• Time to read: 1 minute
  • 131
  • 0

அவனற்ற உறைவிடத்தின் இரகசியங்கள்

By சேலம் சரவணக்குமார்

கடக்கும் ஒவ்வொருமுறையும்

நெடுஞ்சாலைத் தடுப்பின் ஓரம்

கண்ணுற்றிருக்கிறேன் அவனை...

 

அடைமழை

எரிக்கும்கோடை

உறைபனி

என எல்லாப் பருவங்களிலும்

தன் இடம் நகர மறுப்பவன் அவன்...

 

சடைமுடி, தடித்த உடல்

ஒன்றன்மேல் ஒன்றாக

அழுக்கு ஆடையால் போர்த்தப்பட்டிருக்கும்

அவனுடைய உலகத்தில்,

 

இரகசியங்கள் நிரப்பிக்கட்டப்பட்ட

கோனிப்பையொன்று..

பொருந்தாச் செருப்புகளிரண்டு..

செம்மண் நிற நீர் நிறைந்த

தண்ணீர்க் குடுவையொன்று..

 

அவனற்ற அந்த உறைவிடத்தை

கடக்கும் இன்றைய பொழுதில்

 

நாய்களும், சில காகங்களும்

படித்துக் கொண்டிருக்கின்றன

கோணிக்குள்ளிருந்த அவன் இரகசியங்களை.

 



உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation