப் பார்த்துச் சொன்னான்.
அவன் கண்களை
நேர்கொண்டு பார்க்கவியலவில்லை.
அத்தனை அனல் அதில்
தைலக்காடு எரிந்து கொண்டிருந்தது.
அவர்கள் எரிந்து கொண்டிருந்தார்கள்.

தேவன் கண்களில் அனலும்
சாத்தான் கண்களில் சாந்தமும்
இருப்பதைத்தான்
யாரோ மாற்றி சொல்லியிருக்கிறார்கள்.

 

 



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation