• Time to read: 06 minutes
  • 625
  • 0

கல் ஒன்று கதை பல

By சிதனா

எரித்தல் அல்லது புதைத்தல் என்பது காலங்காலமாக உயிரிழந்தவர்களின் பூத உடலை இயற்கையோடு ஒன்ற செய்ய நாம் மேற்கொள்ளும் சடங்கு முறை இல்லையா? இக்காலத்திலும் ஆறடி நிலம் என்பது தேச துரோக ரீதியில் எரித்தல் என்பதையே பெரும்பாலோர் பின்பற்ற, ஒரு சிலர் புதைத்தலையும் இன்றும் மேற்கொண்டு வருகின்றனர். அந்த புதைகுழி மேல் கல்லறை ஒன்றும் கட்டி வைத்து வருடம் தோறும், அவர்கள் இறந்த நாளான திதிநாளிலும் மற்றும் தீபாவளி முதல் நாளும், கிருஸ்துவர்கள் “ஆல் சோல் டே” அன்றும், சீனர்களும் அவர்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் பேய் ஓட்டும் மாதத்திலும் இந்த கல்லறைகளுக்கு ஒளியேற்றி, மலர் மாலை சூட்டி மேலும் இந்துக்கள் சூடம் சாம்பிராணி புகை காட்டுதலும், கிருஸ்துவர்கள் மெழுகுதிரி ஏற்றி வைத்து, பூப்போட்டு வணங்குவதும், சீனர்கள் சகல வித உணவுகளையும் படைத்து விழுந்து கும்பிடுவதும் இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. (நம்நாட்டு சடங்கு பற்றி மட்டுமே இங்கே குறிப்பிட்டிருக்கிறேன்)

இந்த கல்லறை கட்டுதல் என்பது எப்பொழுது எதனால் எதன் அடிப்படையில் உண்டாகியிருக்கும் என்றொரு கேள்வி எழுந்ததுண்டா? பண்டைய நாகரீகத்தில் ஆதாரங்கள் அதிலும் பெரும்கற்கால காலத்திலிருந்து பார்க்க ஆரம்பித்தோமானால், முதுமக்கள் தாழி எனும் முறையில் கல்லறை சமைத்தல், ஈமத்தட்டைகள் எனும் கற்பாரைகள் கொண்டு மேடை அமைக்கும் முறை, நடுகற்கள் மூலம் நினைவு சமாதி எழுப்புதல் மேலும் நினைவுத்தூண், சுமைத்தாங்கி அமைத்தல் போன்று இன்னும் எவ்வளவோ இருக்கிறது, அவரவர் வாழ்ந்து மடிந்த மண்ணின் வழக்கத்தின் படி.

சங்க இலக்கியத்தில் நிறைய செய்திகள் உண்டு இந்த நடுகற்கள் பற்றி. போரில் இறந்து பட்டுப் போன அரசன், கணவன் இறந்தான் எனும் செய்தி காதில் விழுந்ததும் உடன் உயிர் நீத்த பட்டத்தரசி மற்றும் ஆசைகிழத்திகள், (உடன் கட்டை ஏறியோர்),  போர்களத்தில் மார்பில் வேல் தாங்கி  வீரமரணம் கண்ட போர்வீரன் மட்டுமல்லாது, வேட்டை சமூகமாக இருந்து பின் குடியானவ சமூகமாக மாறி ஆநிரைகளை காத்து தங்கள் வாழ்வாதாரத்துக்கு பொருள் ஈட்டிய குறிஞ்சி நில வாழ் குடியானவன் தனது கால்நடைகளை புலிகள் தாக்க வரும்போது, அந்த புலியை கொன்று தானும் மடியும் போது,  உடன் அவன் மனைவியும் மடியும் போது, பெண்களாக இருந்தால் கணவன் இறந்த செய்தி கேட்டவுடன் உடன் கட்டை ஏறியவர்கள், சில இடங்களில் நண்பர்களுக்காக உயிர் விட்டவர்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் நடுகல் எழுப்பும் முறை பற்றி நாம் காண முடிகிறது.

நடுகற்களுக்கு தமிழ் விக்சனரி, போரில் இறந்த வீரனின் உருவமும் பெயரும் பீடும் எழுதிப் பெரும்பாலும் அவனை புதைத்த இடத்தில் நடும் சிலை என்று விளக்கம் கூறுகிறது. மேலும் செத்தார்க்கு நடப்படுவது நடுக்கல், நடுவில் உள்ள கல்; உடம்பு நடுக்கல் (நடுக்குதல்) என்றும் விவரிக்கிறது.

 

மாங்குடிக்கிழார் எனும் புறநானூற்று புலவன் பாடுகிறார் பாருங்கள்:

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவின் அல்லது

நெல்  உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

 

தம்மோடு ஒத்துப் போகாத பகைவர்களை மட்டுமல்ல, அவர்களுக்கு முன்பே எம்மை எதிர்க்க வரும் ஒளி பொருந்திய யானைகளையும் கொன்றுவிட்டு, வீழ்கிறார்களே அவர்களுக்கு நாட்டிய கல்லைத்தான் நாங்கள் வழிபடுவோம். நெல்லைத் தூவி வழிபடும் வேறெந்த கடவுளும் எங்களுக்கு கிடையாது

(புறநானூறு – 335 பாடல்  - பாடியவர் மாங்குடி கிழார்)

 

இப்பாடல் தெள்ளத் தெளிவாக சொல்லும் செய்திகள் இரண்டு. ஒன்று, இறந்தவர்களுக்கு நடுகல் எழுப்பப்பட்ட செய்தி, இரண்டாவது அவர்களே வழிபாட்டுக்குறியவர்களாக இருந்திருக்கும் தகவல். அந்த வகையிலேயே குறுநில மன்னர்கள் அல்லது ஆட்சியாளர்கள், அவர்களுக்கு விசுவாசியாக இருந்த வீரர்கள் போன்றோர்களை தெய்வமாக வழிபடும் வழக்கம் இருந்திருக்கிறது. உதாரணமாக சங்க இலக்கியத்தில் அதியமான், கோப்பெருஞ்சோழன் போன்றோரும் நாட்டார் வழக்காற்றில் மதுரை வீரன், போன்றோரை நாம் இங்கு அடையாளப்படுத்தலாம்.

அதோடு வேட்டை, ஆநிரை காத்தல், ஆநிரைமீட்டல் சமூகத்தாராலும் நடுகற்கள் வழிபாடு உண்டு எனும் செய்தியை நாம் சங்க இலக்கியத்திலேயே காண்கிறோம். இன்னும் கூட தெளிவாக துடியன், பாணன்,  கடம்பன் முதலிய தொல்குடிகளும், வரகு, தினை, கொள், அவரை போன்ற தானியங்கள் விளைந்த வன்புலக் காட்டுப் பகுதியிலும் வாழ்ந்த குடிமக்கள் நடுகற்களை வழிபட்ட செய்தி உண்டு

அந்நாளில் மட்டுமல்ல இந்நாளிலும் கூட இந்த நடுகல்லை வழிப்பாட்டிற்குறிய குறியீடாக கொண்டாடும் மக்கள் உண்டு. அண்மைய எனது தமிழக பயணத்தில், தருமபுரி எனும் வரலாற்று ஊரில் இதை நான் நேரில் கண்டேன்.

அந்த ஊரில் தடுக்கி விழும் இடமெல்லாம் இருந்திருக்க வேண்டும் இந்த நடுகற்கல். ஆனால் வரலாற்று ஆராய்ச்சி செய்கிறேன் என வந்தவர்களால் பெரும்பாலான கற்கள் களவாடப் பட்டப்பின், மிஞ்சியவை வழிபாட்டிற்குறியவனவாக இருக்கின்றன.

அந்நாளில் நடுகல் மீது கள் ஊற்றி அபிஷேகம் செய்து, மயிற்பீலியால் அலங்கரித்து, ஆடுகளை பலிகொடுத்து வணங்கியிருக்கிறார்கள். அந்நடுகற்கள் யாருக்கு நாட்டப்பட்டதோ, அவ்வீரனை அல்லது அம்மங்கையை தங்களின் குலதெய்வமாக வழிவழியாக கொண்டாடி வருகிறார்கள். உதாரணத்திற்கு நான் நேரில் சென்று பார்த்த சித்தப்பன் கோயிலில் உள்ள நடுகல், தனது ஆடுகளை கொன்ற புலியோடு போரிடும் போது இறந்த சித்தப்பன் என்பவனுக்கு நாட்டப்பட்டிருக்கிறது. அந்த நடுகல் இன்றும் பூஜிக்கப்படுகிறது. அவனது மனைவி, சித்தியம்மாள் என பூஜிக்கப்படுகிறாள்.

நடுகல்லில் சதிகல், புலிக்குத்திப்பட்டான் கல், பன்றிக்குத்திப் பட்டான் கல், பாம்பு தீண்டி மரணமடைந்தவன் நடுகல், தீப்பாய்ந்தம்மன் நடுகல், நவகண்டம், அரிகண்டம்என்று நிறைய பிரிவுகள் உண்டு. இசைக்கலைஞனுக்கும், நண்பருக்காக உயிர் விட்டவருக்கும் நடுகற்கல் நாட்டப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. தமிழ்மண்ணில் மட்டுமல்ல, ஆந்திரா, வடநாடு போன்ற மாநிலங்களிலும் இந்த நடுகல் எழுப்புதலும், வழிபடுதலும் பலகாலமாக நடைமுறையில் இருந்துக்கொண்டிருக்கின்றது.

முன்பே பார்த்தது போல் ஆடு (குரும்பாடு) மேய்பவர்களுக்கும் அவர்களின் ஆநிரைகளுக்கும் புலியால் ஆபத்து வருவது சகஜமாக இருந்திருக்கிறது. அப்படி தன்னுடைய வளர்ப்பு பிராணிகளை தாக்க வரும் புலியோடு சண்டையிட்டு புலியையும் கொன்று, தானும் உயிர் நீத்த வீரனுக்காக புலிக்குத்திப்பட்டான் கல் நிறுவப்படுகிறது. அக்கல்லில் வீரன் ஒருவனின் புடைப்பு சிற்பமும், உடன் ஆளுயர புலி மற்றும் அவன் ஆநிரைகளை காத்த வீரன் என்பதற்கு அடையாளமாக ஆடு ஒன்றின் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். கோபுர வடிவில் இருக்கும் இக்கற்கல் தருமபுரி, சேலம், கொங்கு நாடு, போன்ற இடங்களில் நிறைய அடையாளம் கண்டிருக்கிறார்கள்.

அதே வேளையில் காட்டுப் பன்றியால் தாக்கப்பட்டவர்களுக்கும் நடுகற்கல் உண்டு. புலியை போல காட்டுப்பன்றிக்கும் அத்தனை முக்கியத்துவமா என்றால் புலியை விடவும் காட்டுப்பன்றிக்கு ஆற்றல் அதிகம் என்கிறது வரலாற்று ஆய்வாளர்களின் அறிக்கை. ஏன், மான் வேட்டைக்கு சென்று வீரமரணம் அடைந்தவனுக்கும் நடுகல் எழுப்ப ப்பட்டுள்ளது. பாம்பு தீண்டி இறந்தவர்களுக்கான கற்கள் மிக குறைவே. இருப்பினும், விடுபட்டுவிடாமல், அப்படி பலியானவனுக்கும் நடுகல் எடுக்கப்பட்டிருக்கிறது.

உடன்கட்டை ஏறுதல் என்றொரு காட்டுமிராண்டி வழக்கம் ஆதியில் இருந்ததே , அப்படி உயிர் விட்ட பெண்களுக்காக எழுப்பப்படும் கல்லே சதிகல். கணவனோடும், குழந்தையோடும், தன்னந்தனியளாகவும் தீயில் பாய்ந்து உயிர் விட்ட இப்பெண்களையும் புடைப்பு சிற்பமாக்கி கல்லில் பொறித்திருக்கிறார்கள். நடுகல் வழிபாட்டில் சதிமாதர் வழிபாடு அதிக அளவில் இருக்கிறது. தீப்பாய்ந்தம்மன், கொற்றவை, எல்லம்மன், மாலையம்மன், தீக்காத்தியம்மன் என்று பலராலும் வணங்கப்படும் பெண் தெய்வங்களும் உடன்கட்டை ஏறிய மனைவியரே. 15 மற்றும் 16 நூற்றாண்டுகளில் குறிப்பாக விஜய நகர பேரரசு காலத்தில் இந்த வழக்கம் அதிகம் இருந்திருக்கிறது. முதன் முதலில் உடன்கட்டை ஏறிய சதிமாதரென மதுரை வீரன் மனைவியர் பொம்மியம்மாள் மற்றும் வெள்ளையம்மாளை குறிப்பிடுகின்றனர். இன்றும் நம் நாட்டில் மதுரைவீரன் வழிபாடு மிக அதிக அளவில் உண்டு என்பதனை நாம் அறிவோம்.

தன்னைத்தானே கொன்றொழித்தலே இதில் உள்ள செய்தி. தங்களின் மன்னவன் போரில் வெற்றிப் பெற்றாலோ அல்லது கொடிய நோய்களின் தாக்குதலால் தங்கள் கூட்டத்தார் பீடிக்கப்பட்டாலோ, அல்லது தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றிப் பெற்றாலோ, தன்னைத் தானே ஒன்பது பாகங்களாக வெட்டி கொற்றவை எனும் பெண் தெய்வத்துக்கு படைப்பதையே நவகண்டம் என்று அடையாளப் படுத்துகிறார்கள். நவ என்றால் ஒன்பதென நாம் அறிவோம். ஆனால் தனது உடலை ஒன்பது பாகங்களாக வெட்டி வீழ்த்துதல் எங்கணம் சாத்தியம்? சாத்தியம் என்று செயலில் காட்டியவர்களுக்காகத்தான் நவகண்ட கற்களை எழுப்பியிருக்கிறார்கள். கிருஷ்ணகிரிமாவட்டத்தில் உள்ள பென்னேஸ்வரர் கோயிலின் முன்பு சில நவகண்ட நடுகற்களை கண்டேன்.

இவற்றையும் தவிர்த்து எவ்வளவோ நடுகற்கள் இன்றும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. உடன், கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகளும் வெளிவந்த படியே இருக்க, கல்லறைகளுக்கு மூலம் கிடைத்தபடியே இருக்கிறது.

 

 

 

 

 

 உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation