• Time to read: 05 minutes
  • 335
  • 0

தாழ்பூட்டி

By கார்த்திகேயன் புகழேந்தி

அண்டத்தில் உயிர்கள் சிருஷ்டித்த போது கோழி வந்ததா இல்லை முட்டை வந்ததா என்ற பலநாள் கேள்விக்கு அறிவியல் விடை கண்டுள்ளது. முட்டையின் கருவை சுற்றியிருக்கும் ஓட்டை உருவாக்கும் தன்மை கோழியின் கருப்பைக்குத்தான் உண்டு. ஆகவே கோழியே முதலில் தோன்றியிருக்க வேண்டும் என்பது இன்றைய அறிவியல் நிலைப்பாடு. உலகில் வாழும்  எல்லா உயிரினங்களிலும் ஆணொன்று பெண்ணொன்று படைத்த இயற்கை இரைத்தேடும் இயல்பை ஆணிடமும், இனப் பெருக்கத்திற்கான அமைப்பைப் பெண்ணிடமும் வகுத்தது. விதி விலக்கில்லாத விதிகளே இல்லை என்பதை தொட்டுக்காட்ட கடற்குதிரைகளில் மட்டும் முட்டைகளை அடைகாக்கும் பொறுப்பு ஆணிடம் ஒப்படைத்தது.

கிரேக்கப் புராணக் கதைகளின்படி இறைவன் ஆணும் பெண்ணும் ஒரே உருவான உயிராக மானுடப் பிறவியைத்தான் படைத்தான். அதன் அபரிமிதமான சக்தியைக் கண்டு வியந்து அவன் தன்மேல் உள்ள பற்றுதல் பறிபோய் விடுமோ என்று அஞ்சி தன் படைப்பின் விலா எலும்பை உருவியதும் அந்த உயில் பெண்ணாகவும், விலாவிலிருந்து தோன்றியது ஆணாகவும் உருப்பெற்றது. பலத்தில் பாதி குறைந்த பெண் தன் உற்ற துணையைத் தேடி அடைய விதிக்கப்பட்டது.

அதன் வழி விவிலியத்தில் வரும் ஈடன் தோட்டத்து ஆதாமும், ஏவாளும் காட்டில் உலா வந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள் மலைக்குகைகளில் இனக் குழுக்களாக வசித்து வந்த வேட்டை சமூகத்தின் முன்னோடிகள். அங்கு பெண்தான் சக்தி வாய்ந்தவள். வேட்டையில் மக்களை வழிநடத்தியவள். யார் எதைச் செய்ய வேண்டும், எப்போது கொண்டாட வேண்டும், எப்போது சேமிக்க வேண்டும்,யாரை தண்டிக்க வேண்டும் என்று எல்லா முடிவுகளையும் எடுத்தது குழுவின் மூத்த பெண்தான். வேட்டைக்குச் செல்லும் பொழுது உயிரிழப்புகள் சகஜம். குழந்தைகளையும், தாயாகும் தகுதியுடைய பெண்களையும் பத்திரமாகப் பாதுகாக்கும் வழக்கம் வந்தது. கடும் பனிக் காலங்களில் விலங்குகள் இடம் பெயர்ந்து செல்லாமல் இருக்க மண்ணைக்கிண்டி விதையைப் பதியம் போட்டு பச்சை பயிர்களை விளைவித்தனர்.

வேட்டை சமூகம் வேளாண் சமூகமாக மாறியது. இடம்பெயர்வது குறைந்தது. குடியானவள் இல்லத்தைப் பராமரித்தாள். சமதளத்தில் வசிக்க ஆரம்பித்தவுடன் வேட்டைக்குச் செல்லும் ஆண் ஆபத்தை எப்போதும் எதிர்நோக்கினான். கதவு இருக்கும் பக்கம் படுக்கையில் அவன்தான் தலைமாட்டில் ஆயுதத்துடன் எப்போதும் போருக்கு ஆயத்தமாய் இருந்தான். பெண்ணும் பிள்ளைகளும் செவுற்றுப் பக்கம் பாதுகாப்பாக அண்டியிருந்தனர். காவலன், சேவகன் என்ற நிலையிலிருந்து போர்கள் நடத்தி, இனத்தையும், ஆடுமாடுகளையும், பயிர்களையும் காத்தவன் அரசன் ஆனான். நாகரிகங்கள் தோன்றும் காலகட்டம் ஆண் வழி சமூகத்தின் ஆரம்பம். இதிகாசங்களும், போர் வரலாறுகளும் மீண்டும் மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுவது இந்த ஆண் வழி சமூகத்தில் பெண் எப்படி போஷிக்கப்பட்டாள் என்பதைத்தான். ஒரு நாட்டையோ, வீட்டையோ, இனத்தையோ இழிவுபடுத்த அவன் பயன்படுத்திய வசவுகள் முதல் வன்முறை வரை எல்லாமே பெண்கள் மீதுதான் கட்டவிழ்க்கப்பட்டன.  அதுவே இரு ராஜ்ஜியங்கள் இணைவதென்றாலும் போரினால் சாதிக்க முடியாததை, திருமண பந்தங்கள் மூலம் ஏற்படுத்திக்கொண்டனர்.

அந்நிய தேசத்தைப் படையெடுத்துச் செல்லும் பொழுது கைம பெண்களை அடிமைகளாக்கி சூறையாடினர். அதிகாரத்தையும், சொத்துரிமையையும் தக்க வைத்துக்கொள்ள சொற்ப எண்ணிக்கையில் பெண்கள் வஞ்சத்தையும், சூழ்ச்சியையும், காழ்ப்பையும் மனதில் சுமந்து கொண்டு சிற்றின்ப சேவைகள் செய்துவந்தாலும் பெரும்பாலானவர்கள் குலத்தின் மானத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விடுமே என்று உடன் கட்டை ஏற்றப்பட்டனர். இப்படி மெல்ல மெல்ல பெண், ஒரு ஆணின் இச்சைகளைத் தணிக்கும் பண்டமாக மட்டும் பாவிக்கும் வழக்குநிலை பெற்றது.

மன்னராட்சி, சர்வாதிகாரம் என்ற பெரும்பான்மைப் போக்கைத் தகர்த்து வேலுநாச்சியார்களும், லக்ஷ்மி பாய்களும் வந்தாலும் தாய்நாடு, தாய்மொழி என்றெல்லாம் தாய்வழி சமூகத்தின் குறியீடுகளாக மட்டுமே எஞ்சி இருந்தன. குடிமை சமூகத்தில் பெண் ஒரு சுமையாகவே கருதப்பட்டாள். அதனால் தோன்றிய புதிய வகை வன்முறைகள் கருக்கலைப்பு, சிசுக்கொலை, பால்ய விவாகம் ஏற்கனவே தொன்றுதொட்டு திணிக்கப்பட்டு வந்த அடக்குமுறைகள் - விபச்சாரம், வரதட்சணை, வன்புணர்வு, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ஆசைக்கினங்காத பெண் மீது ஆசிட் தாக்குதல், பணியிடத்தில் ஆபாசப் பார்வை, பரிகாசப் பேச்சு என்று உடல் ரீதியிலும், உளவியல் ரீதியிலும், பொருளாதாரச மூகநீதி அடிப்படையிலும் வகைவகையான ஒடுக்குமுறைகள் அரங்கேறிக் கொண்டே இருந்தன.

அச்சம், மடம், நாணம், பயிற்பு என்று புதிய பன்பிலக்கணங்கள் வகுக்கப்பட்டு பெண்ணை மொத்தமாகவே முடக்கிவிடும் மனோபாவம் மேலெழ அடக்குமுறைகளையும் அத்துமீறல்களையும் மீறி அவள் கிளர்ந்தெழுந்தாள். உலகமெங்கும் பெண்ணியம் என்ற புதிய சொல்லாடல் பரவலானது. வாக்குரிமை, படிப்புரிமை,வேலை வாய்ப்பு ஊதியம் ஆகிய எல்லாவற்றிலும் ஆண்களுக்கு நிகரான சமஉரிமையைக் கோரும் போராட்டங்களைப் பெண்களே முன்னெடுத்து அதில் கணிசமான அளவு வெற்றியும் பெற்றனர்.

பெண் உரிமைக்கான போராட்டங்கள் எல்லாமே ஒட்டு மொத்த ஆண் சமூகத்தை எதிர்த்துத்தான் என்பது நம் பொதுப் புத்தியில் பதிந்து விட்டது. ஆனால் வரலாறு நமக்குக் கற்றுத் தரும் பாடம் வேறு. எமிலிஃபேன்க்ருஸ்டின் போராட்டங்களிலும் பிரசாரங்களிலும் அவளுக்குப் பக்கபலமாக இருந்தது அவளது கணவன். கள்ளுக்கடை மறியலை எப்படியாவது நிப்பாட்டுங்கள் என்று காந்தியடிகளிடம் இந்தியாவே திரண்டு மன்றாடியபோது அவர் ‘ அந்த முடிவை எடுக்கவேண்டியது போராட்டத்தை முன்நின்று நடத்தும் ஈரோடு ராமசாமியின் வீட்டைச் சேர்ந்த மீனம்மாளும், நாகம்மையும்தான்’ என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டார். பெண் விடுதலைக்காக அவர் செய்த முன்னெடுப்புகளை நினைவுகூரும் வகையில் பெண்கள் கூடி அவருக்கு ‘பெரியார்’ என்று பெயர்சூட்டினர்.

இன்று நவ நாகரிகப் பெண்கள் எல்லாத் துறையிலும் தடம் பதித்து வருகிறார்கள். பல தொழில் நிறுவனங்களின் தலைவர்களாக மீண்டும் கோலோச்சுகிறார்கள். எந்த விதமான ஒடுக்குமுறையையும் துணிவுடன், சாமர்த்தியமாக எதிர்கொள்ளும் திறமைகளை அவர்கள் வளர்த்துக் கொண்டுள்ள போதும் யுகம் யுகமாய் அவர்களால் வெல்ல முடியாத சில நூதனவன் முறை இன்றும் வழக்கத்தில் உள்ளது. அவை breast ironing என்று சொல்லப்படும் மார்பக இஸ்திரியும், genital mutilation என்று சொல்லப்படும் பிறப்புறுப்பு சிதைத்தலும். ஒரு பெண் குழந்தையை மருத்துவ அடித்தளமே இல்லாத பாலியல் கொடுமைகளிலிருந்து தற்காத்தல் என்ற பெயரில் இப்படிப்பட்ட வதைமுகாம்களுக்கு உட்படுத்துவது வேறு யாருமில்லை- அவளது சொந்தத் தாய், தமக்கை அல்லது பாட்டி.

அன்பெனும் தாழ்பூட்டி தனக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக் கேட்க வாயெடுக்காத பெண்கள், சுய இன்பம் சுகத்தை இழந்தபோதுதன் பெண் என்ற சுயத்தையும் சேர்த்தே இழந்துவிட்டோம் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். அதற்குப்பின் நெம்புகோலை எப்படி நகர்த்தினாலும் தன் பக்கத்துத் தராசு ஒரு ஆணுக்கு சரிசமமாக நிற்கப்போவதில்லை என்ற நிதர்சனத்தை ஒவ்வொரு பெண்ணும் உணராதவரை சமத்துவமும் சமாதிநிலையிலிருந்து சமநிலைக்கு வரவாய்ப்பே இல்லை.உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :

Your comment will be posted after the moderation